தவறை ஒப்புக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித்தை நாம் பாராட்ட வேண்டும்: ஆசிஷ் நெஹ்ரா

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு முன்னாள் இந்திய வீரர் ஆசிஷ் நெஹ்ரா ஆதரவளித்துள்ளார்.
தவறை ஒப்புக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித்தை நாம் பாராட்ட வேண்டும்: ஆசிஷ் நெஹ்ரா

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு போட்டியின் 100 சதவீத ஊதியம் மற்றும் ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரையும் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை அணியில் இருந்து நீக்கியும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விவகாரம் கிரிக்கெட் உலகில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இவர்கள் இருவரைுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதனால் இவர்கள் இருவரின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஐசிசி ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஆதரளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஸ்டீவ் ஸ்மித் தவறாக நடந்துகொண்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஐசிசி உள்ளது. இவ்விவகாரத்தில் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தனது தவறினை ஒப்புக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித்தை நாம் பாராட்ட வேண்டும்.

நடந்து முடிந்து குறித்து யோசிக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்மித், வார்னர் ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கும் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்கும் மிகப்பெரிய சொத்து. அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் அது மிகப்பெரிய இழப்பாகும். வாழ்நாள் தடை போன்ற மிகக்கடினமான தண்டனை தேவையற்றது.

எது நடந்திருந்தாலும் அதை மறந்து கடந்து செல்வது தான் நன்மை தரும். ஆஸ்திரேலியா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்புகளில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டுவிட்டார். எனவே இதை விட கடுமையான தண்டனையை எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற தவறுகள் கிரிக்கெட் உலகில் நடப்பது சகஜம்தான். இவை கடந்த காலங்களிலும் நிகழ்ந்தது உண்டு.

ஆஸ்திரேலிய அணி எப்போதும் கடுமையாகவே விளையாடும். ஆனால் அவை எல்லை மீறாமல் இருக்க வேண்டும். அப்படி செய்யும் வரையில் எவ்வித பிரச்னையும் இல்லை. வரம்பு மீறினால் ஐசிசி கண்காணித்துக் கொண்டு தான் உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இதுபோன்று பந்தை சேதப்படுத்தும் விவகாரம் அதிகளவில் ஏற்படுவது இல்லை. ஏனென்றால் தற்போது இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. டெஸ்ட் போட்டிகளில் ஒரே பந்தைக் கொண்டு அதிக ஓவர்கள் வீசப்பட வேண்டும். இதனால்தான் இதுபோன்ற தவறுகள் அடிக்கடி நிகழ்கின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com