பிட்ச் மத்தியில் பேசிக்கொண்டிருந்த பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்த ஆஸ்திரேலிய அணி! ரசிகர்கள் அதிர்ச்சி! (விடியோ)

ஆஹா, பந்து பவுண்டரிக்குப் போகலையா என்று விழிபிதுங்க சுற்றும் முற்றும் பார்த்தார்...
பிட்ச் மத்தியில் பேசிக்கொண்டிருந்த பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்த ஆஸ்திரேலிய அணி! ரசிகர்கள் அதிர்ச்சி! (விடியோ)

பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தும் ஒரு டெஸ்ட் போட்டியில் அந்த அணியினரைப் பார்த்துச் சிரிக்கும்படியான ஒரு சம்பவம் நடைபெற்றுவிட்டது. அதேசமயம், இது நகைக்கும் விஷயமில்லை, ஆஸ்திரேலிய அணி செய்தது அநியாயம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொதித்துப் போகிறார்கள். 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் அபுதாபியில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி பந்துவீச்சாளர் நாதன் லியான் அபாரமாகப் பந்துவீசி 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முகமது அப்பாஸின் அட்டகாசமான பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி, 50.4 ஓவர்களில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 12.4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முகமது அப்பாஸ். பிலால் ஆசிஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி, 137 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில், 44 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்திருந்தது. அஸார் அலி 54, ஹரிஸ் சோஹைல் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

அந்தச் சம்பவம் 53-வது ஓவரில் நடைபெற்றது. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அஸார் அலியின் பேட்டின் முனையில் பட்டு பந்து கல்லி பகுதியில் சென்றது. பவுண்டரி அருகே சென்றபோது பந்தின் வேகம் குறைந்தது. இதனால் ஸ்டார்க்கால் அதை ஃபீல்ட் செய்ய முடிந்தது. ஆனால் வேகமாகச் சென்ற பந்து பவுண்டரியை எட்டிவிட்டது என்றெண்ணிய அஸார் அலி, மறுமுனையிலிருந்து தன்னை நோக்கி ஓடி வந்த அஸாத் ஷஃபிக்குடன் பேச ஆரம்பித்தார். பவுண்டரி சென்றுவிட்டதால் பந்து மீண்டும் வரும்வரை சில நொடிகள் பேசலாம் என்று அஸார் அலி நினைத்திருக்கலாம். ஆனால் ஃபீல்டிங் செய்த ஸ்டார்க் உடனடியாக அதை விக்கெட் கீப்பர் பெயின் முனை நோக்கி வீசினார். அப்போது அஸாரும் ஷஃபிக்கும் சாவசாகமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். த்ரோவைப் பிடித்து உடனடியாக ஆடுகளத்தின் நடுவில் நின்றுகொண்டிருந்த அஸார் அலியை ரன் அவுட் செய்தார் பெயின். 

அப்போதுதான் அஸார் அலிக்குத் தன் தவறு புரிந்தது. ஆஹா, பந்து பவுண்டரிக்குப் போகலையா என்று விழிபிதுங்க சுற்றும் முற்றும் பார்த்தார்... பிறகு சோகமாகவும் கோபமாகவும் ஓய்வறைக்குத் திரும்பினார். 64 ரன்கள் எடுத்து நல்ல நிலைமையில் ஆடிவந்த அஸார் அலியின் முடிவு இப்படி அமையும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. 

இது பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும் பாகிஸ்தான் ரசிகர்களால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ரன் எடுக்க முயற்சி செய்யாதபோது அஸார் அலியை ஆஸ்திரேலிய அணி ரன் அவுட் செய்திருக்கக் கூடாது என்று சமூகவலைத்தளங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com