ஏங்கும் ஏலகிரி மலை!

ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏலகிரி மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏங்கும் ஏலகிரி மலை!

ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏலகிரி மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலை அமைந்துள்ளது. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்தும் இந்த மலைக்குச் செல்லலாம்.
ஏலகிரி புங்கனூர் படகு குழாம் செல்லும் சாலை சுற்றுலாப் பயணிகள் மற்றும் புங்கனூர், கொட்டையூர் மக்கள் செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலையின் பிரதான இடத்தில் அரசு மதுக்கடை உள்ளது. இதனை டாஸ்மாக் ஜங்ஷன் என்று அழைக்கிறார்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு குவியும் மதுப்பிரியர்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு மிகவும் அச்சுறுத்தல் உள்ளது.
ஏலகிரியில் உள்ள தொலைநோக்கி பார்வை மையம் செயல்படாமல் பாழடைந்து குட்டிச்சுவர் போல் காட்சியளிக்கிறது. எனவே, இதனை சீரமைத்து, தொலைநோக்கி கருவியை பொருத்தி மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திறந்தவெளி திரையரங்கத்தில் உள்ள இசை நீரூற்று பராமரிப்பின்றி, முற்றிலுமாக சிதைந்துவிட்டது. இதன் இரண்டு வாயில்களும் எப்போதும் திறந்தே இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் குற்றச் செயல்கள் அரங்கேறுகின்றன.

ஏலகிரியின் பிரதானச் சாலையை விரிவுபடுத்தும்போதே கழிவு நீர் கால்வாயையும் அமைப்பதற்கு மாநில நெடுஞ்சாலை துறைக்கு அரசு நிதி ஒதுக்கி கொடுத்தது. ஆனால் சாலை மட்டுமே விரிவுபடுத்தப்பட்டது. கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.
ஏலகிரி கொட்டையூர் பிரிவு சாலையில் உள்ள சுற்றுலா தகவல் மையம் மூடியே கிடக்கிறது. மின்னணு சாதனங்கள் உள்பட அனைத்து வசதிகளுடனும் தொடங்கப்பட்ட இந்த மையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்காக சுமார் 50 மிதிவண்டிகள் இருந்தன. அவை என்ன ஆனதென்றே தெரியவில்லை.


படகு குழாம் பயணிகள் நிழற்கூடத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிழற்கூடத்தையொட்டி உள்ள ஒரு மரம் எந்நேரமும் கீழே சாய்ந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன், இதனை அகற்ற வேண்டும்.
ஏலகிரிமலையில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஏலகிரி குறிஞ்சி வானவில் அறக்கட்டளை நிறுவனர் பொன்.கதிர், வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். எனவே, ஏலகிரிமலையில் உள்ள குறைபாடுகளை தீர்க்கவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com