ஆர்.கே.நகரில் மும்முனைப் போட்டி?: களத்தில் அதிமுக, திமுக, டிடிவி தினகரன்

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சென்னை ஆர்.கே.நகரில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சென்னை ஆர்.கே.நகரில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரனே போட்டியிடுவாரா அல்லது அவரது ஆதரவாளருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
டிசம்பர் 4-இல் கடைசி: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு வரும் 4-ஆம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து, பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
திமுக சார்பில் மருதுகணேஷும், அதிமுக சார்பில் இ.மதுசூதனனும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக அவரது அணியைச் சேர்ந்த அன்பழகன் அறிவித்தாலும், அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் தினகரனிடம் இருந்து வெளியாகவில்லை.
இதனால், அவரே போட்டியிடப் போகிறாரா அல்லது அவரது ஆதரவாளர் யாரேனும் களம் இறங்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கெனவே இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் அதே தொப்பி சின்னத்தை ஒதுக்குமா என்ற சந்தேகம் டிடிவி தினகரன் தரப்பினருக்கு எழுந்துள்ளது. 
டிடிவி தினகரனோ அல்லது அவரது ஆதரவாளர்களில் ஒருவரோ போட்டியிட்டாலும், ஆர்.கே.நகரில் மும்முனைப் போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
பாஜக நிலைப்பாடு: தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாஜகவும் ஆலோசித்து வருகிறது. ரத்து செய்யப்பட்ட இடைத் தேர்தலின் போது இசையமைப்பாளர் கங்கை அமரன் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை அவர் போட்டியிட மறுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், யாரை வேட்பாளராக களம் இறக்குவது என்பது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு ஆலோசித்து வருகிறது.
ஓரிரு நாள்களில் தேர்தல் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பை அந்தக் கட்சி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதைத் தவிர்த்து, நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட சிலரும் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரதான கட்சிகளைப் பொருத்தவரையில் இதுவரை மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் மூன்று நாள்கள் எஞ்சியிருக்கும் நிலையில், வேட்பு மனுத் தாக்கல் வாபஸ் தேதிக்குப் பிறகே எத்தனை முனைப் போட்டி இருக்கும் என்பது தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com