1 ரன்னில் சதத்தை தவறவிட்ட பாபர் அஸாம்: வெற்றி முனைப்பில் பாகிஸ்தான் அணி 

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் 538 ரன்கள் இலக்கை விரட்டி வரும் ஆஸ்திரேலிய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 47 ரன்கள் எடுத்துள்ளது. 
1 ரன்னில் சதத்தை தவறவிட்ட பாபர் அஸாம்: வெற்றி முனைப்பில் பாகிஸ்தான் அணி 

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் 538 ரன்கள் இலக்கை விரட்டி வரும் ஆஸ்திரேலிய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 47 ரன்கள் எடுத்துள்ளது. 

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது. இதில், பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அதைத் தொடர்ந்து ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடிய நிலையில் அந்த அணியில் ஆரோன் பின்ச் 39, மார்னஸ் லபுச்சேன் 25, ஸ்டார்க் 34 ஆகியோர் மட்டுமே ரன்களை குவித்தனர்.இறுதியில் 50.4 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆஸி. ஆல் அவுட்டானது.

பாக். வீரர் அப்பாஸ் அற்புதமாக பந்துவீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை சாய்த்தார். பிலால் 3-23, யாஸிர் 1-59 விக்கெட்டை வீழ்த்தினர். 

பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய பாக். ஆட்டநேர முடிவில் 44 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்திருந்தது. பாக்கர் ஸமான் 66, முகமது ஹபீஸ் 6 ரன்களுக்கு வெளியேறினர். அஸார் அலி 54, ஹரிஸ் சோஹைல் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், 3-ஆம் ஆட்டத்தை அஸார் அலி மற்றும் ஹரிஸ் சோஹைல் தொடங்கினர். இதையடுத்து, ஹரிஸ் சோஹைல் மற்றும் அஸார் அலி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அஸார் அலி 64 ரன்கள் எடுத்தது. அவர்களைத் தொடர்ந்து சற்று நேரம் தாக்குப்பிடித்த ஷபிக் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, அஸாம் மற்றும் சர்பிராஸ் ஜோடி சேர்ந்து சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸாம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில், அவர் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. 

அந்த அணி 400 ரன்களை எட்டிய போது சர்பிராஸ் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 9-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதன்பிறகு, அந்த அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணிக்கு 538 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 47 ரன்கள் எடுத்தனர். பின்ச் 24 ரன்களுடனும், ஹெட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இந்தப் போட்டியில் இன்னும் 2 முழுமையான நாட்கள் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு இன்னும் 491 ரன்கள் தேவை. அதனால், பாகிஸ்தான் அணியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com