நதிநீர் தாவா திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

நதிநீர் தாவா திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நதிநீர் தாவா திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

நதிநீர் தாவா திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்புத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்:
மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகள் தொடர்பாக மாநிலங்களுக்குள் இருக்கும் தாவாக்களைத் தீர்த்து வைப்பதற்காக, ஒரு நிரந்தர நீர் பகிர்மானத் தீர்ப்பாயத்தை அமைக்கத் தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
நதி நீர் தாவா சட்டத்தை (1956-ஆம் ஆண்டு சட்டம்) மத்திய அரசு திருத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு நதிநீர்ப் பங்கீட்டு விவகாரமும் தனித்துவம் கொண்டவை. நீதிமன்றங்களால் சிவில் மற்றும் குற்ற வழக்குகள் பிரிக்கப்படுவது போல் அல்லாமல், அவரவர் மனப்பான்மைக்கு ஏற்ப நதிநீர் பங்கீட்டு விவகாரம் சிக்கலாக்கப்படுகிறது.
வயது நிர்ணயித்தால் சிக்கல்: நீர் ஆதாரங்களைப் பகிர்ந்து அளிக்கும் விவகாரத்தில் உள்ள நடைமுறையில் ஆய்வுகள் தேவை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை நியமிப்பதற்கான காலக்கெடு பற்றி இப்போதுள்ள சட்டம் எதையும் கூறவில்லை. இப்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டம் கொண்டு வரப்பட்டால், அதில் உறுப்பினர்களின் அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்படும். இப்போது காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தைப் பொருத்தவரை, அதில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் 1991-ம் ஆண்டில் இருந்து வழக்கை விசாரித்து வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே 70 வயதைக் கடந்துவிட்டனர்.
அந்தத் தீர்ப்பாயத்துக்கான தலைவரை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அந்தத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்து, நிலுவையில் இருக்கும் மனுக்களை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விசாரிக்க வேண்டியுள்ளது. 
இந்தச் சூழ்நிலையில் நதி நீர் தாவா திருத்தச் சட்ட மசோதா-2017 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், தீர்ப்பாயத்தின் தலைவரையோ அல்லது உறுப்பினர்களையோ வயது காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க நேரிடும்.
கடந்த 1990-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சட்ட மசோதாவின் 4-ஆவது பிரிவின்படி, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறு தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் மாற்றப்பட முடியாது.
நிறைவேற்ற வேண்டாம்: காவிரி நதிநீர் தீர்ப்பாயம் கடந்த 2007-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு எதிராக தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் செல்லத்தக்கவை என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. எனவே, காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் மட்டும்தான் மனுக்கள் நிலுவையில் உள்ளன. காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் உள்ள அந்த மனுக்கள் மீதான விசாரனையை இந்தத் தீர்ப்பாயமே தொடர்வது நல்லது. அந்த வழக்குகள் பற்றிய அனைத்து விஷயங்களையும் இந்தத் தீர்ப்பாயமே அறிந்து வைத்திருக்கும்.
சட்டத் திருத்தம் கொண்டு வந்து, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கும் விவகாரங்களை, நிரந்தர நீர் தகராறுகள் தீர்ப்பாயத்துக்கு மாற்றும் அவசியம் இப்போது எழவில்லை. தகவல் தொகுப்பு மற்றும் தகவல்கள் பராமரிப்பு தொடர்பான, சட்டத் திருத்த மசோதாவின் 9-ஏ பிரிவைப் பொருத்தவரை, தமிழக அரசு ஏற்கெனவே கடந்த 2001- ஆம் ஆண்டு ஜூலையில் கடிதம் எழுதியது. தமிழக அரசு தந்துள்ள தகவல் தொகுப்பை மத்திய அரசு சரிபார்க்கத் தேவையில்லை என்பதால், அதுதொடர்பான திருத்தம் எதுவும் தேவையில்லை என்று ஏற்கெனவே கூறிய கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
எனவே மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956 மற்றும் அதில் 2002-ஆம் ஆண்டு வரை திருத்தப்பட்ட சட்டங்கள் ஆகியவற்றின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.
இதனால்தான் சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அவசியமில்லை என்று கருதுகிறோம். நிலுவையில் இருக்கும் மனுக்களை, நியமிக்க இருக்கும் தீர்ப்பாயத்துக்கு மாற்றுவதன் மூலம், ஏற்கெனவே இருக்கும் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் செயல்பாடு பாதிக்கப்படக் கூடாது என்பது தமிழகத்தின் முடிவு.
எனவே, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக நிரந்தரத் தீர்ப்பாயத்தை அமைக்க வகை செய்வதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com