இந்திய மகளிர் அணி கேப்டன் ஒரு பொய்யர், தகுதியற்றவர்: மிதாலி ராஜ் மேலாளர் காட்டம்!

துரதிர்ஷ்டவசமாக, பிசிசிஐ மகளிர் அணி நிர்வாகம் விளையாட்டை விடவும் அரசியலை நம்புகிறது...
இந்திய மகளிர் அணி கேப்டன் ஒரு பொய்யர், தகுதியற்றவர்: மிதாலி ராஜ் மேலாளர் காட்டம்!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் மூத்த வீரர் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து மிதாலி ராஜின் மேலாளர் இந்திய அணி கேப்டனைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

குரூப் பி பிரிவில் இந்திய மகளிர் அணி பலமான நியூஸியை 34 ரன்கள் வித்தியாசத்திலும், 3 முறை சாம்பியன் ஆஸி.யை 48 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றது. அதே நேரத்தில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டாம் இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதலில் விளையாடிய இந்திய அணி 112 ரன்களே எடுத்தது. பிறகு அந்த இலக்கை 17.1 ஓவர்களில் அடைந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. அடுத்ததாக, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இறுதிச்சுற்று இன்று நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி ஞாயிறு காலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது. 

யாரும் எதிர்பாராதவிதத்தில் அரையிறுதி ஆட்டத்தில் மூத்த வீரர் மிதாலி ராஜ் இந்திய அணியில் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்நிலையில் முக்கியமான இந்த ஆட்டத்தில் மிதாலி ராஜுக்குப் பதிலாக அனுஜா பாட்டீலை மீண்டும் தேர்வு செய்தார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர். இந்த முடிவைப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள்.

அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்த பிறகு தன்னுடைய இந்த முடிவு குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூறியதாவது: நாங்கள் எடுத்த எல்லா முடிவுகளும் அணிக்காக எடுத்த முடிவுகளே. சில நேரங்களில் அவை சாதகமாக அமையும். சில நேரங்களில் அமையாது. எனவே அதுகுறித்து வருத்தம் இல்லை. நாங்கள் கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். மிதாலி ராஜைத் தேர்வு செய்வதை விடவும் வெற்றியில் பங்கேற்ற அணியைத் தக்கவைக்க முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மிதாலி ராஜின் மேலாளர் அன்னிஷா குப்தா சில ட்வீட்களைக் காட்டமாக வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

துரதிர்ஷ்டவசமாக, பிசிசிஐ மகளிர் அணி நிர்வாகம் விளையாட்டை விடவும் அரசியலை நம்புகிறது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிதாலி ராஜின் அனுபவம் எப்படிக் கைக்கொடுக்கும் என்று அறிந்தபிறகும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளரைத் திருப்திப்படுத்தும் விதமாக மிதாலி ராஜ் நீக்கப்பட்டுள்ளார். ஹர்மன்ப்ரீத் கெளர் ஒரு பொய்யர், பக்குவமில்லாதவர், தந்திரமானவர், ஏமாற்றுபவர் மற்றும் தகுதியில்லாத கேப்டன் என்று கூறியிருந்தார். பிறகு அந்த ட்விட்டர் கணக்கை அவர் நீக்கிவிட்டார். இந்நிலையில் க்ரிக்இஃன்போ இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தான் சொன்னதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதன்பிறகு அவர் பேட்டியளித்ததாவது

உள்ளே என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், தற்போது மகளிர் அணி ஆட்டங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் யார் விளையாடுகிறார்கள், யார் விளையாடவில்லை என்பது நமக்கு நன்குத் தெரிகிறது. தொடர்ச்சியாக நன்றாக விளையாடியபோதும் மிதாலி ராஜை இதுபோல நடத்தியுள்ளார்கள். பேட்டிகளில் சொன்னதைவிடவும் ஆழமான விஷயங்கள் அவருருடைய நீக்கத்தில் உள்ளன. 

இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்று பேட்டியளிக்கிறார்கள். ஆனால் அரையிறுதிச்சுற்றில் அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு மூத்த வீராங்கனையை எப்படி நீக்குவீர்கள்? இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிப்பதை விடவும் இதில் வேறொரு விஷயம் உள்ளது.

மிதாலி ராஜை மோசமாக நடத்தியதால் கோபத்துடன் ட்வீட் செய்தேன். சில பேருக்குச் சாதகமாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com