காவிரி மகா புஷ்கர் கும்பமேளா விழா ஏற்பாடுகள்: உயர்நீதிமன்றத்தில் ஆட்சியர் ஆஜராகி விளக்கம்

காவிரி மகா புஷ்கர் கும்பமேளா விழாவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை திருச்சி ஆட்சியர் ஆஜராகி விளக்கம்

காவிரி மகா புஷ்கர் கும்பமேளா விழாவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை திருச்சி ஆட்சியர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் செப்.12 முதல் 24 -ஆம் தேதி வரை காவிரி மகா புஷ்கர் கும்பமேளா திருவிழா நடைபெற உள்ளது. இதில் 30 லட்சத்திற்கும் மேலானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. காவிரியில் பக்தர்கள் நீராடும் அம்மா மண்டபத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே காவிரி மகா புஷ்கர் கும்பமேளா விழாவிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச வைஷ்ணவ ராமானுஜ சாமராஜ சபைச் செயலர் கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்காத திருச்சி ஆட்சியரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சி ஆட்சியர் கே.ராஜாமணி நேரில் ஆஜராகி, காவிரி மகா புஷ்கர் கும்பமேளாவிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், காவிரி மகா புஷ்கர் கும்பமேளா விழாவிற்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் குளிப்பதற்காக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்த்தொட்டிகள் காவிரி கரைகளில் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்காக 4 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண், பெண் பக்தர்களுக்கு என 60 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ஓய்வு எடுக்க தாற்காலிக கூடாரங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com