இரட்டை இலைச் சின்னம் எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது? தேர்தல் ஆணையம் சொல்லும் விளக்கம்

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இரட்டை இலைச் சின்னம் எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது? தேர்தல் ஆணையம் சொல்லும் விளக்கம்


புது தில்லி: தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அமைப்பு ரீதியாகவும், சட்டப்பேரவையிலும் முதல்வர் பழனிசாமி அணிக்கே அதிக ஆதரவு இருப்பதால் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கியதாக தேர்தல் ஆணையம் விளக்கமும் அளித்துள்ளது.

மேலும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி கடந்த மார்ச் 22ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் 83 பக்கங்கள் கொண்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பது என்னவென்றால், அதிமுக என்ற கட்சிப் பெயரை பயன்படுத்த இனி மதுசூதனன் அணிக்கு தடையில்லை. அதிமுக கட்சிப் பெயர் மற்றும் இரட்டை இலைச்  சின்னத்தை மதுசூதனன் அணி பயன்படுத்தலாம்.

முதல்வர் பழனிசாமி அணிக்கு ஆதரவாக 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் புதுச்சேரியில் 4 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளது. டிடிவி தினகரன் அணியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உட்பட 20 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது.

மேலும், பழனிசாமி அணிக்கு, 1,877 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க, லட்சக்கணக்கான தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்த இயலாது. எனவே, கட்சியின் பொதுக் குழுவையே, லட்சக்கணக்கான  தொண்டர்களின் பிரதிநிதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதோடு, 42 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. ஆனால், டிடிவி தினகரனுக்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. 

பல பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்று டிடிவி தினகரன் கூறியிருந்தாலும், பெரும்பான்மையில் எந்த மாற்றமும் இல்லை.

கடந்த 1971ம் ஆண்டு சாதிக் அலி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து, தேர்தல் ஆணையம் இந்த வழக்கில் முடிவை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில், மதுசூதுனன் அவைத் தலைவராக இருக்கும் முதல்வர் பழனிசாமி அணிக்கு பெரும்பான்மை உள்ளதால், இரட்டை இலைச் சின்னம், கட்சிப் பெயர் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அதிமுக கட்சியின் பொதுச் செயலர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.  சசிகலா மற்றும் தினகரனின் கட்சிப் பொறுப்புகள் குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com