ஹைதராபாத் ஐபிஎல் கேப்டன் பதவியிலிருந்து வார்னர் விலகுவாரா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பதில்!

ஆஸ்திரேலிய துணை கேப்டன் பதவியிலிருந்து விலகிய வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவாரா...
ஹைதராபாத் ஐபிஎல் கேப்டன் பதவியிலிருந்து வார்னர் விலகுவாரா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பதில்!

பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பதவி விலகியுள்ளார். அடுத்ததாக, ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு ரஹானே கேப்டனாகியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய துணை கேப்டன் பதவியிலிருந்து விலகிய வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. 

சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகர் லட்சுமணன், வார்னர் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது: 

கேப் டவுனில் நடைபெற்றது துரதிர்ஷ்டவசமானது. சன்ரைசர்ஸ் நிலை குறித்து இவ்வளவு சீக்கிரத்தில் கருத்து சொல்லமுடியாது. இச்சம்பவம் நேற்றுதான் நடைபெற்றது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா என்ன முடிவெடுக்கப் போகிறது எனக் காத்திருப்போம். 

ஒருவேளை வார்னருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால் என்ன ஆகும் எனக் கேட்கிறீர்கள். இந்தத் தருணத்தில் அதுபோல எல்லாம் நாங்கள் எண்ணவில்லை. எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் மிகக்குறைவு. எனவே கூடுதல் தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம். தேவை வரும்போது அதைப் பற்றி விவாதிக்கலாம். ஹைதரபாத் அணிக்கு மிகச்சிறந்த கேப்டனாகச் செயலாற்றியுள்ளார் வார்னர் என்று கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இதில் 3-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற பொருள் ஒன்றை வைத்து பந்தின் தன்மையை மாற்ற முயன்றார். 3-ம் நாள் போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பந்து சேதப்படுத்தப்பட்டதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக் கொண்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து அணியின் முக்கிய வீரர்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. கேப்டன் ஸ்மித்துக்கு எதிராக பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அந்த அணிக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களின் செயல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கும் வகையில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் அதிருப்தி தெரிவித்தார். 

ஸ்மித்தைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆஸ்திரேலிய அரசு தரப்பில் இருந்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்புகளில் இருந்து ராஜிநாமா செய்யுமாறு ஸ்மித் மற்றும் வார்னருக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகினர்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்புடைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாட இயலாது. மேலும், அவருக்கான போட்டி ஊதியம் 100 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனிடையே, பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்டுக்கு போட்டி ஊதியத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பேன்கிராஃப்டின் தரவரிசை புள்ளிகளில் 3 குறைக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com