அத்தியாயம் 60 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ஆளும் குடியினரான அரச மரபினர் தாம் பிராமணராக மாறாதபொழுது, தம் அதிகாரத்தால் குடிமக்களில் பல வகுப்பினரை பிராமணராக்கியது அக்காலத்தின் சமூகத்தின் அசைவியக்கத்தின் மற்றொரு முகத்தைக் காட்டவல்லதாக இருக்கிறது.

யூரல் ஆரியர்கள் ஐரோப்பிய ஆரியர்களாகி, இரானிய ஆரியர்களாகி, இந்தோ-இரானிய ஆரியர்களாகி, இந்திய ஆரியர்களாகின்றனர். இந்த ஐந்து நிலைகளையும் குறிக்க தனித்தனி பெயர்ச்சொற்கள் மேற்கொண்டவாறு இருந்தாலும். ஆரியர் ஒரு பொதுப்பெயராக நின்றுவிட்டது. இதனைப் பற்றிய விவாதமொன்று இவ்வாறு எடுத்துக்காட்டுகிறது - “ஆரிய எனும் சொல் பிரதானமாக கிழக்கு ஐரோப்பிய மொழிகளில் காணப்பட்டாலும், இந்தோ-ஐரோப்பியர்கள் ஆரியர் என்றழைக்கப்படுகின்றனர்”. இந்த இந்தோ-ஐரோப்பியரான ஆரியர்களுக்கும் இந்திய ஆரியருக்கும் பண்பாட்டளவில் உள்ள மாற்றம் என்பது வளர்நிலைப் போக்காக அமையாமல், புதிய வேர் கொண்ட போக்காக உள்ளது. இப்புதிய வேர் தன் மூலமான இந்தோ-ஐரோப்பியரின் பண்பாட்டு அடையாளங்களை வளர்த்தெடுக்காமல் மூழ்க வைத்துக்கொண்டு, இந்தியப் பூர்வகுடிகளின் பண்பாட்டின் சகல அங்கங்களோடும் வளர்ச்சியுறுகிறது.

ஆரியர் என்ற பொதுப் பெயர்ச் சுட்டில் கரைந்துள்ள தமிழ்ச் சமூகத்தை அடையாளம் காண்பதில் நாம் இன்னும் தெளிவு கண்டுவிடவில்லை. இந்தியச் சமூகங்களின் அடையாளம் காண்பதில் இந்தியச் சமூக அமைப்பு விடுத்துள்ள சவால்களில் இதுவும் ஒன்று. மொழி, இனம், சாதி, உட்குழுக்கள் என பல்வேறு முரண்களுடன் உருவாக்கப்பட்ட வலைபின்னல் அமைப்பில், பிம்பங்களின் ஊடாட்டம் அல்லது கருத்தியல்களின் அசைவியகம் முக்கியப் பங்களிக்கிறது. அது எதில் நெகிழ்ச்சியானது, எதில் கெட்டிப்பட்டது என்பதிலும் இப்பிம்பங்களின் ஊடாட்டம் அல்லது கருத்தியல்களின் அசைவியகம் தன் பங்களிப்பை வழங்கியே உள்ளது.

பிராமணச் சமூக உருவாக்கம்

இந்தியச் சமூகத்தை, குறிப்பாகத் தமிழர் என்ற திராவிடர் சமூகத்தைப் புரிந்துகொள்ளும் திறவுகோல், பிராமணச் சமூகத்தின் உருவாக்கம் என்ற பெரும் கருத்தியலை உள்வாங்கிக்கொள்வதில் உள்ளது. இவ்வழி, பிற இந்தியச் சமூகங்களை உள்வாங்கிக்கொள்ள உதவுவதாக அமையும். இதன் அடிப்படையில், இன்றைய வழக்கில் உள்ள ஆரியர் + சம்ஸ்கிருதம் = பிராமணர் = பிராமணியம் = இந்துவியம் என்ற இந்து மதம், பொருள்முதல் வாதத்துக்கு எதிரான கருத்துமுதல் வாதம் என்ற சிந்தனைத் தளம் போன்ற நேர்க்கோடு வாதம் பரிசீலனைக்கு உள்ளாக வேண்டியதாகிறது.

இந்தியச் சமூகத்தில் பிராமணியத்தின் உருவாக்கம் என்பது காலக்கட்டாயமா அல்லது சூழ்ச்சியா அல்லது சமூகங்களின் அசைவியக்கத்தில் உயர்குடியாதல் என்ற கருத்தியல் கட்டுமானத்தின் தன்னிச்சையான உற்பத்தியா என்ற கேள்விகள் எழுந்து தொங்கி நிற்கின்றன. அல்லது, இவ்வகையான கேள்விகள் இன்னும் உறுதியாக எழுப்பட வேண்டும். ஏனென்றால், பிராமணியம் எப்பொழுது மொழி வழி, இன வழி, குடி வழி, சாதி வழி, சமய வழிச் சமூகமானது என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்குத் துல்லியமான பதில் இல்லை. அது கருத்தியல் கட்டுமானமாகவே உள்ளது.

வேதியர், வேதியம், வேதாந்தி, வேதாந்தகம் போன்ற சொற்கள், பிறப்பின் வழி ஆரியர் குடிகள் கட்டமைக்கப்பட்ட பிறகு உருவான பெயர்கள். வேதங்களைப் பிழையற ஓதும் பயிற்சி பெறுவோர் வேதியர் ஆயினர். காலம்தோறும் வேதியர் தரும் புதிய புதிய விளக்கங்கள் வேதியம் ஆனது. உபநிடதங்களே வேதாந்தமாகும்; உபநிடதங்களை ஓதும் பயிற்சி பெறுவோர் வேதாந்தி ஆயினர். காலம்தோறும் அவர்கள் உபநிடதங்களுக்குத் தரும் புதிய புதிய விளக்கங்கள் பிற்கால பிராமணியத்தை மிக வலிமையாகக் கட்டமைக்க உதவின. ஒருகட்டத்தில், வேதாந்தமே பிராமணியம் எனவும் குறிக்கப்பட்டது.

இப்பின்னணியில், இன்று பண்பாட்டுத்தளத்தில் ஆரியர், ஆரியம், சம்ஸ்கிருதம், சம்ஸ்கிருதத்தினர், வேதியர், வேதியம், வேதாந்தகம் பிராமணர், பிராமணியம், வடவர் மற்றும் வடமொழியினர் போன்ற சொற்கள் ஒரே பொருளைத் தருவதாகப் பலதரப்பினராலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவை இவ்வாறு ஒருபோக்கான பொருளில் வரலாற்று நெடுங்கிலும் இல்லை. இதுபோலவே, சம்ஸ்கிருதம் என்ற சொல் இருவேறுபட்ட மொழிகளுக்கு, அதாவது ரிக் மொழி மற்றும் செம்மை சம்ஸ்கிருத மொழிக்கும் ஒரே அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், ஆரியமும், ரிக் வேத மொழியும் சம்ஸ்கிருதமும் ஒன்று என்ற கால இட வரையற்ற பிம்பத்தை உருவாக்குகின்றது. இதன் நீட்சியாக சம்ஸ்கிருதம், ஆரியர், பிராமணர், பிராமணியம் ஒன்று என்ற பிம்பத்தைக் கட்டுகிறது. இவ்வாறே, இந்தக் கருத்தியல் சார்ந்த கட்டுமானம் எல்லா தளங்களிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் எவ்வாறான பண்பாட்டு உருவாக்கம் நிகழ்ந்துள்ளது என்பதிலும் தெளிவற்ற நிலை நீடிப்பதற்கும் பிராமணிய கருத்தியல் கட்டுமானம் தன் ஊன்றுகோலை வலிமையாகவே தந்துள்ளது.

இந்தக் கருத்தியல் கட்டுமானத்தால் மொழி வழி அடையாளம், இன வழி அடையாளம் என்ற வலிமையான சமூகக் கட்டுமானத்தில் பிராமணியம் இணைக்கப்பட்டு, அது வாழ்வியல் நெறி என்ற சமயம்/மதம் என்ற நிறுவனப் புள்ளியை மறைத்து, மொழி இனம் சாதி வயப்பட்ட இந்தியச் சமூகத்தின் கட்டுமானத்தில் அங்கமாகிவிடுகிறது. உயர்குடி நிலை அடைதல் என்ற பெரும் சமூக அசைவியக்கம், ஒருபடிதான தகுதிகளுடன் இருந்த நிலம் சார்ந்த திணைச் சமூக வாழ்வியலைப் புரட்டிச் சாய்த்துவிடுகிறது.

இப்பரிசீலனையின் ஊடே, இந்தியாவில் ஆரியர்கள் சப்த சிந்துப்பகுதில் முதலில் குடியேறினார்கள் என்ற உண்மையில் இருந்து பார்க்கும்பொழுது, இம் முதல் குடியேற்றப் பகுதியின் சூழல் வெகுவாக இவர்களின் வாழ்வின் அங்கமாயிற்று. இந்த இடமே முதன் முதலில் ஒரு நிரந்தரமான வாழிட நிலத்தை அவர்களுக்கு வழங்கியது. மு.பொ.ஆ. 4000 அளவில், யூரல் மலைப் பகுதியில் இருந்து துவங்கிய அவர்களது நாடோடி மேய்த்தல் வாழ்க்கை, மு.பொ.ஆ. 1500 அல்லது அதற்குச் சற்று முன்வரை ஏறத்தாழ 2500 ஆண்டுகள் மெள்ள மெள்ள தொடர்ந்த அந்த ‘நடந்த பயணம்’ சப்தசிந்துவில் முடிவுக்கு வந்தது. பின்னர் அகண்ட இந்தியா அவர்களின் தாய்மண் ஆனது. இதற்கு மேலும் 1000 ஆண்டுகளுக்கு மேலானது.

இவர்கள் கடந்து வந்த பாதையில் மாந்தரினத்தின் பல முக்கியமான புதிய கற்கால, செம்புக் கால, வெண்கலக் கால நாகரிகங்கள் தோன்றி மறைந்திருந்தன. எலமைட், மெசபடோமியா, எகிப்து, அனடோலியா, சிந்து, அட்டி, ஹிட்டடைட் போன்ற பெரும் நகர நாகரிகங்கள் தோன்றி மறைந்திருந்தன. எண்ணிறந்த பெரிய மற்றும் சிறுசிறு அரசுகள் தோன்றி, தம்தம் தனிவகைப் பண்புகளை அவ்வப் பாண்பாட்டில் தாக்கத்தைத் தோற்றுவித்து மறைந்திருந்தன. இந்நாகரிகங்களை தோற்றுவித்தவர்களில் ஹிட்டடைட் தவிர வேறு யாரும் தம்மை ஆரியர் என்று அழைத்துக்கொள்ளவில்லை. தொல்பொருள், மொழி சான்றுகளும் ஆரியர்களுக்குத் தொடர்புடையாதாகவும், ஆரியப் பண்பாட்டுக்கு உரியதாகவும் காட்டவில்லை. ஹிட்டடைட் நாகரிகம் அனடோலியா-துருக்கிப் பகுதில் ஏற்பட்டபொழுது, இந்திய ஆரியர்களின் முன்னோர்கள் அவ்விடத்தில் இல்லை. அவர்கள் இரானிய ஆரியர்களாகி, அங்கிருந்தும் விரட்டப்பட்டிருந்தனர் அல்லது, மேய்தல் நிலங்களை நாடி நாடோடிகளாகப் புறப்பட்டு பல நூற்றாண்டுகளாகிவிட்டன.

சரியாகக் குறிப்பிட வேண்டுமென்றால், யூரல் மலையில் இருந்து துவங்கிய இவர்கள் பயணத்தின் கடந்து வந்த பாதைதோறும் செழிப்பான நாகரிகம் மறைந்து, அதன் மீது ஒப்பீட்டளவில் குறைந்த பண்பாடு கொண்ட மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து வந்தனர் எனத் தோன்றுகிறது. அல்லது இவர்கள் கடந்து சென்ற பிறகு செழிப்பான நாகரிகம் ஒன்று தோன்றுகிறது. இவர்கள் கடந்து வந்த பகுதிகளில் தோன்றி மறைந்த அல்லது நிகழ்ந்துகொண்டிருந்த புதிய கற்கால, செம்புக் கால நாகரிகத்தின் செழுமையான வாழ்வியலின் எந்த ஒரு பண்பாட்டுக் கூற்றையும் இவர்கள் தம்முடன் எடுத்துவந்ததற்கான சான்றை ரிக் வெளிப்படுத்தாததே இந்த உண்மையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக ஓரிட வாழ்க்கை, நகர நாகரிகம், எழுத்து உட்பட்ட வரிவடிவங்கள் ஆகிய எந்த ஒரு கூறையும் இவர்கள் ஏற்றுவரவில்லை. இவர்களின் கட்டுமான வடிவங்கள்கூட செங்கல் போன்ற கடினமான பொருள்கள் கொண்டு அமைக்க அறிந்திருக்கவில்லை. மேலும், இவர்கள் செங்கல் என்ற ஒரு சொல்லை அறிந்திருக்கவில்லை என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

வரலாற்று ஆசிரியர்கள், மொழியியல் வல்லுனர்கள் பலரும், இவர்கள் புகுந்த இடங்களில் இருந்த பூர்வகுடி மக்களால் துரத்தப்பட்டனர் என்ற கருத்துக்கு வருகின்றனர். உண்மையில், இவர்கள் கடந்து வந்த பாதைகளில் செழுமையான, குறிப்பான நலிவுற்ற சிந்துப் பண்பாடு நிலவிய பகுதிகளைப் போன்றே செழிப்பு மிகுந்த பகுதிகளை இவர்கள் கடந்துவந்திருப்பதால், வல்லுனர்களின் கூற்று உண்மை நிலையினைச் சுட்டுவதாகவே இருக்கிறது.

இவர்கள் கடந்து வந்த பிறகு அவ்வப் பகுதிகளில் அமைந்த அரசுகளின் பதிவுகளில், இவர்களோடு தொடர்புடைய சில செய்திகளை, சொற்களைத் தொல்பொருள் ஆவணங்களாகக் கிடைக்கின்றன. அவை, முற்கால ரிக் குறிப்பிடும் பல சொற்களின் சமூகப் பண்பாடு தொடர்பான ஒற்றுமையைக் காட்டுகின்றன. இவை, இம்மக்கள் மொழிவழி அமைந்த இந்தோ-ஐரோப்பிய சமூகத்தில் இருந்து, இந்தோ-ஈரானிய சமூகமாகி, பின்னர் அதிலிருந்து இந்தோ-ஆரிய மக்களாகக் கிளை பிரிந்து வந்த மாறா மேய்த்தல் வாழ்கையினைத் தொடர்ந்த மக்களின் வாழ்வின் தொடர் நிகழ்வுகளுக்குச் சான்றுகளாகி அதனை மெய்ப்பிக்கின்றன. இதனை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

இந்திய ஆரியரும் பிராம்மணரும் - கருத்தியல் கட்டுமானம்

முதலில் மொழி வழிச் சமூகம் (இந்தோ-ஆரியம் மற்றும் தமிழ் என்ற திராவிடம்), அடுத்த கட்டத்தில் மொழியால் ஆன இனவழிச் சமூகம் (இந்தோ-ஆரியர் மற்றும் தமிழர் என்ற திராவிடர்), மொழியும், இனமும் கலந்து உருவான புதிய சமூகம் (ரிக் சமூகம் = இப்புதிய சமூகம் தமக்கு ஆரியர் என்றே பெயர் சூட்டிக்கொண்டது), அச்சமூகம் உருவாக்கிய புதிய மொழி (ரிக் வேத மொழி = இம்மொழி சம்ஸ்கிருதம் என்ற பிற்காலப் பெயரையே வரித்துக்கொண்டது; இது கலப்பினச் சமூகமான ரிக் சமூகம் முற்காலப் பெயரான ஆரியரை வரித்துக்கொண்ட செயலோடு இணைவதே) ரிக் சமூகத்தின் பிற்காலச் சந்ததியினர் உருவாக்கிய பிராமணிய மதம், அம்மதம் உருவாக்கிய பிராமணியச் சமூகம் (பிராமணியச் சமூகம் தம்மை மீண்டும் ஆரியச் சமூகமாகவும், வேத மொழியான சம்ஸ்கிருத மொழிவழிச் சமூகமாகவும் இரண்டுக்கும் பேதமற்றது போன்ற ஒரு அரிதார முகத்தைக் காட்டுகிறது). இந்தக் கருத்தியலின் அசைவியக்கம் மறைத்துக்கொண்ட மானுடவியலின் பக்கங்களை மீட்டெடுத்த சித்திரம் இவ்வாறு உள்ளது. (இது முன்னர் சில அத்தியாயங்களில் கண்டடைந்ததை நினைவில் கொள்ளுமாறும் அமையும்).

ஆரியர் என்போர், இந்தியாவில் வாழப் புகுந்த இந்தோ-இரானியர்களான ஐரோப்பிய இனத்தினரை மட்டும் குறித்தது. இவர்கள் சிலர் ரிக்கின் பாடுபொருட்களைத் தொன்மமாகச் சுமந்து வந்தவர்களே அன்றி ரிக்கை இயற்றியவர்கள் அல்லர். ரிக் சமூகத்தினரும் ஆரியரும் உள்ளூர் குடிகளாலும் ஆன கலப்புச் சமூகத்தினர். ரிக் முக்கிய இருடிகளின் வாழ்க்கை குறித்த சில செய்திகளைக் கொண்டு இதனை முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். இவர்கள் பிராமண சமூகத்தின் மூதாதையர் ஆவர். இப்பிராமண மூதாதையர்களின் சந்ததியினர் பிராமணியர்கள் ஆகின்றனர். சந்ததிகளே பிராமணியத்தைப் படைக்கின்றனர்.

இம்மூன்று காலகட்டங்களின்பொழுது இவர்களிடையே ஏற்பட்ட சமூகப் பொருளாதாரத் தளங்கள் மிக முக்கியமானவை. இந்தோ-இரானிய ஆரியர்கள் நாடோடிகளான மேய்தல் சமூகத்தினர், சற்று காட்டுமிராண்டி குணம் கொண்டவர்கள். போர்க்குணம் மிகுந்தவர்கள். கால்நடைகளே இவர்களின் முக்கியப் பொருளாதார வளம்; சொத்து. குழு வாழ்க்கை முறையினர். எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் அகன்ற இந்தியப் பகுதிக்குள் நுழையும்பொழுது, எண்ணிக்கையில் குறைவான பெண்களையே கொண்டிருந்தனர். மேய்த்தல் சமூகத்தின் பண்பாட்டுக்கூறான ஆண் தலைமையினையும் ஆண்வழிச் சமூகம் என்ற தந்தைவழிச் சமூகத்தையும் பெற்றிருந்தவர்கள்.

ரிக் இருடிகள், இந்தோ-இரானிய ஆரியர்களும் சப்த சிந்துப் பகுதி உள்ளூர் பூர்வகுடிகளும் கலந்து உருவான கலப்புச் சமூகத்தினர். உள்ளூர் பூர்வகுடிகள், தாய்வழிச் சமூகத்தினர். சிந்துவெளியின் நலிவில் எஞ்சியிருந்த வேளாண் சமூகத்தினரின் சந்ததியினர்; ரிக் காலத்தில் இவர்கள் மேய்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தற்போதைய சான்றுகள் கொண்டு, இவர்கள் இருவகைப்பட்டவர்களாகப் பிரித்துக் காண இடமுள்ளது. முதல் வகையினர் இந்தோ-இரானியரின் மேய்த்தல் தொழிலையும், அவர்களின் தந்தைவழிச் சமூகத்தையும், கருத்துமுதல்வாதச் சிந்தனையும் கூடிய பண்பாட்டையும் ஏற்ற உள்ளூர் மக்களாகிய தமிழர் என்ற திராவிடர். இரண்டாம் வகையினர், இந்தோ இரானிய ஆரிய ஆண்- உள்ளூர் பூர்வகுடிப் பெண் கலப்பில் உருவானவர்கள். இந்த இரண்டாம் நிலையின்பொழுது, இறுதிக் காலங்களில் இவர்கள் குழு முறை வாழ்க்கையிலிருந்து குடும்ப முறை வாழ்க்கைக்கு நகர்ந்துகொண்டிருந்தனர். இக்காலத்தில் கலப்பற்ற சமூகம் என்பது இவர்களிடம் காணமுடியாததாகிறது.

காலத்தால் மூத்த 2 முதல் 7 ரிக் இருடிகளின் பாடுபொருள் ஒன்றுபோல் இருந்தாலும், ஆறு மற்றும் ஏழாம் மண்டலம் பாடிய பரத்வாஜர் மற்றும் வசிட்டர் ஆகிய இருவரின் பாடுபொருளுக்கும், பிற இருடிக் குடும்பத்தினரான கிருதசமத், விசுவாமித்திரர், வாமதேவர், ஆத்திரேயன் ஆகியோரின் துதியின் தொனி வெவ்வேறு வகைப்பட்டதாக உள்ளது. கன்வர்-அங்கீரசரின் தொனி இவ்விரண்டிலிருந்தும் மாறுபடுகிறது. பலரால் பாடப்பட்ட ஒன்று மட்டும் ஒன்பதாம் மண்டலங்களின் தொனி இன்னும் மாறுபடுவதாக உள்ளது. பத்தாம் மண்டலம் தொனி மட்டுமல்லாது, பாடுபொருளிலும் மிகையான மாறுதல்களைக் கொண்டு வெளிப்பட்டுள்ளது. குழு முறை வாழ்க்கை நீங்கி, குடும்ப முறை வாழ்க்கையில் உருவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே இந்த வேறுபாடுகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது என்பதை உணரமுடிகிறது. இந்த வேறுபாடு வாழ்வியலிலும், சடங்குகளிலும், வழிபாட்டு முறைகளிலும், சிந்தனைகளிலும், வாழ்வியல் நோக்கங்களிலும் எதிரொலிக்கின்றன.*1 இந்த வேறுபாடானது, இடமும், பொழுதும், பொருளாதாரமும் சார்ந்ததாக உள்ளது.

ரிக் இருடிகளுக்குப் பிறகு இவர்களின் சந்ததிகளும் வழியினரும் பிராமணங்கள், ஆரண்யங்கள், வேதாந்தங்கள் ஆகியவற்றைப் படைத்து, பிராமணியம் என்ற மதத்தை அல்லது மார்க்கத்தை அல்லது சமயத்தைக் கட்டமைக்கின்றனர். இவற்றின் முக்கிய ஆக்கங்கள் படைத்துவிட்டபொழுது, இவர்கள் முற்றிலுமாக மேய்த்தல் சமூகத்தின் வாழ்வியலை இழந்து, வேளாண் சமூகத்தின் வாழ்வியலுக்குப் புகுந்திருந்தனர். இன்னும் குறிப்பாக, உழுவித்துண்ணும் வேளாண் குடியினராக மாறியிருந்தனர். ரிக் இருடிகள் தாங்களே சமயத் தலைவர்களாகவும், படைத் தலைவர்களாகவும், கவிகளாகவும், பொருள் தேடுபவர்களாகவும் இருக்க, இவர்களோ, உழுவிப்பவர்களாகவும், குருமார்களாக குறிப்பாக பூசை மற்றும் சடங்களை நிகழ்த்துவோராக மட்டும் இருந்தனர். இந்நிலையில், இவர்களை சமயத் தலைவர்களாகக் கருதமுடியவில்லை. இவர்கள் ஒரு சமயத் தலைமையின் கீழ் இருந்து, ஒற்றைக் கொள்கையுடன் செயல்பட்டனர் என கூறமுடியாது உள்ளது என்பதையும்; இடமும், பொழுதும், பொருளாதாரமும் சார்ந்து இவர்கள் வேறுபட்டிருந்தனர் என்பதையும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். பிராமணியம் ஒற்றைச் சிந்தனையில் எவ்வாறு பிறக்கவில்லையோ அதுபோலவே ஒருபொழுதும் ஒற்றைத் தலைமையில் கீழ் இருந்ததில்லை. இதுபொழுது படைக்கலன்களை இவர்களை கைவிட்டு, அதனை முழுவதும் பிரம்மணரல்லாத சத்ரியர் வசம் ஒப்படைத்திருந்தனர். போலவே, உடலுழைப்பை சூத்திரர்களின் பிறப்புரிமை ஆக்கியிருந்தனர். வைசியர்கள் உற்பத்திப் பொருட்களை தேவைப்படும் இடத்துக்குக் கொண்டுசென்று விற்பவர்களாக மாறியிருந்தனர். சூத்திரர்களாகட்டும் வைசியர்களாகட்டும் அவர்கள் பிராமணரல்லாதோராகவே இருந்தனர் என்பது கருத்தியலே ஆனாலும், பிராமணச் சமூகத்தின் சமூக மாற்றத்தையும், அதன் வலிமையான கட்டமைப்பையும் காட்டவல்லதாக இருக்கிறது.

இக்காலத்தில் இனக் குழுக்களும், குழு வாழ்க்கையும் அழிக்கப்பட்டதால், குடும்ப முறை வாழ்க்கை பெருகியது. அரசு உருவாக்கத்துடன், தனிச் சொத்துரிமை கெட்டிப்பட்டது. அரசு சத்தியர்களுக்கு உரிமையாகப்பட்டாலும், அரசை இயக்குபவர்களாக, ஆட்டுவிப்பவர்களாக குருமார்களே இருந்தனர். உடல் உழைப்புக்கு உரியோர்களான சூத்திரர்களும், தொழில்புரியும் சமூகத்தினரும் நிலவுடைமை அற்ற சமூகங்களாக்கப்பட்டனர். வணிகத்தினரான வைசியர்களின் நிலையும் ஏறத்தாழ இதுவே. இதே காலகட்டத்தில், உழுதுண்ணும் வேளாண்குடிகள் உருவாகியிருந்தனர். அதே சமயத்தில், நால்வகை வர்ணத்துள் எந்த வகையிலும் தொடர்பற்றவர்களாக விளங்கிய இவர்களும் சூத்திரர்களாகவே கருதப்பட்டனர். அரசின் வரி வருவாய் இந்த உழுதுண்ணும் வேளாண்குடிகள், வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரால் மட்டும் நிறைவு செய்யப்பட்டது. உழுவித்து உண்போரான குருமார்கள், வரிகளில் இருந்து விலக்கு பெற்றவர்களாகவே விளங்கினர். அரசுகள் மாறும்பொழுது, உழுதுண்ணும் குடிகளின் நிலவுரிமை பாதிப்புற்றது. புதிய அரசுகளின் குடிகளின் கைக்கு அது மாறியது. சமூகப் பாதுகாப்பு என்பது இவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஆனால் கோயில் நிலமும், குருமார் மானிய நிலங்களும் மாற்றமுடியாத தனி உயரிடத்தில் இருந்தது. எல்லாக் கட்டத்திலும் சமூகப் பாதுகாப்பு இவர்களின் தனியுரிமையானது. இந்த மாற்றமுடியாத உயரிடமும், சமூகப் பாதுகாப்புதான் பிராமணச் சமூதாயத்தை பிறப்பின் வழிபட்டதாக்க வழிசமைத்தது. இவ்வாறு பிறப்பின் வழிப்பட்டதானது பொ. ஆ. 6-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் என்பதை தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன.

ஆந்திரர்கள் என்ற நூற்றுவர்கண்ணர்களான சாதவாகனர் என்ற ஆளும் குடியினர் பிராமணர் ஆக்கப்பட்டதும்; போலவே குப்தர்களும் பின்னர் கதம்பர்களும் பிராமணர் ஆக்கப்பட்டதும் என இதன் வேர்களைத் தொல்லியல் சான்றுகள் கொண்டு நிறுவலாம். அதே சமயத்தில், சோழர் காலம் வரை பிராமணியத்தை தழுவல் அல்லது பிராமணியர் ஆதல் என்பது தென்னகத்தில் எளிதாகவே அல்லது அரசியல் காரணங்களால் அல்லது அரச சடங்குகள் காரணமாக நிகழ்ந்தே வந்தது. இடைக்காலத்தில், மன்னர்கள் பிராமணரல்லாதாரை, பிராமணராக்கிய நிகழ்வை எட்கர் தஸ்டன் காட்டுகிறார். அரசர்கள் பாவ நிவர்த்திக்காகவும், இறையருள் பெற வேண்டியும் நடத்திய வேள்விச் சடங்கில் ஒரு லட்சம் பிராமணர்களுக்கு விருந்தளிக்க வேண்டியவராக இருந்தனர். இந்த அளவு எண்ணிக்கை கொண்ட பிராமணர்கள் இல்லாததால், பிற வகுப்புகளில் இருந்து பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் அரசர் ஆணைப்படி பிராமணர் ஆக்கப்பட்டனர்.

இதுபோன்ற வாய்வழி வரலாறாக உள்ள மற்றொரு நிகழ்வு, 10-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியின்பொழுது வைணவத் தலைவர் இராமானுஜர், ஏராளமான பிராமணரல்லாதாரை வைணவச் சமயத்தில் ஈர்ப்பதற்காக சமயச் சடங்கு செய்து அவர்களுக்குப் பூணூல் அணிவித்து வைணவப் பிராமணராக்கினார் என்பது சான்றாகிறது.*2 இங்கு முற்காலத்தில் நிகழ்ந்ததுபோல், ஆளும் குடியினர் குறிப்பாக தமிழக ஆளும் குடியினர் பிராமணர் ஆக்கப்படுதல் நிகழவில்லை. ஆளும் குடியினரான அரச மரபினர் தாம் பிராமணராக மாறாதபொழுது, தம் அதிகாரத்தால் குடிமக்களில் பல வகுப்பினரை பிராமணராக்கியது அக்காலத்தின் சமூகத்தின் அசைவியக்கத்தின் மற்றொரு முகத்தைக் காட்டவல்லதாக இருக்கிறது.

உயர் குடி என்ற கருத்தியல்

சமூகங்களுக்கு இடையிலான நெருக்கடிகளும் வாய்ப்புகளும் உயர்குடி ஆக்கம் என்ற கருத்தாக்கத்தை இன்னும் வலிமை கொண்டதாக்குகிறது. உயர் குடியாதல் என்பது பிராணமராதல் என்ற கருதோட்டத்தோடு நேரடியாக அமைவதில்லை. பல அடுக்கு கொண்ட கீழ்-மேல் சமூக நிலையில், கீழ் அடுக்கில் உள்ள சமூகம் தனக்கு உடனடி மேலுள்ள சமூக அடுக்கை அடைவது என்பதே முதல் படிவளர்ச்சியாகக் கொள்வது இக்கருத்தியல் ஊக்குவிக்கின்ற ஒன்றாக உள்ளது.

உயர்குடி ஆக்கம் கருதியல் வலிமைப்பட்ட அதேசமயத்தில், உயர்குடி ஆக்கலின் உச்சநிலை என்ற கருத்தியல் நிலையை, அதாவது பிராமணராதல் அடையமுடியாத ஒன்றானபொழுது, உழுவித்து உண்ணும் குடிகளின் செல்வப் பெருக்கமும், உயர் மதிப்பும், சமூகப் பாதுகாப்புமே தென்னிந்தியாவில் சோழப் பேரரரின் காலத்தின்பொழுது, வணிக்கக் குழுக்களின் கூட்டமைப்பில் சித்திரமேழிகள் என்ற உழுவித்து உண்ணும் குழுவினர் வீருகொண்டெழத் தூண்டியது. இவர்கள் தமக்கான கோயில்களை உருவாக்கியும், தமக்கான தனித்துவமான நிறுவனங்களை அமைத்துகொண்டும் தமது சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்திருந்தனர். அரசுகளைக் கட்டுப்படுத்தும் நிலையையும் அல்லது அரசுகளைத் தமக்குச் சாதகமாக வளைத்துக்கொள்ளும் நிலையும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் சமண, சைவ, வைணவ சமய நெறிகளைப் பின்பற்றினாலும், பிராமணச் சமுதாயத்தின் சமூகப் பாதுகாப்பையும், உயரிடத்தையும் தாங்களே சமைத்துக்கொண்டனர். பிற்காலத்தில், குறிப்பாக சோழர்கள் காலத்தில் இருந்து, வேளாளியம் குறிப்பாக சைவ வேளாளியம் என்ற சமூகத்தின் மீது அதிகாரமும், உயரிடத்தையும் கொண்ட குழுவினர் தோற்றம் பெற இந்த சித்திரமேழி குழுவினரே காரணம். வேளாளியத்தின் அதிகாரத்தையும், உயரிடத்தையும் தென்னிந்தியாவைவிட இலங்கையில்தான் காணமுடியும். அங்கு பிராமணிய அதிகாரத்தையும், உயர்விடத்தையும் நிகர்த்தது சைவ வேளாளியம். அங்கு பிராமணியம் இல்லை.

சுதந்திர இந்தியா வழங்கியுள்ள மற்றொரு சமூக அசைவியக்கத்தை நாம் அடையாளப்படுத்திக்கொள்வோம். அது ஒருபடித்தான சமூக நீதி, சட்டம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் இருந்து தோன்றிய ஒன்றின் விளைவாக உள்ளது. அது உயர்குடி ஆதலில் உச்ச நிலையைப் பெற முடியாது என்ற தடையால், சமூக அசைவியக்கத்தில் உருவான தேக்கத்தின் காரணமாக எதிர் சம்ஸ்கிருதமயமாதல் என்ற பூர்வ / தொல்குடிக்குத் திரும்புதல் அல்லது கீழ் படிநிலைச் சமூகத்தை அடைதல் நிகழ்வாகும். இடமும், பொழுதும், கட்டாயமும் சார்ந்து பிராமணர்களும் கீழ் படிநிலைச் சமூகத்தை அடைதலை என்ற எதிர் சம்ஸ்கிருதமயமாதலை மேற்கொள்வது ஆச்சர்யமான பின்விளைவு.

இந்த விளைவு பற்றிய விவரம் நமக்கு நாம் தேடும் தமிழ் சமூகத்தைக் கண்டடைய உதவுவதில்லை என்றாலும், நடப்பில் உள்ள சமூகங்களின் அசைவியக்கத்தை மானுடவியல் சார்ந்து துலக்கமாக்கிக்கொள்ள உதவும். ஒரு பின்னோக்கிய கண்ணோட்டத்துக்கும் உதவும்.

(தொடரும்) 

இந்தியச் சமூகங்களின் பிம்பங்களில் ஊடாட்டம் என்ற கருத்தியலின் அசைவியக்கம்

*

மேற்கோள் விளக்கம்

1. ரிக் இருடிகளின் பாடல்களுக்குள் உள்ள பாடுபொருள் வேறுபாடு, தொனி வேறுபாடு, வாழ்வியல் முறை வேறுபாடு, சிந்தனை வேறுபாடு போன்றவை, முதல் தலைமுறையினர், இரண்டாம் மூன்றாம், நான்காம் தலைமுறையினர் என்று வேறுபடுத்தி வாசிக்கும்பொழுது இவ்வகையான வேறுபாட்டை எளிதில் அடையாளம் கண்டுணர முடிகிறது. இது காலத்தோடும், இடத்தோடும், பொருளாதாரத்தோடும் தொடர்புடையதாக இருப்பதையும் அறியமுடிகிறது. இவ்வாறாக குடும்ப வழி, தலைமுறை வழி என பகுத்து வாசித்த முறை போன்று, பிறர் வாசித்துப் பெற்ற செய்திகளை நான் அறிய முடியவில்லை. இவ்வாறான விவாதங்களையும் என் குறைவான வாசிப்பனுபவ எல்லைக்குள் காணமுடியவில்லை. மேலும், என் வாசிப்பு தமிழ் மொழிபெயர்ப்பின் வழியிலும், ஆங்கில மொழிபெயர்ப்பின் துணையிலும் அமைந்தது. இவற்றின் வழியே நான் அடைந்த தொனியின் வேறுபாட்டை, ரிக் வேத மொழி இன்னும் துலக்கமாக வெளிப்படுத்தும் என்பது உறுதி. இச்செய்திகளுக்கு நான் சான்றாதாரங்களை முன்வைக்கவில்லை. அவற்றின் சாரத்தையே முன்வைத்துள்ளேன். இவற்றை ஒரு கருதுகோள் அளவில் நான் முன்வைப்பதாகக் கொண்டேனும், இவ்வகைப் பகுப்புமுறைப்பட்ட ஆய்வு தொடர வேண்டும் என்பது அவா.

2. எட்கர் தஸ்டன், தொகுதி 1, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை, 1986, பக். 476-81.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com