நர்மதா, கிருஷ்ணா-கோதாவரி மேலாண்மை வாரியங்கள் முன்னுதாரணம்: "நாடாளுமன்ற ஒப்புதலின்றி காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியமே'

நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை சட்டப்பூர்வமாக அமைக்க முடியும் என, தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பொதுப் பணித் துறை மூத்த பொறியாளர் சங்க நிர்வாகிகள்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பொதுப் பணித் துறை மூத்த பொறியாளர் சங்க நிர்வாகிகள்.

நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை சட்டப்பூர்வமாக அமைக்க முடியும் என, தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு, நர்மதா, கிருஷ்ணா-கோதாவரி மேலாண்மை வாரியங்களே முன்னுதாரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்தச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எஸ்.குணபாலன், செயலர் மாதவராஜ் கணேசன், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் ராஜமன்னார் ஆகியோர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் பன்மாநில நதிநீர் வழக்குச் சட்டப்படியே காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதன் உள்பிரிவுதான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வழிவகை செய்கிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்த பிறகு உச்ச நீதிமன்றமே அதில் தலையிட முடியாது. அனைத்து அதிகாரமும் நடுவர் மன்ற தீர்ப்புக்கு வந்துவிடுகிறது. எனவே, நடுவர் மன்றத் தீர்ப்பின் உள்பிரிவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமே. இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறத் தேவையில்லை. கர்நாடக அரசின் ஒப்புதலையும் பெற வேண்டியதில்லை.
நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்த பிறகும் அதை அரசிதழில் அறிக்கையாக வெளியிட 6 ஆண்டுகளுக்கு மேலானது. ஆனால், நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையமானது அரசிதழில் வெளியிட்ட டிசம்பர் மாதத்திலேயே நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் அமைக்கப்பட்டது. இதேபோல, கிருஷ்ணா-கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியமானது நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியான மறுநாளே (29.5.2014) அமைக்கப்பட்டது. அப்போதும், நாடாளுமன்ற ஒப்புதல் கோரப்படவில்லை.
நர்மதா ஆணையமானது 6 மாநிலங்களுக்கு இடையே கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. ஆனால், 4 மாநிலங்களுக்கு இடையே கட்டுப்படுத்தும் அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையாக செயல்படுகிறது. இதர மாநிலங்களில் அரசியல் அழுத்தம் ஒற்றுமையாக உள்ளது. தமிழகத்தில் இந்த நிலை இல்லாத காரணத்தாலும் தொய்வு நிலையே நீடிக்கிறது.
நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்பட யாருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை. கர்நாடக மாநில அரசியல் ஆதாயத்தை மறந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.
கர்நாடகத்தின் அத்துமீறல்கள்!
1973 முதல் 1980 வரை தமிழகம் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இன்றியே காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி என 5 அணைகளை கட்டி 70 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தடுத்து வைத்துள்ளது. மேலும், 1971-இல் 6.68 லட்சம் ஏக்கராக இருந்த பாசனப் பரப்பை இப்போது 21.71 லட்சம் ஏக்கராக உயர்த்திவிட்டது. ஆனால், தமிழகத்தில் 28.80 லட்சம் ஏக்கராக இருந்த பாசனப் பரப்பு இப்போது 24 லட்சமாக குறைந்துள்ளது. 350 டிஎம்சி தண்ணீரை பெற்ற தமிழகம் இப்போது 192 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெறும் நிலையுள்ளது. கர்நாடகத்தில் 3 போகம் பயிர் செய்யும் நிலையில் தமிழகத்தில் ஒருபோகம்கூட பயிர் செய்ய சிரமமாக உள்ளது.
காவிரி வடிநிலப் பகுதிகளில் பெய்யும் மழை அளவைப் பொருத்தே தமிழகத்துக்கான தண்ணீர் ஒதுக்கீடு உள்ளது. ஆனால், மழை பெய்யும் தருணங்களில் ராட்சத பம்புகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி கூடுதலாக உயர்த்திய பாசனப் பரப்புக்கு கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், அணையில் தண்ணீர் இல்லை எனக் கூறி தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறது. இந்திய வானிலை ஆய்வு நிலைய அறிக்கையானது, இந்த ஆண்டு கர்நாடகத்தில் 6 சதவீதம் மட்டுமே மழை குறைவு எனக் கூறுகிறது. ஆனால், கர்நாடக அரசோ 48 சதவீதம் என அறிவிக்கிறது. இவையனைத்தும் அத்துமீறல்கள். இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த பொறியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com