ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு விலக்கு; மறுபக்கம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி: செங்கோட்டையன் விளக்கம்

ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் அரசு, மறுபக்கம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு விலக்கு; மறுபக்கம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி: செங்கோட்டையன் விளக்கம்


சென்னை: ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் அரசு, மறுபக்கம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வழங்கினார். 

இதற்கான நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில், ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தேர்வு நடந்து 40 நாட்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2,315 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று பணிநியமன ஆணைகளையும் பெற்றுள்ளனர்.

கல்வித் துறையில் இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழும். நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான முடிவு கொள்கை அடிப்படையிலானது. நீட் தேர்வைப் பொருத்தவரை விலக்கு என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

மேலும், பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள். வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளை கையாள பயிற்சி அளிக்கப்படும். பிறகு, வெளி மாநிலங்களுக்கு, நம் மாநில ஆசிரியர்கள் சென்று பயிற்சி அளிக்கும் வகையில் அவர்களது திறனும் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் பள்ளிகளில் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கப்படும்  என்று கூறும் தமிழக அரசு, மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறதே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், தமிழக அரசு ஒரு உயிர் கூட பலியாகவிடக் கூடாது என்னும் நோக்கத்திலேயே செயல்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com