'பாதையின் விளிம்பில் பரவிடும் வெளிச்சம்': காவிரி விவகாரம் குறித்து கருணாநிதி மகிழ்ச்சி

'பாதையின் விளிம்பில் பரவிடும் வெளிச்சம்'  என்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
'பாதையின் விளிம்பில் பரவிடும் வெளிச்சம்': காவிரி விவகாரம் குறித்து கருணாநிதி மகிழ்ச்சி

சென்னை:  'பாதையின் விளிம்பில் பரவிடும் வெளிச்சம்'  என்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில்  நேற்றையதினம் உச்ச  நீதிமன்றத்தின்  நீதிபதிகள்  தீபக் மிஸ்ரா மற்றும் லலித்  ஆகியோர் அடங்கிய  அமர்வு,  நான்கு வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும்  அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.   அப்படி மூன்றாண்டு களுக்கு முன்பே வாரியமும் குழுவும் அமைக்கப்பட்டிருந்தால், இந்நேரம்  காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து,  இரு மாநில மக்களுக்கும்  நீர்ப் பங்கீடு  பழக்கப்பட்டுப் போயிருக்கும்.   பல்வேறு அரசியல் காரணங்களினால்  தாமதம் ஏற்பட்டு விட்டது.

இப்போது கடைசியாக உச்ச நீதி மன்றமே தலையிட்டு  காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு வாரத்திற்குள்  அமைத்திட  வேண்டுமெனக் கட்டளையிட்டுள்ளது.  காவிரிப் பிரச்சினையில்,  உச்ச நீதி மன்றத்தின்  மைல் கல்  போன்ற  இந்த மகத்தான  தீர்ப்பினை  நான் மனதார வரவேற்று மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தத் தீர்ப்பு தமிழக விவசாயிகள் பல்லாண்டுகளாகப் பட்ட வேதனைக்கும், சிந்திய வியர்வைக்கும், சொரிந்த கண்ணீருக்கும் கிட்டியிருக்கும்  வெற்றிப் பரிசு என்பதில் கிஞ்சிற்றும் அய்யமில்லை.   “Light at the end of the Tunnel” என்று ஆங்கிலத்தில்  ஒரு சொற்றொடர் உண்டு;  அதற்கு “பாதையின் விளிம்பில் பரவிடும் வெளிச்சம்” என்று பொருள்.  கடைசியாகக் காவிரிப் பிரச்சினையில்  உச்ச நீதி மன்றத்தின்  மூலமாக ஒளிக்கீற்று தோன்றியுள்ளது.  தமிழகத்தில்  அனைத்துத் தரப்பினராலும்  வரவேற்கத்தக்கது,  வரவேற்றுப் பாராட்டத்தக்கது, பாராட்டி மகிழத்தக்கது, மகிழ்ந்து என்றும் நினைவு கூரத் தக்கது!

மேலும் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு  21-9-2016 முதல்  27-9-2016 வரை  ஏழு நாட்களுக்கு  விநாடிக்கு ஆறாயிரம்  கன அடி நீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.   15 ஆயிரம் கன அடி,  12 ஆயிரம் கன அடி என்பது  3 ஆயிரம் கன அடியாக மிகவும் சுருங்கி  தற்போது 6 ஆயிரம்  கன அடியாகச் சுருங்கியிருக்கிறது.  3 ஆயிரம் கன அடிக்கே , கனத்த இதயத்தோடு தருகிறோம் என்றும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தர முடியாது என்றும்  மறுத்து வந்த  கர்நாடகம்,  உச்ச நீதி மன்ற  உத்தரவை  செயல்படுத்த இயலாத உத்தரவு என்று சொல்லிவிட்டு,  எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.  
காவிரிப் பிரச்சினையிலே உச்ச நீதிமன்றமோ, காவிரி மேற்பார்வைக் குழுவோ எந்த முடிவினை எடுத்து அறிவித்தாலும் உடனடியாக கர்நாடக மாநில முதல் அமைச்சரும், அமைச்சர்களும் எவ்வாறு செயல்படுகிறார்கள்,  எவ்வாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து கலந்தாலோசிக்கிறார்கள்,  எவ்வாறு சட்ட வல்லுநர் களையெல்லாம் அழைத்துப் பேசுகிறார்கள்,  எவ்வாறு அமைச்சரவையைக் கூட்டி இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கிறார்கள், இன்றைக்குக் கூட,  அமைச்சரவைக் கூட்டத்தையும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறார் கர்நாடக முதல்வர்;  ஆனால் தமிழ்நாட்டிலும் ஒரு அரசு இருக்கிறதே, அவர்கள் இதைப் பற்றியெல்லாம் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று கேட்டிருந்தேன்.  அதற்கும் எந்தப் பதிலும் இல்லை;  காவிரிப் பிரச்சினையிலே  தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதற்கும் எந்தப் பதிலும் இல்லை.   

சம்பாப் பயிரை முழுமையாகக் காப்பாற்றுவதற்கு  என்னென்ன நடவடிக்கைகளை அதிமுக அரசு மேற்கொள்ள விருக்கிறது  என்பது ஒளிவுமறைவின்றி  வெளிப்படையாகத் தெளிவுபடுத்தப் பட்டால் தான்,  நம்பிக்கையோடும்  ஊக்கத்தோடும்  விவசாயிகள்  சாகுபடிப் பணிகளைச் செய்திட இயலும்  என்பதை உணர வேண்டும்.  இதற்கும் பதில் இல்லாமல் போனால், பாதிப்பு விவசாயிகளுக்குத் தான்.

இனியும் காலத்தைக் கழிக்காமல்,  உச்ச நீதிமன்றத்தின்  உத்தரவுப்படியும்,  நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்  உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம்  - காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்து,  செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்;  பசிப்பிணி போக்க உணவு உற்பத்திக்கு உத்தரவாதம் தர வேண்டும்.  அ.தி.மு.க. அரசு  வாரியமும், குழுவும் அமைந்திட, தனது அரசியல்  பலத்தையும் செல்வாக்கையும்  முழுமையாகப் பயன்படுத்திட  வேண்டும்.  

தேவையான  தண்ணீரை வைத்துக் கொண்டு திண்டாடுவதைத் தவிர்த்திடவும், மாநிலங்களுக்கிடையே  பகை உணர்வை ஒழித்திடவும்,  பயன்படுத்தப்படாமல்  தண்ணீர் வீணே கடலில்  கலப்பதைத்  தடுத்து, தென்னக நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றிடும்  முயற்சியை  மத்திய - மாநில  அரசுகள் முன்னெடுத்துச் செல்லவேண்டும்  என்றும்  நெருக்கடியான இந்த நேரத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com