எம்எல்ஏ சரவணனின் விடியோ கிடைத்தது எப்படி? மூன் டிவி எடிட்டர் ஷானவாஸ் கான் பேட்டி

மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணனின் பேட்டி கிடைத்தது எப்படி என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகி ஷானவாஸ் கான் விளக்கம் கொடுத்துள்ளார்.
எம்எல்ஏ சரவணனின் விடியோ கிடைத்தது எப்படி? மூன் டிவி எடிட்டர் ஷானவாஸ் கான் பேட்டி
Updated on
2 min read


சென்னை:  மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணனின் பேட்டி கிடைத்தது எப்படி என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகி ஷானவாஸ் கான் விளக்கம் கொடுத்துள்ளார்.

எம்எல்ஏ சரவணனின் பேச்சுகள் அடங்கிய விடியோவை வெளியிட்ட ஆங்கில தனியார் செய்தி ஊடகத்தில், ஷானவாஸ் பேட்டி இடம்பெற்றுள்ளது.

அப்போது அவர் கூறியதாவது, 
சரவணனிடம் பேசியது எப்படி? என்ற கேள்விக்கு, 
கூவத்துரில் என்ன நடந்தது என்பது குறித்து அறிய அனைவருக்குமே ஆர்வம் தான்.  அதனால்தான் அது பற்றிய அறிய ஸ்டிங் ஆபரேஷன் நடத்த முடிவு செய்தோம். கூவத்தூர் விடுதியில் இருந்து வெளியே வந்த முதல் நபர் சரவணன். எனவே அவரிடம் பேச நினைத்தோம்.

ஒரு சிலரைப் பிடித்து அவருடன் தொடர்பு கொண்டோம். அவர் எங்கள் அலுவலகத்துக்கு வர ஒப்புக் கொண்டார். இது  ஒரே நாளில் நடந்த விஷயம் அல்ல. 

அவருடன் பேசிய அனைத்துப் பேச்சும் பதிவு செய்யப்பட்டது. கிட்டதட்ட 6 நாட்கள் இதுபோன்ற சந்திப்பு நிகழ்ந்தது. 

அவருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது, மற்றவர்களுக்கு எவ்வள்வு கொடுக்கப்பட்டது, பேரம் பேசிய விவகாரம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார் என்று கூறியுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை எம்எல்ஏ சரவணன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சசிகலா அணி தரப்புக்கு ஆதரவு தெரிவிக்க தங்களிடம் பேரம் பேசப்பட்டதாக கூறிய விடியோ திங்கட்கிழமை இரவு வெளியானது.

அதிமுக ஏம்எல்ஏக்கள், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்த போது, கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களில், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், அங்கிருந்து தப்பி வந்து பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார்.

தோற்றத்தை மாற்றிக் கொண்டு கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து தப்பி வந்ததாக அவர் அப்போது பரபரப்பான பேட்டியை அளித்திருந்தார். 

இந்த நிலையில், தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசிய விடியோ நேற்று வெளியானது. ஆங்கில தனியார் தொலைக்காட்சியில் வெளியான இந்த விடியோவால் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அந்த விடியோவில் பதிவாகியுள்ள முழு விவரம் வருமாறு, 

கேள்வி : கூவத்தூர் எப்படி இருந்தது? 
கூவத்தூரில் எந்த தப்பும் நடக்கவில்லை, அங்கு ஊடகங்களில் சொன்னது போல பெண்கள் எல்லாம் இல்லை, மிரட்டல் விடுக்கப்படவில்லை. தண்ணி மட்டுமே இருந்தது.

கேள்வி: பேரம் கமிட் பண்ணினார்களா
கமிட் எல்லாம் பண்ணவில்லை. சொல்லப் போனால் நேரடியாக எதுவுமே பேசவில்லை. பேருந்தில் ஏறும் போது 2 சொன்னார்கள். கூவத்தூர் போனதுமே 4 என்று சொன்னார்கள். அதாவது ஏர்போர்ட் போகும் போது 2 ஆக இருந்தது பிறகு கவர்னரை பார்க்கப் போகும் போது 4 ஆக ஆனது. அப்புறம் 6 என்று சொன்னார்கள். இப்படி ஏற்றிக் கொண்டே போகிறார்களே கொடுப்பார்களா என்று தோன்றியது.

அடுத்த நாள் வந்து எங்குமே பணம் இல்லையாம், எனவே, பணத்துக்குப் பதிலாக தங்கம் தருகிறோம் என்று சொன்னார்கள். அடடா பணம் கொடுத்தாலும் அதை எடுத்துக் கொண்டு போய் தங்கம் தான் வாங்க வேண்டும். அங்கும் ஏமாற்றி விடுவார்கள். எப்படி வாங்குவது என்று தெரியாது. எனவே எல்லா பிரச்னையும் முடிந்துவிட்டது. 

அந்த நொடியே பேசியதை கொடுத்திருந்தால் யாருமே அந்த அணியை விட்டு வந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன், திறந்துவிட்டுவிட்டு அவரவர் வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லிவிட்டிருந்தாலே போதும். இதுவரை ஆட்டு மந்தைகள் போலத்தானே இருந்தோம். எந்த கேள்வியும் யாரும் கேட்டதில்லையே. எங்க வந்து கூப்பிட்டாலும் கையெழுத்து போடுங்கள் என்று சொல்லியிருந்தாலே போதும். எல்லாரும் வந்திருப்பார்கள்.

அதை விட்டுவிட்டு கூவத்தூரில் போட்டு அடைத்துவைத்துவிட்டு, மீடியாக்கள் மூலமாக மக்களுக்குத் தெரிந்து எல்லாமே போச்சு என்று முடித்திருக்கிறார்.

3 எம்எல்ஏக்கள் மட்டும் பணத்தை வாங்கி விட்டார்கள். இவர்களுக்கு அதிகபட்ச தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com