அத்தியாயம் 56 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தாத்தாவின் சிந்தனைக்கும் பேரனின் சிந்தனைக்கும் இடையில் உருவாயிருக்கும் மிகப்பெரிய வேறுபாடு எதனால் விளைந்தது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

முன் வேத காலம் - ரிக் படைப்புக் காலம்

ரிக் காலமே முன் வேத காலம் எனக் கொள்ளப்படுகிறது. ரிக்கினைப் படைத்த சமூகத்தை ஆரியர் சமூகம் என்று பொதுவான சொல்லில் அடையாளப்படுத்திக்கொண்டு எழுதப்பட்டு வந்தாலும், அச்சமூகம் முற்றாக இந்தோ-ஐரோப்பாவில் இருந்து கிளை பிரிந்த இந்தோ-ஈரானிய இனமாக மட்டும் இருக்கவில்லை. ரிக்கின் மேலோட்டமான புரிதலே இந்த உண்மையை வெளிப்படுத்திவிடுகின்றது. சிந்துவெளி நாகரிகம் மற்றும் சப்த சிந்துப் பகுதி நடைபெற்று வந்த இடங்களுக்கு வந்ததும், தங்களது இன அடையாளத்தைப் பெருமளவில் இந்தோ-இரானிய இனக் குழுவினர் இழந்திருந்தனர். மேலும் உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர் என்பதை, “ஆரம்ப கால ஆரிய சமூகம், இந்தியச் சமூகத்துக்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. அதில், ஆரியர் மற்றும் ஆரியரல்லாதோர் கூறுகளைப் பிரித்துப் பார்ப்பது கடினமானதாகும்” என்ற ஏ. கோஷ்ஷின் கூற்று மிகச் சரியாகத் தெரிவிக்கிறது.*1

முன்னிரு அத்தியாயங்களில், இந்தக் கலப்பு வெளிப்பட்டுள்ள அடிப்படைகளையும் அதன் விளைவுகளையும் கண்டோம். இக்காலத்தின் இவர்களின் மொழி, இம்மக்களின் இன அடையாளத்தை அழித்து, அவர்களுக்கு இந்திய ஆரியர்கள் என்ற புதுப் பெயரை வழங்கியுள்ளதையும் கண்டோம். மேய்த்தல் நிலத்தின் கூறாக இருந்த ஆண் தலைமைப் பண்புடனே, ஆண் தலைமையுடனே, வேளாண் சமூகமாக மாற விரும்பிய அச்சமூகம் அவ்வாறாக மாற, அதனுடன், பெண் வழிச் சமூகமாக தழைத்திருந்த பூர்வகுடிகள், குறிப்பாக அன்றைய அகன்ற இந்தியாவின் வடமேற்கு திராவிடர்கள், இந்திய ஆரியச் சமூகத்தில் கலப்புற்றதையும் கண்டோம்.

சப்த சிந்துப் பகுதி

சப்த சிந்துப் பகுதியின் முதற்கட்ட இந்திய ஆரியர்களின் படைப்பான ரிக் வேதத்தின் ஆக்கமுறையைக் கண்டால், அது 10 மண்டலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ரிக் பாடல்களைச் சூக்தங்கள் என்று குறிப்பிடுவர். ரிக்கின் 10 மண்டலங்களில் 6-வது மண்டலம் காலத்தில் பழைமை வாய்ந்தது என்றும், 10-வது மண்டலம் பிற்கால இணைப்பு என்றும், பிற எட்டு மண்டலங்களும் இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இயற்றப்பட்டு பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை என்பர். இடைப்பட்ட காலப் படைப்புகளைக் கால வரிசையில் தொகுப்பதில் சிரமம் உள்ளது.

ஒவ்வொரு மண்டலமும் ஒரு இருடி குடும்பத்தினரால் அல்லது இருடி குலத்தவரால் இயற்றப்பட்டிருப்பதால், மண்டல வரிசையோ, சூக்தம் வரிசையையோ அமைக்க முடிந்தாலும், காலமுறைப் பாடல் வரிசையை அமைக்கமுடியாதுள்ள நிலை நீடிக்கும் என எளிதில் முடிவுக்கு வரமுடிகிறது. ஒரே காலகட்டத்தில் ஒவ்வொரு குலங்களிலும் இருடிகளின் மூத்த தலைமுறை இருக்கின்றனர், வேறொரு குலத்தின் இளைய தலைமுறையினர் இருக்கின்றனர். அடுத்த கட்டத்தில் அவர்களின் சந்ததியினர், அல்லது குலச் சந்ததியினர் உள்ளனர் என்பதை நினைவில் கொண்டு இம்முடிவை ஆமோதிக்கவேண்டி உள்ளது. ரிக் தொகுப்பை ஆய்ந்த மெக்டொனால்ட், இரண்டு முதல் ஏழு வரையுள்ள மண்டலங்களே ரிக் வேதத்தின் மைக்கரு (Nucleus) உள்ள பகுதியாக விளங்குகிறது*2 என்பது முக்கியமான அவதானிப்பாகும்.

இப்பத்து மண்டலங்களில் உள்ள பாடல்கள் மட்டுமல்லாது, வேறு சில பாடல்களும் ரிக் வேதத்துடன் இணைந்துள்ளன. இவற்றை ரிக் வேத கையெழுத்துப் பிரதிகளில் காணலாம் எனக் குறிப்பிடுவார், கா. கைலாசநாத குருக்கள்.*3 இடைச் சொருகலாக இடம்பெற்ற இப்பாடல்கள், “கிலங்கள்” என தனித்துக் குறிக்கப்படும். பிற்காலத்தில் இவற்றையும் ரிக் காலகட்டச் சூக்தங்களாக உருவகித்து ஏற்கும் போக்கு வளர்ந்துவிட்டதாலும், இவை எழுதப்பட்ட காலம் தெளிவற்றதாகிறது. “கிலம்” என்றால் எஞ்சியது, மிகுதியாக உள்ளது என்பதே பொருள். அவை அநுபந்தங்களாகவே ரிக்கில் இணைக்கப்பட்டுள்ளன என வடமொழி இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் பலரும் குறித்துள்ளனர். எனவே, ரிக் வேத சங்கிதைகள் தொகுக்கப்பட்டு முழுமை அடைந்த பிறகுதான், கிலங்களான அதாவது, மிகைப்பாடல்களான இப்பகுதி ஆங்காங்கே இணைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

கிலங்களில் சில பழைய பாடல்களும் இருக்கின்றன என்றும், எடுத்துக்காட்டாக, எட்டாவது மண்டலத்தின் இறுதியில் புறம்பாகக் கூறப்பட்டிருக்கும் “வாலகில்ய சூக்தங்கள்” கிலங்களே என்பர். “சுபர்ணா சூக்தங்கள்”, “பிரைஷ சூக்தங்கள்”, உரைநடையில் இருக்கும் “நிவாதங்கள்” போன்றவை ஓரளவுக்குப் பழமையான பாடலாக்கங்களே என சுட்டிக்காட்டப்படுவது உண்டு.*4 கிலங்கள், வேதத்துக்குப் பிறகாக பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் முதலான ஆக்கங்களின்பொழுது முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றுடன், 10-வது மண்டலத்தின் பாடல்களும் இணைந்து, பிற்காலத்திய புதிய போக்குகளுக்குப் பழமையின் சாயல் ஏற்றும் பணியைச் செம்மையாகச் செய்கின்றன. கிலங்கள் முதலில் இணைக்கப்பட்டனவா, 10-வது மண்டலம் பின்னால் இணைக்கப்பட்டதா என்பதில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவில்லை. இவையும் காலமுறை அறிதலுக்குத் தடையாக உள்ளன.

உண்மையில், இச் சேர்க்கைகள் பிராமணிய மதத்தின் வளர்ச்சிக்கும், போக்குகளுக்கும் உதவிய தன்மையை அறியவும், அதற்குத் தொன்மையில் மிகைப்பிடிப்பும், மரியாதையும், விருப்பமும் கொண்ட இந்தியச் சமூகத்தின் மனப்போக்குக்கிணைய, அதற்கு மிகப்பழமையின் அங்கீகாரத்தைச் சேர்க்கும் செயல்திட்டத்தின் பங்களிப்பா என ஆய்வுகள் விரிய வேண்டிய அவசியம் உள்ளது.

ஆறாம் மண்டலமும் பத்தாம் மண்டலமும்

ரிக்கின் ஆறாம் மண்டலத்துக்கும் பத்தாம் மண்டலத்துக்கும் உள்ள வேறுபாடுகளை மொழி, பாடுபொருள், இலக்கணம் என வகை பிரித்துப் பார்க்கவேண்டி உள்ளது.*5

ஆறாவது மண்டல ரிக் பாடல்கள் மிகவும் பழைமை வாய்ந்தவை என்பதும்; இம்மண்டலம் முழுவதும் பரத்வாஜர் குடும்பத்தினர் படைத்தவை என்பதும் முன்னரே குறிக்கப்பட்டது. இதனால், ஆறாவது மண்டலத்துள் பரத்வாஜர் பாடியவையாக உள்ளவை முதல் தலைமுறைப் பாடல்களாகவும், அவர் நீக்கிய பிற படைப்புகள் அடுத்தடுத்த தலைமுறையினர் இயற்றிய பாடல்களால் ஆனவை என்பதே தெளிவான காலவரிசையை அமைத்துத் தருகிறது. இவரது பிற்காலத்தில் வசிட்டர், அகத்தியர், அங்கீரிசர், கன்வர் முதலானவர்கள் இருக்கின்றனர். ஆகையில், இவர்கள் பாடிய பாடல்களும் இவரது சமகாலத்திலும், இவரது முதல் தலைமுறையினர் காலத்தைச் சார்ந்தவைகளாக அமைத்துப் பார்க்க இடமுள்ளது.

பத்தாவது மண்டல ரிக் பாடல்கள் குறித்தான ஆய்வுகளில், “10-வது மண்டலம் பிற பகுதிகளிலிருந்து மொழி நிலையிலும், பொருள் நிலையிலும் மிகவும் மாறுபட்டுள்ளது. காலத்தால் பிந்தியது, பிற பகுதிகள் உருவாக்கப்பட்ட பின்னரே இம்மண்டலம் உருப்பெற்றது என்றும், அதனால்தான் இதனை உருவாக்கிய ஆசிரியர்களில் 20 முதல் 26 வரையுள்ள பாடல்களின் ஆசிரியர், ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தின் முதல் பாடலில் காணப்படும் சொல்லையே தம் பாடல்களின் முதல் சொல்லாகக் கொண்டுள்ளார் எனக் காட்டுவது குறிப்பிடத்தகுந்தது.*6 போலவே, முதல் மண்டலத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கையான 191 பாடல்களையே இம்மண்டலத்தின் எண்ணிக்கையும் கொண்டுள்ளதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஆய்வு அதன் உட்கிடையாகவே சில கேள்விகளை எழுப்புகிறது. ரிக்கின் தொன்மையான இருடிகளின் தெய்வ வணக்கங்களைப் பின்தொடராமல், பிற்கால இருடிகளைப் பின்தொடர்ந்த 10-வது மண்டலத்தின் போக்குக்கான சமூகக் காரணங்கள் என்ன? ரிக் பாடியோர், கொள்ளுத்தாத்தா முதல் பேரன் வரையிலான நான்கு தலைமுறைக்குள் அடங்குவர் என்ற மற்றொரு ஆய்வை நினைவில் கொண்டால், அதிகபட்சமாக கொள்ளுத்தாத்தாவின் சிந்தனைக்கும், பேரனின் சிந்தனைக்கும், அல்லது குறைந்தபட்சமாக தாத்தாவின் சிந்தனைக்கும் பேரனின் சிந்தனைக்கும் இடையில் உருவாயிருக்கும் மிகப்பெரிய வேறுபாடு எதனால் விளைந்தது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கொள்ளுத்தாத்தாவின் சிந்தனைக்கும், பேரனின் சிந்தனைக்கும் இடையேயுள்ள வேறுபாடு, கொள்ளுத்தாத்தாவின் ஆதிமரபின் மையத்தின் வளர்ச்சியின் திரட்சியாகக் காட்சியளிக்காமல், புதிய மையம் உருவாகும் மொட்டின் திரட்சியாக உள்ளதன் காரணமென்ன? இன்றுவரையிலான ஆய்வுகள், இதற்கான முழுமையான பதிலை வழங்கப் போதுமானவையாக இல்லை.  ஆனால், அவை சில தீர்க்கமான முன்வைப்புகளை வழங்கியுள்ளன. அவை, வேறுபாடுகளை துல்லியமாகக் காட்டிடும் அடிப்படைகளை முழுமைக்கு வெகு அருகில் கொண்டுசென்றுள்ளன.

இந்தவகையில், பிற மண்டலப் பாடல்களுக்கும், 10-வது மண்டலத்தின் பாடல்களுக்கும் இடையிலான பொருள் வேறுபாடு பற்றி சுட்டிக்காட்டும்பொழுது, இந்த ஆய்வுகள் “ரிக் வேதத்தில் பிற பகுதிகளில் கூறப்படும் பல கடவுள்கள் 10-ம் மண்டலத்தில் பெருமையாகக் கூறப்படுவதில்லை. சில கடவுளர்கள் இதில் பாடுபொருளாகக் காணப்படுவதில்லை என்பதுடன், சில புதிய கடவுளர்கள் தோற்றம் கண்டுள்ளனர். சமய நம்பிக்கை சாராத திருமணச் சடங்கு குறித்த சிலவும், மரணச் சடங்கு தொடர்பான சிலவும் இதில் இடம்பெற்றிருக்கின்றன”. இவை பிற மண்டலங்களில் இருந்து 10-ம் மண்டலம் பாடுபொருளில் வேறுபடும் சில முக்கிய இடங்களாக உள்ளன.

இவ்வேறுபாடுகள், சமயவயப்பட்ட பொருள் வகையிலும் எதிரொலிக்கின்றன. “இயற்கைப் பொருள் வழிபாடு நாளடைவில் வேறு வழியில் திரும்பியது. இதன் விளைவாக ‘சிரத்தை’, ‘கோபம்’ போன்று சில பண்புகள் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தோன்றிய தெய்வங்கள் இருக்கு வேதத்தில் இடம் பெறுகின்றன. ’பிரஜாபதி’ என்னும் தெய்வமும் இத்தன்மை கொண்டதே. சிறு தெய்வங்களான ‘இருபு, ‘அப்சரர்கள்’, ’கந்தர்வர்கள்’ போன்றவர்கள் பாடுபொருள் ஆகின்றனர்”. இவை அனைத்தும் 10-வது மண்டலத்தில் முதலில் நிகழ்வது கவணிக்கத்தக்கது.

இவற்றுடன், 10-வது மண்டலத்தில் இடம்பெற்ற தத்துவ விசாரத்தின் துவக்க நிலையிலான அடிப்படைக் கருத்துகள் இடம் பெறுவது கவனிக்கத்தக்கதாகிறது. இது ஆய்வு நோக்கிலும், காலவரிசை முறைக்கும், பண்பாடு மாற்றத்தை அறிவதற்கும் முக்கியமாகிறது. “இந்திரன் மீது பாடப்பட்டுள்ள பாடலொன்றில், இந்திரனின் பெருமை மீது சந்தேகித்துக் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோன்ற சந்தேக மனப்பான்மை வேறு ஒரு பாடலிலும் இந்திரனைப் பற்றியே உள்ளது. இருக்கு வேதத்தின் ஒப்பற்ற தெய்வமான இந்திரனையே சந்தேகிக்கத் தொடங்கியவர்களுக்கு வேறு தெய்வங்கள் மீதும் இதே உணர்ச்சித் தோன்றல் இயற்கையே.

இதற்குச் சான்றாக, படைத்தல் தெய்வமாகவும், காக்கும் தெய்வமாகவும் கொள்ளப்படும் ‘பிரஜாபதி’ மீது பாடப்பட்ட ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், ‘எந்த தெய்வத்துக்கு அவி சொரிவேன்?’ என்ற ஏக்கம் ததும்பிய கேள்வி எழுப்பப்படுகிறது. இக்கேள்வி திரும்பத் திரும்ப கேட்கும்பொழுது, இதே சந்தேக உணர்ச்சி எதிரொலிக்கிறது. நாசதீய சூக்தத்தில் இவ்வுணர்ச்சி வரம்பை மீறுகிறது.”*7 இச்சூத்திரத்தில் படைப்பு நிகழ்ந்ததா என்ற சந்தேக உணர்ச்சியும், அதற்குப் பெறப்படும் விளக்கத்தில் மேலும் மேலும் சந்தேகக் கேள்விகள் என்ற தர்க்கமாகி, தத்துவக் கருத்துகளுக்கு அடிகோள்கின்றன. இத்தகைய தத்துவக் கருத்துகள் விரவியுள்ள பாடல்களில் பெரும்பாலானவற்றுள், பிரஜாபதி என்னும் படைத்தல் தெய்வம் பற்றிய குறிப்புகள் இடம்பெறக் காண்கிறோம். இங்கெல்லாம் இத்தெய்வம் ‘பிரம்ணஸ்பதி’, ‘பிருகஸ்பதி’ ‘விஸ்வகர்மா’ என பல பெயர்களால் சுட்டப்படுகிறது. பாடுபொருளில் உள்ள இந்த முக்கிய வேறுபாடுகள் அனைத்தும் 10-ம் மண்டலத்திலேயே இடம்பெற்றுள்ளன.

மொழிநிலை வேறுபாடு

பாடுபொருள் வேறுபாட்டுடன் மொழிநிலை வேறுபாடு குறித்து சிறப்பான ஆய்வுகள், மெக்டோனால்*8, பரோ*9, காடேகே*10 போன்ற ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிர் கெடுதல், ரகர ஒற்றுக்குப் பதிலாக லகர ஒற்று வருதல், நாமடி ஒலிகளின் பெருக்கம், குறிப்பாக நாமடி ஒலிகள் ரிக் வேதச் சொற்கள் பலவற்றில் இல்லாமலிருக்க, பிற வேதங்களிலும், பிராமணங்கள் போன்றவற்றில் ஏராளமாக வருவதைக் காணலாம். இந்நிலை வேகமாகப் பரவி, செம்மை சம்ஸ்கிருதத்தில் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில மாற்றங்கள், பின் வேத நூல்களில் விருப்ப மாற்றமாக இருக்க, பின்னர் கட்டாய மாற்றமாக மாறியுள்ளது கண்கூடு என சுட்டிக்காட்டப்படுவதுண்டு.*11

வேறுபாடுகளை ஒலியியல், ஒலியன் மற்றும் உருபன் இயல்களில் காண முடிகிறது. இவ்வேறுபாடுகள் கொண்டே, வேத மொழியினை முன் வேத காலம் மற்றும் பின் வேத காலம் என்று பிரித்தறியப்படுகிறது.

வேறுபாடுகள் குறித்த செய்திகளில், விரிவு அஞ்சி நிறுத்திக்கொள்ளப்படுகிறது. விரிவான மேல் விவரங்களுக்கு மேற்படி நூல்களைக் காண்க. சுருக்கமான விவரங்களை ச. அகத்தியலிங்கம்*12, மற்றும், கா. கைலாசநாத குருக்கள்*13 நூல்களில் காண்க.

படிப்படியாக நடந்த இந்த மாற்றங்கள் தொடர்ந்து நடந்து, செம்மை சம்ஸ்கிருதக் காலத்தில் பல்கிப் பெருகியதால்தான் வேத மொழிக்கும் செம்மை சம்ஸ்கிருதத்துக்கும் இடையே பெரு வித்தியாசம் ஏற்பட்டு, தனித்தனி மொழிகளாக அமையக் காரணமாயிற்று என்பதும், முன் நான்கு அத்தியாயங்களில் விளக்கப்பட்டது. சம்ஸ்கிருத மொழி வரலாற்று ஆசிரியர்கள், பின் வேத காலத்தை, ரிக் வேத மொழிக்கும், செம்மை சம்ஸ்கிருத மொழிக்கும் இடையே உள்ள மொழியாகவும், அதன் காலகட்டத்தை இருமொழிகளுக்கான இடைக்காலம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

மேலோட்டமான இந்தப் புரிதலுடன், ரிக்கின் யாப்பும் பிற்காலச் செம்மை சம்ஸ்கிருத யாப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும், ஓதும் மொழியின் இலக்கணம் குறித்தும் சிறிதேனும் அறிய வேண்டிய அவசியம் உள்ளது.

ஓதும் மொழியின் இலக்கணம்

வேதங்கள், ஓசையை உரியவாறு எழுப்பி ஒலிக்கப்பட வேண்டியவை என உறுதியாக்கப்பட்டவை. ஆகையால், வேதத்தை ஓதும் இலக்கணம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. வேதம் ஓதும்பொழுது, ஓதுபவரின் ஒலி வேறுபட்டு, மூன்று நிலைகளில் காணப்படும் என்றும், “ஸ்வரங்கள்” என்று கூறப்படும் இவ்வொலி வேறுபாடுகள் “உதாத்தம்”, “அநுதாத்தம்”, “ஸ்வரிதம்” என்று குறிக்கப்படும் என்றும், அவை அம்மூன்று நிலைகளைக் குறிக்கும் என்பர். இதில் உதாத்தம் என்பது குரலை உயர்த்துவதால் எழுப்பப்படும் ஓசை என்றும், அநுதாத்தம் என்பது குரலை தாழ்த்தி எழுப்பப்படும் ஓசை என்றும், ஒரே சமமாகப் பொருந்தி வரும் ஓசை ஸ்வரிதம் என்றும் அம்மூன்று ஒலி நிலைகள் விளக்கப்படும். இவ்வாறு குரல் வேறுபாட்டைக் கடைப்பிடித்து ஒலிக்கும் முறை பழைய கிரேக்க மொழியில் இருந்ததாக அறிய முடிகிறது என்பர். ஸ்வரங்களை அமைத்தே ரிக், யசூர், சாமம், அதர்வணம், பிராமணங்கள், உபநிடதங்கள் முதலியவை ஓதப்படுகின்றன. இவ்வாறு, ஸ்வரம் கொண்டு ஒலிக்கும் வழக்கு உபநிடதங்களிலேயே பெரும்பாலும் மறையத் தொடங்கி, செம்மை சம்ஸ்கிரு மொழிக்காலத்தில் அறவே மறைந்து ஒழிந்துவிடுவது கவனிக்கத்தக்கது.*14 இந்நிலை வழக்கொழிந்த பிறகு, வேத மொழியை பாணினி மீட்கும்பொழுது, வேத மொழியில் இருந்து செம்மை சம்ஸ்கிருதம் வேறுபட்டு உதித்தது என்பதை அகச்சான்றாகி விளக்கிவிடுகிறது.

இவ்வகையான மாற்றங்கள், இவற்றுக்கிடையேயான கால இடைவெளியில் இவை பெற்ற மாற்றங்கள் வளர்ச்சிப்போக்கின் விளைவுகளா அல்லது புதியன ஏற்றதால் உருவான மாற்றங்களா என அறிந்துகொள்ள உதவும். முன் நான்கு அத்தியாயங்களில், மொழி வழி சமூகத்தை அறிதலும், இலக்கணம் வழி சமூகத்தை அறிதலின் தொடர்ச்சியாக இப்பகுதியைக் கருதுவதில் பிழையொன்றும் இல்லை. யாப்பு இலக்கணத்தின் ஒரு அங்கமாக திகழ்வதால், ரிக் யாப்பும், செம்மை சம்ஸ்கிருத யாப்பும் கொண்டுள்ள வித்தியாசம் வளர்ச்சியின் விளைவா அல்லது புதியன புகுந்ததால் உருவான மாற்றமா என்று கூறுபடுத்தி, அதன் காரண காரியங்களை அடையாளம் கண்டுணர வழிவகுக்கிறது.

ரிக் யாப்பும், பிற்கால செம்மை சம்ஸ்கிருத யாப்பும்

ரிக் வேத மொழியின் அமைப்பு, ரிக் சூக்தங்களின் காலவரிசைத் தொகுப்புக்கான அடிப்படைகளைச் சுட்டும் ஒரு வழியை அமைக்கின்றது. போலவே, ரிக் மொழிக்கும், பிற்கால செம்மை சம்ஸ்கிருத மொழிக்கும் வேறுபடுத்தும் கூறுகளில் யாப்பு முக்கியப் பங்காற்றுகிறது.

ரிக் வேத யாப்பு முறை மிகவும் பழையது. இது ரிக் வேதப் பழமைக்கு மட்டும் சான்றாகாமல், செம்மை சம்ஸ்கிருதத்தில் இருந்து வேறுபடும் நிலையைச் சுட்டி நிற்பதற்கும் சான்றாகவும் விளங்குகிறது. “வேதத்தில் காணப்படும் யாப்பு முறையில் இருந்து செம்மை சம்ஸ்கிருதத்தில் பெருகிக்கிடக்கும் யாப்பு முறை மிகவும் வேறுபட்டது. இவ்வேதத்தில் உள்ள பல ‘விருத்தங்கள்’, பிற்காலத்தில் எழுந்த சம்ஸ்கிருத்தில் முழுவதும் மறைந்துவிட்டன. இதைவிட செம்மை சம்ஸ்கிருதக் காவியங்களில் எண்ணிறைந்து காணப்படும் விருத்தங்களுக்கு நேரிடையானவை, வேதங்களில் காணப்படவில்லை”.*15 இந்நிலை, ஒன்றிலிருந்து கிளைத்து வேறொன்றாகும் வளர்ச்சிப் போக்கை அடையாளம் காட்டத் தவறுகிறது. இவ்விரண்டுக்கும் இடையிலான மிக நீண்ட கால இடைவெளியின் விளைவே இது என்பதாக இதனை விளக்கிக்கொள்ளாமல்; இவ்விரு நிலைகளூடே அறுபட்ட தொடர்ச்சியோ, இடைவிட்ட தொடர்ச்சியோ காணப்படாததால், இந்நிலைக்கு புதியன புகுதலே காரணமாக அமைந்துள்ளது என்று தெளிவு பெறலாம்.

புதிய புகுதல் பொதுவில் இரு தளங்களில் நிகழ்கிறது என்பதை வரலாற்றும்போக்குகளில் இருந்து அணுமானிக்க முடிகிறது. அவை –

1. இரு சமூகங்கள் அருகருகே வாழ்ந்திருக்க, தொடர்பின் காரணமாக நிகழ்வது.

2. அருகருகே வாழ்ந்த சமூகங்கள் ஒன்றுகலந்து வெளிப்படுத்துவது.

இதில், இரண்டாவது காரணம் இங்குப் பாந்தமாகப் பொருந்துகிறது.

ரிக்கின் பிற சமூகப் பொருளாதார மற்றும் வாழ்வியல், மற்றும் சமய நம்பிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டால், ரிக்கில் பல்வேறு கடவுளர்களைப் போற்றி தம் வேண்டுதலை வழிபாடாக வைக்கிறது. இவற்றில் முக்கியமானவை அக்னி அல்லது நெருப்புக் கடவுள், இந்திரன் போர்க்கடவுள் (தமிழ் மரபில் குறிப்பிடப்படும் இந்திரன், போர்க்கடவுள் இல்லை. ஒரு வேளாண் தெய்வம் என்பது ஒப்பாய்வுக்கு உதவும் ஒரு வேறுபாடு என்பதை குறித்துக் கொள்வோம்). சோமா அல்லது ஒருவகை பானம் தயாரிக்க மூலப்பொருளாக அமையும் செடிக்குரிய கடவுள் இவர்கள். ஆயிரத்துக்கு மேற்பட்ட சூக்தங்கள் கொண்ட ரிக்கில், ஏறத்தாழ எழுநூறு சூக்தங்களுக்கு மேல் இந்தக் கடவுளர் துதிக்கப்படுகின்றனர். இவற்றின் முக்கியப் பாடுபொருளாக ஆநிரை, குதிரை, மழை, மேய்ச்சல் நிலம், போரில் வெற்றி கோரல் போன்றவை உள்ளது. மு.பொ.ஆ.1000 வரை, இது இச்சமூகத்தின் ஒரு பொதுமையான, அதே சமயத்தில் பெரும்பான்மையான காட்சியாக உள்ளது.

முன் வேதக் கால இலக்கியமான ரிக் வெளிப்படுத்தும் பூகோளம் சார்ந்து, ரிக் வேத இருடிகளுக்கு சப்த சிந்துப் பகுதி அதாவது, சிந்து நதியும், அதன் உபநதிகளும் பாயும் பகுதியான தற்கால பஞ்சாப் (பாகிஸ்தானுக்கு பிளக்கப்பட்ட பஞ்சாப் பகுதியும் சேர்ந்து) நன்றாகத் தெரிந்திருந்தது என்பதும், இவர்கள் கங்கைச் சமவெளியை முற்றாக அறிந்திருக்கவில்லை என்பதும் வெளிச்சமாகிறது. ரிக்கில் ஒரு இடத்தில் மட்டும் கங்கையும் யமுனையும் குறிக்கப்படுகின்றது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய அகச்சான்றுகளாகும். ரிக்கில் இடம் பெற்ற திராவிட என்ற தமிழ்ச் சொற்கள் மட்டுமல்லாது, சிந்தனை மாற்றங்களையும் அதன் எதிரொலியாக பாடுபொருள் மாற்றம், மொழிவகை மாற்றம், இலக்கண வகை ஆகிய மாற்றங்களையும், ஆரியர்கள் சிந்து வெளிப் பகுதியில் கடக்கும்போது சந்தித்த, சப்த சிந்துப் பகுதியில் தங்கியபோது சூழ்ந்திருந்த, கலந்த வடகிழக்கிந்திய தமிழ்க் குடிகளிடமிருந்து ஏற்றவை என்பதை இது சார்பிலான ஆய்வின் தொடக்க நிலையாகக் குறித்துக்கொள்வோம்.

(தொடரும்)

மேற்கோள் குறிப்புகள்

1. ஏ. கோஷ், ‘துவக்க கால இந்தியாவில் இந்திய நகரம்’ சிம்லா, 1973.

2. Macdonell, Arther, A History of Sanskrit Literature, Motilal Banarasidass, Delhi, 1965.

3. கா. கைலாசநாதக் குருக்கள், வடமொழி இலக்கிய வரலாறு, நர்மதா பதிப்பகம், சென்னை, 1981, ப. 32.

4. மேலது. ப. 33.

5. இங்கு குறிப்பிடப்படும் கருத்துகள், Keith, Macdonall, Burrow. T, Gatage, A.M, ச. அகத்தியலிங்கம், கா. கைலாசநாத குருகுக்கள் ஆகியோரின் நூல்களின் சாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனூடே குறிப்பான மேற்கோள்கள் விவரங்கள் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. தமிழ் நூல்கள் இரண்டும், மேற்கண்ட ஆங்கில நூற்களை அடிப்படையாகக் கொண்ட பகுதிகளைக் கொண்டுள்ளன. இதனால் இப்பகுதி சார்ந்து இவற்றுக்கு இடையிலான ஒற்றுமைக் கூறுகள் அதிகம்.

6. Keith. Berriedale A, A History of Sanskrit literature, Oxford University Press, Great Britain, 1928, p.36.

7. கா. கைலாசநாத குருக்கள், மு.கு.நூ., ப.80.

8. Macdonall, A.A, A History of Sanskrit Literature, Mothilal Banarasidas, Delhi, 1965, pp.36-37.

9. Burrow, T, The Sanskrit Language, Faber and Faber, London, 1973, p.44.

10. Gatage, A.M, Historical linguistics and Idno-Aryan Languages, University of Bombay, 1962, p.85

11. ச. அகத்தியலிங்கம், இந்திய மொழிகள்-1, மு.கு.நூ, ப.119.

12. மேலது.

13. கா. கைலாசநாத குருக்கள், வடமொழி இலக்கிய வரலாறு.

14. மேலது. ப. 34.

15. மேலது. ப. 33

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com