அத்தியாயம் 51 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 44

பிராமணியம் வழங்கும் சமூக அமைப்பினை விரும்பாதவர்கள் தனித்தும், தம் சமூக மரபினைத் தொடர விரும்பியவர்கள், காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றனர். அவர்களே இந்தியப் பழங்குடிகள் என பின்னர் வரையறுக்கப்பட்டனர்.

திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தமிழ்ச் சமூகத்தைத் தேடும் முகமாக, இந்தியாவில் வாழும் பிற இனங்களை / சமூகங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் முகமாக, ஆரியர் இனத்தையும் ஆரியரையும் அடையாளம் காணும் ஒரு பருந்துப்பார்வையின் தொடர்ச்சியாக இந்த அத்தியாயம் அமைகிறது. இதில், இந்தியா வந்த பிறகு இந்திய-ஆரியரின் இனம், மொழி ஆகியவற்றின் தற்போதைய நிலை, வளர்ச்சி, செல்வாக்கு, பங்களிப்புகள் பற்றி காண்போம்.

இந்தோ - இரானிய மொழியில் இருந்து கிளைத்துப்பிரிந்து, இந்திய நாட்டிலும் பிற இடங்களிலும் வழங்கும் மொழியே “இந்தோ - ஆரிய மொழி” என அழைக்கப்படுகிறது. இதன் கிளை மொழிகள் கொண்ட தொகுதி “இந்தோ - ஆரிய மொழிகள்” என்றும் “இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம்” என்றும் குறிக்கப்படுகிறது. இந்தோ - ஆரிய மொழியே ”ஆரிய மொழி” என்று பொதுவழக்கில் குறிக்கப்படுகிறது.

மொழியியலாளர்கள், இந்தோ - ஆரிய மொழிக்கு விளக்கம் காண்கையில், “இந்தோ - ஆரிய மொழி என்பது கடந்த 3500 ஆண்டுகாலமாக எந்தவிதமான இடைவெளியும் இன்றி, ஆனால் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வாழ்ந்து வளர்ந்து வரும் மொழிக் குடும்பத்தைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், ஆரியர்கள் இந்த நாட்டில் நுழைந்தது முதல் இன்று வரையிலும் அம்மக்களால், ஏன் இந்தியாவில் வாழும் பிற இன மக்களாலும் பேசப்பட்டு, இடையிடையே பலவேறு மாற்றங்களைக் கண்டு, வேத மொழியாகவும், சம்ஸ்கிருத மொழியாகவும், பல்வேறு இந்திய மொழிகளாகவும் உள்ள மொழிகள் அனைத்தையும் உள்ளடக்கிய பெயரே இது” என்பர்.

ஆரிய மொழி

ஆரிய மொழி என்பது ஆரியர்களின் மொழி எனப் பொருள் தரும் ஒன்றாகும். இது துவக்கத்தில் இந்தோ - இரானியப் பிரிவில் இருந்து பிரிந்துவந்த ஆரியர் பேசிய மொழியைக் குறித்து நின்றது. நாளடைவில், இம்மொழியை ஆரியர் அற்ற பிற இன மக்களும் பேசினர். அந்நிலையிலும், அது ஆரிய மொழி என்றே குறிக்கப்பட்டது. பிற உறவுகளால் உருவான கிளை மொழிகள், ஆரிய கிளை மொழிகள் அல்லது ஆரிய குடும்ப மொழிகள் என்றே குறிக்கப்பட்டன. தமிழ் வழக்கில், தமிழ் வழங்கிய இடத்துக்கு வடக்கில் புழங்கிய தமிழில் இருந்து கிளைத்த தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் வடமொழி என்று குறிப்பிடப்பட்டன. இதன் குறுகிய வடிவம் “வடுகு” எனப்பட்டது. இம்மொழிகளைப் பேசியவர்கள் வடவர் என்று பொருள்படும் வடுகர் எனக் குறிக்கப்பட்டனர். நாளடைவில், வடபுலத்தில் ஆரியமும் அதன் கிளை மொழிகளும் பெருவழக்கான நிலையில், வடமொழி என்பது ஆரியத்தை மட்டும் குறிப்பதானது என வரலாற்றுப்போக்கிலான இச்சொல்லின் பயன்பாட்டிலிருந்து கூறலாம். ஆயினும், மொழியியலாளர்கள் வகைப்படுத்தும்போது “இந்தோ - ஆரிய மொழிகள்” என்றே குறிப்பிடுகின்றனர். இருந்தும், வடுகும், வடுகரும் இன்றுவரை தெலுங்கு மொழிப் பேசுவோரைக் குறிப்பிடும் சொல்லாகவே வழக்கில் இருந்து வருகிறது.

தமிழில் “சங்கதம்”, “பாகதம்” என்று இரு மொழிப்பெயர்கள் வழக்கில் உண்டு. சங்கதம் என்பது, செம்மை செய்யப்பட்ட சம்ஸ்கிருத மொழியைக் குறித்து நின்றது. பாகதம் என்பது, பழைய ஆரிய மொழியும், உள்ளூர் பேச்சு மொழிகள் இணைந்தும் திரிந்தும் உருவான பிராகிருத மொழிகளுக்குப் பொதுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்கதம், தனி மொழியைக் குறித்து நின்றதாகவே உள்ளது. அது வேத மொழியையோ, இந்தோ - ஆரிய மொழிகளையோ குறிக்கப் பயன்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை.

இந்தோ - ஆரிய மொழிகள்

மு.பொ.ஆ.1500 ஆண்டுகள் அளவில், இந்தியப் பகுதிக்கு நுழைந்து பரவிய ஆரியர்களோடு பரவிய மொழிக் குடும்பம் இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம் ஆகும் என்பதும், மொழி வளர்ச்சிப் போக்கில், இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து பிரிந்த இந்தோ - இரானிய மொழிகளில் இருந்து பிரிந்த ஒன்றே இந்தோ - ஆரிய மொழி ஆகும் என்பதும் முன்னரே விளக்கப்பட்டது. இன்று, இந்திய நாட்டின் மிகப்பெரும்பான்மையான மொழிகள் இம்மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையே.

இவ்வாறு, இந்தோ - ஐரோப்பிய மொழி என்ற ஒற்றைப்புள்ளியில் துவங்கிய மொழியொன்றில் இருந்து கிளைத்தும், புதுப்பித்துக்கொண்டும் வளர்ந்து, ஆரிய மொழி பல காலகட்டங்களைக் கடந்து, இன்று “புதிய இந்தோ - ஆரிய மொழிகள்” என்று குறிப்பிடும் இந்தியாவில், பெரும்பான்மையோரால் பேசப்படும் ஒரு மிகப்பெரிய மொழிக் குடும்பத்துக்கு உரியதாக உள்ளது.

புதிய இந்தோ - ஆரிய மொழிகளை, வேத மொழி இந்தியப் பகுதிக்கு வந்த உடனே உருவாக்கிவிடவில்லை. மு.பொ.ஆ.1500 முதல் பொ.ஆ.1000 வரையிலான 2500 ஆண்டுகால இடைவெளியில், அது அவ்வப்பொழுதான இழப்புகளை மீட்டுக்கொண்டு, புதியனவற்றை இணைத்துக்கொண்டு மீட்சி கண்டுள்ளது.

இன்றைய நிலை வரையிலான ஆரிய மொழியின் நிலைகளை, வளர்ச்சிப் போக்குகளை, கண்ட மாற்றங்களை, இந்த நாட்டில் அம்மொழி வந்தபொழுது இருந்த நிலை போன்ற பலவற்றை அடிப்படையாகக் கொண்டு, பல காலகட்டங்களாக அம்மொழியை மொழியியல் அறிஞர்கள் பிரித்து ஆராய்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்ட ஒரு பகுப்பு மூன்றுகட்டமாக உள்ளது. அவை:

1. பழைய இந்தோ - ஆரிய மொழிக் காலம் (Old Indo - Aryan = OIA)

2. நடு அல்லது மத்திய இந்தோ - ஆரிய மொழிக் காலம் (Middle Indo – Aryan = MIA)

3. புதிய இந்தோ - ஆரிய மொழிக் காலம் (New Indo – Aryan = NIA).

பழைய இந்தோ - ஆரிய மொழிக் காலம் (மு.பொ.ஆ.1500 - 600)

ஆரிய மக்கள் இந்திய நாட்டில் மு.பொ.ஆ.1500-ஐ ஒட்டிய காலகட்டத்தில், கூட்டம் கூட்டமாக வந்து (படையெடுத்து வந்து!) இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும், வேறு சில பகுதிகளிலும் குடியேறினர். இதன் காரணமாக, அவர்கள் பேசிய மொழியில் பல மாற்றங்களும், புதுப்புதுப் பண்புகளும், அமைப்புகளும் ஏற்பட்டன. இதன் காரணமாக, அம்மொழி இந்தோ - ஐரோப்பிய மொழியிலிருந்து, குறிப்பாக இந்தோ - இரானிய மொழியிலிருந்து மாறுபட்டு ஒரு புதிய மொழியாகத் தோற்றம் கண்டது. இவ்வாறு தோற்றம் கண்ட மொழியே இந்தோ - ஆரிய மொழியாகப் பரிமாணம் கொண்டது. இம்மொழியும், பல்வேறு இலக்கண அறிஞர்களால், அதிலும் குறிப்பாகப் பாணினியால் செம்மை செய்யப்பட்ட நிலையில் உருவான சம்ஸ்கிருதம் என்ற மொழியும் உள்ளடக்கிய மொழிகளுமே, பழைய இந்தோ - ஆரிய மொழிகள் எனக் குறிக்கப்படுகின்றன. ஆரியர்கள், இந்தியப் பகுதிக்கு வந்த காலகட்டமான மு.பொ.ஆ.1500 முதல், பாணினி இலக்கணம் வகுத்த மு.பொ.ஆ.600 வரையிலான, ஏறத்தாழ 900 ஆண்டுகளே பழைய இந்தோ - ஆரிய மொழிக் காலம் எனக் கொள்ளப்படுகிறது.

நடு அல்லது மத்திய - இந்தோ ஆரிய மொழிக்காலம் அல்லது பிராகிருத மொழிக் காலம் (மு.பொ.ஆ.600 - பொ.ஆ.1000)

பழைய இந்தோ - ஆரிய மொழியில் மு.பொ.ஆ.600 முதல் பொ.ஆ.1000 வரையிலான ஏறத்தாழ 1400 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தும், அவற்றை ஏற்றும் வளர்ந்தது மற்றொரு பக்கம் கிளைத்தது. இம்மாற்றத்தின் துவக்கம், மு.பொ.ஆ.600 அளவிலேயே துவங்கியது. தொடர்ந்து, பிராகிருத மொழிகள் வடஇந்தியா முழுமையும் ஆங்காங்கே தோன்றியது எனக் கொண்டு, இக்காலகட்டம் பிராகிருத மொழிகளின் காலம் எனவும் குறிக்கப்பெறுகிறது.

புதிய இந்தோ – ஆரிய மொழிக் காலம் (பொ.ஆ.1000-க்குப் பிறகு)

பொ.ஆ.1000 இருந்து இன்று வரையிலான காலப்பகுதியே புதிய இந்தோ - ஆரிய மொழிக் காலம் என்று மொழியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலப் பகுதியில்தான் இன்றைய இந்தோ - ஆரிய மொழிகள் என வகைப்பாடு செய்யப்படும் இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகள் தனிமொழியாகத் தோற்றம் கண்டு வளரத் தலைப்பட்டன. (இப்பகுப்பு, பரோ, மெக்டோனல், கீத், கத்ரே, ஊல்னர் (T.Burrow, Arther A. Macdonell, Berriedale Keith, S.M.Katre, Alfied C. Woolner) முதல், அனைத்து மொழியியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுப்பை ச.அகத்தியலிங்கம் அவர்கள் இந்திய மொழிகள் – 1 என்ற புத்தகத்தில், ப.101-125 பக்கங்களில் விரிவாக எழுதியுள்ளார்).

பிற்கால மொழி ஆய்வுகளின் வளர்ச்சிப்போக்கின் காரணமாகவும், மொழித் தொல்லியலின் பார்பட்டும் இந்தக் காலப்பகுப்பு மறுபரிசீலனைக்குரியதாக உள்ளது எனக் கருத அவசியம் உள்ளது. அந்த அவசியத்தை உணர்த்தும் காரணிகளை முதலில் தொகுத்துக்கொள்வோம்.

  1. வேத மொழியையும் செம்மை சம்ஸ்கிருதத்தையும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்துப் பகுக்கும்பொழுது, இரு மொழிகளுக்கும் இடையிலான வேறுபாடு திட்டமாக வெளிப்படுத்தாத நிலை உருவாகியுள்ளது. இரு வேறு புள்ளிகளுக்கு இடையிலான இடைவெளியின் அடையாளம் அழிந்துவிடுகிறது.
  2. வேத மொழி வழக்கற்றுப்போன நிலையை இப்பகுப்பு அடையாளப்படுத்தவில்லை. அதாவது, மக்களிடமிருந்து வேத மொழி தனித்து சூக்தங்களில் வரையறுத்த மாறா ஒற்றைப் பொருளில் ஓத மட்டும் வழங்கிய நிலையில், மக்கள் மொழியில் இருந்து பிரிந்த நிலையை இது அடையாளப்படுத்தவில்லை.
  3. செம்மைப்படுத்திய சம்ஸ்கிருதம் மக்கள் வழக்கில் இல்லாததும், அறிஞர்களின், சமயப் பண்டிதர்களின் மொழியாக மட்டும் இருந்த நிலையையும் இது அடையாளப்படுத்தவில்லை.

செம்மைப்படுத்திய பாணினி, செம்மை மொழி இந்நிலை அடைவது குறித்து யோசித்திருக்கமாட்டார். அவர், மக்கள் வழக்கில் செல்வாக்குடன் இருந்த பிராகிருத மொழிகளின் வளர்ச்சி கண்டே, (பிராகிருத மொழிகள் வளர்ச்சி என்ன என்பது குறித்து வரும் யுத்தபூமி அதியாயங்களில் காணலாம்) வேத மொழியை அதன் ஆதிப் பொருளில் மீட்கும் முயற்சியாகவே அஷ்டாத்தியாயியை படைத்தார் என்பதை வரலாற்றுப்போக்கின் நிகழ்வுகளில் இருந்து தெளியமுடிகிறது. ஆனால் விளைவு, அஷ்டாத்தியாயி வகுத்தளித்த செம்மை சம்ஸ்கிருதம், மக்கள் மொழியாக மாறாமல், சமய இலக்கியங்களை ஓதும், அந்தணர்கள், பிராமணர்கள், படித்தவர்கள் மொழியாக மட்டும், கிட்டத்தட்ட பழைய வேத மொழியின் நிலைக்கே ஆனது. இதனால், அந்தணர்கள், பிராமணர்கள், படித்தவர்கள் செம்மை சம்ஸ்கிருதத்தை அறிந்திருந்தாலும், பேச்சு வழக்கு மொழியில் வேவ்வேறு மொழிகளைக் கைக்கொண்டனர். அதுவே காலப்போக்கில் அவர்களின் தாய்மொழியாகவும் ஆனது. பிராமணியத்தைத் தழுவியர்கள் மொழியும் அவரவர் தாய்மொழியே விளங்குகிறது போன்ற இந்நிலை, விளக்கம் பெறாமல் போகிறது.

  1. பிராகிருத மொழிகளின் காலம் மிகவும் பின்னால் வைக்கப்படுகிறது.
  2. பிராகிருதத்தைக் காலத்தால் பின்னர் வைப்பதால், சம்ஸ்கிருதம் செம்மையாக்கப்பட்ட காரண காரியங்கள் விளக்கம் பெறாமல் போகிறது.
  3. பிராகிருத வழக்குகள் புதிய இந்தோ - ஆரிய மொழிகளைத் தோற்றுவித்தனவா அல்லது செம்மை சம்ஸ்கிருதத்தில் இருந்து புதிய இந்தோ - ஆரிய மொழிகள் தோன்றியனவா என்பதில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுப்பு, அறிஞர்களின் மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் மட்டும் இருந்த செம்மை சம்ஸ்கிருதத்தில் இருந்து புதிய இந்தோ - ஆரிய மொழிகள் தோன்றின என மொழித் தொல்லியலுக்கு எதிரான ஒரு முரணை ஏற்படுத்தியுள்ளது.
  4. பிரதேச வேறுபாடு அற்று, வேத மொழியும், செம்மை சம்ஸ்கிருதமும் வடஇந்தியா முழுமைக்கும் பொதுவானது என்பது போன்ற தோற்றத்தை, இப்பகுப்பு இதன் ஒவ்வொரு பகுப்புக் காலகட்டத்திலும் தருகிறது. அதாவது, மு.பொ.ஆ.1500 முதல் மு.பொ.ஆ.600 வரையும், மு.பொ.ஆ.600 முதல் பொ.ஆ.1000 வரையிலும், பொ.ஆ.1000 பிறகு என மூன்று காலகட்டத்திலும், வடஇந்தியா முழுமையும் ஆரியம் சார் மொழிகள் ஒன்றுபோல் கிளைத்தன என்பதாகத் தோற்றம் கொள்கிறது.

மேற்கண்ட முக்கியமான ஏழு காரணிகளால், இந்தோ - ஆரிய மொழிகள் குறித்த புதிய காலமுறைப் பகுப்பு அவசியமாகிறது.

இக்குறிப்புகளின் ஊடே மறைவாக உள்ள நான்கு முக்கிய மையப்புள்ளியை அடையாளம் கண்டுகொள்வோம். அவை:

  1. வேத மொழிக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள தொடர்பும் வேறுபாடும்.
  2. வேத மொழிக்கும் பிராகிருதங்களுக்குமான தொடர்பும் வேறுபாடும்.
  3. சம்ஸ்கிருதத்துக்கும் பிராகிருத மொழிகளுக்கான தொடர்பும் வேறுபாடும்.
  4. புதிய இந்தோ - ஆரிய மொழிகளுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும், பிராகிருத மொழிகளுக்கும் உள்ள தொடர்பும் வேறுபாடுகளும்.

இந்த நான்கு மையப்புள்ளிகளுக்கு இடையேயான ஊடாட்டம்தான், இங்கு முன்வைக்கப்படும் புதிய காலமுறை பகுப்பைத் தூண்டுகிறது.

புதிய காலமுறைப் பகுப்பை புரிந்துகொள்ள, ரிக் வேத மொழியின் பரவலும், அதனூடாக இந்தியா முழுமையும் ஆரியர் பரவிய காலகட்டம் முக்கியமாகிறது. இக்காலகட்டத்தை மூன்று பெரும் குடியேற்றக் காலகட்டங்களாகப் பிரித்தறியலாம். முதல் குடியேற்றக் காலம், மு.பொ.ஆ.1500 முதல் 600 வரையிலான வடஇந்தியப் பரவல் காலகட்டம்; இரண்டாம் குடியேற்றக் காலம், மு.பொ.ஆ.600-க்குப் பிறகான தென்னிந்தியப் பரவல் காலகட்டம்; மூன்றாம் குடியேற்றக் காலம்,+ பொ.ஆ.400-க்குப் பிறகு வங்கப் பகுதி பரவல் காலகட்டம்.

வடஇந்தியப் பரவல் காலகட்டம்

ஒவ்வொரு காலகட்டமும் முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மு.பொ.ஆ.1500 முதல் மு.பொ.ஆ.600 வரையிலான முதல் குடியேற்றக் காலகட்டம், வேத மொழியில் இருந்து செம்மை சம்ஸ்கிருதத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கிய காலகட்டமாகும். மக்களின் பேச்சு வழக்காக இருந்த பிராகிருத மொழிகள் இலக்கிய மொழிகளாகவும், சமய மொழிகளாகவும் வளர்ந்த காலகட்டமாகும். பிராகிருத மொழியாகாமல் தம்மை தற்காத்துக்கொண்ட திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என ஆங்காங்கே தனித்தன. ஆஸ்திரே -  ஆசிய மொழிகளான முண்டா மொழிகள் ஆங்காங்கே தனித்தன. சைனோ - திபெத்திய மொழிகளும் ஆங்காங்கே தனித்தன. தனிமைப்பட்டதன் காரணமாக, இவற்றுள் வெகு சில மொழிகளே இலக்கிய மொழிகளான வளர்ந்தன. பெரும்பாலும் வாய்மொழி மரபில் தங்கி, இலக்கிய மொழியாகப் பரிமாணம் கொள்ளாமல் போயின.

தென்னிந்தியப் பரவல் காலகட்டம்

தென்னிந்தியாவில் ஆரியர் பரவியது, இரண்டாம் காலகட்டமாகும். இக்காலத்தில், முன்னரே ஏறத்தாழ மொ.பொ.ஆ.1000 அளவில் தமிழில் இருந்து கிளைந்திருந்த கன்னடம், தெலுங்கு மொழிகள் மேலும் வலிமைபெற்ற, விரிவுபெற்ற காலமாகும். இரண்டாம் காலகட்டம், பாணினிக்கு முன்னரான காலம் அல்லது அதனை ஒட்டிய காலமாகவும் விளங்குகிறது. இக்காலகட்டத்தில், பிராகிருத மொழிகளின் தாக்கத்தால் தென்னிந்திய மொழிகள் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளும் இலக்கிய மொழியாக வளர்ந்தன. பலவும் வாய்மொழி வழக்கிலேயே இன்றும் நீடித்துவருகின்றன.

வங்கப் பகுதி பரவல் காலகட்டம்

பொ.ஆ.400 அளவில், குப்தர் காலத்தில் வங்கத்தில் பரவி, தொடர்ந்து ஒரியாவில் பொ.ஆ.700-ல் பரவிய காலகட்டம், மூன்றாம் காலகட்டமாகும். இங்கும், வடஇந்திய திராவிட மொழிகள் பிராகிருதமாகாமல் தனித்தன.

வடஇந்திய முதல் குடியேற்றக் காலகட்டத்தின் நான்கு துணைக் காலகட்டங்கள்

முதல் கட்டமான வடஇந்தியக் குடியேற்றக் காலகட்டம், நான்கு துணை காலகட்டங்களைக் கொண்டிருக்கிறது. இத்துணைக் கட்டம் ஒவ்வொன்றும் பரவிய இடம் சார்ந்தாக அமைக்கப்படுகிறது.

துணைக் கட்டம் - 1, இடம்: அகன்ற இந்தியாவின் வடமேற்குப் பகுதி. ரிக்கின் பெரும் பகுதி இங்கு உருவாக்கப்பட்டது. இது சப்த சிந்துப் பகுதியை பெரும் பகுதியாகக் கொண்டது. ரிக் வேதத்தின் பாடல்களை இயற்றிய தலைமுறையினர், இக்காலகட்டத்தின் பிரதிநிதிகள் ஆவர்.

துணைக் கட்டம் - 2, இடம்: குரு பாஞ்சாலம். வடமேற்கில் இருந்து பெயர்ந்தவர்கள்.

துணைக் கட்டம் - 3, இடம்: கிழக்கு நோக்கிய பரவல். வாரணாசி, கோசலம், குரு பாஞ்சாலத்தில் இருந்து பெயர்ந்தவர்களும், உடன் வடமேற்கில் இருந்து பெயர்ந்தவர்களும்.

துணைக் கட்டம் - 4, இடம்: வட இந்தியா - இமயமலைச் சார்புப் பகுதிகள், மால்வா, மகதா. இங்கு இடம்பெயர்ந்தவர்களில், குரு பாஞ்சாலம் பகுதியில் இருந்து பெயர்ந்தவர்களுடன், விராதயர்கள் என்ற ஆரிய இனமக்களின் ஒரு பிரிவினரும் உள்ளனர். விராதயர்களுக்கும் ரிக் வேத ஆரியர்களுக்கும் தொடர்பில்லை. இந்தோ – இரானியர்கள், இந்திய - ஆரியர்களாக உருமாறி வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியப் பகுதியில் நுழைந்தனர் என்பதற்குச் சான்றாக விராதயர்கள் பரவல் உள்ளது.

இந்த நான்கு கட்ட பரவல், மு.பொ.ஆ.1500 முதல் மு.பொ.600 வரை 900 ஆண்டுகள் நிகழ்ந்தது.

இந்த நான்கு கட்டங்களையும் ரிக் வேத மொழி தோற்றக் காலம் முதல் சம்ஸ்கிருத மொழி உருவாக்கக் காலம் வரையிலான காலகட்டம் எனலாம். இக்காலகட்டத்தில்தான், இந்திய ரிக் வேத கால ஆரியர்கள், தங்கள் குலங்களுக்குள் இருந்த ஆரியம் என்ற பிராமணியத்தை வளர்த்தெடுத்தனர்; பரப்பினர். அது தனி மதமாக, மார்க்கமாக தனிப்போக்கில் வளர்ந்தது. வேண்டுதல் தொணியைக் கொண்ட ரிக் பாடல்கள், பின்வந்த தலைமுறையினருக்கு மூத்தோர்களின் வளம் வழங்கும் பாடல்களாயின. பிராமணியத்தைத் தழுவியவர்களுக்கும் அது அவ்வாறே ஆனது.

இரண்டாம் குடியேற்றக் காலகட்டத்தில், ஆரியர்களின் பரவல் தென்னிந்தியாவில் நிகழ்ந்தது. இது பாணினிக்குப் பிறகான காலமாகும். பாணினி, தென்னிந்தியாவைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்தார் என்பதற்கு அவரது அஷ்டாத்தியாயி இலக்கண நூலே சான்று. இதன் மேல் விவரங்களை, வி.எஸ்.அக்ரவாலா அவர்களின் “பாணினி அறிந்த இந்தியா” என்ற தலைப்பிலான நூலில் கண்டுகொள்க. (V.S.Agrawala, India as Known to Panini – A study of the Cultural Material in Astadhyayi, University of Lucknow, 1953).

மூன்றாம் குடியேற்றக் காலகட்டம், வங்கத்தில் குப்தர்கள் காலத்தில் பொ.ஆ.400 இருந்து பொ.ஆ1000 வரை நிகழ்ந்தது. முதலில் வங்கத்திலும், பொ.ஆ.700 அளவில் ஒரிசாவிலும் ஆரியக் குடியேற்றங்களும், பிராமணியத் தழுவல்களும் நிகழ்ந்தன.

இவ்வாறு, வடஇந்தியாவில் வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவிய இந்திய - ஆரியர்கள், பிராமணியத்தை தழுவியவர்கள் ஆகியோர் பஞ்ச கெளடியர் என்று ஐந்து பெரும் பிரிவாகப் பின்னர் பிரித்தறியப்பட்டனர். தென்னிந்தியாவில் பரவிய இந்திய - ஆரியர்கள், பிராமணியத்தை தழுவியவர்கள் ஆகியோர், பஞ்ச திராவிடர் என்று ஐந்து பெரும் பிரிவாகப் பின்னர் பிரித்தறியப்பட்டனர்.

ஆரியர்கள் தம்மக்களைத் தனித்து அறியும் பொருட்டு, பண்டைய இந்தியாவை இருபெரும் பிரிவாகப் பிரித்து அறிந்தனர் என்பதற்குச் சான்றாக, பஞ்ச கெளடியர் மற்றும் பஞ்ச திராவிடர் என்ற சொற்தொடர் நமக்கு அடையாளப்படுத்துகிறது.

முதல் குடியேற்றக் காலகட்டத்தில், இரு முக்கியப் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. 1. ஆரியம், வடஇந்திய திராவிடமயமாதல்; 2. வடஇந்திய திராவிடம், ஆரியமயமாதல் என்ற பண்பாட்டுப் பரிமாற்றங்களே அவை. திராவிடம், ஆரியமயமாதலை “சம்ஸ்கிருதமயமாதல்” (Sankritization) என்ற சொல்லாலும்; ஆரியம், திராவிடமயமாதலை “திராவிடமயமாதல்” (Dravidanization) என்ற சொல்லாலும் குறிப்பிடுவர். இது, பண்பாட்டுத்தலத்தில் நிகழ்ந்த இரு சார் பரிமாற்றங்களை, மொழி அடையாளத்தோடு காண விரும்பியவர்கள் சூட்டியதாக இருக்கலாம். உண்மையில் நிகழ்ந்தது, இரு மொழிகளின் இரு சார் கலப்பு என்பதைவிட, இரு பண்பாட்டுக் கூறுகளின் இரு சார் பரிமாற்றம் ஆகும். மொழியிலும் கலப்பு ஏற்பட்டது. அதுவே, செம்மை சம்ஸ்கிருதத்துக்கு வித்திட்டது. அதுவே, நாம் வேண்டும் இந்தோ - ஆரிய மொழியின் புதிய காலகட்டங்களை வழியுறுத்துகிறது.

முதல் காலகட்டத்தில்தான், ஆரியர் மேய்த்தல் தொழிலில் இருந்து விலகி, வேளாண் தொழிலிலுக்கு மாறியதும் நிகழ்கிறது. அதற்கு முன்னரே, வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்த வடஇந்தியாவில் தங்கியிருந்த தமிழர் என்ற திராவிடர் குழுக்கள் மற்றும் ஆஸ்திரோ - ஆசிய மக்கள் ஆகியோருக்கு, ஆரியரின் பிறப்பின் அடிப்படையிலான சாதி முறை, தொழிலாளர்களை குறிப்பாக வேளாண் தொழிலாளர்களை அபரிமிதமாக வழங்கும் முறையாகக் கண்டு, அதனை தம் குழுக்களுக்குள்ளும் புகுத்தினர். அன்று வரை நீடித்திருந்த திணை வாழ்வியலும், தொழில்முறைக் குழுக்களும் திரிபடைந்து, தங்களைப் புதிய சமூக அமைப்புக்கும், பொருளாதார வாழ்வியலுக்கும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் பிராமணமயமாதல் மற்றும் திராவிடமயமாதல் என்ற இரு சார் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்வுகள் உருவாக்கின அல்லது நெருக்கின எனலாம்.

இக்காலகட்டத்தில், மக்களாட்சி முறையிலான குலத் தலைமையின் வீழ்ச்சியும் நிகழ்ந்தது. அரசு உருவாக்கம் எழுந்தது. அதன் முக்கியப் பண்பான மரபுரிமை கொண்ட ஆளும் குடியின் தோற்றம் உருவானது. அது செல்வத்தை ஒரு குடிக்கு உரியதாக மாற்றியது. அதனால், சமூகப் பொது உரிமைகள் தனியுடைமை அல்லது கோயில் அல்லது மடம் சார்ந்த தனி உரிமைகள் ஆயின. தம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோரை அது உடலுழைப்புக்கு மாற்றியது. அது, வேளாண் உற்பத்தியை வளர்த்து செல்வத்தைப் பெருக்கியது. இதற்கு, உழைக்கும் வர்க்கம் மிகுதியாகத் தேவைப்பட்டது. அதற்கு பிராமணியம் உதவியதால், அரசுகள் அதனைத் தழுவினர். அரசு புரிந்தவர்கள் சத்ரியர்கள் என பிராமணியத்தின்படி குறிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் ஆரியர்கள் ஆகவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில், வழிபாடு சார்ந்த, பொருளாதாரத்தில் மிக்க வலிமை கொண்ட கோயில் என்ற அமைப்பில் தலைப்பொறுப்பை ஏற்றவர்கள் மட்டும் ஆரியர்கள் என்ற பிராமணர்கள் ஆயினர். பிராமணியத்தை ஏற்ற பிறர், அவர்களது சமூக அமைப்பில் வெளியில் இருக்க வேண்டியதாயிற்று. அவர்கள் பிராமணியத்துக்கு வெளியில் இருந்தாலும், சாதி அமைப்பைத் தொடர வேண்டிய நிர்ப்பந்தம், உற்பத்தி சார்ந்த தொழிலாளி வர்க்கத்தினரின் தேவைக்காக உருவானது.

பிராமணியம் வழங்கும் சமூக அமைப்பினை விரும்பாதவர்கள் தனித்தும், தம் சமூக மரபினைத் தொடர விரும்பியவர்கள், காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றனர். அவர்களே இந்தியப் பழங்குடிகள் என பின்னர் வரையறுக்கப்பட்டனர். நாட்டு மக்கள் காட்டு மக்கள் ஆனதும், பெரும்பாலும் வளமான நிலத்தைவிட்டு நீங்கியதால், வேட்டைச் சமூக வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, பின்னர் வேட்டைச் சமூகமாகவே ஆயினர்.

ஆரியர்களின் பேச்சு வழக்கில் இருந்து ரிக் வேத மொழி நீங்கியதும், பிற்கால வேதங்களில் ரிக்கில் இருந்து விலகிய பரிமாணம் கொண்டதும், செம்மை சம்ஸ்கிருதம் உருவாக்கமும் நிகழ்ந்ததும் இந்தச் சமூக நிகழ்வுகளின் பின்புலத்தில்தான். அதுபற்றி தொடர்ந்து வரும் அத்தியாயத்தில் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com