அத்தியாயம் 67 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில், வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்களின் மூதாதையர்களான நியாண்டர்தால் மனிதன் காலத்திலேயே தொல்சமய நம்பிக்கைகள் ஏற்பட்டிருப்பதை அறியமுடிகிறது.

சமயத்தை இரு வடிவங்களில் பகுத்துக் காணவேண்டி உள்ளது என்பது முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பெற்றது. முதல் வடிவம், தொல்சமய வடிவம் அல்லது தொல்சமய நிலை; இரண்டவது, சமய வடிவம் அல்லது சமய நிலை. நாட்டுப்புற வழக்குகளிலும், வாய்மொழி மரபுகளில் இருந்தும் தொல்சமயம் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. எழுதப்பட்ட கோட்பாடுகள், அவற்றின் உரைகளால் சட்டமிடப்பட்டு வெளிப்படுவது சமயமாகும் எனக் கொள்ளலாம். 

“புனிதமான ஒன்றைப் பற்றிய நம்பிக்கைகளும் செயல்முறைகளும் அடங்கிய ஓர் ஒழுங்கமைந்த செயல்முறை”யே சமயம் ஆகும் என்பார், எமிலி தர்கைம்.*1 ஒடியா என்பவர், “பகுத்தறிவுக்கு எட்டாததும், செயலறிவுக்கு உட்படாததுமான ஓர் உலகத்துடன் தொடர்புகொள்ள மக்கள் எற்படுத்திக்கொண்ட ஒரு முறையே சமயம்” என, விரிவானதொரு பொருளுடையதாக அதனை வரையறுப்பார்.*2 

தொல்சமயத்தின் தோற்றம் பலமுகங்களைக் கொண்டது. தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில், வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்களின் மூதாதையர்களான நியாண்டர்தால் மனிதன் காலத்திலேயே தொல்சமய நம்பிக்கைகள் ஏற்பட்டிருப்பதை அறியமுடிகிறது. நியாண்டர்தால் மனிதர்களின் தொல்பொருட்கள், இறப்புக்குப் பிறகும் ஏதோ ஒருவகையான வாழ்க்கை உண்டு என அம்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகின்றன.*3 நியாண்டர்தால் மனித மூதையர், இன்றைக்கு 1,50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த இனம் ஆகும். கிடைக்கப்பெற்ற தொல்பொருள், 1,00,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கணிக்கப்பட்டுள்ளதும் அதன் தொன்மை நிலையைக் காட்டுவதாகும். 

வழிபாடும், இறைவுணர்வும்

வழிபாடு, மனிதனுடைய அச்ச உண்ர்ர்சியில் இருந்தும், குற்ற உணர்ச்சியில் இருந்தும் தோற்றம் கொண்டது என சிக்மண்ட் ஃபிராய்டு கருதுகிறார். அச்சமும், நன்றி உணர்ச்சியுமே மனித சமூகத்தில் இறைவுணர்வை தோற்றுவித்தன என்பது, தெய்வம் குறித்த சிந்தனையில் முதன்மையாக இருக்கிறது. இச்சிந்தனையே, வழிபாட்டு மரபுகளையும் தோற்றுவித்தது. இச்சிந்தனையே, சமயத்தின் அடியோட்டங்களை வழங்கியது. தொல்சமயத்திலும் சரி, சமயத்திலும் சரி, வழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்து மேற்கொள்ளப்படும் சடங்காகும். இந்தவகையில், தீமை புரிபவற்றில் இருந்து காத்துக்கொள்வது அல்லது தீமையைக் குறைத்துகொள்வது, நன்மையும் வளத்தையும் வழங்குபவற்றுக்கு நன்றி செழுத்துவது என்ற இருமுனைப்பட்ட வழிபாட்டு மரபு, தொன்மைக் காலம் முதல் இன்று வரையிலான வழிபாடு மரபின் வேர்களாக நீடித்துள்ளது.

நன்மை தீமைகளை அடையாளம் காட்டுவதில், ஆவியியக் கோட்பாடு முதன்மையான இடத்தை வகிக்கிறது. ஆவி வழிபாட்டை மையப்புள்ளியாகக் கொண்டு, அதன் முன் பின் கோட்பாடுகளைக் காணலாம். இது, தொன்மைச் சமயத்தின் பன்முகப்பட்ட அடையாளங்களை நமக்கு வழங்கும். அதனூடே, இன்றுவரை நீடித்துத் தொடரும் மரபுகளையும், மரபுகளின் எச்சங்களையும் கண்டையவும், சமயங்களில் அவற்றின் இடத்தையும் அறியவும் உதவும். 

ஆவியியமும் ஆவி வழிபாடும் (Animism and soul worship)

மானிடவியல் தொன்மைச் சமயத்தின் வழிபாட்டின் தோற்றம், “ஆவி வழிபாடு” நிலையில் உள்ளதாகக் கருகிறது. எட்வர்டு பர்னட் டைலர், 1871-ஆம் ஆண்டு இக்கோட்பாட்டை முன்நிறுத்தி விளக்கினார்.*4 இதற்கு முன்னர், சமயவாதிகளின் விளக்கங்களில் இருந்து மட்டுமே அந்தந்த சமயத்தின் தொன்மை சித்தரிக்கப்பட்டு வந்ததில், தொன்மைச் சமயக் காலகட்டம் என்ற ஒரு காலகட்டத்துக்கு இடமில்லாதிருந்தது. டைலர், சமயங்களுக்கு முந்தைய நிலையை, பண்பாடு (Culture) என்ற சொல்லாலேயே இந்நிலையை “தொன்மைப் பண்பாடு” (Primitive Culture) என அறிமுகப்படுத்துகிறார். “சமயத்தின் தொடக்கம், ஆவிகள்பால் கொண்ட நம்பிக்கையிலிருந்து தோன்றியது” என்பது அவரது கொள்கையின் அடிப்படையாகும். 


அனிமா (Anima) என்ற லத்தீன் சொல்லில் இருந்து அனிமிசம் என்ற சொல் உருவாக்கப்பட்டது. அனிமா என்பதற்கு “ஆவி” என்ற் பொருள். ஆவியானது “ஆன்மா” என்றும் குறிக்கப்படும். ஆவி / ஆன்மாவைக் குறிக்க, Sprit என்ற செல்லும் Soul சொல்லும் வழக்கில் உள்ளன. இதனால், ஆவியியம் என்பது “ஆவிகளைப் பற்றிய கொள்கை” (Doctrine of Sprits) என்றும் “ஆன்மாவைப் பற்றிய கொள்கை” (Doctrine of Souls) என்றும் விளக்கப்படும். தமிழ் வழக்கு மரபில், ஆன்மா என்ற சொல் நன்மை புரியும் ஒன்றாகவும், ஆவி என்ற சொல் தீமை புரியும் ஒன்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்பொருள் கொள்ளலில் உள்ள வேறுபாடு, தத்துவமொழி வழக்கிலோ, சமயச் சிந்தனை மரபிலோ இல்லை. 

ஆவியியக் கோட்பாடானது, மூன்று முக்கியக் குணங்களைக் கொண்டுள்ளது என சுட்டிக்காட்டப்படுகிறது.*5 

1.    இறந்த அல்லது உயிரோடு இருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆவி மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல்.

2.    பெளதிகப் பொருள்களின் மீது உறுதியாகத் தொடர்பில்லாத ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல்.

3.    இயற்கைப் பொருள்களின் உறைந்த ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல்.

இவை, மக்களின் வழிபாடு முறைகளைக் கணக்கில் கொண்டு வகைப்படுத்தப்பட்டதாகக் கருத இடமுள்ளது.

தொன்மை மக்கள், இயற்கையின் சீற்றத்துக்கும், கனவில் வந்துபோகும் வியத்தகு நிகழ்ச்சிகளுக்கும், எதிரொலிப்பு எழுவதற்கும், அந்தந்தப் பொருள்களில் உறைந்துள்ள ஆவிகளே காரணமென நம்பினர். அதாவது, உலகில் உள்ள ஜடப்பொருள் மற்றும் உயிர்ப்பொருளில் தங்கும் ஆவியே, மனிதர்கள், விலங்குகள், சுற்றியுள்ள உலகப்பொருள்களின் மீதும் பாதிப்பைச் செலுத்துகின்றன என்று அம்மக்கள் நம்பினர். இந்நம்பிக்கையில் இருந்து உலகில் உள்ள எல்லா ஜடப்பொருள்களும், உயிர்ப்பொருள்களும் ஒன்று அல்லது பல ஆவி அல்லது ஆன்மாக்களைக் கொண்டிருக்கிறது என்ற ஆவியியத்தின் அடிப்படையை உருவாக்கியது. 

தொன்மை மக்கள், வாழ்வுக்கும் இறப்புக்கும் ஆவிகளே காரணம் எனக் கருதினர். மனிதன் இறக்கும்போது, கண்ணுக்குப் புலப்படாத “சக்தி” வெளிப்படுவதாலேயே அவன் இறக்கிறான் என்றும், அச் சக்தி உடலினுள் இருக்கும்வரை உயிருள்ளவனாக இருக்கிறான் என்றும் அம்மக்கள் கருதினர். இந்தச் சக்தியையே அவர்கள் ஆவி எனவும் கொண்டனர். இம்முதற்படியில், உடல் ஆவி என்ற இரு கருத்தாக்கங்களை தொன்மை மக்கள் வளர்த்தெடுத்துக்கொண்டனர். 

உலவும் ஆவியும் உடல் ஆவியும்

உடல் மற்றும் ஆவி என்ற கருத்தாக்கம் உருவான பின்னர், அடுத்த நிலையில், உலவும் ஆவி (free soul) மற்றும் உடல் ஆவி (body soul) என்ற இரண்டு ஆவிகள் உடலில் உறைகின்றன என்ற நம்பிக்கையை வளர்த்தெடுத்தனர். உலவும் ஆவி உடலில் இருந்து வெளியே சென்று, அன்றாட செயல்களோடு தொடர்புற்றுப் பின் மீண்டும் உடலுக்குத் திரும்பி உறைகிறது. அதேசமயத்தில், உடல் ஆவி எப்பொழுதும் உடலுக்குள்ளேயே உறைந்துள்ளது என்றும், அது எப்பொழுது உடலைவிட்டு வெளியேறுகிறதோ அப்பொழுதே இறப்பு நிகழ்கிறது என நம்பினர். உடல் ஆவியானது, ரத்தம் மற்றும் தலை ஆகியவற்றின் உருவமாக இருப்பதாகக் கருதினர். உடலில் ஆவி இருக்கும் உறுப்பாக தலை கருதப்பட்டது. இவ்வகையான நம்பிக்கைகளின் அடிப்படையில், ஆவியானது அதன் உருவத்திலும் வடிவத்திலும் தொட்டுணர முடியாதது எனக் கருதவும் செய்தனர். 

தொன்மை மக்களின் ஆவி என்பது ‘நிழல்’ அல்லது ‘மறைவு’ என்பதைக் குறிக்கின்றது என்றும், ஆவியின் தன்மையை அது தங்கும் உடல் என்னும் ‘கலம் அல்லது பாத்திரம்’ என்பதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும் என நம்பினர். அவர்கள் கனவில் நிகழ்ந்தவற்றையும், ஆவியின் பிற செயல்களையும் நேரடியாக உணர்ந்ததன் மூலம், மனிதனுக்கு “நிலையற்ற சதைப்பகுதி” மற்றும் “ஆத்மிகமான ஆவி” ஆகிய இரு உடற்கூறுகள் உள்ளன எனத் தீர்மானித்தனர். இவ்வகையான கருத்தாக்கங்களால், தென்மை மக்களின் ஆவியுலக கோட்பாடு வலுப்பெற்றது. பிற்காலத்தில், பெருஞ்சமயம் அல்லது நிறுவனமயப்பட்ட சமயங்களிலும் இக்கருத்தாக்கங்கள் வேரூன்றின. 

பச்சைச் சடங்கும் உலர்ந்த சடங்கும்

மனிதனிடம் உள்ள “நிலையற்ற சதைப்பகுதி” மற்றும் “ஆத்மிகமான ஆவி” என்ற இரு உடற்கூறு உள்ளது என்ற நம்பிக்கை, மனிதனின் ஈமச்சடங்கில் “பச்சைச் சடங்கு” மற்றும் “உலர்ந்த சடங்கு” இருவகைப்பட்ட சடங்குகளை மேற்கொள்ள காரணமாக அமைந்தது. இங்கு, பச்சைச் சடங்கு என்பது உடல் ஆவி பிரிந்து இறப்புக்குள்ளான சதைப்பகுதிக்குச் செய்யப்பட்டதே ஆகும். உலர்ந்த சடங்கு என்பது, இறந்தவரின் உலவும் ஆவி, மனிதன் இறந்தபின்னும் சில காலம் வரை அவர்கள் பகுதியில் உலவும் என்றும், பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இறுதியாக வேறொரு இடத்தில் தங்கிக்கொள்ளும். இவ்வாறு தங்கிய உலவும் ஆவிக்கு மேற்கொள்ளும் சடங்கையும் குறிப்பதாகும்.
தமிழர் வாழ்வியலில் இன்றும் இவ்விரு சடங்குகளும் மேற்கொள்ளப்படுவதைக் காணலாம். இறந்த அன்றோ, மறுநாளோ அவரவர் வழக்கப்படி புதைக்கும்பொழுதோ, எரிக்கும்பொழுதோ செய்யப்படும் சடங்கு, பச்சைச் சடங்கினை ஒத்ததாகும். அவரவர் வழக்குப்படி 7, 11, 14, 16 என குறிப்பிட்ட நாட்கள் இடைவெளிக்குப் பின் மேற்கொள்ளப்படும் ‘‘காரியம்” அல்லது “கருமாதி” அல்லது அதனை ஒட்டிய “தோட்டக் காரியம்” அல்லது “மோட்சதீபம் பார்த்தல்” முதலான சடங்குகள், உலர்ந்த சடங்கினை ஒத்ததாகும். பழங்குடியினரான தோடர், கோத்தர் மக்கள் மேற்கொள்ளும் இவ்வகைச் சடங்குகள் ஒப்புநோக்கத்தக்கதாக விளங்குகிறது. தோடர்கள் இறந்தவுடன் “பச்சைச் சாவு” (pachai chaavu = Wet or green funeral) ஈமச் சடங்கையும், ஓரண்டு கழித்து “வரைதன்” (varaiidan = dry funeral) ஈமச் சடங்கையும் செய்கின்றனர். கோத்தர் பழங்குடியினர் “பஸ்தெள” (pasdau) என்ற பச்சைச் சடங்கையும், “வர்ல்தெள” (varldau) என்ற உலர்ந்த சடங்கையும் மேற்கொள்கின்றனர்.

ஆவியியக் கோட்பாட்டின் விளைவுகள் 

டைலர் முன்வைத்த ஆவியியக் கோட்பாட்டுக்குப் பலதரப்பு திறனாய்வுகள் எழுந்தன. இக்கோட்பாட்டை வகுத்ததன் மூலம், தொன்மை மக்களை தத்துவஞானிகளாகவும், பகுத்தறிவாளர்களாகவும் ஆக்கிவிட்டார் என்றும், அவருக்கு களப்பணி அனுபவம் இல்லை என்றும், அதனால் சுறுசுறுப்பான வாழ்க்கையில் தொன்மை மக்களுக்கு சிந்தனை செய்யவே காலமில்லை என்பதை அவர் அறியார் என்றும் மானிடவியலார் சிலர் குற்றம் சுமத்தினர். 

மற்றொருபுறம், இக்கோட்பாடு இயற்கை அறிவியலார் பார்வையிலேயே இருப்பதால், இவர் தொன்மைச் சமயத்தின் ஒரு பக்தியை மட்டும் மிகைப்படுத்திவிட்டார் என மேக்ஸ்முல்லர், தர்க்கைம், மாரட் போன்ற பலர் கருதுகின்றனர். சமூகப் பண்பாட்டு முறைகளை, செயற்பாட்டு காரணகாரிய அமைப்புகளோடு (functional - causal system) ஒப்பிட்டுக் காட்டுவதுபோல், இவர் சமயத்தின் வளர்ச்சியினை ஒப்பிட்டுக்காட்டாததால், இக்கோட்பாடு குறையுடையதாக உள்ள ஒன்று எனவும் சிலர் குறை கூறினர். ஆவியுலக நம்பிக்கை என்பது தொன்மை மக்கள் அனைவரிடமும் உள்ளது; அது வளர்ச்சியுற்ற சமயங்களிலும் குறைந்த அளவாவது இடம்பெறும் என்ற கருத்தையும் சிலர் ஏற்க மறுத்தனர். 

உலகத்தில் ஆவியுலக நம்பிக்கையை சில குடிகள் கொண்டிருக்கவில்லை என்ற சிலரது விதிவிலக்கு உண்டு என்ற வாதத்துக்கு, “ஆவியுலக நம்பிக்கையற்ற சமயங்கள் இருக்கமுடியாது; அதன் எச்சங்கள் மறைமுக அளவிலேனும் இடம்பெறும்” என்ற ‘எஞ்சிநிலைத்தவை’ (Survivals) கோட்பாட்டை முன்வைக்கிறார். இதன்படி, அனைத்து மக்களும் ஆவியுலக நம்பிக்கையை ஏதோ ஒருவகையில் கொண்டிருப்பர் என்ற கருத்தை முடிவாக உறுதிசெய்கிறார். இதற்குக் காட்டாக அவர் தெரிவிக்கும் பிரபலமான உதாரணங்களில் ஒன்று, “காடும் விலங்குகளும், வானும் பறவைகளும், தண்ணீரும் மீன்களும், ஒன்றுக்கு ஒன்றுக்குள் ஒன்றாக எவ்வாறு உள்ளனவோ, அவ்வாறே மனிதனும் ஆவியும் ஒன்றோடொன்று ஒன்றியிருக்கின்றனர்” என்பதாகும். இந்தவகையில், ஆவியுலக நம்பிக்கை இன்றி மனிதன் சமய அமைப்பைப் பெற்றிருக்கமுடியாது என்பது டைலரின் உறுதியான முடிவாகும். 

“எங்கெங்கு உயிர், ஆவி, பேய், பிசாசு, கடவுள் முதலியவற்றின் நம்பிக்கை இருக்கிறதோ, அங்கு ஆவியுலகக் கோட்பாட்டின் நம்பிக்கை இருக்கும்” என்பதும், “ஆவியுலகக் கோட்பாட்டில் இருந்து வளர்ச்சிபெற்ற ஒரு கடவுள் கோட்பாடு வரை, அதன் வளர்ச்சி நிலைகளில் மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியும் ஒன்றியுள்ளது” என்று டைலர் தம் கருத்தை முன்வைக்கின்றார். 

“ஒரு கடவுள் வழிபாடு என்பது ஆவி வழிபாட்டின் வளர்ச்சி நிலைகளில் உச்சநிலை” என்பதும், “அவ்வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்பவே மக்களின் வளர்ச்சி நிலையும் அமைந்துள்ளது” என்பதும் ஆவியுலகக் கோட்பாட்டில் அவர் முன்வைப்பதில் முக்கியக் கருத்துகளாகும். இங்கு, மக்களின் வளர்ச்சி நிலை என்பது மக்களின் சமய பரிணாம வளர்ச்சி நிலையைக் குறிப்பது என்பது நினைவுகொள்ளத்தக்கது. 

டைலர், மக்களின் சமய பரிணாம வளர்ச்சியை அடையாளப்படுத்த, ஆவிக் கோட்பாட்டின் ஊடே, ஆவியுலக நம்பிக்கையை இரண்டாக பகுத்துக் காண்கிறார். அவற்றை, 1. கீழ்நிலை ஆவி வழிபாடு (lower animism); 2. மேல்நிலை ஆவி வழிபாடு (higher animism) எனக் குறிக்கின்றார். இவ்வாறு இவர் அடையாளப்படுத்தும் வளர்ர்சிப்போக்கு, ஒருவழிப் பரிணாம வளர்ச்சி என்றும் குறிக்கப்பெறும்.

கீழ்நிலை ஆவி வழிபாட்டு நிலையில் நீடிப்பவர்களை ஒழுக்க நிலை சாராத (amoral) தொன்மை மக்களாவர் என்றும், இவர்கள் இறப்புக்குப் பின் உயிர் தொடர்ந்து வாழ்கிறது அல்லது நன்மை தீமைகளைச் செய்யும் ஆற்றலைக் கொண்டு நிலைத்திருக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவர்கள்; இறப்புக்குப்பின் ஒருவரது உயிர் அவர் வாழும் காலத்தில் பயன்படுத்திய பொருள்களுடன் உறைந்துள்ளது என்ற நம்பிக்கை கொண்டவர்கள் என்று வகைப்படுத்துகிறார். 

மேல்நிலை ஆவி வழிபாட்டு நிலைக்கு வளர்ச்சியுற்றவர்கள் அவர்கள் வாழும் காலத்தில் செய்த கருமங்களின் தன்மைக்கு ஏற்ப மதிப்புகளோ, தண்டனைகளோ அதாவது நமது மொழியில் பாவபுண்ணிய செயல்விளைவு கிடைக்கும் என நம்புபவர்கள் என்று வகைப்படுத்துகிறார். மேல்நிலை ஆவி வழிபாட்டினரே, பண்பாட்டு பரிணாம வளர்ச்சி நிலைகளில் மேல்நிலையில் உள்ளவர்கள் என்பது டைலரின் மதிப்பீடாகும். 

இவரது ஒருவழிப் பரிணாம வளர்ச்சிப் படிநிலைகளில், 1. ஆவியியம்; 2. பல கடவுள் கோட்பாடு; மற்றும் 3. ஒரு கடவுள் கோட்பாடு ஆகிய மூன்று நிலைகள், ஒன்றை அடுத்து ஒன்றாகக் கீழிருந்து மேலாகப் பயணிக்கும் அடுக்குகளாகும். ஆவி நம்பிக்கையில் இருந்து ஒரு கடவுளை வழிபடும் பரிணாம வளர்ச்சியில், மனித சமுதாயம் ஆவி நம்பிக்கையைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, அதனைச் சார்ந்த சமூக, பொருளாதாரச் செயல்களைக் கைவிட்டு மேல்நிலை அடையும். அதே சமயத்தில், அனைத்துச் சமய முறைகளும் ஆவியுலக நம்பிக்கையில் இருந்தே வளர்ந்ததால், ஆவியுலக நம்பிகையின் எச்சம் அனைத்துச் சமயங்களிலும் இடம்பெற்றிருக்கும். அந்நம்பிக்கை எந்த அளவு இடம் பெற்றிருக்கின்றதோ அந்த இடம், சமயத்தின் பரிமாண வளர்ச்சியில் அது அடைந்துள்ளதைக் காட்டும் என்பது இக்கோட்பாட்டின் அடிப்படைகளாகும். 

இவரது மேற்கண்ட ஆவிக் கோட்பாடு, எஞ்சி நிலைத்தவை மற்றும் ஒருவழிப் பரிணாம வளர்ச்சி ஆகிய மூன்று கோட்பாடுகளில், ஒருவழிப் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மறுத்து குறைசாட்டியோர் உண்டு. கோட்பாடு ரீதியான விவாதங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. முன்னர் குறித்தபடி, விதிவிலக்குகளின் அடிப்படையில், சமயப் பரிணாம வளர்ச்சிப்போக்கின் பல்முகத்தன்மையின் கூறுகளின் இடமெங்கே என்ற தேடுதலோடு இந்த விவாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நன்மை செயும் ஆவி, தீமை செய்யும் ஆவி என்ற இருகூறுகளில், ஆவி வழிபாடு பெரும்பான்மையான சமூகங்களில் நிலைத்திருக்கிறது. நல்லவர்களாக; சமூகத்தின் நன்மைக்கு வாழ்ந்தவர்களாக இருந்து, இயற்கையாக மரணமடைந்தவர்களின் ஆவி நன்மை செய்யும் எனவும், கொடியவர்களாக வாழ்ந்து மரணமடைந்தவரின் ஆவி தீமை செய்யும் என்ற ஆழமாக நிலைத்திருப்பதாகும். நன்மையும், வளமையும் தருவது என்ற நம்பிக்கையில், நல்ல ஆவி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. கொலை, தற்கொலை, விபத்து, பாதகம், வஞ்சனை, எதிர்பாராது விலங்குகளால் தாக்கப்படுதல் போன்றவற்றால் அகால மரணமடைந்தவர்களின் ஆவி தீமை செய்யும் என்றும், அத்தீமையில் இருந்து தம்மை காத்துக்கொள்ளவும் அத்தகைய ஆவிகளைச் சாந்தப்படுத்தவும் தீய ஆவி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. தமிழில், தீய ஆவி காத்து, கருப்பு, பேய், பிசாசு, பூதம், முனி என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. தீய ஆவிகள் சுடுகாடு, மலை, மரம், பாறை போன்றவற்றில் வாழும் என்ற நம்பிக்கையில், இவ்விடங்களில் இவற்றுக்கு வழிபாடு செய்வர். 

தமிழக நாட்டுப்புறவழக்கில் இயக்கியம்மன், இசக்கியம்மன், நீலி, முனி, சாத்தான் போன்ற பெயர்களில் வழிபடப்படும் தெய்வங்களில், சில கொலை, தற்கொலை, விபத்து, பாதகம், வஞ்சனை, எதிர்பாராது விலங்குகளால் தாக்கப்படுதல் போன்றவற்றால் அகால மரணமடைந்தவர்கள் ஆவர். அவர்களின் ஆவிகளின் மீதான அச்சம், அது வழங்கும் தீமை ஆகியவற்றை நீக்கிக்கொள்ள கோயில் கட்டியும், சிலைவைத்தும் அல்லது கல்லெடுத்தும் அவர்கள் வழிபடப்படுகிறார்கள். நடுகல் மரபிலும் பிற்காலத்திய நடைமுறைகளில் நன்மை தீமை ஆவிகளின் தாக்கம் உண்டு.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

1. Emile Durkheim, The Elemaentay forms of Religious Life, Free press, New York, 1965, p.62. 
2. Thomas F. O’Dea, The Sociology of Religion, Printice – Hall, Englewood Cliffs. N.J, 1966, pp.1-2 
3. Ember and Ember, Anthroughpology, Printice – Hall, Englewood Cliffs. N.J, 1977, 368. 
4. Tylor, Edward Burnett, “Primitive Culture” – part I & II, first publication in 1871.
5. Leandh, மேற்கோள், ஆ. சிவசுப்பிரமணியன், மந்திரமும் சடங்குகளும், காலச்சுவடு, (2015 பதி), ப. 26.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com