தமிழக சமணர் தளங்கள் புகைப்பட தொகுப்பு வெளியீடு

தமிழகத்தில் உள்ள 464 சமணர் தளங்கள் தொடர்பான புகைப்படத் தொகுப்புடன் கூடிய குறுந்தகடு புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சமணர் தளங்கள் தொடர்பான டிவிடியை வெளியிடும் இசபெல்லா மர்குரே.
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சமணர் தளங்கள் தொடர்பான டிவிடியை வெளியிடும் இசபெல்லா மர்குரே.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள 464 சமணர் தளங்கள் தொடர்பான புகைப்படத் தொகுப்புடன் கூடிய குறுந்தகடு புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
2008-ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் இந்த கள ஆய்வை தொடங்கியது. இதில் 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
சமணர் கால கட்டடங்கள், குகைக் கோயில்கள், பாறை படுக்கைகள், குகை ஓவியங்கள், கல்வெட்டுகள், தளர்வான சிற்பங்கள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு குறுந்தகடாக தயாரிக்கப்பட்டது.
இந்த குறுந்தகட்டை வெளியிட்ட பிரான்ஸ் தூதரக சமூக விவகாரங்கள் துறைத் தலைவர் இசபெல்லா மர்குரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 464-க்கும் மேற்பட்ட சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் கலாசார வளர்ச்சிக்கு சமணர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், அவர்களது நினைவுச் சின்னங்கள் இடிபாடுகளாக உள்ளன. அவை பராமரிப்பின்றி தொடர்ந்து மறைந்து வருகின்றன.
தற்போது ஓரளவு பாதுகாப்பாக இருக்கும் சமணர் நினைவுச் சின்னங்கள் தொகுக்கப்பட்டது. அவற்றை எண்ம மயமாக்கினால் (டிஜிட்டல் மயம்) பாதுகாக்க முடியும். இதன்மூலம் நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்.
சமணர் தளங்களில் உள்ள பாரம்பரிய இலக்கியம், கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றார் அவர்.
மேலும், பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பிரட்ரிக் லேண்டி கூறியதாவது: இந்த ஆய்வில் சமணர்களின் 13 வகை சடங்குகள், திருவிழாக்கள் தொடர்பான புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில்கள், குகைக் கோயில்கள், பாறை தங்குமிடம் தளங்கள் மற்றும் பாழடைந்த கோயில்களின் 7,873 புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் சமணர்களின் கட்டடக் கலை, கலாசாரம் உள்ளிட்டவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு சமணர்களின் பங்கு, சமுதாயச் சடங்குகள், திருவிழாக்கள், கோயில் சடங்குகள் உள்ளிட்டவற்றை இந்தப் புகைப்படங்கள் சித்திரிக்கின்றன.
சமணர் தளங்களில் 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆபத்தான இடங்களுக்குச் சென்று சமணர் படுக்கைகள், நினைவுச் சின்னங்கள் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
குறுந்தகட்டில் சமணர் தளங்களின் வரைபடங்கள், இருப்பிடங்களை காண முடியும். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கள ஆய்வு செய்து இவை ஆவணப் படுத்தப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com