அத்தியாயம் 63 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

கால்நடைகளின் நோய் தீர்க்க சன்னியாசிக் கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை வளர்ப்புத் தொழில் இருந்த பகுதிகளில் சன்னியாசிக் கல் வழிபாடு இணைந்துள்ளது.

தகடூர்ப் பகுதியிலும், வடமேற்குத் தமிழகத்தில் புகழ் பெற்ற சன்னியாசிக் கற்கள் செக்காரப்பட்டி, பாலக்கோடுக்கு அருகில் உள்ள கல்கூடப்பட்டி, ஆதனூர், திருமல்வாடி, நத்தக்காடு, செலப்பசனப்பட்டி போன்ற இடங்களில் உள்ளன. இதுபோன்ற கற்கள், தருமபுரி மாவட்டத்தில் (அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த) முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றன.

செக்காரப்பட்டி சன்னியாசிக் கல் அமைப்பு

தருமபுரி மாவட்டம் செக்காரப்பட்டி என்ற ஊரில் உள்ள சன்னியாசிக் கற்கள், ஊரின் அருகில் 3 மீட்டர் இடைவெளியில் இரண்டு கற்கள் எதிர் எதிராக நடப்பட்டுள்ளன. இக்கல்லில் பெரிய சதுரக்கட்டம் ஒன்றும், அதன் உட்பகுதியில் 32 சிறிய கட்டங்களும் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்லில் ஐந்து வகையான எழுத்துகள் மாறிமாறி இக்கட்டங்களில் எழுத்தப்பட்டுள்ளன. ம, ய போன்ற எழுத்துகள் மட்டும் தெளிவாக உள்ளன. மற்ற எழுத்துகள் தெளிவற்று உள்ளன. இவ்வெழுத்துகள் வட்டெழுத்துகளைப் போன்று உள்ளன. வட்டெழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் தகடூர்ப் பகுதியில் பல நடுகற்களில் காணக் கிடைப்பது நினைவுகொள்ளத்தக்தாக உள்ளது.

செக்காரப்பட்டி சன்னியாசிக் கல் வழிபாடு

பொங்கலின் ஒருபகுதியான மாட்டுப் பொங்கல் அன்று இதற்கு விழா எடுக்கப்படுகிறது. விழா அன்று இந்தக் கற்களும், கற்களுக்கு இடையே உள்ள வாய்க்கால் பகுதியும் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள், குங்குமம் போன்றவை வைத்துப் பூசை செய்யப்படுகிறது. பின்னர் 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் குடங்களில் தண்ணீர் கெண்டுவந்து, அதிலும் மஞ்சள் குங்குமம் கலந்து பூசைகள் செய்யப்படுகின்றன. கிழக்குப் பக்கமுள்ள கல்லின் மேல் குடங்களில் உள்ள தண்ணீர் ஊற்றப்படுகிறது. இத்தண்ணீர், இரண்டு கற்களுக்கு இடையே உள்ள வாய்க்காலில் நிறைந்து நிற்கிறது. இந்தக் கற்களுக்கு ஆடு பலியிட்டு, அந்த ஆட்டின் தலையை, வாய்க்காலுக்குள் வைத்து வாய்க்காலை மூடிவிடுகின்றனர்.

ஊரில் உள்ள எல்லாக் கால்நடைகளையும் அலங்கரித்து, சன்னியாசிக் கற்களுக்கு இடையே உள்ள வாய்க்காலின் வழியாகவும், இரண்டு சன்னியாசிக் கற்களுக்கும் இடையிலும் ஓடவிடுவார்கள். ஊரில் உள்ள எல்லாக் கால்நடைகளும் இந்தக் கற்களுக்கு இடையில் ஓட வேண்டும் என்பது இன்றுவரை பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்வதால், கால்நடைகளுக்கு வரும் நோய் தீரும் என்றும், கால்நடைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்றும் நம்புகின்றனர்.

ஆதனூர் சன்னியாசிக் கல் வழிபாடு

தருமபுரி மாவட்டம் ஆதனூரில் உள்ள சன்னியாசிக் கற்களுக்கு ஆடு ஒன்றைப் பலியிட்டு, அந்த ஆட்டின் தலையை இரண்டு கற்களுக்கு இடையில் உள்ள வாய்க்காலுக்குள் வைக்கின்றனர். பிறகு, குறிப்பிட்ட அளவு மஞ்சள் நீரால் கால்வாய் நிரம்பும்படி, இரு கற்களுக்கும் ஊற்றப்படுகிறது. அதன்பிறகு, ஊரில் உள்ள எல்லாக் கால்நடைகளையும் அலங்கரித்து, சன்னியாசிக் கற்களுக்கு இடையே உள்ள வாய்க்காலின் வழியாகவும் இரண்டு சன்னியாசிக் கற்களுக்கும் இடையிலும் ஓடவிடுவார்கள்.

பிற பகுதியில் நிலவும் நம்பிக்கையைப் போலவே, ஊரில் உள்ள எல்லாக் கால்நடைகளும் இந்தக் கற்களுக்கு இடையில் ஓட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

{pagination-pagination}

பாலக்கோடு, கல்கூடப்பட்டி சன்னியாசிக் கல் வழிபாடு

பாலக்கோட்டை அடுத்த கல்கூடப்பட்டியில் உள்ள சன்னியாசிக் கல் வழிபாட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காணமுடிகிறது.

அமைப்பு

இங்குள்ள சன்னியாசிக் கல் ஒரு இயற்கையாகக் கிடைத்த பலகைக் கல். இதில் எழுத்துகளும், கட்டங்களும், சூலங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகள் வட்டெழுத்துகளைப்போல் இருந்தாலும், படிக்க இயலாதவையாக உள்ளன. கல்லின் அடிப்பகுதியில் வில்லும் அம்பும் போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக, செவ்வகமாக ஒரு கட்டமும், கட்டத்தின் உள்ளே நான்கு பெருக்கல் குறிகள் வெட்டப்பட்டுள்ளன. கட்டத்துக்கு மேல் ஐந்து சூலக்குறிகள் வெட்டப்பட்டுள்ளன. அதற்கு மேல் ஒரு சதுரம் காட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் ஒரு வட்டமும், நான்கு மூலைப் பகுதிகளில் அரைவட்டங்குளும், நான்கு மூலைகளையும் இணைக்கும்படி ஒரு பெருக்கல் குறியும் வெட்டப்பட்டுள்ளது. சதுரத்தின் வெளிப்பக்கம் நான்கு மூலைகளிலும் மையத்திலும் சூலக்குறிகள் பெறிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேல் ஒரு முக்கோணம் பொறிக்கப்பட்டு, அதன் உட்புறம் ஒரு மனிதனின் மார்பளவு தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இது காட்சிக்கு, வீட்டின் உள்ளே உள்ள மனிதனை நினைவுபடுத்துகிறது. முக்கோணத்தின் அடிப்பகுதி தவிர, பிற இருபுறங்களிலும், மேல் முனையிலும் சூலக்குறிகள் பொறிக்கப்பட்டுள்ளன. முன்பு குறிப்பிட்ட எழுத்துகள் இந்த சதுரப் பகுதி மற்றும் முக்கோணப் பகுதியின் இருபுறங்களிலும் முக்கோணப் பகுதியின் மேல் ஐந்து வரிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சன்னியாசிக் கல் சுமார் மூன்றரை அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்டுள்ளது.

வழிபாடு

கல்கூடப்பட்டி சன்னியாசிக் கல் வழிபாடு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் மாரியம்மன் திருவிழாவின்போது மேற்கொள்ளப்படுகிறது. அன்று, சன்னியாசிக் கல்லுக்கு 101 குடநீர் ஊற்றப்படுகிறது. இவ்வாறு ஊற்றப்படும் தண்ணீர் சன்னியாசிக் கல்லுக்கு முன் தொப்பமாக நிற்கிறது. கல்லுக்கு மஞ்சள், குங்குமம் பூசப்படுகிறது. கல்லுக்குப் பூ அலங்காரம் செய்வதுபோல் பூ சூட்டப்படுகிறது.

பிறகு முப்பூசை என்று அழைக்கப்படும் பூசை மேற்கொள்ளப்படுகிறது. முப்பூசை என்பது சேவல், ஆடு, மற்றும் பன்றி ஆகிய மூன்று உயிர்கள் பலி கொடுக்கப்படுவதாகும். இவ்வாறு பலி கொடுக்கப்பட்ட மூன்று உயிர்களின் தலைகளை மட்டும் வெட்டி, சன்னியாசிக் கல்லுக்கு அருகில் வெட்டப்பட்ட ஒரு குழியில் புதைக்கப்படுகின்றன. அப்போது, கடந்த முறை புதைக்கப்பட்ட தலைகளின் மண்டை ஓடுகள் கவனமாக எடுத்து அப்புறப்படுத்தப்படுகின்றன. மண்டை ஓடுகள் கிடைக்கும் வரை தோண்டப்படுகிறது. இங்கு நிரந்தர அறை அமைப்போ, கால்வாய் அமைப்போ இல்லை என்பது முன்பே குறிக்கப்பட்டது. அதே சமயத்தில், இவ்வாறு குழி தோண்டுவது நிரந்தரமான ஒரே இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை, கடந்த முறை புதைத்த தலைகளின் மண்டை ஓடுகள் நீக்கப்படுவதை வைத்து அறியமுடிகிறது.

பின்னர், மீண்டும் சன்னியாசிக் கல் மீது 101 குட நீர் ஊற்றப்பட்டு, பிற அலங்காரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தண்ணீர், குழி தோண்டப்பட்டு முப்பூசை பலி தரப்பட்டு, மூடப்பட்ட பகுதியையும் சேர்த்து தேங்கி நிற்கிறது. பின்னர் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவது போன்றே ஊரில் உள்ள எல்லா கால்நடைகளையும் தேங்கி நிற்கும் தண்ணீர் மீது ஓட்டிச் செல்கின்றனர்.

{pagination-pagination}

மோதூர் சன்னியாசிக் கல் வழிபாடு

தருமபுரி - கிருஷ்ணகிரி பேருந்துச் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மோதூர், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் இவ்விடம் அகழாய்வு செய்யப்பட்டு, புதிய கற்காலம் முதல் தொடர்ந்து இங்கு மனிதர்கள் வாழ்ந்து வந்தது கண்டறிந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மோதுரில் ஊரின் உள்ளே அமைந்த மாரியம்மன் கோயிலின் புறத்தே சன்னியாசிக் கல் நடப்பட்டுள்ளது.

அமைப்பு

இங்கு நடப்பட்டுள்ள சன்னியாசிக் கல் இரண்டும், இயற்கையாகக் கிடைத்த குத்துக்கல் போன்று தோற்றம் தருபவையாக உள்ளன. இரண்டும் அருகருகே இடைவெளி இல்லாமல் நடப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று உயரமாகவும் மற்றொன்று உயரம் குறைந்ததாகவும் உள்ளது.

உயரம் குறைந்த சன்னியாசிக் கல்லில் எழுத்துகளும், கட்டங்களும், மனித வடிவமும், உச்சியில் சூலமும் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் வட்டெழுத்துகளைப்போல் இருந்தாலும், படித்துப் பொருள்கொள்ள இயலாதவையாக உள்ளன.

உயரமாக உள்ள கல்லின் பின்புறத்தில் கட்டங்களும், கட்டங்களின் முனைகளில் சூலங்களும், கட்டத்தின் உள்ளே கோலங்கள் போன்று தோற்றம் தரும் சித்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. பொதுவில், சன்னியாகிக் கற்களில் ஒரு கல்லில் மட்டும் மந்திர எழுத்துகளும், மனித வடிவங்கள் மற்றும் கட்டங்கள் இடம்பெற்றிருப்பதில் இருந்து, மோதூர் சன்னியாசிக் கல் இந்த வகையில் இரு கற்களிலும் பொறிப்புகளைப் பெற்று விளங்குகின்றன.

வழிபாடு

மோதூர் சன்னியாசிக் கல் வழிபாடு, ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் மாரியம்மன் திருவிழாவின்போது மேற்கொள்ளப்படுகிறது. அன்று சன்னியாசிக் கல்லுக்கு 101 குடநீர் ஊற்றப்படுகிறது. இவ்வாறு ஊற்றப்படும் தண்ணீர் சன்னியாசிக் கல்லுக்கு முன் தொப்பமாக நிற்கிறது. கல்லுக்கு மஞ்சள், குங்குமம் பூசப்படுகிறது. கல்லுக்கு பூ அலங்காரம் செய்வதுபோல் பூ சூட்டப்படுகிறது. பிறகு, பூசை என்று அழைக்கப்படும் பலியிடும் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

மேய்த்தல் சமூகம் பரவலாகவும், அதிக எண்ணிக்கைலும் வாழ்ந்த தகடூருக்கு அண்டைப் பகுதிகளான வட ஆர்க்காடு மற்றும் தென் ஆர்க்காடு பகுதிகளிலும் இவை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சன்னியாசிக் கல் வழிபாடு குறித்த செய்திகள் ஒப்பாய்வுக்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நாராணக்குப்பம்

வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள நாராயணகுப்பம் என்ற ஊரில் மாறுபட்ட முறையில் இந்த விழா நடைபெறுகிறது. பெரிய பலகைக் கல் ஒன்று சன்னியாசிக் கல்லாக நடப்பட்டுள்ளது. இதில் உள்ள சதுர கட்டங்களில் எழுத்துகள் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. சன்னியாசிக் கல்லின் கீழே நான்கு கற்பலகைகளால் ஆன பாதாள அறை ஒன்று நிரந்தரமாக உள்ளது. விழாவின்போது இந்த அறையின் ஒரு பகுதி மட்டும் திறந்து எடுக்கும் வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.

விழாவின்போது, சன்னியாசிக் கல்லுக்கு மஞ்சள், குங்குமம் பூசி பூசைகள் நடைபெறுகின்றன. இங்கும் 101, 501 என்ற எண்ணிக்கையில் குடங்களில் நீர் கொண்டு வந்து ஊற்றப்படுகிறது. பின்னர், சன்னியாசிக் கல்லின் கீழ்ப் பகுதியில் உள்ள பாதாள அறையைத் திறந்து அதில் ஆடு, சேவல், பன்றி ஆகிய மூன்றையும் உயிருடன் விடுவார்கள். பின்னர் பாதாள அறையை பலகைக் கல் கொண்டு மூடிவிடுவார்கள். கால்நடைகளைக் கொண்டுவந்து சன்னியாசிக் கல்லின் அருகில் நிறுத்திப் பூசைகள் செய்து தண்ணீரின் மேல் ஓடவிடுவார்கள். கால்நடைகளை இந்தத் தண்ணீர் மேல் ஓடவிடுவதால், கால்நடைகளுக்கு வரும் நோய் தீர்ந்துவிடும் என்று நம்புகின்றனர்.

{pagination-pagination}

காட்டு எடையானூர்

தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள காட்டு எடையானூர் என்ற ஊரிலுள்ள சன்னியாசிக் கல்லைப் பற்றிய கதை ஒன்று கூறப்படுகிது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு முனிவர் ‘சங்கிலி சன்னியாசி’ என்ற பெயரில் இங்கு வந்தார் என்றும், அவருடைய கழுத்தில் சிவப்புநிறச் சங்கிலி அணிந்திருந்ததால் இப்பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. இப்பகுதியில் காலரா, கால்நடைகளுக்கு நோய் வந்தால் சன்னியாசிக் கல்லை வழிபட்டால் நோய் தீரும் என்று சொல்லி, வழிபடு முறையைப் பற்றி விரிவாகக் எடுத்துச் சொன்னதாகவும், அதன் அடிப்படையில் இந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறுகின்றனர்.

கற்பலகையாக உள்ள இந்தக் கல்லின் மையப்பகுதியில் திரிசூலக் குறிகளும், சதுர அமைப்புடைய சிறய கட்டங்களும் வெட்டப்பட்டுள்ளன. கட்டங்களின் உட்பகுதியில் தமிழ் எழுத்துக்கள் சில காணப்படுகின்றன. இவை, படிக்க இயலாததாகவும், பொருள் இல்லாததாகவும் உள்ளன. நோய் வந்தபின், இக்கல்லைச் சுற்றிலும் மாடுகளைக் கட்டி, இதன் மேல் 108 குடம் தண்ணீர் ஊற்ற வேண்டும். கல்லின் மேலிருந்து வடிந்து சென்ற தண்ணீரின் மேல் மனிதர்களும், கல்நடைகளும் நடந்து சென்றால் நோய்கள் குணமடையும், இனவிருத்தி அதிக அளவில் ஏற்படும் என்று இப்பகுதி மக்கள் கூறி வழிபடுகின்றனர்.

பிற பகுதிகள்

சன்னியாசிக் கல் வழிபாடு தகடூர்ப் பகுதியிலும், வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. மற்ற பகுதிகளில் இத்தகைய வழிபாட்டுக் கற்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் சன்னியாசிக் கற்கள் உள்ளன என்பது தெரியவருகிறது. இப்பகுதிகளிலும் கால்நடைகளையே சொத்தாக மதித்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் கிடைக்கின்றன. எனவே, கால்நடைகளின் நோய் தீர்க்க இங்கும் சன்னியாசிக் கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை வளர்ப்புத் தொழில் இருந்த பகுதிகளில் சன்னியாசிக் கல் வழிபாடு இணைந்துள்ளது என்பது இதிலிருந்து தெரியவருகிறது

ரிக் சமூகம், மேய்த்தல் சமூகம் என்பதால், அதன் பலிச் சடங்குகள் அதன் நோக்கத்தில் நடுகல் மற்றும் சன்னியாசிக் கற்களின் பலிச் சடங்குகளோடு ஒன்று போலவையாக உள்ளன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com