தாமிரவருணி மஹா புஷ்கரம் கோலாகல தொடக்கம்: ஆளுநர் தொடங்கி வைத்தார்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரவருணி மஹா புஷ்கர விழா வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
பாபநாசத்தில் தாமிரவருணி நதியில் புனித நீராடுகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
பாபநாசத்தில் தாமிரவருணி நதியில் புனித நீராடுகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரவருணி மஹா புஷ்கர விழா வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி பாயும் படித்துறைகளில் பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தனர். பாபநாசத்தில் இவ்விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து நதியில் புனித நீராடினார்.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா நடைபெறுகிறது. மூன்றரை கோடி தீர்த்தத்திற்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் பன்னிரண்டு நாள்கள் பிரவேசம் செய்து வாசம் செய்வதாக நம்பிக்கை.
அதன்படி, குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்வதாலும், கிரகங்களின் அமைப்புப்படியும் விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரவருணியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மஹா புஷ்கரம் விழா வியாழக்கிழமை தொடங்கியது.
பாபநாசத்தில் அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பில் புஷ்கரம் விழா நடைபெற்றது. இவ்விழாவையும், அகில பாரதிய துறவியர் சங்க மாநாட்டையும் ஆளுநர் பன்வாரிலால் தொடங்கிவைத்து உரையாற்றினார். முன்னதாக, அவர் பாபநாசத்தில் தாமிரவருணி நதியில் புனித நீராடினார்.
புஷ்கர விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான துறவிகள் பாபநாசம் தாமிரவருணி படித்துறையில் அதிகாலையில் தாமிரவருணி அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து புனித நீராடி வழிபட்டனர். தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தாமிரவருணி புஷ்கர நிகழ்ச்சிக் கொடி மற்றும் அகண்ட தீபமும் ஏற்றப்பட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி தாமிரவருணி அன்னையை வழிபட்டுச் சென்றனர்.
தீர்த்தக்கட்டங்கள்: பொதிகை மலை முதல் புன்னக்காயல் வரை 149 கி.மீ. பயணிக்கும் தாமிரவருணி நதியில் மொத்தம் 143 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றில் 64 தீர்த்தக் கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராடும் வகையில் உள்ளன. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட தீர்த்தக் கட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் நாணல்காடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட படித்துறைகளில் வியாழக்கிழமை காலையில் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. 
அதன்பிறகு பக்தர்கள் தாமிரவருணியில் புனித நீராடினர். தாமிரவருணியை போற்றும் பாடல்களையும், திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசக பாடல்களையும் பக்தர்கள் பாடி இறைவனை வழிபட்டனர். திருநெல்வேலி மாநகர பகுதியில் நீராடும் பக்தர்களுக்கு ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
புஷ்கர விழா வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி பாபநாசம், திருப்புடைமருதூர், குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, அருகன்குளம், முறப்பநாடு உள்ளிட்ட இடங்களில் தினமும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.
சிறப்பு ரயில்கள்: மஹா புஷ்கர விழாவையொட்டி பாபநாசம், முறப்பநாடு, திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி-சென்னை இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com