தோனியை ஓரம்கட்டிய ரிஷப் பந்த்: காட்சிகள் மாறும் இந்திய அணி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக உள்ளவரால் அதுவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவரால்...
தோனியை ஓரம்கட்டிய ரிஷப் பந்த்: காட்சிகள் மாறும் இந்திய அணி!

கார்டிஃப்பில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 19-வது ஓவரின் முடிவில் 19 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் தோனி. டி20 ஆட்டத்தில் இதுபோல ஆடுவதற்கு அனுமதி கிடையாது. அதுவும் கடைசி நான்கு ஓவர்களிலாவது வேகத்தை அதிகப்படுத்தவேண்டும். ஆனால் கடைசி ஓவரில் வேறொரு தோனியைப் பார்க்கமுடிந்தது. அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 22 ரன்கள் கிடைத்தன. தோனி 3 பவுண்டரிகள் அடித்தார். 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்றது. 

பிப்ரவரியில் செஞ்சுரியனுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி தோற்றது. ஆனால் அந்த ஆட்டத்தில் 28 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார் தோனி. இந்திய அணி, 188 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியாமல் போனது. கிளாசென் 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து நம்பமுடியாத வெற்றியை தெ.ஆ. அணிக்கு அளித்தார். 

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார் தோனி. இருந்தும் அந்த ஆட்டத்தில் மோசமாகத் தோற்றது இந்திய அணி. டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு எதிராக 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். எதிரணி இலங்கை என்பதால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் சிரமப்படவில்லை. 

கடந்த ஒரு வருடத்தில் தோனி உருப்படியாக ஆடிய டி20 ஆட்டங்கள் இவை. இதர ஆட்டங்களில் குறைவான ரன்களே எடுத்துள்ளார். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு டி20 தொடரிலும் அவருடைய பங்களிப்பு என்று சொல்வதற்கு ஏதோவொன்று இருந்துள்ளது. கடைசிக்கட்டத்தில் விளையாட வருகிற ஒரு வீரரால் இவ்வளவு தூரம் பங்களிப்பு செய்வதே போதுமானதுதான்.

ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இரண்டு தொடர்களுக்கும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளார். எப்படி தோனி கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமானபோது தினேஷ் கார்த்திக், பார்தீவ் படேல் ஆகியோரின் வாய்ப்புகள் பறிபோனதோ அதுபோல ரிஷப் பந்தின் வரவு புதிய சூழலை உருவாக்கியுள்ளது. தோனி வேண்டாம், அவருடைய ஆட்டம் இனி தேவையில்லை என்று இந்திய அணியும் தேர்வுக்குழுவும் எண்ணுவதற்கான புதிய நம்பிக்கையை ரிஷப் பந்த் ஏற்படுத்தியுள்ளார்.

ரிஷப் பந்த் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே சாதித்துள்ளார். விளையாடிய 5 டெஸ்டுகளில் ஒரு சதமும் இரு அரை சதங்களும் எடுத்துள்ளார். அதற்கு முன்பு விளையாடிய ஐபிஎல் போட்டியில், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையை எட்டினார் ரிஷப் பந்த். இத்தனைக்கும் அவர் விளையாடிய தில்லி அணி கடைசி இடத்தைப் பிடித்தது. இதனால் மற்ற வீரர்கள்போல ரிஷப் பந்தால் அதிக ஆட்டங்களில் விளையாட முடியாமல் போனது. ஆனால் அதிக சிக்ஸர், அதிக பவுண்டரிகள், அதிகபட்ச ஸ்கோர் என அனைத்திலும் அவர்தான் முதலிடம் வகித்தார். 

இதற்கு மேலும் இந்தத் திறமையை வீணடிக்கக்கூடாது என்றெண்ணி தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருகிறது தேர்வுக்குழு. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக மாறியுள்ளார் ரிஷப் பந்த்.

இதனால் தோனியை நீக்கினாலும் பரவாயில்லை, பெரிய நஷ்டம் இல்லை என்று உருவான ஒரு நிலைமையை பயன்படுத்திக் கொண்டுள்ளது தேர்வுக்குழு. 

தோனியின் பேட்டிங் மீது சமீபகாலமாக ஏராளமான விமரிசனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக ஒருநாள் கிரிக்கெட்டில். ஆனால் 2019 உலகக் கோப்பை வரை விளையாடத் தயாராக உள்ளதால் ஒருநாள் அணியிலிருந்து அவரை நீக்கமுடியாது. ஒரு விக்கெட் கீப்பராக அவர் பல யோசனைகளைப் பந்துவீச்சாளர்களுக்கும் கோலிக்கும் தந்து வருகிறார். அந்த வகையில் தன் பங்களிப்பை ஏதோவொரு விதத்தில் அளித்துக்கொண்டு இருக்கிறார். இந்தியாவுக்கு இரு உலகக் கோப்பைகளை வாங்கித் தந்தவர். அதற்குரிய மரியாதையை அளிக்கவேண்டும். அதனால் உலகக் கோப்பைக்கு முன்பு தோனியை ஒருநாள் அணியிலிருந்து நீக்கமுடியாது. சில மாதங்களுக்கு இதுபற்றி யோசிக்கக்கூட முடியாது. 

ஆனால், டி20 அணியில் நீக்கலாம். பெரிய பாதகமில்லை. அது பெரிதளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தாது. அதுதான் தற்போது நடந்துள்ளது. 

மேலும் டி20 அணி என்பது பரிட்சார்த்த முயற்சிகள் செய்துபார்க்கக்கூடிய ஓர் இடம். புதிய வீரர்கள் பலரை டி20யில் களமிறக்கி அவர்களைச் சோதித்துப் பார்த்த பிறகே அடுத்தப் பெரிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் டெஸ்ட், ஒருநாள் போல தொடர்ந்து ஒரு வீரருக்கு டி20 அணியில் வாய்ப்புகள் வழங்கிக்கொண்டிருக்க முடியாது. அடுத்தக்கட்ட வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக டி20 அணியை அவ்வப்போது மாற்றிக்கொண்டிருப்பது இயல்பான போக்காகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தான் இந்த மாற்றத்தையும் காணவேண்டும்.

முக்கியமாக, இனிமேலும் ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக உள்ளவரால் அதுவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவரால் இதர கிரிக்கெட் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராகச் செயல்படமுடியாமல் போவது அணிக்குத்தான் இழப்பை ஏற்படுத்தும். இதை நன்கு உணர்ந்து முக்கியமான முடிவை எடுத்திருக்கிறார் தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத். இந்த முடிவை கோலி, சாஸ்திரியிடம் ஆலோசிக்காமல் அவர் எடுத்திருக்க மாட்டார். இதனால் இந்த முடிவு ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் எடுத்த முடிவு என்றும் கூறலாம். 

சச்சின், தோனி, கோலி போன்ற பெரிய வீரர்கள் அணிக்கு நுழையும்போது சில மாற்றங்கள் இயல்பாக நடைபெறும் அதுதான் தற்போது நடைபெற்றுள்ளது. தோனியின்  டி20 சாதனைகள் என்பது நீண்ட நெடிய சரித்திரம் கொண்டவை. டி20 கிரிக்கெட்டின் முதல் சர்வதேச நட்சத்திரம் அவர். இந்த நீக்கம் அவருக்கு எந்தவிதத்திலும் அவமானத்தைத் தராது. அவருடைய டி20 காலம் என்றைக்காவது முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும். அது இப்போது நிகழ்ந்துள்ளது. எனினும் இதுவே முடிவு அல்ல, இனிமேல் அவரால் இந்திய டி20 அணியில் இடம்பெறமுடியும் என்று பிரசாத் பேசியுள்ளார். இப்போதைக்கு நீங்கள் எங்களுக்கு வேண்டாம், அதையும் தாண்டி உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். இதுதான் தேர்வுக்குழுவின் எண்ணம். ஒருநாள் கிரிக்கெட்டில் பழைய அதிரடி ஆட்டம் வெளிப்படும்போது தோனி மீண்டும் டி20 அணிக்குள் நுழைய வாய்ப்புண்டு. அல்லது தேர்வுக்குழுவின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு டி20-யிலிருந்து அவர் ஓய்வு பெற்றுக்கொள்ளலாம். எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது தற்போது தோனியின் கையில்தான் உள்ளது. 

ஆஸ்திரேலியாவில் 2020-ல் நடைபெறவுள்ள அடுத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு அணியைத் தயார்படுத்த வேண்டிய கடமையும் தேர்வுக்குழுவுக்கு உண்டு. அதற்காக அணியில் சில மாற்றங்கள் இப்போதே உருவாக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்துக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் தருவதன் மூலம் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கி முக்கிய வீரராக மாற்ற முடியும். இதைச் செய்யாமல் போனால் காலம் பிரசாத்தைப் பழி சொல்லும். அதை அவர் உணர்ந்ததால்தான் தைரியமாக இந்த முடிவை எடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் மெல்ல மெல்ல புதிய திசையில் நகரும் காலம் இது. வரவேற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com