இந்தியாவிலேயே முதல் முறையாக ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு

இந்தியாவிலேயே முதல் முறையாக ஆணவக் கொலை வழக்கில் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று சங்கர் கொலை வழக்கில் ஆஜராகி வாதிட்ட அரசு தரப்பு வழக்குரைஞர் சங்கரநாராயணன் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு
Published on
Updated on
1 min read


திருப்பூர்: இந்தியாவிலேயே முதல் முறையாக ஆணவக் கொலை வழக்கில் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று சங்கர் கொலை வழக்கில் ஆஜராகி வாதிட்ட அரசு தரப்பு வழக்குரைஞர் சங்கரநாராயணன் கூறியுள்ளார்.

உடுமலை சங்கர் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 8 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய ஆணவப் படுகொலை வழக்கில், குற்றவாளிகள் 8 பேரில் 6 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி அலமேலு நடராஜன் உத்தரவிட்டார்.

சங்கர் கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஆஜராகி வாதாடிய சங்கர நாராயணன், இந்த தீர்ப்பு குறித்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே முதல் முறையாக ஆணவப் படுகொலை வழக்கில் இந்த பரபரப்புத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பில், தங்களுக்கு மகன் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை கோரப்பட்டது. ஆனால், மகளையும், வேறொருவரின் மகனையும் கூலிப்படை வைத்துக் கொலை செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு, சமூகத்துக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

இந்த வழக்கில், காவல்துறை டிஎஸ்பியே நேரடியாக தலையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினார். மற்ற வழக்குகளை எடுத்துக் கொண்டால், குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றத்திடம் போராடி, குற்றவாளிகள் 10 பேரும் ஜாமீனில் வெளியே வர முடியாமல் திருப்பூர் டிஎஸ்பி விவேகானந்தன் நடவடிக்கை எடுத்தார்.

அதே போல, அரசு தரப்புக்கு பலம் சேர்க்கும் வகையில் காவல்துறையினர் பல சாட்சிகளையும், ஆதாரங்களையும் முன் வைத்தனர் என்றார்.

மேலும், கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, நீதிமன்றத்திடம் இருந்து தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெற்றதும், 3 பேர் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com