கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் முளைப்பு விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சாவூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லை எனக் கூறி வாங்க மறுக்கப்பட்டதன் காரணமாக, நிலையம் முன் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மீண்டும் முளைத்து வளர்வதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள்
மடிகையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மடிகையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சாவூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லை எனக் கூறி வாங்க மறுக்கப்பட்டதன் காரணமாக, நிலையம் முன் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மீண்டும் முளைத்து வளர்வதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் குறுவை சாகுபடி ஏறத்தாழ 40,917 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டது. மோட்டார் பம்ப்செட் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடியில் இப்போது அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 26,000 ஹெக்டேரில் அறுவடை முடிவடைந்துள்ளது.
ஆனால், நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்க முன்வருவதால், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையே நம்பி உள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவுக்குத் திறக்கப்படவில்லை என விவசாயிகள் புகார் எழுப்பி வருகின்றனர். மேலும், திறக்கப்பட்டுள்ள நிலையங்களிலும் சாக்கு இல்லை எனக் கூறி கொள்முதல் செய்ய மறுக்கப்படுகிறது.
இதனால், வாகன வாடகை செலுத்தி நிலையத்துக்கு நெல் மூட்டைகளைக் கொண்டு வந்த விவசாயிகளால் மீண்டும் வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக நிலையத்தின் முன் திறந்தவெளியில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து,  சாக்குகளால் மூடி காவல் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே, பல நெல் கொள்முதல் நிலையங்கள் முன் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டது.
தஞ்சாவூர் அருகே மடிகை கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், சாக்குத் தட்டுப்பாடு காரணமாகக் கொள்முதல் செய்யப்படவில்லை. எனவே, நிலையத்தின் முன் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மீண்டும் முளைத்து வளர்கின்றன. இதனால்,  பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் அப்பகுதியில் மரத்தை வெட்டிக் குறுக்கே போட்டு,  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தெரிவித்தது:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லை எனக் கூறி 15 நாள்களாக  விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். இதனால்,  ஒவ்வொரு நிலையத்தின் முன்பும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் அனைத்தும் மழையில் நனைகின்றன. ஒவ்வொரு நிலையத்திலும் குறைந்தது 20 மூட்டைகள் அளவுக்கு நெல் முளைவிட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே,  ஈரப்பத விதிமுறையைத் தளர்த்தி அனைத்து நெல்லையும் அரசுக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார் சுகுமாரன்.
இப்போராட்டம் காரணமாக தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தாலுகா போலீஸார்,  நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெல்லை கொள்முதல் செய்வதாக அலுவலர்கள் கூறியதையடுத்து,  மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதேபோல, வாண்டையார் இருப்பு, சின்னப்புலிக்குடிகாடு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் தேங்கியிருந்த நெல்லும் முளைத்துவிட்டதால், இரு இடங்களிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com