கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மாலை வெளியாகும் மருத்துவ அறிக்கைக்காக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.
கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மாலை வெளியாகும் மருத்துவ அறிக்கைக்காக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

சற்றுமுன்.. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறார். இதனால் தமிழகத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு ஸ்டாலினுடன், மு.க. அழகிரி, துரைமுருகன், டி.ஆர். பாலு ஆகியோரும் செல்கின்றனர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் குன்றிய கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 11வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மதியம் கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு வந்ததால் பதற்றம் நிலவியது.

இது பற்றிய தகவல் அறிந்த ஏராளமான திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு குவிந்தனர். 

கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதுமை தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக, அவரது முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டை மருத்துவ ரீதியாகச் சமாளிப்பது சவாலாக உள்ளது. கருணாநிதிக்கு தொடர் கண்காணிப்பும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

மருத்துவ சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மருத்துவ அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் 24 மணி நேரம் என்பது இன்று மாலை 6.30 மணி வரை என்பதால், அடுத்த மருத்துவ அறிக்கையில் என்ன சொல்வார்கள் என்ற கலக்கத்தோடு திமுக தொண்டர்கள் மருத்துவமனையில் கலங்கிய கண்களோடு காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, தனியார் மருத்துவமனையில் கூடுதலாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதலாக வரவழைக்கப்பட்ட காவலர்கள் எழும்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை மருத்துவமனைக்கு வந்த ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் பிற்பகலில் மருத்துவமனையில்  இருந்து புறப்பட்டுச் சென்றனர். கருணாநிதியுடன் மருத்துவமனையில் ராஜாத்தியம்மாள் உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் திங்கள்கிழமை மாலையில் இருந்து தலைவர்களும் தொண்டர்களும் மருத்துவமனையில் குவிந்தனர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் , ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய்சாய் ரெட்டி, சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தனர். தொண்டர்களும் பெருமளவில் மருத்துவமனையில் குவிந்தனர். கருணாநிதி நலம்பெற வேண்டி, பலர் கண்ணீர் விட்டு கதறினர்.

எம்.பி.-க்கள் வருகை: கருணாநிதி உடல் நலம் குறித்த தகவல் கிடைத்ததும் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் அவசரம் அவசரமாக சென்னை திரும்பினர்.

இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, மனுதாரரே திரும்பப் பெற்றதால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வருடன், மு.க. ஸ்டாலினின் சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்ற நிலையில், இந்த சந்திப்பின் போது முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com