அத்தியாயம் 10 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 3

தென்னிந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்ப்பாதைச் சின்னம் என்ற பெருமைக்குரியது, அன்றைய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டத்தில் சின்ன கொத்தூர் என்று இன்று அழைக்கப்படும் குந்தாணியில் ‘பைரே கவுணி’ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

வளமைச் சின்ன வகைகள் - புதிர்ப்பாதைகள் (தொடர்ச்சி)

3. பயிற்சிக் கள வகை

புதிர்ப்பாதையின் மூன்றாவது வகை ‘பயிற்சிக் கள வகை’ ஆகும். பயிற்சிக் களம் என்பது பல பொருள் கொண்டதாக இங்கு பயன்படுத்தப்படுகிறது. நடைப் பயிற்சி, தியானப் பயிற்சி, நாட்டியப் பயிற்சி, போர்க்களப் பயிற்சி என பலவாறான மனிதனின் செயலுக்கு இவ்வகை புதிர்ப்பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பயிற்சிக் கள வகை என வகைப்படுத்தப்படுபவை மூன்று வகையாக அமைக்கப்பெற்றுக் கிடைக்கின்றன. அவை –

1. கல் புதிர்ப்பாதைகள் - இவை கற்கள் அல்லது கற்பலகைகள் கொண்டு அமைக்கப்படுபவை.

2. அலங்கார வடிவ புதிர்ப்பாதைகள் - இவை வண்ணங்கள் கொண்டு ஓவியமாகவும், மொசைக் கற்கள் போன்று, அலங்காரக் கற்கள் கொண்டு தரையில் பாவித்து உருவாக்கப்பட்டவை.

3. குறும்புல் புதிர்ப்பாதைகள் - இவை குறும்புல் மற்றும் பிற அலங்காரச் செடிகள் கொண்டு அமைக்கப்பட்டவை.

இம்மூன்று வகைகளும் முக்கியமான இரு வடிவங்களில் கிடைக்கின்றன. அவை வட்டம் மற்றும் சதுர வடிவங்களாகும். இவை 5 முதல் 7 வரையிலான திருக்குமறுக்குச் சுற்றுகள் கொண்டதாக அமைக்கப்படுகின்றன. பிற்காலத்தில் 9, 11 என்ற எண்ணிக்கையில் அமைந்த சுற்றுகள் கொண்ட புதிர்ப்பாதைகளையும் காணமுடிகிறது.

எவ்வாறாயினும், இரண்டு வடிவங்களிலுமே 7 சுற்றுகள் கொண்ட வடிவமே செம்மை வடிவமாகக் கருதப்படுகிறது என்பதை முன்னரே அறிந்தோம். அனைத்து வடிவங்களிலும், மத்தியில் மையம் ஒன்று உள்ளது. இதன் பாதைகளில் பயணித்து மையத்தை அடைந்து வணங்கித் திரும்பும் அனுபவத்தை அடைவதே முதன்மையான நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படுவனவாகும்.

1. கல் புதிர்ப்பாதைகள்

தமிழகத்தில் இந்நாள்வரை அறியப்பட்ட பயிற்சிக் கள வகைப் புதிர்ப்பாதை, இரண்டும் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டவையே. ஒருங்கிணைந்த பழைய தருமபுரி மாவட்டத்திலேயா இவை இரண்டும் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, ஒன்று இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்டதாகவும், மற்றொன்று இன்றைய தருமபுரி மாவட்டத்துக்கு உட்பட்டதாகவும் இருக்கின்றன.

பைரே கவுணி – சின்ன கொத்தூர் (எ) கொத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

தென்னிந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்ப்பாதைச் சின்னம் என்ற பெருமைக்குரியது, அன்றைய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டத்தில் சின்ன கொத்தூர் என்று இன்று அழைக்கப்படும் குந்தாணியில் ‘பைரே கவுணி’ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

இது ஒற்றை திருக்குமறுக்குப் பாதை கொண்ட வட்டப் புதிர்ப்பாதை வகையைச் சார்ந்ததாகும். இது இயற்கையாகக் கிடைக்கும் கற்குண்டுகளை நிலத்தில் நட்டு அமைக்கப்பட்ட வடிவமாகும். இந்தவகையில், இது பயிற்சி வகை புதிர்ப்பாதைகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக விளங்குகிறது.

இந்த வட்டப் புதிர்ப்பாதை 8.5 மீட்டர் (28 அடி) விட்டம் கொண்டதாகும். இதன் பாதை சராசரியாக 38 செ.மீ. அகலம் கொண்டுள்ளது. இதன் காலம் துல்லியமாக ஆய்வு செய்யப்படாத நிலையிலேயே உள்ளது. இதன் தொடக்ககாலக் காலக்கணிப்பு, இது பொ.நூ. 13 அல்லது 14-ஐ சார்ந்ததாகத் தெரிவிக்கிறது. (Caerdroia - Indian Labyriths).

இதனை ஆய்வு செய்த ழீன் – லூயிஸ் போர்ஜியோஸ் (Jean-Louis Bourgeois), இது பெருங் கற்காலக் கல்திட்டை வகை ஈமச்சின்னங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருப்பதால், இதன்காலத்தை மு.பொ.ஆ 1000 என்று கணிக்கின்றார். தென்னிந்தியாவில், பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் போன்று தற்காலத்திலும் எழுப்பப்படுவதால், இக்காலக் கணிப்பு ஐயத்துக்கு உரியது என்கிறார் ஹெர்மன் கெர்ன் அவர்கள் (Hermann Kern, Through the Labyrinths, (2000), p.290).

(பைரே கவுணி – சின்ன கொத்தூர்- கிருஷ்ணகிரி மாவட்டம், வட்டப் புதிர்ப்பாதை. புகைப்படமும் வரைபடமும்)

இது இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற ழீன் – லூயிஸ் போர்ஜியோஸின் காலக்கணிப்பு பல காரணங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கது. நீலகிரியில் வாழ்கின்ற பழங்குடிகளான கோத்தர்களிடம் மட்டுமே தற்காலத்திலும் அரிதாகப் பெருங் கற்கால கல்திட்டை போன்ற ஈமச்சின்னங்கள் எழுப்பும் மரபு காணப்படுவதை அறியமுடிகிறது.

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டப் பகுதிகளோ அல்லது நடுகல் பண்பாடு நிலைபெற்று இருக்கும் வடதமிழகத்தின் பகுதிகளில் கோத்தர் பழங்குடிகளின் தாக்கம் இல்லை என்று துணியலாம். இங்கு குறும்பர்/குருமன்ஸ் பழங்குடிகளே நிறைந்து வாழ்கின்றனர். இவர்களால் நடுகல் பண்பாடு இன்றும் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவில் பெருங் கற்காலப் பண்பாடு பொ.ஆ. 200 அளவில் முடிவுக்கு வந்தமை நிறுவப்பட்டுள்ளது. பெருங் கற்காலப் பண்பாட்டுக்குப் பிறகு மூத்தோர் நினைவுச் சின்னங்கள் நடுகற்களாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை சங்க இலக்கியச் சான்று கொண்டும் நிறுவப்பட்டுள்ளது. (இராஜன்.கா, தொல்லியல் நோக்கில் சங்ககாலம், (2004), பக்.8-42). இந்நாள் வரை கிடைக்கப்பெற்ற சான்றுகள் கொண்டு, நடுகல் பண்பாடு மு.பொ.ஆ. 400 அளவில் தோற்றம் கொண்டுள்ளது. (இராஜன்.கா. ‘புலிமான்கோம்பை சங்க கால நடுகற்கள்’, ஆவணம், எண்:17 (2006), பக்.1-5). இக்காலகட்டத்தில் வளர்ச்சியுற்ற நடுகல் பண்பாடு, பொ.ஆ. 200 அளவில் பெருங் கற்காலப் பண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகிறது. அதாவது, இக்காலகட்டத்துக்குப் பிறகு பெருங் கற்காலப் பண்பாட்டுக்குரிய கல்வட்டம், கல்திட்டை, கல்பதுக்கை வகை ஈமச்சின்னங்களை எழுப்பும் மரபு நீங்கிவிடுகிறது.

துவக்க கால ஆய்வுகள், மு.பொ.ஆ. 500 அளவில்தான் தமிழகத்தில் பெருங் கற்காலப் பண்பாடு துவங்குகிறது எனக் கருதப்பட்டது. இதன் காரணமாக, பெருங் கற்கால நினைவுச் சின்னங்கள், இன்றைய கர்நாடகப் பகுதிகளில் மு.பொ.ஆ. 700 தோற்றம் பெற்ற இப்பண்பாடு, தமிழகத்தில் மு.பொ.ஆ. 500 அளவில் பரவியதாகக் கருதப்பட்டு வரலாறாக்கப்பட்டது. (பி,நரசிம்மையா). ஆனால் பிற்கால அகழாய்வுகள், மு.பொ.ஆ. 1000 முன்னரே தமிழகப் பரப்பில் பெருங் கற்காலப் பண்பாடு நன்கு வேரூன்றி இருந்தமை வெளிப்படுத்தப்பட்டது. இது முன்னர் எழுதப்பட்ட வரலாற்றை திருத்தும் அவசியத்தை வலியுறுத்துகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருந்தல் அகழாய்வு முடிவுகளால், தமிழகத்தில் பெருங் கற்காலப் பண்பாடு மு.பொ.ஆ. 1500 அளவிலேயே செழுமையாக நிலைபெற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான காலக் கணிப்பின் பின்னணியில், ழீன் – லூயிஸ் போர்ஜியோஸின் காலக் கணிப்பு வலுவானது. ஹெர்மன் கெர்ன் அவர்களின் ஐயம், தமிழக பெருங் கற்காலப் பண்பாட்டு வரலாற்றுப் போக்கின் பின்னணியில் அவசியமற்றதாக உள்ளது.

கம்பைநல்லூர் - வெதரம்பட்டி புதிர்ப்பாதை

கம்பைநல்லூர் புதிர்ப்பாதை என்றும் வெதரம்பட்டி புதிர்ப்பாதை என்றும் குறிக்கப்படும் இது, இன்றைய தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரை அடுத்த வெதரம்பட்டி என்ற இடத்தில் அமைந்திருப்பதாகும். உள்ளூர் மக்களால் இது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது. ‘ஏழுகல் கோட்டை’, ‘ஏழுகல் பிள்ளையார் கோயில்’ என்பவை குறிப்பிடத்தக்கவை.

இது இயற்கையாகக் கிடைக்கும் கற்குண்டுகள் கொண்டு அமைப்பட்ட சதுரப் புதிர்ப்பாதை ஆகும். இது ஊர் நடுவே செல்லும் பேருந்துப் பாதையை ஒட்டினார்ப்போல, 14-15 சென்ட் நிலத்தில் 80 அடி நீள அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அளவீடில், இது உலகில் கற்கள் கொண்டு அமைப்பட்ட மிகப்பெரிய சிதைவடையாத, இன்றும் பயன்பாட்டில் உள்ள மிகப்பழமை வாய்ந்த சின்னமாக விளங்குகிறது.

(கம்பைநல்லூர் - வெதரம்பட்டி புதிர்ப்பாதை படங்கள்)

இந்தியாவில் கிடைத்துள்ள Maze வகை புதிர்ப்பாதை இது ஒன்றே எனத் துணியலாம். பயிற்சிக் கள வகையில் முடிவுற்ற பாதை முனைகளையும் (Dead Ends), பல நுழைவுகளையும் (Multicursal) கொண்ட இவ்வகையான புதிர்ப்பாதை கிடைப்பது குறித்தான பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இலக்கியக் காட்சி வகைகளிலும், வரையுருவக்கலை வகையிலும் பதிவுகள் கிடைக்கின்றன. இந்த வகையில், கம்பைநல்லூர் - வெதரம்பட்டி புதிர்ப்பாதை, உலகளவில் குறிப்பிடத்தக்க பயிற்சிக் கள வகையாக உள்ளது.

புதிய கற்காலப் பண்பாட்டினைச் சார்ந்ததாகக் கருதப்படும் புதிர்ப்பாதைகள், அக்கால வாழ்வியலின் இரு முக்கியத் தொழில்களான மேய்த்தல் மற்றும் வேளாண்மையுடன், அத்தொழில்களின் வளத்துக்குரிய நம்பிக்கை மற்றும் சடங்குகளேடு தொடர்புடையதாக உள்ளது.

கால நிலை

பைரே கவுணி புதிர்ப்பாதையின் காலம் குறித்த விவாதங்கள், கம்பைநல்லூர் - வெதரம்பட்டி புதிர்ப்பாதைக்கும் உண்டு. பைரே கவுணியின் காலம் மு.பொ.ஆ. 1000 என்று கணிக்கும் ழீன் – லூயிஸ் போர்ஜியோஸ் (Jean-Louis Bourgeois), தம் கருத்துக்கு ஆதரவாகக் காட்டும் சான்றுகள், இதற்கும் முற்றாகப் பொருந்துபவை. இதன் அடிப்படையில், இதன் காலம் மு.பொ.ஆ. 500 என்று கருதப்படுகிறது (த. பார்த்திபன், நீதிக்கண்ணாடி, நவம்பர்-2014). தொல்லியல் வல்லுநர் ச.செல்வராஜ் அவர்கள், இதன் காலத்தை பொ.நூ. 13-14 என்று தெரிவிக்கிறார் (நீதிக்கண்ணாடி, நவம்பர்-2014). தொல்லியல் வல்லுநர் தி. சுப்பிரமணியம் அவர்களும், இதனை இடைக்காலத்துக்கு உரியதாகவே கருதுகிறார் (யுத்தபூமி ஆசிரியருடன் ஒரு உரையாடலில்). அறிவியல்பூர்வமான அகழாய்வு மட்டுமே இதன் காலத்தை சாரியாகக் காட்டும் எனலாம்.

வழிபாடும் விழாக்களும்

கம்பைநல்லூர் - வெதரம்பட்டி புதிர்ப்பாதையில், மேத்தல் சமூகத்தின் பல வழிபாட்டுக் குணங்கள் இன்றும் தொடரப்படுகின்றன. இதில் முதன்மையானது, கால்நடைகளின் வளமை மற்றும் நோய்நோடிகள் தீர வேண்டும் என்பது ஆகும்.

பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து வரும் ‘மையிலாறு தினம்’ அன்று, இவ்விடம் விஷேச பூசைக்கு உரியதாக இருக்கிறது. அன்று, எல்லா சமூக மக்களும் தம் கால்நடைகளை இப்புதிர்ப்பாதைக்கு முன் கொண்டுவந்து வழிபாடு மேற்கொள்கின்றனர். அன்று பெண்கள் விரதமிருந்து வழிபாட்டை மேற்கொள்கின்றனர். தம் அனைத்து வகை வேண்டுதல்களும் இவ்வழிபாட்டின் மூலம் நிறைவேறும் என்ற நம்பிக்கை வழிபடுவர்களிடையே நிலவுகிறது. இதில் பொருட் செல்வம், மக்கட் செல்வம் முதலான வளம் குறித்த வேண்டுதல்கள் முதன்மையாக உள்ளன.

ஏழு வரிசை கொண்ட இதன் பாதைகள் குறுக்கு மறுக்காக்காகச் செல்கின்றன. புதிர்ப்பாதையின் நுழைவு கிழக்கு திசையில் இருக்கிறது. இது, இக்கால கோயில்களின் நுழைவுவாயில் திசையை ஒத்து அமைந்துள்ளது. இது ஒரு மரபாக இங்கு தொடரப்பட்டுள்ளது அல்லது வழியமைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இதன் மையத்தில், நீள் உருளை வடிவக் கல் ஒன்று வைத்து வணங்கப்பட்டு வருகிறது. இக்கல், ஆவுடையார் நீங்கிய லிங்கத்தின் பாண பாகமான உருளை வடிவை ஒத்ததாக உள்ளது. இதனை பிள்ளையார் என்று வணங்குகின்றனர்.

பைலேஸ் வடிவத்துக்கும் கம்பைநல்லூர் - வெதரம்பட்டி சின்னத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்

பைலேஸ் மற்றும் கம்பைநால்லூர் - வெதரம்பட்டி சின்னங்கள் இரண்டும் சதுர வடிவமும் செம்மை வடிவமான ஏழு சுற்றுகளையும் கொண்டன என்பது மட்டுமே ஒற்றுமையாகும். பிற அனைத்து குணங்களிலும் இரண்டும் பெரிதும் தம்முள் வேறுபடுகின்றன. பைலேஸ் புதிர்ப்பாதை வடிவம், தடைகள் அற்ற ஒற்றைப் பாதை அமைப்பைக் கொண்டது. கம்பைநல்லூர் - வெதரம்பட்டி புதிர்ப்பாதை முடிவுற்ற பாதைமுனைகளைக் கொண்டது. அதனால், பாதைகளின் புதிர்களை விடுவித்துக்கொண்டுதான் மையத்தை அடையமுடியும்.

நாம் காணமுடிகின்ற பயிற்சிக் கள வகை புதிர்ப்பாதைகளின், வட்டம் அல்லது சதுரம் இரு வடிவங்களும், ஒற்றை மற்றும் தடைகளற்ற தொடர்ச்சியான பாதைகளைக் கொண்டவையே. கம்பைநல்லூர் - வெதரம்பட்டி மட்டும்தான், நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே முடிவுற்ற பாதைமுனைகளைக் கொண்ட Maze புதிர்ப்பாதை வடிவமாகும்.

2. அலங்கார வடிவ புதிர்ப்பாதைகள்

இவை வண்ணங்கள் கொண்டு ஓவியமாகவும், மொசைக் கற்கள் போன்று அலங்கார கற்கள் கொண்டு தரையில் பாவித்து உருவாக்கப்பட்டவை. இவை ‘தேவாலயப் புதிர்ப்பாதைகள்’ (Church Labyrinths) என்றும் குறிக்கப்படுகின்றன. இவ்வகைகள் பெரும்பாலும் கிறிஸ்தவ தேவாலங்களில் இடைக்கால வரலாற்றுக் காலங்களில் அமைக்கப்பட்ட நிலையில், ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவலாகக் கிடைப்பதால் இப்பெயர் பெற்றது.

பெரும்பாலும், இவை தொழுக வரும் பக்தர்களால் இதில் நடந்தும், ஓடியும், நடனமாடியும் பெறும் அனுபவத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில், இவை அலங்கார வடிவமாகவே காட்சியளிக்கின்றன. நவீன கால தேவாலயங்கள், புதிர்ப்பாதைகள் இன்றியே கட்டப்படுகின்றன.

3. குறும்புல் புதிர்ப்பாதைகள்

இவை நவீன கால வடிவமாகும். கடந்த 30 - 40 வருடங்களில், புதிர்ப்பாதை பெற்ற மறுபிறப்பு மற்றும் மறுமலர்ச்சி காரணமாக பூங்காக்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை அரங்குகள், தியான மையங்கள் மற்றும் வீடுகள் என விருப்பப்படி பலவகை வடிவங்களில் அமைக்கப்படுகின்றன. இவை, ஆங்கிலத்தில் Turf Labyrinths என்று குறிக்கப்படுகின்றன.

*

புதிர்ப்பாதைகளைப் பற்றி சில வினாக்களை எழுப்பி பதில் காண்பது, தொன்மையான இச்சின்னம் குறித்து மேலும் சில தெளிவைப் பெற முடியும்.

  • கற்கள் கொண்டு அமைப்பட்ட, உதாரணத்துக்கு கம்பைநல்லூர் - வெதரம்பட்டி அல்லது பைரே கவுணி புதிர்ப்பாதை போன்றவை மூத்தோர் வழிபாட்டிடங்களா? அல்லது சமயம் சார்ந்த வழிபாட்டிடங்களா? அல்லது பெருங் கற்கால நினைவுச் சின்ன வகைகளில் ஒன்றா?

கிடைத்துள்ள தொல்பொருட் சின்னங்களை காலநிரல்படுத்திக் காணும்போது, இவற்றில் பெருங் கற்காலப் பண்பாட்டுக்கு முந்தைய புதிய கற்காலப் பண்பாட்டின் தொன்மையைக் காண முடிவதால், புதிர்ப்பாதைகளை நேரடியாக பெருங் கற்காலப் நினைவுச் சின்னங்களாகவோ, நினைவிட ஈமச்சின்னங்களாகவோ உருவாக்கப்பட்டவையாகக் கருத இடமில்லை. உண்மையில், பெருங் கற்கால ஈமச் சின்னங்களின் நோக்கங்களில் இருந்தும் நம்பிக்கைகளில் இருந்தும் இவை எழுப்படும் நோக்கம் முற்றிலும் வேறானவை.

ஆனால், கம்பைநல்லூர் சின்னத்தைப் பொருத்த அளவில், அது பெருங் கற்கால ஈமச் சின்னங்களுக்கு மத்தியில் காணப்படுவதால், அதனை பெருங் கற்காலப் பண்பாட்டுக் காலக் கட்டத்தைச் சார்ந்ததாகக் கருத வேண்டும். இது காணப்படும் இடம் கொண்டு, இதனை பெருங் கற்கால ஈமச்சின்ன வகைகளில் ஒன்றாகக் காண்பது கூடாது.

  • ஈமச்சின்ன வகையில் ஒன்றாகக் காண்பது கூடாது என்றால், கம்பைநல்லூர் - வெதரம்பட்டி புதிர்ப்பாதை, இன்று ஏழுசுத்துக்கோட்டை என்றும் ஏழுத்துப்பிள்ளையார் என்றும் வழிபாட்டிடமாக மாறியது எப்படி? அல்லது எப்படி ஒரு வழிபாட்டிடமாக இருக்கிறது?

இதனை, இவ்வகைச் சின்னங்களின் பலவகைப் பயன்பாடுகளில் ஒன்றாகக் காண வேண்டும். இவ்வகைப் பாதைகளில் பயணித்து மையத்தை அடைந்து, வழிபடும் அனுபவத்தை அடைவதே நோக்கம். இங்கு மையத்தையும் மையத்தில் வழிபாட்டுக்கு நடப்பட கல்லையும் இக்காலக் கோயில்களின் கருவறையாகவும், மூலவராகவும் கருதலாம். அதாவது, இவ்வழிபாடு தாந்திரிகமும், யோகமும் இணைந்த காலகட்டத்தில் உருவான சிந்தனையை அடியொற்றி உருவானதாக உள்ளது.

  • பலவகைப் பயன்பாடு என்றால்? ஒரு குறியீடு பல பொருளை வழங்கும் குணங்களை எவ்வாறு அறிவது?

தொன்மையான இவ்வடிவம், காலந்தோறும் பலவகைப் பயன்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது. மிகவும் ஆதிநிலையில், வளமைக்கான குறிப்பாக வேளாண்மை சார்ந்த வளமைக்கான ஒரு குறியீடாக – வழிபாட்டுச் சின்னமாக உருவாகியிருக்கிறது. இதனை ஒட்டியே இவ்வடிவம் தாந்திரிகத்துடன் இணைத்துக் காணப்படலாயிற்று. தாந்திரிகத்தை உலகின் எல்லா பொருள் முதல்வாதத் தத்துவத்தின் அடியோட்டத்தை இணைத்துக்கொண்ட தத்துவங்களிலும் மதங்களிலும் காணமுடிகிறது. பெளத்தமும், கிறிஸ்தவரும் வெளிப்படையாகவே புதிர்ப்பாதை சின்னத்தை வரித்துக்கொண்டிருப்பதை இதன் வழியாகத்தான் அறியமுடிகிறது. பின்னர் இவ்வடிவம், தீய சக்திகளில் இருந்து பாதுகாக்கும் சக்கரம் அல்லது குறியீடாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவே பின்னர் பாதுகாப்பான மண்டலம் / கோட்டை என்ற குறியீடாகவும் உருவகிக்கப்பட்டிருக்கிறது. இவ்விரு நிலைகளையுமே இந்திய, கிரேக்க, ரோமானியப் புராணங்கள் விவரிப்பவையாக மாறியிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இம்மாற்றங்கள், இவ்வடிவங்களின் உற்பத்திக் காலநிலையான மு.பொ.ஆ. 5000 முதல் மு.பொ.ஆ 1000 வரை மெல்லமெல்ல நிகழ்ந்தவை எனலாம்.

இந்த வகையிலான மாற்றத்தின் ஊடாகத்தான், ஒருகட்டத்தில் புதிர்ப்பாதைகள் வழிபாட்டிடங்களின் ஓர் அங்கமாக மாறின. தியானத்தின் உயர்ந்த நோக்கமான மனஒருமை, சலனமற்ற அமைதி, கவனத்தை சிதறவிடாத தன்மை என்பவை இதன் அடிப்படை சிந்தனையாக மாறியபோது, தாந்திரிகக் குறியீடாக விளங்கிய வடிவம், பொருண்மையான பாதைகளாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். முன்னர் தெரிவித்தபடி, இப்புதிர்ப்பாதைகள் ஓவியமாக வரையப்பட்டும் கல்லால் அல்லது பாறைக்கீறல்களாகவும் அமைத்ததை முறையே குருஷேத்திரம் காளிக்கோயில் (தரை ஓவியம்), கம்பைநல்லூர் - வெதரம்பட்டி மற்றும் குந்தாணி பைரே கவுணி (கல்), பிஜப்பூர் (கற்குவியல்), கோவா (பாறைக்கீறல்) என பலவகையாகக் கிடைக்கப்பெற்றுள்ளோம். ஐரோப்பாவில் பல கிறிஸ்தவ தேவாலயங்களில் தரை ஓவியங்களாகவும், தரையில் மொசைக் அல்லது பலவகைக் கற்துண்டுகள் கொண்டு பதிக்கப்பட்டு அமைக்கப்பட்ட பாதைகளாகவும் இடம்பெற்றுள்ளன.

உலோகப் பாத்திரங்கள், பானைகள் முதலியவற்றில் இவ்வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. இவை வழிபாட்டுக்குரிய உரிய பொருட்கள் வைத்திருந்த பாத்திரங்களாகவோ அல்லது மந்திர தந்திரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கலன்களாகவோ இருந்திருக்கக்கூடும். அதுபோலவே, இக்குறியீடு தீயசக்திகளிடம் இருந்து பாதுகாப்பு என்ற குறியீடாகவும் பயன்பட்டிருக்க வேண்டும்.

இதே பொருளில், அதாவது தீயசக்திகள் அண்டாமல் இருக்க ஆந்திர மாநில உண்டவல்லி குகைக் கோயிலில் சுவற்றில் சிறிய அளவில் இச்சின்னம் பொறிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது அதன் முன் நின்று வழிபடுபவரைப் பீடித்திருக்கும் தீயசக்திகளை விரட்டும் என்ற நம்பிக்கையும் காரணமாக இருந்திருக்கலாம்.

இவையெல்லாம் அனுமானமான பதில்களாகத் தோன்றுவது இயற்கையே. ஆனால், இலக்கியங்கள் தரும் சிறுவெளிச்சம், மாந்தரினத்தின் வாழ்வியல் சிந்தனை, வரலாறு மற்றும் காலம்தோறும் மக்களின் சடங்குகளும், நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் இந்த விடையையே நமக்குத் தரும்.

மிகுந்த யேசனையை எழுப்பும் புதிர்ப்பாதை சின்னத்தின் பயன்பாடு, நீலகிரி - புதுகுளா கல்திட்டையில் இடம்பெற்ற புதிர்ப்பாதை சின்னம் ஆகும். மூத்தோர் ஈமச்சின்னமான இக்கல்திட்டையில், எதற்காக இச்சின்னம் இடம்பெற்றது. ஒருவேளை, இந்த ஈமச்சின்னம் தீய ஆவிபிடித்து இறந்துபோன ஒருவனுக்கு எழுப்பப்பட்டதா? இறந்துபோனவனிடமிருந்து தீய ஆவி புதிர்ப்பாதையிலேயே சிக்கி வெளியேறி ஊருக்குள் புகாமல் இருக்க வேண்டும் என்ற தொன்மையான சிந்தனையின் நீட்சியாக இது ஈமச்சின்னத்தில் பொறிக்கப்பட்டதா? அல்லது ஈமச்சின்னம் எழுப்பி வணங்கப்பட்டவன், தீய ஆவிகளை விரட்டுவதிலோ, வளமைச் சடங்கு, மந்திர தந்திரங்களில் சிறந்தவன் என்பதன் அடையாளமா? அல்லது மிகுந்த துர்க்குணங்கள் கொண்டவனாக இருந்து இறந்ததால், அத்துர்க்குணங்கள் யாருக்கும் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு காப்புச் சின்னமாகப் பொறிக்கப்பட்டதா? விளங்கிக்கொள்ள முடியவில்லை. இங்கு ஆலோசிக்கப்பட்ட எல்லாக் காரணங்களுக்கும் அப்பாற்பட்ட காரணம் வேறு ஒன்றாகவும் இருக்கலாம். வேறு ஆதாரம் கிடைக்கும்வரை, மேற்கண்ட ஆலோசனைகளில் ஒன்றை ஏற்கலாம்.

நீலகிரி வாழ் பழங்குடிகளான கோத்தர்களிடையே பலவகையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள இச்சின்னங்கள், மேலும் சில பயன்பாட்டு அர்த்தங்களை வழங்குகின்றன. ஊர்கூடும் மண்டுகளில் பொறிக்கப்பட்டவை, மேற்குறிப்பிட்டபடி தீயசக்தியை அண்டவிடாமல் இருக்கும் உபாயம் என்று கருதினாலும், தலைமைப் பொறுப்பில் உள்ளோர் தீயசக்தியாகச் செயல்படாமல், தெளிந்த நல்ல குணங்களை அல்லது துன்பம் தராதிருக்கும் குணங்களும், நெறி தவறாத குணமும், வலிமையும் கொண்டவராக விளங்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன.

ஆடு-புலி ஆட்டம் போன்ற விளையாட்டுக் கருவிகளில் இடம்பெற்றவையும், தீயநோக்கமற்ற நேர்மையான விளையாட்டை மேற்கொள்வோம் என்ற உறுதியையோ அல்லது மிகுந்த கவனமுடன் மனஒருமையுடன் விளையாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற குறியீடாக இடம்பெற்றிருக்கலாம். அல்லது ஒரு மங்கலச் சின்னமாக இடம்பெற்றிருக்கலாம்.

  • மங்கலச் சின்னம் என்றால் என்ன? அது புதிர்ப்பாதையோடு எவ்வாறு பொருந்துகிறது?

புதிர்ப்பாதைகள் குறித்த தற்கால ஆய்வுகள், இவை குறிப்பாக முதலில் வட்டப் புதிர்ப்பாதைகள் மிகவும் தொன்மைக்காலத்தில் இருந்து வரும் ‘ஸ்வஸ்திக்’ குறியீட்டின் தொடர் வட்டச் சுழற்சியில் வளர்ச்சிபெற்ற வடிவம் என்பதை ஏற்று வருகின்றன. இதனால், ‘ஸ்வஸ்திக் ஒரு மங்கலச் சின்னமாகப் பயன்பட்டு வருவதைப் போன்றே, புதிர்ப்பாதைச் சின்னங்களும் மங்கலச் சின்னமாகப் பயனாகியுள்ளன.

  • ‘ஸ்வஸ்திக்’, உலகின் பல இன மக்களாலும் கொண்டாடும் சின்னமாக உள்ளது அறிந்ததே. தொல்லியல் சான்றுகள் ‘ஸ்வஸ்திக்’ குறித்து என்ன சொல்கின்றன?

‘ஸ்வஸ்திக்’ சின்னங்களும் மிகப்பண்டைய பல நாகரிகங்களிலும் வழக்கில் இருந்தவையே. முழுமைபெற்ற ‘ஸ்வஸ்திக்’ சின்னங்களில், இன்றுவரை கிடைக்கப்பெற்றவற்றில் மிகப்பழைய சான்று, சிந்துவெளிப் பகுதிகளில் இருந்து பெறப்பட்டதாகும். இச்சின்னம் குறித்த செய்தி அல்லது ஸ்வஸ்திக் என்ற சொல் ரிக் வேதத்தில் இல்லை என்ற கருத்து கவனிக்கத்தக்க ஒன்று. அதே சமயத்தில், உலகின் பல இடங்களிலும், நாகரிகங்களிலும் பல பண்பாட்டுக் காலகட்டத்திலும் ஸ்வஸ்திக் இடம்பெற்று இருப்பதைக்கொண்டு, இது முதலில் புதிய கற்கால வேளாண்மைச் சமூகத்தின் குறியீடாகப் பார்க்க இடமுள்ளது. அதனாலேயே, நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டு, மேய்த்தல் தொழிலைப் புரிந்துகொண்டு வாழ்ந்திருந்த மக்களாக சிந்துப் பகுதியில் அடைந்த ஆரியர்கள், துவக்கத்தில் இக்குறியீட்டைக் கொண்டிருக்கவில்லை எனத் துணியலாம். பிற்காலத்தில், ஆரியரின் மேலாண்மைக்கு அல்லது ஆளப்பிறந்த இனம் ஆரிய இனம் என்று கொண்டாடிய ஹிட்லர், ஸ்வஸ்திக் சின்னத்தை தமது அடையாளமாக்கிக்கொண்டது விசித்திரம்தான் என்றாலும், அது அவர் காலத்தில் வளமையின் அல்லது மங்கலத்தின் உயர்ந்தநிலைக் குறியீடாக இருந்ததுகூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

  • வளமைச் சடங்கு சின்னம் என்றால்?

சடங்குகள் என்றால் நமக்கு இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மத ரீதியான சடங்குகள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. உண்மையில், வளமை குறித்த நம்பிக்கைகளில் மேற்கொள்ளப்படும் சடங்குகள், ஆதிமனிதன் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானவை. இந்த நம்பிக்கைகளே, மந்திரங்களும் தந்திரங்களும் உருவாக அடிப்படையாக அமைந்தவை. பிற்காலத்தில், தொல்குடி மரபுகளையும், சிந்தனைகளையும் தொடர்ந்து கடத்திவந்த மாந்தரினத்தில் இருந்து இத்தகைய தந்திரங்களையும், மந்திரங்களையும் சமயங்களால் முற்றாக நீக்கமுடியாத நிலை நீடித்தபோது, அவை சமயங்களின் சாயல்களுடன் அந்தந்த மத நம்பிக்கைகளாகவும், மதச்சடங்குகளாகவும் முகம் கொண்டுவிட்டன. தொல்மரபிலிருந்து இவ்வாறான சடங்குகளில் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுபவையே வளமைச் சடங்குச் சின்னங்கள் என்று குறிக்கப்படுகின்றன.

  • இவ்வகைச் சின்னங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதன்மீதான பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்த செய்திகள் முழுமையாகக் கிடைத்தனவா?

இவ்வகைச் சின்னங்களில், வட்டப் புதிர்ப்பாதைகளே முதலில் அறியப்பட்டன. அவை முதலில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் காணப்பட்டதால், இவை மீன்பிடித்தலுக்குப் பண்டைய மக்கள் கண்டுபிடித்திருந்த பொறி என்றே கருதினர். அப்போது இக்கருவியின் பயன்பாட்டை இவ்வாறு விளக்கியிருந்தனர் -  இக்கருவியின் மீது கடலலைகள் பரவி விலகும்போது கடல் அலைகள் கொண்டுவரும் மீன்கள் இப்புதிர்ப்பாதையில் சிக்கிக்கொள்ளும். அதனைப் பிடித்துக்கொள்வர். இதனால் இது பரதவர் கண்டுபிடித்த பொறிகளில் ஒன்று என்றனர். பின்னாளில், இவை மலைப்பாங்கான இடங்களிலும், வாழ்விட அகழாய்வுகளில் பானை ஓடுகளில் சித்திரமாகவும் களிமண் வில்லைகளில் கீறல்களாகவும், நாணயத்தில் முத்திரைகளாகவும் கிடைக்கப்பெற்ற நிலையிலும், தொல்லியல் துறை வளர்ச்சி பெற்றதாலும், இதன் இன்றைய பொருளில் பலவகை கருத்துருவங்கள் அடையப்பட்டுள்ளன.

  • வளமைச் சின்னம், மகாபாரதத்துடன், குருஷேத்திரத்துக் காளிகோயிலுடன், யோகத்துடன் இணைத்துப் போற்றப்படும் இவை, தற்கால மக்களிடையே வழிபாட்டில் அல்லது பயன்பாட்டில் உரிய முக்கியத்துவம் பெற்றதாக அறியமுடியவில்லையே ஏன்?

பக்திக் காலகட்டத்தில் பெரும்பான்மையான தொன்மையான அல்லது தொல்குடி வழிபாட்டு மரபுகள், சடங்குகளின் பொருள்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையைக் காண்கிறோம். அதில் வீழ்ந்த ஒரு மரபாக இதனைக் காணலாம். மேலும், பல தொன்மை மரபுகளை மீட்டு வழக்குக்குக் கொண்டுவந்த பெளத்தம் இதனைக் கைக்கொண்டதும் காரணமாக இருக்கலாம். பக்திக் காலகட்ட அலையில், பெரும் பாதிப்பு கொண்டிராத தகடூர் நாட்டுப் பகுதியில் இவை அழிவுபடாமல் கிடைப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

(பிஜப்பூர் - கற்குவியல் கொண்டு அமைக்கப்பட்ட புதிர்ப்பாதை : Bolder Labyrinths near Bijappur)

(அடுத்தவாரம் வளமைச் சின்ன புதிர்ப்பாதை பகுதி தொடரும்)

மேற்பார்வை நூல்கள்

Hermann Kern, Through the Labyrinth - Designs and Meanings over 5000 years, Prestel, London, (2000).

Caerdroia: The Journal of Mazes and Labyrinths.

இராஜன்.கா, தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, (2004)

ஆவணம், எண்:17, தமிழகத் தொல்லியல் கழகம், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், (2006).

ஆவணம், எண்:14, தமிழகத் தொல்லியல் கழகம், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், (2003).

நீதிக்கண்ணாடி இதழ், மலர்-1, இதழ்-1, நவம்பர் 2014,

நீதிக்கண்ணாடி இதழ், மலர்-1, இதழ்-2, நவம்பர் 2014, பக். 3-9.

சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், எண் 44, சூலை-ஆக-செப் 2014.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com