

சென்னை: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் திமுகவினர் மட்டும் அல்லாமல், திரையுலகினர், ஏராளமான கட்சியினர், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
இன்று காலை கருப்புச் சட்டை அணிந்த ஏராளமானோர் விமான நிலையத்தை முற்றுகையிட்டு, பிரதமர் மோடிக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல, தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடக்கும் திருவிடந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடியை கையில் ஏந்திய தொண்டர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவினர், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகே 'கோ பேக் மோடி' என்ற வாசகம் அடங்கிய கருப்பு பலூன்களையும் பறக்க விட்டனர். திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் கருப்புச் சட்டை அணிந்து மோடிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாய், ஓசூரைச் சேர்ந்த 77 வயது ஜேவி நாராயணப்பா என்ற திமுக தொண்டர் மிகவும் சிரமங்களுக்கு இடையே சென்னைக்கு வந்துள்ளார்.
தள்ளாத வயதிலும், தளராத மனத்துணிவோடு, கருப்புச் சட்டை அணிந்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டி தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வோடு ஓசூரில் இருந்து சென்னை வந்து திமுக தொண்டர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான தொண்டர்களுக்கு மத்தியில், மனதில் தளராத உணர்வோடு கருப்புக் கொடி ஏந்தியிருக்கும் நாராயணப்பா ஹீரோவாக மின்னுகிறார். இவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இது ஒன்றே தமிழனின் தேச உணர்வை பறைசாற்றும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.