நாகை, வேளாங்கண்ணிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப் பரிசீலனை: ரயில்வே பொது மேலாளர் தகவல்

நாகை, வேளாங்கண்ணி ரயில்வே இருப்புப் பாதைகளின் தர ஆய்வுக்குப் பின்னர், இந்தத் தடங்களிலான ரயில்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க அனுமதி கிடைத்தால்
நாகை ரயில் நிலைய வளாகத்தில் ஆய்வு செய்கிறார் ரயில்வே பொது மேலாளர் (தெற்கு) ஆர்.கே. குல்சிரேஸ்டா. 
நாகை ரயில் நிலைய வளாகத்தில் ஆய்வு செய்கிறார் ரயில்வே பொது மேலாளர் (தெற்கு) ஆர்.கே. குல்சிரேஸ்டா. 

நாகை, வேளாங்கண்ணி ரயில்வே இருப்புப் பாதைகளின் தர ஆய்வுக்குப் பின்னர், இந்தத் தடங்களிலான ரயில்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க அனுமதி கிடைத்தால், கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ரயில்வே பொது மேலாளர் (தெற்கு) ஆர்.கே. குல்சிரேஸ்டா கூறினார்.
நாகை ரயில் நிலைய அடிப்படை வசதிகள், இருப்புப் பாதைகளின் தரம் உள்ளிட்டவை குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
நாகை ரயில் நிலையத்தில், ரயில்வே துறையின் பல்வேறு பிரிவு அலுவலர்களைக் கொண்டு வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். மக்கள் நலக் கோரிக்கைகள் குறித்தும், ரயில் நிலையத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வில் கவனம் கொள்ளப்பட்டுள்ளது.
நாகை ரயில் நிலையம் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு சில சிறப்பு வசதிகள் இங்கு தேவைப்படுகிறது. அது குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கார் பார்க்கிங் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி மற்றும் பிற வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்படும்.
நாகை இருப்புப் பாதை தடங்களில் தற்போது குறைந்த வேகத்திலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தத் தடங்களிலான ரயில் இயக்க வேகத்தை அதிகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இருப்புப் பாதையின் தரம் உறுதி செய்யப்பட்டு, ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்தால், நாகை, வேளாங்கண்ணி தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப் பரிசீலிக்கப்படும் என்றார் ஆர்.கே. குல்சிரேஸ்டா.
முன்னதாக, நாகை ரயில் நிலைய பயணச் சீட்டு வழங்குமிடம், நுழைவு வாயில், வாகன நிறுத்துமிடம் மற்றும் ரயில் நிலைய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன், முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன், பாஜக கோட்டப் பொறுப்பாளர் வரதராஜன், மாவட்டத் தலைவர் கே. நேதாஜி, இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன், சிவசேனை கட்சி மாவட்டத் தலைவர் தா. சுந்தரவடிவேலன், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் பாஷ்யம், அரவிந்த்குமார் மற்றும் வணிகர்கள், ரயில் நிலைய அடிப்படை வசதிகள் மேம்பாடு, கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்:திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் 2 ஆண்டுகளில் முடிவுற்று ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்ஷ்ரேஸ்தா கூறினார்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பொது மேலாளர் (தெற்கு) ஆர்.கே. குல்சிரேஸ்டா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது வர்த்தகர்கள், பொது நல அமைப்பினர், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் அவரை சந்தித்து, புதிய ரயில் வசதி, ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
தொடர்ந்து ரயில்வே குடியிருப்புப் பகுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டசிறுவர்கள் விளையாட்டுப் பூங்காவை அவரது மனைவி மான்ஸி திறந்து வைத்தார்.
பின்னர் ரயில்வே மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து விட்டு தஞ்சைக்கு தனி ரயிலில் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது :
சென்னைக்கு இந்த மார்க்கத்தில் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. தண்டவாளத்தின் உறுதி தன்மை குறித்து கண்டறியப்பட்டு, புதிய ரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மன்னார்குடி - கோயம்புத்தூர் செம்மொழி விரைவு ரயில் திருவாரூர் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்.
திருச்சி - காரைக்கால் இருவழிப் பாதை அமைக்கப்பட்டவுடன் திருச்சி மற்றும் பிற மார்க்கத்துக்கு புதிய ரயில்கள் இயக்கப்படும். திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என்றார் குல்சிரேஸ்டா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com