சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ஜீன் பூல் இயற்கைச் சுற்றுலா மையம்

கூடலூர், நாடுகாணி பகுதியில் அமைந்துள்ள ஜீன் பூல் இயற்கைச் சுற்றுலா மையம் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் முகாமாக அமைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வனத்தைக் காண, ஜீன் பூல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அடுக்கு மாடி கோபுரம்.
சுற்றுலாப் பயணிகள் வனத்தைக் காண, ஜீன் பூல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அடுக்கு மாடி கோபுரம்.

கூடலூர், நாடுகாணி பகுதியில் அமைந்துள்ள ஜீன் பூல் இயற்கைச் சுற்றுலா மையம் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் முகாமாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நாடுகாணி பகுதியில் சுமார் 250 சதுர ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது ஜீன் பூல் தாவர மரபியல் பூங்கா. 
மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரள வன எல்லையில் அமைந்துள்ள இந்த தாவர மரபியல் பூங்கா, தமிழக வனத் துறைக்குச் சொந்தமானது. 

இது கடல் மட்டத்திலிருந்து 900 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இரு பருவமழை மூலமாக சராசரியாக 2,860.4 மி.மீ. மழையை இப்பகுதி பெறுகிறது.

உலகின் மிக முக்கியமான 12 உயிர்ச்சூழல் மண்டலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் 1989ஆம் ஆண்டு இப்பூங்கா நிறுவப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான மருத்துவ மூலிகைகள், அரிய தாவர வகைகள் அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையில் , அந்தத் தாவர வகைகளைப் பெருக்கும் நோக்கத்தோடு இந்த பூங்கா உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, அறிவியல் பூர்வமான ஆய்வுப் பணிகள் தொடரும் அதே வேளையில், பொதுமக்களும் மாணவர்களும், சூழலியல் சுற்றுலாவின் வாயிலாக நமது பாரம்பரியத் தாவரங்களை நேரில் கண்டு மகிழும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 
இங்குள்ள பெரணி இல்லம், ஆர்க்கிட்டோரியம், ஹெர்பேரியம், திசு ஆய்வகம், தாவரவியல் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வசதியை முன்னிட்டு, வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, சிற்றுண்டி விடுதி, இயற்கை தங்கும் விடுதிகள், சைக்கிள் சவாரி பாதை அமைத்தல் ஆகிய பல்வேறு பணிகளும் முழுமை பெறும் தருவாயில் உள்ளன. மருத்துவக் குணம் மிக்க பல்வேறு தாவர வகைகள் அடங்கிய தோட்டம், மரங்களின்மேல் தங்கும் குடில்கள் உள்ளிட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளன. 
பழங்குடி மக்களைக் கொண்டு ஜீன்பூல் சூழல் சுற்றுலாக் குழு அமைக்கப்பட்டு அவர்களாகவே முழுவதுமாக நிர்வகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருவாயைப் பெருக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது சூழல் குழுவால் நிர்வகிக்க ஆகும் செலவினங்களுக்காகவும், பழங்குடி இளைஞர்களின் ஊதியத்துக்காகவும் தற்காலிகமாக பழங்குடி மக்களால் இப்பூங்கா திறக்கப்பட்டுச் செயல்படுகிறது. 
இத் திட்டம் முழுமை பெற்றால், முழுமையான சூழல் சுற்றுலாவை ரசிக்க வாய்ப்பு கிடைப்பதுடன், கேரள வன எல்லையில் அமைந்துள்ளதால் சுற்றுலா வருவாயும் பெருகும்.

ஜீன் பூல் தாவர மரபியல் பூங்காவின் இயற்கைக் காட்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com