திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வருகை

திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை மாலை முரசொலி அலுவலகம் வருகை தந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வருகை

திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி பத்திரிகை அலுவலகத்தை வியாழக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார். சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், தற்போது முதன்முறையாக வெளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

முரசொலி பவள விழாவை முன்னிட்டு அங்கு அமைக்கப்பட்ட அரங்கை பார்வையிட்டார். அங்கு அவரது மெழுகு உருவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த முரசொலி அலுவலகத்தை தனது முதல் குழந்தை என்று அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு தொண்டைப் பகுதியில் டிரக்யாஸ்டாமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்த கருணாநிதி, தற்போது முதன்முறையாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுமார் 20 நிமிடங்களாக முரசொலி அரங்கை பார்த்து ரசித்த பின்னர் வீடு திரும்பினார்.

அவருக்கு விரைவில் டிரக்யாஸ்டாமி கருவி அகற்றப்படும் எனவும், பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் பவள விழா சென்னையில் வியாழக்கிழமை (ஆக.10) கொண்டாடப்பட்டது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கை தி ஹிந்து ஆங்கில நாளிதழ் குழுமத் தலைவர் என்.ராம் திறந்து வைத்தார். 

சென்னை கலைவாணர் அரங்கில் அன்றைய தினத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற பவள விழா நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், தி ஹிந்து குழுமத் தலைவர் என்.ராம், தினத்தந்தி குழுமத் அதிபர் சி.பாலசுப்ரமணிய ஆதித்தன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் அருண்ராம், டெக்கான் க்ரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், ஆனந்த விகடன் குழுமம் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செப்டம்பர் 5-ஆம் தேதி கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற 'முரசொலி' பவள விழா பொதுக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com