வேதாரண்யம்-நாகை இடையே கரையைக் கடந்தது கஜா புயல்

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக்
கஜா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியபோது, வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் வீசிய பலத்த காற்றில் சீற்றத்துக்குள்ளான மரங்கள்.
கஜா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியபோது, வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் வீசிய பலத்த காற்றில் சீற்றத்துக்குள்ளான மரங்கள்.


வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.
தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11-ஆம் தேதி உருவெடுத்தது. இப்புயல் வியாழக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
10 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி, ராமேசுவரம், தூத்துக்குடி துறைமுகங்களில் 8-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி, காரைக்காலில் 9-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், நாகப்பட்டினத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. சில இடங்களில் கடல் அலை 2 மீட்டர் உயரம் வரை எழும்பி சீற்றத்துடன்காணப்பட்டது.
110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: நகரும் வேகம் குறைந்ததால் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் புயல் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது.
பலத்த மழை: புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மழை, கன மழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக நாகை மாவட்டத்தின் பல இடங்களில் பனை, தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன. புயல் கரையைக் கடக்கும்போது இடி, மின்னல் தொடர்ந்தது.
நாகையில்... நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்ட கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 44 ஆயிரம் பேர் 102 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 75 பேரும், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 180 பேரும் நாகை மாவட்டப் பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.
புயல் தீவிரம் 6 மணி நேரம் நீடிக்க வாய்ப்பு: புயல் கரையைக் கடந்தாலும், அதன் தீவிரம் 6 மணி நேரம் வரை இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும்.
தயார் நிலையில் மின்வாரியம்: புயல் கரையைக் கடப்பதற்கு முன் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகத்தை மின்வாரியம் நிறுத்தியது. பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தன. தடைப்பட்ட மின்சாரத்தை உடனடியாக விநியோகம் செய்வதற்கான போர்க்கால நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலைமைப் பொறியாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்பணிகளைக் கண்காணிப்பதற்காக மின்வாரிய இயக்குநர் (மின் தொடரமைப்பு) சிறப்பு அலுவலராக நாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார். 
வானொலி பண்பலை சேவை: புயல் தொடர்பான செய்திகள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை அகில இந்திய வானொலியின் பண்பலை யில் ஒலிபரப்பு செய்யப்பட்டதாக அகில இந்திய வானொலி செய்திப் பிரிவு இயக்குநர் வி.பழனிச்சாமி தெரிவித்தார்.
போக்குவரத்து நிறுத்தம்: கஜா புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்கள் அனைத்திலும் இரவு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வருவாய்த் துறை அறிவுறுத்தியதை அடுத்து அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கத் தேவையான நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை
கஜா புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. கஜா புயல் கரையைக் கடக்கும் போது மேற்கண்ட பகுதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகள், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மற்றும் புதுவை மத்திய பல்கலைக்கழகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 
பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக்குகளுக்கான வியாழக்கிழமைத் தேர்வுகள் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போது வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகளை நவம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மறு தேதி அறிவிப்பு: புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் வியாழக்கிழமை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் நவம்பர் 22-ஆம் தேதி நடத்தப்படும். இணைப்புக் கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகள் வரும் டிச. 13-ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்
கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com