அத்தியாயம் 65 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

சோமயாகம், அஸ்வமேதம், புருசமேதம், இராஜசூயம் போன்ற யாகங்களில் இருந்து அன்றைய விலங்குப் பலிகள், அவை பலி கொடுக்கப்பட்ட விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

ரிக் – யசூர் - பிராமண வேள்விகளின் நோக்க வேறுபாடுகள்

ரிக் யாக பலிச்சடங்கிலிருந்து, யசூர் யாக பலிச்சடங்குக்கும், யசூரில் இருந்து பிராமணங்களின் யாக பலிச்சடங்குக்கும் நோக்கத்தில் நிச்சயமான வேறுபாடுகள் உண்டு. இது பிரதேச மற்றும் குழு வேறுபாடுகளால் உருவானது என்பதைவிட, வாழ்வியல் மாற்றம், பண்பாடு மாற்றம், சிந்தனை மாற்றம் மற்றும் புதிய தத்துவத்தின் தோற்றம் ஆகியவை காரணமாக இருக்கின்றன.

ரிக் பாடல்களில், யாகம் என்ற பொருளிலான யக்ஞம் நிகழ்த்தும் செயல் வெளிப்படையாக இல்லை என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது. யாகத்தில் பலிப்பொருட்களான அவியை படைத்தல், ஆகுதியை உண்ணல் ஆகிய செய்திகளே மிகுதியாக இடம்பெறுகின்றன. அசுவமேதம் (குதிரைப் பலி), புருசமேதம் (மனிதப் பலி) ஆகிய யாகங்கள் மரபாகவே தொடரப்பட்டுள்ளன என்று அறியமுடிகிறது. சுனச்சேபன் பலிக்கு வாங்கப்பட்ட விவரம், மற்றும் பிற்கால ஐதரேயப் பிராமணம் தெரிவிக்கும் சில தகவல்கள் கொண்டு இதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இருந்தும், ரிக்கில் அவற்றில் விவரங்கள் விரிவாக அளிக்கப்படுவதில்லை.

1 மற்றும் 10-ஆம் மண்டலங்களில் உள்ள வேள்வி விவரங்களே, யசூரின் வேள்வி முறையில் காணும் விவரங்களுக்கு அடிப்படையாக அமைந்தவை என பலராலும் சுட்டப்பட்டுள்ளது. இம்மண்டலத்துப் பாடல்கள் ரிக் தொகுப்பிலேயே காலத்தால் பிற்பட்டவை என்பது முன்னர் அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது. இதனால், யசூர் வேதம் முற்கால அல்லது ரிக்கின் முதல் தலைமுறை இருடிகளின் வேள்வி மரபுகளில் இருந்தும், சித்தனைகளில் இருந்தும், நோக்கத்தில் இருந்தும் வேறுபடுவதை இம்மண்டங்களின் தொடர்ச்சியாகவே காணவேண்டி உள்ளது. பிராமணங்களின் யாகம், யசூரில் இருந்து இன்னும் வேறுபடுவதாக உள்ளது. பிராமணங்கள் புதிய தத்துவத்தையும், சிந்தனை மரபையும் வெளிப்படுத்துபவையாக உள்ளன. பிராமணங்கள், மேய்த்தலுடன் வேளாண்மை செய்த சமூகத்தையும், நிலவுடமைச் சமூகத்தையும் வாழ்வியலாகக் கொண்ட சமூகத்தை அடையாளப்படுத்துகிறன.

இம்மூன்று படைப்புகளின் காலகட்டங்களிடையே உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரியும் ஒன்று. ரிக் வேள்வி முற்றிலும் (1 மற்றும் 10-ஆம் மண்டலம் நீங்கியது) சமூக நன்மையினை அல்லது குழுவின் நன்மையினை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவது. 1 மற்றும் 10-ஆம் மண்டலப் பாடல்கள், வேள்வியை செய்துதருவோருக்கு அளிக்க வேண்டிய தட்சணை விவரங்கள் போன்று சில நடைமுறைகளைத் தெரிவிக்கின்றன. அவை பிற்காலத்தவை. ஆனால், யசூரில் துவங்கி பிராமணங்களில் முற்றாக வெளிப்படும் வேள்வி முழுமையும் தனிநபருக்கானது. அதுவும் மன்னர், தலைவர் போன்ற உயர்நிலையில் உள்ளோருக்காக நிகழ்த்தப்படுவது. அதாவது, நிகழ்த்துவிப்போரே பயனாளிகள். சமயத்தில், நிகழ்த்துவிப்போரின் குடும்பத்தின் ஒரு பிரிவினருக்கும்கூட இதன் பயன் மறுக்கப்படும் அல்லது கிடையாது.

ரிக்கில், வேள்வி சடங்கு காட்டாத, சடங்கை நிகழ்த்துவோர், நிகழ்த்துவிப்போர் என்ற கூறாக்க நிலையை பிராமணங்கள் நன்கு காட்டுகின்றன. முற்கால ரிக் (அதாவது 1 மற்றும் 10-ஆம் மண்டலம் நீங்கியது) வேள்வியில் தேவர்கள், கடவுளர், பொதுமக்கள் உட்பட அனைவரும் இடம்பெறுவர். இக்கடவுளர்களில் அக்கினி, இந்திரன், சோமன், வருணன், பிரகஸ்பதி உட்பட பலர் இடம்பெறுவர். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் இடம்பெறுவர். இங்கு நிகழ்த்துவோர், நிகழ்த்துவிப்போர் என்ற கூறுபாடு இல்லை, ஏனெனில், நிகழ்த்துவிப்போர் என்ற சமுதாய அங்கம் இக்காலத்தில் ஏற்படவில்லை. இங்கு நிகழ்த்துவோர் உட்பட சமுகத்தின் அனைவரும் வேள்வியின் பயனாளிகள்.

சோமயாகம், அஸ்வமேதம், புருசமேதம், இராஜசூயம் போன்ற யாகங்களில் இருந்து அன்றைய விலங்குப் பலிகள், அவை பலி கொடுக்கப்பட்ட விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது. இதற்கு யசூர் மற்றும் அதர்வணப் பிரதிகளே உதவுகின்றன.

கிருஷ்ண யசூரில் இருந்து சில…

யக்ஞமான வேள்வியில் பசு முக்கிய இடத்தைப் பெற்றது. கிருஷ்ண யசூர் அநுவாகம் 315, யக்ஞத்தில் பசு ஏன் என்பதை இவ்வாறு விளக்குகிறது. “அக்கினி பசுவாக இருந்தது; அதனால் யக்ஞம் செய்தார்கள்; அது அனலுள்ள இவ்வுலகத்தை ஜயித்தது. இது உன் உலகமாகும். நீ அதை ஜயிப்பாய். ஆதலால் அதை கிரகிக்கவும். வாயு பசுவாக இருந்தது; அதனால் அதனை யக்ஞம் செய்தார்கள்; அது வாயு உள்ள இவ்வுலகத்தை ஜயித்தது; இது உனது உலகமாகும்; அதை நீ முகரவில்லையேல் உன்னை நான் தடுப்பேன். ஆதித்தியன் பசுவாயிருந்தது; அவர்கள் அதனால் யக்ஞம் செய்தார்கள்; அது ஆதித்தியனுள்ள இவ்வுலகத்தை ஜயித்தது. இது உன் உலகம், நீ முகர்ந்தால் அதை நீ ஜயிப்பாய்.”

அஸ்வமேத வேள்விப் பலியில் இடம்பெறும் குதிரை, முதலில் சாந்தப்படுத்தப்படுகிறது என்பதாக கிருஷ்ண யஜுர் காண்டம் 5, அநுவாகம், 258 உள்ளது.*1 அது, குதிரை மட்டுமல்லது பலவகையான உயிரினங்களைச் சுட்டுவதாகவும் இருக்கிறது. அஸ்வமேதத்தில் குதிரை மட்டுமல்ல பலிப்பொருள்.

1. உன்னை யார் அறுக்கின்றான்? உன்னை யார் துண்டம் துண்டமாக்குகிறான்? / உன் அங்கங்களை யார் சாந்தமாக்குகிறான்? / உனக்குச் சாந்தம் அளிக்கும் கவி யார்?

2. ருதுக்கள் பருவகாலத்தில் துரிதர்கள் உன் சேர்க்கைகளைப் பிரிக்கட்டும். அவர்கள் வருஷ தேஜ சுவாலைகளுடன் உன்னை ஊசிகளால் சாந்தமாக்க வேண்டும்.

3. திவ்வியமான அத்வர்யுக்கள்? உன்னை அறுக்கட்டும்; உன்னைப் பிரிக்க வேண்டும். திரிதர்கள் சாந்தமாக்கி உனதங்கங்களை ஒன்று சேர்க்கட்டும்.

4. பட்சங்கள் மாதங்கள் அமைதியாகி உன் சந்திகளைப் ஒன்று சேதிக்கட்டும். இரவு பகல்கள் மருத்துக்கள் உன் சேதங்களைப் பூரணமாக்க வேண்டும்.

5. நிலம் வானத்துடன், வாயுவும் உன் பிளப்பை சுகமுடனாக்கட்டும். சோதி நட்சத்திரங்களுடன் சிறப்பாய் உன் ரூபத்தைச் செய்ய வேண்டும். உன் மேலான அங்கங்கங்களும் சுகமாகட்டும். எலும்புகளும் மச்சைகளும் சுகமாக வேண்டும். உன் காயத்துக்குச் சுகமாகட்டும்.

இங்கு விவரிக்கப்படுவது பலி விலங்கை அல்ல, சத்ருவை அறுத்தல் என விளக்கப்படுவது உண்டு. சத்துரு எனில் ஏன் சாந்தப்படுத்தப்பட வேண்டும். அவன் உடல் கூறாக்கப்பட்டு துண்டங்கள் ஆக்கப்பட்டபின், ஏன் அவனது சேதங்கள் பூரணமாக வேண்டும். எல்லா அங்கங்களும் சுகமாக வேண்டும் என்று வேண்டப்பட வேண்டும். பகைவன் மீண்டும் பகைவனாக முழுமையாக எழ வேண்டும் என்று வேண்டப்படுவதுண்டா என்ற கேள்விகள், அது பலி விலங்கே என்பதை சுட்டிவிடும். விலங்குப் பலியினை நீக்கி, யாகத்தில் தாவர விளைப்பொருட்கள் இடம்பெற வேண்டிய சமூக நிர்ப்பந்தமாக இவ்வரிகளுக்கு சத்துரு என்பதான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக உள்ள கலைத்து அடுக்கப்பட்ட அனுவாகங்கள், தேவர்களுக்கு உகந்த பலவகை விலங்குகளை, புழு, பூச்சிகளை பட்டியல் செய்யும். அது பலி உயிர்களின் பட்டியல் அன்றே வேறில்லை.

முன்னர் போலவே, இவ்விலங்குள் வேள்விக் கம்பங்களில் கட்டிவைத்து, யாகம் முடிந்த பின்னர் சுதந்திரமாக விடுவிக்கப்படும் என்று கூறப்படும் விளக்கம், பிற்காலத்தில் விலங்குப் பலிக்கு எதிராக எழுந்த சமூக மாற்றமும், நிர்ப்பந்தமும் காரணமாகின்றன. இவை, வேள்விக் கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு விடுவிக்கப்படவை அல்ல என்பதை யாகத்தின் முடிவில் இறைவர்களுக்கு படைக்கப்பட்ட படையலில் இடம்பெறும் எலும்புத்துண்டங்கள் பற்றிய விவரப் பட்டியல், வேள்வியில் சதைகள் கருகிய பிறகு எஞ்சிய எலும்புகள் படையல் பொருட்களாயின என்பதை விளக்கும்.

காண்டம் - 4, அநுவாகம் - 183, பாடல் 1. “அக்கினியே நாங்கள் உன்னில் வைக்கும் எக்கட்டைகளும்* உனக்கு நெய்போலாகட்டும். அதி இளைஞனே நீ அதை அங்கிகரீக வேண்டும்” என்பதாகும். இதற்கு உரைகண்டவர், *”எக்கட்டைகளும்” என்பதற்கு எதிரிகளின் தேகங்கள் என்றே பொருள் தருவர். அதே அநுவாகம், பாடல் 5 – 8 ஆகியவற்றின் வரிகள், சத்துருக்கள் இரக்கத்துக்கும், பரிவுக்கும், பூரண குணத்துக்கும், காயத்தில் இருந்து சுகம் பெறவும் அனுமதிக்கப்படாதவர்கள் என்பதைக் காட்டும்.

காண்டம் - 5, “அக்னியே நான் உன்வாயில், ஒருமையுடன் எதிர்த்து அழிக்க வரும் கணங்கள், கள்வர், கொள்ளைக்காரர்களை வைக்கிறேன்” என்றும்; காண்டம் – 6, “பகவானே நீ கள்வர்களை கொம்புகளால் (ஆயுதங்களால்) பறிப்பவர்களைப் பற்களால் திருடர்களைத் தாடைகளால் நன்கு குதப்பி மெல்லவும்” என்றும்; காண்டம் – 7, “நான் உன் வாயினுள்ளே, மனிதர்கள் நடுவேயுள்ள திருடர்கள், வனத்தில் உள்ள கள்வர், கொள்ளைக்காரர்கள், குறுங்காடுகளில் எமக்குக் கடுமை செய்பவர்களை வைக்கிறேன்” என்றும்; காண்டம் – 8, “நீ எனக்கு வேறாயுள்ளவன், என்மை வெறுப்பவன், என்மை இகழ்ந்து இம்சிக்க விரும்பும் ஒவ்வொருவனையும் அணு அணுவாய் அழிக்கவும்” என வேட்டப்படுவது, பலிப் பொருள் சத்ருக்கள் என்பதை காட்டும். இதுவே, பலிப் பொருள் விலங்குகளே என்பதையும் விளக்கிவிடும்.

அநுவாகம் 263 முதல் 276 வரை உள்ள அஸ்வமேதத்தின் தொடர்ச்சி

அநு. 263: “இந்திரனான அரசனுக்கு பன்றி, வருணனான மன்னனுக்குக் கருப்பு மான், யம இராஜனுக்கு அரிணம், ரிஷப தலைவனுக்கு காளை, புலி பூபாலனுக்கு வெண்மான், புருச பூபனுக்குக் குரங்கு, துரிதக் கழுகுக்கு காடை, நீலங்குக்குக் கிருமி, சோமப் பிரபுவுக்கு கரும் மான், கடலுக்கு முதலை, பனிமலைக்கு யானையாகும்.”

அநு. 264: “பிரஜாபதிக்குக் கின்னரன், தாத்ருவுக்கு ஆந்தை சிங்கம் பூனை; சரஸ்வதிக்கு புருஷ வாக்கு வெண்பறவை; பூசனுக்கு காட்டாடு கீறிப்பிள்ளை சகை, வாக்குக்கு நாரையாகும்.” இவ்வாறு விரியும் பட்டியல், விலங்குகளின் தேகசுபாவம் கொண்டு விரிவதாக அநுவாகம் 273 முதல் 291 வரையுள்ள பாடல்கள் அமைகிறது. காட்டாக -

அநு. 273: சிவப்பு கருஞ்சிவப்பு இலந்தைச் சிவப்பு – இவை பிரஜாபதிக்காகும்; பழுப்பு செம்பழுப்பு கிளிப்பழுப்பு – இவை ருத்திரனக்காகும்; வெண்மை, வெண்கண் (வெண்கழுத்து உள்ளது) - இவை பிதுருக்களை தேவதையாகக் கொண்டுள்ளவை. மூன்று மலட்டுக் கரும்பசுக்கள் வருணனுக்கு; மூன்று மலட்டு வெண்பசுக்கள் சூரியனுக்கு. கொம்பற்று சாம்பல் குறியுள்ளவை மித்திரன் பிரகஸ்பதிக்காகும்.”

அநு. 185: “இந்திரனான மன்னனுக்கு வெண்முதுகுள்ள மூன்று; அதிபதியான இந்திரனுக்கு வெள்ளை முசுப்புக்கள் உள்ள மூன்று; சுய இராஜனான இந்திரனுக்கு வெண்பின்பாகங்களுள் மூன்று; சாத்தியர்களுக்கு நான்கு வருசங்களான பசுக்கள்; மூன்று விசுவாதேவர்களுக்கு வளர்ந்த மூன்று பசுக்களாகும்; அக்கினி இந்திரனுக்கு கொம்புகளற்ற கருங்குறிகள் உள்ளவை”

அநு. 289: “சுவராஜனான சோமனுக்கு வண்டியிழுக்கும் இரு காளைகள்; ஓஜசளிக்கும் இந்திராக்கினிக்கு இரு ஒட்டகங்கள்; உறுதியளிக்கும் இந்திராக்கினிக்கு கலப்பை இழுக்கும் இரு ஆடுகள்; புவிக்கு இரு காளைகள்; திசைகளுக்கு இரு பெண் குதிரைகள், நிலத்துக்கு இரு எருதுகள்; விராஜனுக்கு இரு ஸ்திரிகள்; பூமிக்கு இரு மாடுகள்; வாயுக்கு வண்டியிழுக்கும் இரு காளைகள்; வருணனுக்கு இரு கரும் மலட்டுப்பசுக்கள்; சோதிக்கு சம்ஹரிக்கும் சீலக் கொம்புகளுடனாகுங் காளைகள் இரண்டாகுக.”

என பலப்பவாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அநுவாகம் 300 முதல் 309 வரையுள்ள பாடல்கள், எந்தெந்தக் கடவுளர்களுக்கு எந்தெந்த உடல் பாகங்கள் என்பதை அறியவும்; 310 முதல் 311 வரையுள்ள அநுவாகங்கள், எந்தெந்த கடவுளர்களுக்கு அருகில் எவ்வாறு எலும்புத்துண்டங்கள் வைக்க வேண்டும் என்பதையும்; 312-ஆம் பாடல், பிரசாதங்களுடன் என்னென்ன கலந்திருக்கும் என்பதையும் அறியவும் செய்கின்றன. சான்றாக -  

அநு. 305: “இந்திரனுக்கு மார்பை, அதிதிக்கு விலாக்களை, திசைகளுக்கு கண்ட குருத்தெலும்புகளை, இருதயம் அதன் கோசத்துடன் மேகங்களை, இருதய சவ்வுடன் வானத்தை, உதர மாமிசத்துப் பனியை ஈரல்களுடன் இந்திராணியை, ஈரற் குலையோடு எலும்புகளை, குடல்களுடன் குன்றுகளை, கடலோடு வயிற்றை, பஸ்மத்துடன் வைசுவாநரத்தை - அறியவும்” என்றும்,

அநு. 310: “அக்கினிக்கு பக்கத்தில் முதல் எலும்பை, சரஸ்வதிக்கு இரண்டாவதை, சோமனுக்கு மூன்றாவதை, சலத்துக்கு நான்காவதை, ஔஷதிகளுக்கு ஐந்தாவதை, வருசத்திற்கு ஆறாவதை, மருத்துக்களுக்கு ஏழாவதை, பிரகஹஸ்பதிக்கு எட்டாவதை, மித்திரனுக்கு ஒன்பதாவதை, வருணணுக்குப் பத்தாவதை, இந்திரனுக்குப் பதினொன்றாவதை, விசுவேதேவர்களுக்குப் பன்னிரெண்டாவதை, சோதி சகத்துக்குப் பக்கத்தில், எமனுக்கு விலா எலும்பை - அறியவும்.”

அநு. 312: “இரு நீர்ப்பைக்கு அருகிலுள்ள பாகங்களோடு வழியை; தொடர்ச்சியை இரு தசைப் பாகங்களோடு; கிளிகளைப் பித்தமுடன்; கல்லீரலோடு காமாலையை, கெட்ட காற்றுகளுடன் ஹலீட்சணங்களை; மலத்தோடு கூச்மங்களை; புழுக்களை குடற்பொருள்களுடன்; நாய்களை துண்டஞ் செய்வதோடு; சர்ப்பங்களை உதிர நாற்றத்துடன்; பறவைகளை பசனகந்தமோடு; எலும்புகளை பிரசாதங்களுடந் அறியவும்” என்று அறியச் செய்கின்றன.

சுக்கில யசூர்

சுக்கில யசூர், அத்தியாயம் 24, அநுவாகம் 390 பாடல்கள் யக்ஞப் பிராணிகளின் பெயர்கள் மற்றும் எந்தெந்த விலங்குகள் எந்தெந்த தேவதைகளுக்கு என்பது போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 609 எண்ணிகையிலான விலங்குகளின் பெயர்கள் உள்ளன. இவற்றுள், 327 விலங்குகள் (நாட்டு விலங்கு! - நான்) யானை முதல் காண்டாமிருகம், ஈக்கள் வரையிலான 282 காட்டு விலங்குகளும் உள்ளன என்றும் இம்மிருகங்கள் பலவற்றை அடையாளம் காணமுடியவில்லை எனவும் கிரிஃபித் குறிப்பிடுகிறார். இவை யாக பூமியில் நடப்படும் கம்பங்கள் என்றும், யாகம் முடிந்தவுடன் இவை விடுதலை செய்யப்படும் என்றும் குறிப்பிடுகிறார்.*2 இது பிற்காலத்தே எழுந்த நடைமுறையாக இருக்கலாம்.

துவக்க காலத்தில், யாக வேதம் சமுதாயத்தின் அனைவருக்கும் உபதேசிக்கப்பட்டது என்பதை சுக்கில யசூர் அத்தியாயம் அநுவாகம் 392-இன் 2-ஆம் பாடல் காட்டுகிறது “நான் (யாகம் செய்வோன்) பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், சூத்திரனுக்கும் ஆரியனுக்கும், அருகில் உள்ளவனுக்கும், அந்நியனுக்கும் எல்லா சனங்களுக்கும் இம்மங்களமான வேதத்தை உபசேதம் செய்கிறேன்”.*3

பலியிடப்பட்ட குதிரையிடத்தில் சொல்லப்படும் பாடல்கள், பலி பொருட்கள் என்னவாக மாறுகின்றன என்பதைக் காட்டுகின்றன. சுக்கில யசூர் அத்தியாயம் 23, அநுவாகம் 15, 16 பாடல்கள் இதனை விளக்குகின்றன.

அநு. 15: “குதிரையே நீ தானாகவே உன்காயத்தை ஓங்கச் செய்துகொள்கிறாய். நீதானாகவே நாடுகின்றாய். நீ தானாகவே பற்றுகிறாய். அந்நியன்னியில் நீயே உன் மகிமையை அடைகிறாய்”.

அநு. 16: நீ இங்கு மரிப்பதில்லை. நீ துன்பமாவதில்லை. நீ சுதந்திரமான வழிகளால் தேவர்களுக்குச் செல்லுகிறாய். தேவசவிதா நலஞ் செய்பவர்கள் சென்று வசிக்கும் நிலயத்தில் உன்னை ஸ்தாபிக்கட்டும்.”

யாகக் குதிரைக்கு கூறப்படும் மேற்கண்டவை, பலி விலங்குகள் அனைத்துக்கும் பொதுவானவையாக இருக்க வேண்டும்.

யசூரில் பெறப்படும் இவ்விவரங்களை, காலத்தால் மூத்த ரிக்கில் இருந்து (1 மற்றும் 10-ஆம் மண்டங்கள் தவிர்த்து) பெற முடிவதில்லை. யசூரில் இருந்து பிராமணங்கள் பெற்ற வளர்ச்சி நிலை கால மாற்றத்தையும், பண்பாடு மாற்றத்தையும், தத்துவ மாற்றத்தையும் அடையாளப்படுத்துபவையாக பிராமணங்கள் இருக்கின்றன. எனில், ரிக் வேள்வி சற்று எளிமையாக சமூகத்தின் நன்மையினை நோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது என பின்னோக்கிச் சென்று அடைந்துகொள்ள முடிகிறது.

எரித்தல் சார்ந்த வேள்வி வழிபாடு, புதைத்தல் சார்ந்த சன்யாசிக்கல் வழிபாடு இரண்டும், மேய்த்தல் சமூகத்தின் வளமை சார்ந்த நலம் சார்ந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுந்த நிலம், பொழுது கடந்த பொதுப்பண்பைக் காட்டுகின்றன. இது தொல்குடி மனத்தின் நம்பிக்கை. சமயமற்றது. தத்துவ விசாரங்கள் அற்றது. ஒரு வகையில், மத நம்பிக்கையை எழுப்பும் ‘கருத்து முதல்வாதத்’துக்கு எதிரான ‘பொருள் முதல்வாதத்தி’ன் தத்துவச் சிந்தனை கொண்டது. சிந்தனையின் நோக்கம், வளமை மற்றும் நலம். வேறு ஒன்றும் இல்லை.

பலிச்சடங்கின் மற்றொரு முகம் மனிதப் பலி. வீரத்தை அடிப்படையாகக் கொண்டு சுக்ல யசூர் அத்தியாயங்கள் 30, 31 புருசமேதம் பற்றிய சுருங்கிய குறிப்பையே வழங்குகின்றது. அது, ஏறத்தாழ நூற்று எண்பது நான்மர் பலியிடப்பட வேண்டியவர் என்றும், ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் குறிப்பிடுகிறது. அசுவமேதம் போன்றே கம்பங்களில் மனிதர்களைக் கட்டி பலியிடுவது என்றும், ஆனால் மனிதர்கள் நிஜமாகவே பலியிடப்படுவதில்லை. யக்ஞத்திற்குப் பிறகு அவர்கள் எவ்விதமான பாதிப்பும் இன்றி விடுதலை செய்யப்படுவர் என்பர். இக்கருத்து, சயானர், மகிதரர் ஆகியோருடைய கருத்தைப் பின்பற்றி கூறப்படுவதாகும்.

ஐதரேய பிராமணத்தில் விவரிக்கப்படும் ஒரு வேள்வியில், விசுவாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் யசூர் வேதம் படிக்கும் பிராமணராகவும், வசிட்டர் பிரம்மாவாகவும், அயாஸ்யர் பாடகராகவும் பங்கெடுத்தனர். அவ்வேள்வியில், சூயவசின் என்பவனின் அஜீகர்த்தன் ஒரு புரோகிதனாக உள்ளான். பேராசையுள்ள அஜீகர்த்தன், முந்நூறு பசுக்களுக்காகத் தன் மகன் ‘சுனஹஷேப்’பை தன் கை வாளால் வெட்டிப் பலிகொடுக்க முனைந்தான். பேராசை பிடித்த அப்பனிடம் பலியாக வெட்டிக்கொள்ள மறுத்து, விசுவாமித்திரரைத் தன் தந்தையாக்கிக்கொள்ள விரும்பி, அவருடைய மடியில் போய் உட்கார்ந்துகொண்டான். அதனால் அஜிகர்த்தன், ‘ரிஷியே என் புத்திரனை எனக்குத் தந்துவிடு’ என விசுவாமித்திரரிடம் கேட்கிறான். ஆனால், விசுவாமித்திரர் அவனது கோரிக்கையை மறுத்து, “தரமாட்டேன், தேவர்கள் இவனை எனக்குத் தந்தார்கள்” என்று கூறியதுடன், அவனது பெயரை ‘தேவராத்நவசுவாமித்திரன்’ என்று மாற்றிவிட்டார். அதனால், அஜீகர்த்தன் தன் மகனைப் பார்த்து “நாங்கள் இருவரும் உன்னை அழைக்கின்றோம். நீ அங்கிரச கோத்திரத்தைச் சேர்ந்த அஜிகர்த்தின் மகனாகிய ரிஷியாவாய். ஓ ரிஷியே, நீ உன் பாட்டன், முப்பாட்டன்களின் வீட்டைவிட்டுப் போகாதே. எங்களிடம் வந்துவிடு” என்று வேண்டினான்.

அதற்கு மறுமொழியாக. “நான் உன் கையில் சூத்திரனும் கையில் எடுக்காத அந்த வாளைக் கண்டேன். ஓ ஆங்கிரசனே, நீ முந்நூறு பசுக்களை என்னைவிட மேலானவையாகக் கருதிவிட்டாய்” என்று சுகஹஷேப்பான தேவராத்நவசுவாமித்திரன் கூறினான். தன் செய்கைக்காக வருந்தி மன்றாடும் அஜீகர்த்தன், “அதற்காக வருந்துகிறேன். நானே நூறு பசுக்களைத் தருகிறேன்” என்கிறான். “ஒரு தடவை பாவம் செய்பவன் மறுமுறையும் செய்யக்கூடியவனே. நீ சூத்திரத்தன்மையில் இருந்து விடுபடவில்லை. நீ செய்த பாவம் எவ்விதத்திலும் மறையாது” என அவன் முன்னால் மகன் மறுமொழியிடுகிறான். இவர்களிடையே விசுவாமித்திரர் இடைமறித்து, “ஆமாம், அந்தப் பாவம் மறையாது. இந்த சுயவசின் புத்திரன் கையில் வாளை எடுத்துக் கொல்லத் துணிந்தபோது, மிகப் பயங்கரமாகத் தோன்றினான். ஆகவே, அவனை உன் மகனாகக் கருதவேண்டாம்”.*4

ஐதரேயத்தின் இந்த விவரிப்பு, மனிதப் பலியை நமக்கு அடையாளப்படுத்துகிறது. இது சுனச்சேபன் 1000 பசுக்களுக்காக விலைக்கு கொள்ளப்பட்ட ரிக் விவரத்தை உறுதிசெய்வதாக உள்ளது.

இவ்வாறான பலிகள், துவக்கத்தில் மந்திரத்துடன் தொடர்புடையவையாக இருந்தன. பிற்கால மாற்றங்கள், பிராமணியத்துக்கு வித்திட்டன. பின்னர் அதுவே பிராமண சமயமாக வடிவெடுத்தது. பிராமணங்களை மட்டும் பிராமண சமயத்தில் பின்தொடர முடியவில்லை. நிறைய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மேலும், பிராமணியம், மேய்த்தல் தொழிலில் இருந்து வேளாண்மை மற்றும் புரோகிதத்தில் மட்டும் வாழ்வியலாக மாற்றிக்கொண்டதும் இந்த மாற்றங்களுக்கு நிர்ப்பந்திக்கின்றன. பிராமணியத்துக்கு வெளியே, சமயம் சாரா வழிபாடாக, இந்தவகையில் பலி வழிபாடுகள் தொல்குடிநிலையின் சடங்கை ஒத்ததாக மேற்கொள்ளப்படுவதையே சன்னியாசிக்கல் வளமைச் சடங்கு நமக்கு அடையாளப்படுத்துகிறது.

(தொடரும்)

மேற்கோள் எண் விளக்கம்

1. அநுவாகம் மற்றும் பாடல் எண்கள், யசூரின் ம.ரா.ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு, அலைகள் வெளியீட்டகத்தின் பிரதிகளில் கண்டவாறு.

2. யசூர் வேதம் தமிழில், ம.ரா.ஜம்புநாதன், (கிரிஃபித் குறிப்பு தமிழில்) ப. 649.

3. இப்பாடலில் உள்ள சமூகத்தின் பிரிவுகள் அல்லது சமூகங்கள், அன்றைய சமூதாயத்தில் இடம்பெற்றவர்களை அல்லது யாக வேள்வி நிகழ்வின்பொழுது இடம் பெற்றவர்களைப் பற்றி அறிய உதவுகிறது. அவர்கள் பிராமணன், சத்திரியன், சூத்திரன், ஆரியன், அந்நியன் ஆகியோர். இதில் பிராமணர்கள் தனியாகவும், ஆரியர்கள் தனியாகவும், அதாவது வேறுவேறானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இது கவனிக்க வேண்டிய அன்றைய சமுதாய அமைப்பைக் காட்டுகிறது. இது பற்றி பிறிதொரு அத்தியாயத்தில் விளக்கப்படும்.

4. ஐதரேயப் பிராமணம், 7.3.10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com