சென்னை -சேலம் பசுமை விரைவுச் சாலை: அரூரில் பணிகள் தொடக்கம்

அரூர் வழியாகச் செல்லும் சென்னை -சேலம் பசுமை விரைவுச் சாலைக்கான முதல்கட்டப் பணிகள் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளன.
அரூர் -தீர்த்தமலை சாலையில் எம்.தாதம்பட்டி (முத்தானூர்) எனுமிடத்தில் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ள எல்லைக் கல்.
அரூர் -தீர்த்தமலை சாலையில் எம்.தாதம்பட்டி (முத்தானூர்) எனுமிடத்தில் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ள எல்லைக் கல்.

அரூர் வழியாகச் செல்லும் சென்னை -சேலம் பசுமை விரைவுச் சாலைக்கான முதல்கட்டப் பணிகள் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை முதல் அரூர் வரையிலான தேசிய பசுமைச் சாலை 179 -பி எனவும், அரூர் முதல் சேலம் வரையிலான பசுமைச் சாலை 179 -ஏ என்றும் குறிப்பிடப்படவுள்ளது. இந்தச் சாலையானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீ., தூரமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, செங்கம் பகுதியில் 122 கி.மீ., தொலைவும் அமைய உள்ளது. இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கி.மீ., தூரமும், தருமபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக 53 கி.மீ., தொலைவும், சேலம் மாவட்டத்தில் 38 கி.மீ., தூரமும் அமைய உள்ளது. 
இந்த பசுமை சாலை அமைக்கப்படுவதால், சென்னை -சேலம் இடையிலான பயணத் தூரமும், நேரமும் வெகுவாகக் குறையும். அதாவது, சேலத்தில் இருந்து சென்னைக்கு 3 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன கட்டமைப்பு வசதிகளுடன் 8-வழிச் சாலையாக அமையும் இந்த பசுமை விரைவுச் சாலையில் வாகனங்கள் வெளியேறுவதற்கும், உள்ளே நுழைவதற்கும் பாதுகாப்பு வசதிகள் இருக்கும். 
இந்தியாவில் ஏற்கெனவே மும்பை முதல் புணே வரையில் தேசிய பசுமை வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் அமையும் 2 -ஆவது பசுமை வழிச் சாலை சேலம் -சென்னை இடையிலான விரைவுச் சாலையாகும். 
முதல் கட்டப் பணிகள்: தற்போது முதல்கட்டப் பணிகளாக, பசுமை வழிச் சாலை செல்லும் பகுதிகளில் குறுக்கிடும் கிராமச் சாலை ஓரங்களில், கான்கிரீட்டால் அளவு கல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட தீர்த்தமலை, பாளையம், எம்.தாதம்பட்டி (முத்தானூர்), சுமைத்தாங்கி மேடு ஆகிய இடங்களில் சுமார் 100 மீட்டர் அகலம் உள்ளவாறு சாலையின் எல்லைக் கற்கள் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைக் கற்கள் அமைக்கும் பணிகளை செல்லிடப்பேசி உதவியுடன், இணையதள வரைபடத்தின் வாயிலாக ஒரு குழுவினர், அரூரில் இருந்து சேலம் செல்லும் பகுதியிலுள்ள கிராமச் சாலைகளில் மேற்கொண்டு வருகின்றனர். அரூர் பகுதியில் பசுமை விரைவுச் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதால், மத்திய, மாநில அரசுகளால் கையகப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகள், கல்வி நிறுவனங்கள் எவையாக இருக்கும் என்ற கேள்வி, இந்தச் சாலை செல்லும் பகுதியிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com