செயல்திட்டம்தான்; காவிரி மேலாண்மை வாரியம் அல்ல: உச்ச நீதிமன்றம் விளக்கம்

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செயல்திட்டம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோமே தவிர காவிரி மேலாண்மை வாரியம் என்று கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செயல்திட்டம்தான்; காவிரி மேலாண்மை வாரியம் அல்ல: உச்ச நீதிமன்றம் விளக்கம்


புது தில்லி: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செயல்திட்டம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோமே தவிர காவிரி மேலாண்மை வாரியம் என்று கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மனுவை அடுத்த வாரம் ஏப்ரல் 9ம் தேதி திங்கட்கிழமை விசாரிப்பதாகக் கூறியுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்றே விசாரிக்கக் கோரிய நிலையில், அடுத்த வாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகத்துக்கு உண்டான நீர் நிச்சயம் கிடைக்கும் என்றும் உறுதி அளித்தார்.

இந்த மனு மீது, நீதிபதி ஒரு சில விளக்கங்களை அளித்தார். அதில், உச்ச நீதிமன்றம் வெளியிட்ட காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடப்படவில்லை. காவிரி பிரச்னையை முழுமையாக தீர்ப்பதற்குரிய திட்டத்தை ஸ்கீம் என்று குறிப்பிட்டோம். அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு முழு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாக நீதிபதி விளக்கம் அளித்தார்.

மேலும், தமிழக அரசு தரப்பிடம், கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த நீரின் அளவில் எந்த மாற்றமும் செய்யப்படாது. உங்களுக்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும் என்று உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்க வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே தீர்வாக இருக்கும் என்று தமிழகம் கருதுகிறது. எனவே, தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் தேவையான ஆவணங்களை திரட்டி உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தத் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com