யூத் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் அர்ச்சனா தோல்வி

ஆர்ஜெண்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில்
காலிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற பிறகு நிங் ஜிங்குடன் அர்ச்சனா.
காலிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற பிறகு நிங் ஜிங்குடன் அர்ச்சனா.


ஆர்ஜெண்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் அர்ச்சனா கிரீஷ் காமத் அரையிறுதியில் தோல்வி கண்டார். 
அந்த ஆட்டத்தில் சீனாவின் யிங்ஷா சன்னை எதிர்கொண்ட அர்ச்சனா, 1- 4 என்ற கணக்கில் அவரிடம் வீழ்ந்தார். இதையடுத்து அவர், வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆஃப் ஆட்டத்தில் விளையாடவுள்ளார். அதில் ருமேனியாவின் ஆண்ட்ரியா டிராகமோனை எதிர்கொள்கிறார். முன்னதாக, யூத் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சனா தனது காலிறுதியில் அஜர்பைஜானின் நிங் ஜிங்கை 13-11, 8-11, 6-11, 11-3, 6-11, 12-10, 11-7 என்ற செட்களில் வீழ்த்தினார். அப்போது பேசுகையில், இந்த ஆட்டம் மிகவும் கடினமானதாக இருந்தது. நிகன் ஜிங் ஆட்டத்தின் இறுதி வரை போராடினார். எனவே, இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடும் சவால் அளித்த நிகன் ஜிங்கை நிச்சயம் பாராட்டியாக வேண்டும் என்றார்.
ஹாக்கியில் இந்தியா வெற்றி: யூத் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தெற்கு பசிபிக் ஓசியானிய நாடான வானுவடுவை 16-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.
ஓர் அணியில் தலா 5 பேர்களுடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக மும்தாஸ் கான் 4 கோல்களும், சேத்னா 3 கோல்களும் அடித்தனர். முன்னதாக ஆட்டம் தொடங்கிய 2-ஆவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி கோலடித்தார். அணியின் 2-ஆவது கோலை ரீத் அடிக்க, 4-ஆவது நிமிடத்திலேயே அணியின் கோல் எண்ணிக்கையை 3 ஆக்கினார் கேப்டன் சலிமா டெடெ.
ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் பல்ஜீத் கெளவர் பங்களிப்பால் இந்தியா 5 கோல்களை எட்டியது. பின்னர் சேத்னாவும், ரீத்தும் வரிசையாக 6-ஆவது நிமிடத்தில் தலா ஒரு கோலடித்தனர். மும்தாஸ் 8-ஆவது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 10-ஆவது நிமிடத்திலும் கோல்கள் அடிக்க, முதல் பாதியின் முடிவில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் தொடங்கிய ஆட்டத்தின் 2-ஆவது பாதியிலும் இந்தியாவின் ஆதிக்கமே தொடர்ந்தது. மும்தாஸ் 11, 12, 15-ஆவது நிமிடங்களிலும், சலிமா 13-ஆவது நிமிடத்திலும், சேத்னா 14, 15-ஆவது நிமிடங்களிலும் என இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்தனர். இறுதியாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இந்தியாவின் இஷிகா செளதரி கோலடிக்க இந்தியா, 16-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய அணி தரப்பில் கோல் கீப்பர் தவிர அனைத்து வீராங்கனைகளுமே கோலடித்தது குறிப்பிடத்தக்கது.

செளரவ் செளதரிக்கு தங்கம்


யூத் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் செளரவ் செளதரி தங்கம் வென்றார். 
இறுதிச்சுற்றில் அவர் 244.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, தென் கொரியாவின் சன் யன்ஹோ 236.7 புள்ளிகளுடன் வெள்ளியும், ஸ்விட்சர்லாந்தின் சோலரி ஜேசன் 215.6 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com