
வெள்ளக்கோவில் அருகே கடந்த 35 வருடங்களாக வறண்டு கிடக்கும் வட்டமலைக்கரை அணைக்கு, அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாராபுரம் அமராவதி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் தர்மலிங்கம் வெளியிட்டுள்ள தகவல் விவரம்:
அமராவதி ஆற்றிலிருந்து வட்டமலைக்கரை அணைக்குத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டுமென விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த காலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழையில்லாத காரணத்தால், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தின் மூலம் திருமூர்த்தி அணையிலிருந்து சில நிபந்தனைகளின் அடிப்படையில் வட்டமலைக்கரை அணைக்குத் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டது.
ஆனால், திருமூர்த்தி அணைக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால், ஒருசில ஆண்டுகள் மட்டும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் மூலம் வட்டமலைக்கரை அணைக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.திருமூர்த்தி அணையின் உபரி நீர் கிடைக்கப் பெறாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அமராவதி ஆற்றில் மழைக் காலத்தில் ஏற்படும் உபரி நீரை வட்டமலைக்கரை அணைக்குக் கொண்டு செல்வதற்காக பொதுப் பணித் துறை மூலம் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மேல் நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அரசின் ஆட்சி ஒப்புதல், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற பின்னர் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.