சிறை தண்டனை உறுதி: நீதிமன்றத்தில் நடராஜன் சரணடைவது எப்போது?

சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சிறை தண்டனை உறுதி: நீதிமன்றத்தில் நடராஜன் சரணடைவது எப்போது?


சென்னை: சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சட்டப்படி தீர்ப்பு வெளியான அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ, தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அந்த வகையில், நடராஜன் இன்று அல்லது நாளை சரணடைய வேண்டியது அவசியம்.

அதே சமயம், உடல்நிலை சரியில்லை என்றாலும், சரணடைந்த பிறகு சிறை மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், உடல்நிலை பாதித்து கவலைக்கிடமான நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பியவர் சசிகலாவின் கணவர் நடராஜன்.

இவர் மீது தொடரப்பட்ட சொகுசு சார் இறக்குமதி வழக்கை விசாரித்த சிபிஐ முதன்மை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடையாமல் விலக்குப் பெற வழி இருக்கிறதா என்பது குறித்து அலசியதில், தண்டனை பெற்றவர்கள் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைய முடியாத அளவுக்கு உடல்நிலை பாதித்து, மருத்துவ உபகரணங்களின் உதவியின்றி ஒரு நொடியும் இருக்க முடியாது என்றால், அவர்கள் அது குறித்து நீதிபதிக்கு தகவல் தெரிவித்து ஓரிரு நாட்கள் அவகாசம் கோரலாம்.

அல்லது, மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கும் தண்டனையைக் குறைக்கக் கோரி மனு அளிக்கலாம்.

நீதிமன்ற உத்தரவுகள் வந்த பிறகு, அதனைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும், தண்டனையைக் குறைக்க முறையிடலாம். ஆனால், உடனடியாக நீண்ட நாள் அவகாசம் பெற வழியேதும் இல்லை என்றே தகவல்கள் கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com