திருவையாறு அரண்மனையில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சென்னை  தொழிலதிபர் ரன்வீர்ஷாவிற்கு சொந்தமான பழைமையான அரண்மனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஏ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார்
திருவையாறில் உள்ள அரண்மனை முன் ஆய்வில் ஈடுபட்ட சிலை கடத்தல்  தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார்.
திருவையாறில் உள்ள அரண்மனை முன் ஆய்வில் ஈடுபட்ட சிலை கடத்தல்  தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சென்னை  தொழிலதிபர் ரன்வீர்ஷாவிற்கு சொந்தமான பழைமையான அரண்மனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஏ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்,  கடந்த 27 ஆம் தேதி ஐ.ஜி. ஏ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி, அங்கிருந்து 12 ஐம்பொன் சிலைகள், 22 சோழர் கால கோயில் தூண்கள், கற்சிலைகள் என 89 சிலைகளை தோண்டியெடுத்து பறிமுதல் செய்தனர். 
இதையடுத்து போலீஸார் சனிக்கிழமை திடீரென தஞ்சை பெரியகோயிலில் 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டு விட்டு, மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர். 
இதைத் தொடர்ந்து ஐஜி, மீண்டும் ரன்வீர்ஷாவிற்கு சொந்தமான திருவையாற்றின் காவிரியின் வடக்கு கரையில் உள்ள அரண்மனையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆய்வு செய்தார். காலை 11 மணிக்கு 5 சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் அங்கு வந்த ஐஜி பொன் மாணிக்கவேல், வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். உள்ளே இருக்கும் 10 - க்கும் மேற்பட்ட அறைகள், மாடி, தோட்டத்தை முழுமையாக ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது அரண்மனையைப் பாராமரிக்கும் கவிதா என்பவரிடம் ரன்வீர்ஷா வருகை, சிலை எதுவும் வெளியில் எடுத்து செல்லப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்த பின்னர் புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து சிலை கடத்த தடுப்பு பிரிவு போலீஸார் கூறியது:  இந்த அரண்மனை சரபோஜி மன்னரின் வம்சாவளி சகஜி மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த அரண்மனையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரன்வீர்ஷா வாங்கி, கூரை அமைத்துப் பாதுகாத்து வருகிறார். அரண்மனைக்கும், தஞ்சை பெரிய கோயிலுக்கும் பழங்காலத்தில் சுரங்கப்பாதை இருந்துள்ளது.
 தற்போது சுரங்கபாதை அடைக்கப்பட்டுள்ளது. சில அறைகளில் சிதைந்த நிலையில், பழங்காலத்து மூலிகை ஒவியங்களும் உள்ளன. இருப்பினும், அரண்மனையில் ஏதேனும் சிலைகள், மூலிகையிலான ஒவியங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 
தற்போது சாதாரணமாக ஆய்வு செய்துள்ள நிலையில், நீதிமன்ற அனுமதி பெற்று முழு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com