ரூ. 2,342 கோடி நிகர லாபம்: என்எல்சி புதிய சாதனை

கடந்த 31.3.2017 அன்றுடன் முடிவடைந்த நிதியாண்டில், என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ. 8,672.84 கோடி வர்த்தகம் மேற்கொண்டு, ரூ. 2,342.20 கோடி நிகர லாபம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த 31.3.2017 அன்றுடன் முடிவடைந்த நிதியாண்டில், என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ. 8,672.84 கோடி வர்த்தகம் மேற்கொண்டு, ரூ. 2,342.20 கோடி நிகர லாபம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
என்எல்சி நிறுவனத்தின் 2016-17ஆம் ஆண்டின் நிதி நிலை முடிவுகளின்படி, கடந்த நிதியாண்டில் 20 கோடியே 58 லட்சத்து 14 ஆயிரம் கன மீட்டர் மேல் மண் நீக்கப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்திருந்த இலக்கான 16.10 கோடி கன மீட்டரை விட 27.83 சதவீதம் அதிகம். 2015-16 ஆம் ஆண்டை விட 20.87 சதவீதம் அதிகமாகும்.
அனைத்துச் சுரங்கங்களிலிருந்தும் 2 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்திருந்த இலக்கான 2.68 கோடி டன்னை விட 3.05 சதவீதம் அதிகம். 2015-16 ஆம் ஆண்டின் உற்பத்தி அளவைவிட 8.51 சதவீதம் அதிகம்.
மின் உற்பத்தியில், அனல் மின் நிலையங்களிலிருந்து மின் வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட அளவைவிட 131 கோடி யூனிட்டுகள் குறைவாகப் பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பையும் சேர்த்து, கடந்த நிதியாண்டில் 2,234 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்திருந்த இலக்கான 2,156 கோடியே 77 லட்சம் 60 ஆயிரம் யூனிட்டை விட 3.58 சதவீதம் அதிகம். 2015-16 ஆம் ஆண்டின் மின் உற்பத்தி அளவைவிட 14.44 சதவீதம் அதிகம்.
இதன் துணை நிறுவனமான என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட 713.50 கோடி யூனிட்டையும் சேர்ந்து, மொத்தம் 2,947 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 27.18 சதவீதம் அதிகம்.
நிதிநிலை செயல்பாடுகளின் வளர்ச்சி: கடந்த நிதியாண்டில் (2016-17) ரூ. 8,672.84 கோடி வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. இது 2015-16 ஆம் ஆண்டின் வர்த்தகத் தொகையான ரூ. 6,652.5 கோடியை விட 30.38 சதவீதம் அதிகம்.
மொத்த வருவாயாக ரூ. 9,347.25 கோடியை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது 2015-16ஆம் ஆண்டின் மொத்த வருவாயான ரூ. 7,177.20 கோடியை விட 30.24 சதவீதம் அதிகம்.
வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 3,027.56 கோடியை ஈட்டியுள்ளது. 2015-16ஆம் ஆண்டின் வரிக்கு முந்தைய லாபத் தொகையான ரூ. 1,856.7 கோடியை விட 63.12 சதவீதம் அதிகம்.
பங்கு ஈவுத் தொகை: பங்குதாரர்களுக்கு, இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக 73.40 சதவீதம் அறிவித்து, இதற்காக, ரூ. 1,121.97 கோடியை வழங்கியுள்ளது. மத்திய அரசு முதலீட்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக ரூ. 1,002.20 கோடி வழங்கியுள்ளது. பங்கு ஈவுத் தொகைக்கான விநியோக வரியாக ரூ. 228.40 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. நிகழாண்டில் மத்திய அரசுக்கு, என்எல்சி இந்தியா நிறுவன வரலாற்றிலேயே அதிகபட்ச தொகையாக ரூ. 4,964.52 கோடியை வங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com