சோதனை நிறைவு: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவேக் ஜெயராமன்! அடுத்தது என்ன? 

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனைகள் நிறைவடைந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமனை..
சோதனை நிறைவு: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவேக் ஜெயராமன்! அடுத்தது என்ன? 

சென்னை: சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனைகள் நிறைவடைந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமனை வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

கடந்த ஒன்பதாம் தேதி துவங்கி இன்று வரை கடந்த ஐந்து நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்,பணியாளர்கள் வீடுகள் , ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்கள், கல்லூரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் வருமான வரி சோதனைகள் நடந்தன.

வருமான வரித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவாக 1500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இப்பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர். சோதனை முடிவில் பணப்பரிமாற்றம் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், பணம் மற்றும் தங்கக் நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும், பலரிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.  

அத்துடன் சோதனையினை பொறுத்து பலரிடம் விசாரணை நடத்த சம்மன்கள் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டது. முதல்கட்டமாக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜர் ஆனார். பின்னர் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் நேரில் ஆஜராக சம்மன்கள் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமன் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அவர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அடுத்தது என்ன நடக்குமோ என்ற பரபரப்பு சசிகலா வட்டாரத்தில் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com