அதிகாலை 3 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய என்.சீனிவாசன்: 2014-ல் பாதியில் நாடு திரும்பியது குறித்து பிராவோ!

முதல் ஒருநாள் ஆட்டத்தில் நாங்கள் விளையாடமாட்டோம் எனச் சொல்லியிருந்தபோது, அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த என். சீனிவாசன்... 
அதிகாலை 3 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய என்.சீனிவாசன்: 2014-ல் பாதியில் நாடு திரும்பியது குறித்து பிராவோ!

வீரர்களின் ஒப்பந்தம் குறித்த பிரச்னை காரணமாக 2014 இந்தியச் சுற்றுப்பயணத்தைப் பாதியில் நிறுத்திக்கொண்டது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சங்கம். சம்பளம் தொடர்பாக வீரர்களுக்கும் கிரிக்கெட் சங்கத்துக்கும் நேர்ந்த பிரச்னையால் இந்த நிலை ஏற்பட்டது. 5 ஒருநாள், ஒரு டி20, 3 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்த மே.இ. அணி 4 ஒருநாள் ஆட்டங்களுடன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டது. டெஸ்ட், டி20 தொடர்கள் நடைபெறாமல் போயின. தர்மசாலாவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் ஆட்டத்துடன் தொடர் நிறைவடைந்தது.

அந்தச் சமயத்தில் மே.இ. அணியின் கேப்டனாக இருந்த டுவைன் பிராவோ, 4-வது ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவேயில்லை. இந்நிலையில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள டுவைன் பிராவோ, 2014-ல் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து டிரினிடாட் வானொலி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இந்தியாவில் அப்போது நடைபெற்ற சம்பவங்களுக்காக நான் மட்டுமே பாதிக்கப்பட்டேன். என்னால் மட்டுமே மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடமுடியாமல் போனது. என் வீரர்களின் நலனுக்காக ஒரு முடிவை எடுத்தேன். எங்களுடைய ஊதியத்திலிருந்து 75% குறைக்க கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்ததால் அதை எதிர்க்க முடிவு செய்தோம். முதல் ஒருநாள் ஆட்டத்திலிருந்தே வெளியேற முடிவு செய்தோம். ஆனால் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தி நான்கு ஒருநாள் ஆட்டங்கள் வரை விளையாடினோம். நான்காவது ஒருநாள் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வின்போது என்னுடன் அனைத்து வீரர்களும் வந்தார்கள். 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் நாங்கள் விளையாடமாட்டோம் எனச் சொல்லியிருந்தபோது, அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த என். சீனிவாசன் எனக்கு மெசேஜ் அனுப்பினார். தயவுசெய்து ஆடுகளத்தில் களமிறங்குங்கள் என்று. நான் அவர் சொன்னதைக் கேட்டேன். காலை 6 மணிக்கு எழுந்து நாம் இன்று விளையாடவுள்ளோம் என வீரர்களிடம் சொன்னேன். ஆனால் எல்லோரும் அன்று விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனினும் பிசிசிஐயின் தலைவர்களின் பேச்சைக் கேட்டதால் அப்போது நாங்கள் பாதுகாப்பாக உணர்ந்தோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com