சென்னையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ். பயங்கரவாதி: என்.ஐ.ஏ. விசாரணையில் கிடைத்த தகவல்

சென்னையில் தங்கியிருந்த ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதி கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்துக்குரிய இளைஞர்களிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்திவிட்டு  கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து திரும்பும்  தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள்.  (உள்படம்) தா.சுவாலிக் முகம்மது என்ற யூ
சந்தேகத்துக்குரிய இளைஞர்களிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்திவிட்டு கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து திரும்பும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள். (உள்படம்) தா.சுவாலிக் முகம்மது என்ற யூ

சென்னையில் தங்கியிருந்த ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதி கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் கனகமலைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர்.
இவர்களில் ஒருவர் கேரள மாநிலம் திருச்சூர் வெங்கநல்லூரைச் சேர்ந்த தா.சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார்.

செல்லிடப்பேசி,ஆவணங்கள் பறிமுதல்: இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது அவரது மனைவி ஜிம்சின்னா (24), இரண்டரை வயது மகன் ஜின்னா ஆகியோர் இருந்தனர்.

இதில் ஜிம்சின்னாவிடம் சுமார் 3 மணி நேரமும், வீட்டின் உரிமையாளர் குணசேகர் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சில முக்கிய ஆவணங்களையும், ஜிம்சின்னா பயன்படுத்திய செல்லிடப்பேசி, சுவாலிக் முகம்மது பயன்படுத்திய மடிக்கணினி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-

12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாகக்த்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார்.

ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார்.

வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார்.

இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

கத்தார் செல்ல திட்டம்:

வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

முகநூலில் வளர்ந்த தொடர்பு!

முகநூல் (ஃபேஸ்புக்) மூலம் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரிடம் சுவாலிக் முகமது தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதன்வாயிலாகவே அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரின் குறிப்பிட்ட பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார். அப்போது, சுவாலிக் முகம்மதுவை தொடர்பு கொண்டு பேசிய அந்த இயக்கத்தினர் பேச்சில், மூளை சலவை செய்யப்பட்ட சுவாலிக் முகம்மது காலப்போக்கில் இணைந்து தீவிரமாக செயல்பட்டிருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது முகநூல் நண்பர்கள், சந்தேகம்படும்படியான தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

நம்ப முடியவில்லை - நண்பர்

சுவாலிக் முகம்மது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்ததாக கைது செய்யப்பட்டிருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என அவரது நீண்ட கால நண்பரும், மென்பொறியாளருமான மிர்ஷாத் தெரிவித்தார்.

இதுகுறித்து மிர்ஷாத் செய்தியாளர்களிடம் கூறியது:-

ஐ.எஸ். சுவாலிக் முகம்மது இருப்பதாகத் தெரியவந்தது குறித்து அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் கைது செய்யப்பட்டிருப்பதை இன்னும் நம்ப முடியவில்லை.
ஒரு நாளும் பயங்கரவாத போக்குடன் இருந்ததை உணர்ந்தது கிடையாது. அவருடைய நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினருக்குக் கூட இப்படிப்பட்ட தொடர்பில் சுவாலிக் முகம்மது இருந்திருப்பது தெரியாது. சந்தேகம்படும் வகையில் எந்த இடத்திலேயும் அவர் செயல்படவில்லை. சம்பவத்துக்கு இரு நாள்களுக்கு முன்புகூட அலுவலக விஷயமாக வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார் என்றார்.

அதிர்ச்சியளிக்கிறது - வீட்டு உரிமையாளர்

இதேபோல், வீட்டின் உரிமையாளர் குணசேகரன் கூறியது:-
தெரிந்த நண்பர் மூலம் சுவாலிக் முகம்மது குடும்பத்தினர் இங்கு வாடகைக்கு வந்தனர். அவரை வீட்டில் பார்ப்பது கடினம். அடிக்கடி வெளியூர் செல்வார். அநாவசியமாக செலவு செய்து பார்த்தது கிடையாது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறிய பின்னரே, அவரை பற்றி தெரிந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியில், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்றார்.

தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை: டிஜிபி

தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்று தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு (பொறுப்பு) டிஜிபி தே.க.ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்த விவரம்:

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சென்னை, கோயம்புத்தூரில் வசித்த கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்களையும், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து நகைக் கடையில் வேலை செய்து வந்த கேரளத்தைச் சேர்ந்த சுபஹானி என்ற இளைஞரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரு நாள்களில் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இதனால் தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சில அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியபோது, "தமிழகத்துக்கு எந்த பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லை. என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட அனைவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்களே ஆவார்கள். தமிழகம் மிகுந்த பாதுகாப்பாக உள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com