இந்திய ஒலிம்பிக் சங்க விழாவில் குழப்பம்: காசோலையில் பெயர்களை தவறாக எழுதி வழங்கியதால் அதிருப்தி

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஒஏ) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊக்கத் தொகை வழங்கும் பாராட்டு விழாவில் பெயர்களை தவறாக மாற்றி காசோலைகள்
இந்திய ஒலிம்பிக் சங்க விழாவில் குழப்பம்: காசோலையில் பெயர்களை தவறாக எழுதி வழங்கியதால் அதிருப்தி

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஒஏ) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊக்கத் தொகை வழங்கும் பாராட்டு விழாவில் பெயர்களை தவறாக மாற்றி காசோலைகள் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் பதக்கம் வென்ற சிலரின் பெயர்களும் விடுபட்டதால் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர்.
 ஜகார்த்தா ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள், விளையாட்டு அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடந்தது. சங்கத்தலைவர் நரீந்தர் பத்ரா தலைமை தாங்கினார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் வீரர்களுக்கு ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கினார்.
 அணிகளில் பிரிவில் தங்கம் வென்றவருக்கு ரூ. 3 லட்சம், வெள்ளிக்கு ரூ.2 லட்சம், வெண்கலம் வென்றவருக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும், தனிநபர் பிரிவில் தங்கம் வென்றவருக்கு ரூ.5 லட்சம், வெள்ளிக்கு ரூ.3 லட்சம், வெண்கலம் வென்றவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 வில்வித்தை வீரர்கள் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா உள்ளிட்ட 15 பேரின் பெயர்கள் காசோலையில் தவறாக அச்சிடப்பட்டிருந்தன.
 இதனால் அவர்களுக்கு வெறும் பூங்கொத்து மட்டுமே வழங்கப்பட்டது.
 இதற்கிடையே வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யா காக்ரன் பெயரை அமைப்பாளர்கள் அறிவிக்காமல் விட்டு விட்டனர்.
 இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் முறையிட்டவுடன் அவரது பெயரும் அறிவிக்கப்பட்டது.
 குழப்பத்துடன் விழா முடிந்ததால் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர்.
 இதுதொடர்பாக ஐஒஏ தலைவர் பத்ரா கூறுகையில்: நடைபெற்ற குழப்பத்துக்காக வேதனை தெரிவிக்கிறேன். 15 வீரர்களின் பெயர்கள் காசோலைகளில் தவறாக அச்சிடப்பட்டு விட்டன. யாரும் கவலைப்படத் தேவையில்லை. அவரவருக்குரிய ஊக்கத்தொகை தவறாமல் கிடைக்கும். தவறான பெயர்கள் கொண்ட காசோலைகளை வழங்க நான் விரும்பவில்லை.
 மேலும் வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்தில் பெற வேண்டும் என்றார்.
 கடந்த ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலத்துடன் மொத்தம் 69 பதக்கங்களை வென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com