கால்நடைத் தீவனங்கள் விலை கடும் உயர்வு: பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா?

திண்டுக்கல்: வறட்சிப் பாதிப்பு காரணமாக கால்நடைத் தீவனங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கால்நடைத் தீவனங்கள் விலை கடும் உயர்வு: பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா?

திண்டுக்கல்: வறட்சிப் பாதிப்பு காரணமாக கால்நடைத் தீவனங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயத் தொழில் மட்டுமின்றி கால்நடை வளர்ப்புத் தொழிலுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. பருவ மழை பொய்த்ததன் காரணமாக, பெரும்பாலான இடங்களில் பசுந்தீவனம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
பசுந்தீவனம் பற்றாக்குறையால் அவற்றுக்கு மாற்றாக வேறு தீவனங்களை நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தீவனப்பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மேலும் கால்நடைகளுக்கான தண்ணீரின் தேவையைச் சமாளிப்பதில் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
பசுந்தீவனங்களுக்கு மாற்றாக புண்ணாக்கு, தவிடு போன்ற அடர் தீவனங்களையும் மற்றும் வைக்கோல், சோழத்தட்டை போன்ற உலர் தீவனங்களையும் வெளியில் விவசாயிகள் வாங்கி வருகின்றனர். தற்போது அவற்றின் விலை அதிகரித்து வருவதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக மூட்டைக்கு ரூ.900 என இருந்த அடர்தீவனம் தற்போது ரூ.1300 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் வைக்கோல் கட்டு ஒன்று ரூ.90 இல் இருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. சோழத்தட்டை கட்டு ஒன்று ரூ.600-இல் இருந்து ரூ.2000 வரை உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, மாவட்ட வாரியாக மானிய விலையில் வைக்கோல் வழங்கும் மையங்களை அரசு தொடங்கவுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 9 விற்பனை மையங்கள் செயல்பட உள்ளன. இந்த மையங்களில் கால்நடைக்கு நாளொன்றுக்கு 3 கிலோ வீதம், 7 நாள்களுக்கு 21 கிலோ வைக்கோல் வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கான தீவனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வைக்கோலை ரூ.8 முதல் ரூ.10-க்கு கொள்முதல் செய்து, அதனை ரூ.2-க்கு விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் தீவனப் பிரச்னையை ஒரளவுக்கு சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த மையங்களை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் தீவனம் விலை உயர்ந்துள்ளதால் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலர் சச்சிதானந்தம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பசு, எருமை என 2.86 லட்சம் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. வறட்சியான சூழலில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பால் உற்பத்தியாளர்கள் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் பால் விற்பனை விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், அந்தந்த தனியார் நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றன. உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில், பசும் பால் ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.45 ஆகவும் விலை உயர்த்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com