டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு! இங்கிலாந்து 92/3

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 31.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது... 
டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு! இங்கிலாந்து 92/3

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்காவது ஆட்டம் செளதாம்ப்டன் ரோஸ் பெளல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 246 ரன்களை எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்திய அணி தடுமாற்றத்துடன் ஆடி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 273 ரன்களைக் குவித்தது. இந்திய வீரர் சேதேஸ்வர் புஜாரா அபாரமாக ஆடி 132 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து வீரர் மொயின் அலி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டை வீழ்த்தினார்.  பின்னர் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய நாளின் முடிவில், 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்திருந்தது. குக் 2, ஜென்னிங்ஸ் 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

தொடக்க வீரர் குக் இன்றும் மோசமாக விளையாடி 12 ரன்களில் பூம்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரூட்டுக்குப் பதிலாக மூன்றாவதாகக் களமிறங்கிய மொயீன் அலி, 9 ரன்கள் மட்டும் எடுத்து இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இருவரையும் அற்புதமாக கேட்சுகளினால் வெளியேற்றினார் ஸ்லிப் ஃபீல்டரான கேஎல் ராகுல். இதனால் மீண்டும் இங்கிலாந்து அணி தடுமாறிய நிலையில் தொடக்க வீரர் ஜென்னிங்ஸும் கேப்டன் ரூட்டும் பொறுப்புடன் விளையாடினார்கள். 30-வது ஓவரின் இந்தக் கூட்டணி 50 ரன்கள் எடுத்தது. எனினும் 87 பந்துகள் வரை தாக்குப்பிடித்து 36 ரன்கள் எடுத்த ஜென்னிங்ஸ், உணவு இடைவேளைக்கு முன்பு, ஷமி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 31.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரூட் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com