அத்தியாயம் 49 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 42

கடல் கொண்ட இந்த புவிப்பரப்பில்தான் மாந்தர் இனமே தோன்றியது; தமிழினமே அந்த முதல் மாந்த இனம்; தமிழ் மொழிதான் முதலில் தோன்றிய மொழி; பிற மொழிகள் யாவும் இதில் இருந்து பிறந்தவையே...

திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

இன்றைய தமிழ்ச் சமூகத்தின் வேர்களைத் தேடுவது என்பது தமிழரின் பண்பாட்டில் தனித்த போக்காக உள்ள திணை வாழ்வியலை முழுமையாக அர்த்தப்படுத்திக்கொள்ள நம்மை நகர்த்துகிறது.

தமிழ்நாட்டில் வாழும் மக்கள் இனங்கள் குறித்து அறிமுகம் கொள்ளும்பொழுது, இங்கு முக்கியமான நான்கு இனங்கள் வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். அவர்கள் –

1. தமிழர்கள் என்ற திராவிடர்கள்

2. நீக்ராய்ட் என்ற நீக்ரோக்கள்

3. முதல் நிலை ஆஸ்திரேலியர்கள்

4. ஆரியர்கள்.

இவர்களுள், இம்மண்னின் பூர்விகக் குடிகள் அல்லது முதலில் குடியேறிய மூத்த குடி எது என்பது விவாத்துக்கு உரியதாகவே உள்ளது. ஏனெனில், தமிழகத்தில் வாழும் மக்கள் இனத்தினர் குடியேறிகளே என்ற ஐரோப்பிய வரலாற்றுச் சிந்தனை முறையின் தாக்கம் அத்தனை வலுவாக உள்ளது. அண்மைக்கால அகழாய்வுச் சான்றுகளை, இங்கு குறைந்தது ஐந்து லட்சம் ஆண்டுகள் வரையிலான பழைமை வாய்ந்த பழைய கற்கால மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் நீக்ரோக்கள் என்ற ஒரு பொதுக்கருத்து உண்டு. பொதுக்கருத்தை மறுக்கும் சான்றுகள் வெளிப்பட்டிருப்பதையும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்நான்கு இனங்களுமே குடியேறியினங்கள் என்பது இதன் பொதுக்கூறாக உள்ளது என்பது தற்பொழுது நினைவில்கொள்வோம். இவ்வினங்களுக்கு இடையிலான வித்தியாசங்கள் கீழ்க்கண்டவாறு மானுடவியலாளர்களால் வகைப்படுத்திக்கொள்ளப்படுகிறது.

1. தமிழர் என்ற திராவிடர்கள் நிலநடுக்கடல் இனம்

இவ்வினத்தினர் நீண்டு ஒடுங்கி உயர்ந்த தலைவடிவமும், குறுகியதும் ஆனால் அகலமானதுமான மூக்கும், மாநிறமும் கொண்டவர்கள்.

2. நீக்ராய்ட் என்ற நீக்ரோக்கள்

குடையான உடல், அகன்ற தலைவடிவம், தட்டையான மூக்கு, சுருட்டை முடியும் கரிய நிறத்தையும் உடையவர்கள். வேட்டைத் தொழிலை வாழ்வியலாகக் கொண்டவர்கள். ஆப்பிரிக்க இனத்தின் சாயல் கொண்டவர்கள்.

3. முதல் நிலை ஆஸ்திரேலியர்கள்

நீண்ட தலைவடிவம், அகன்ற மூக்கு, சுருளும் தன்மை கொண்ட முடி, கருமை நிறத்தையும் கொண்டவர்கள். பொதுவில், இவர்களும் நிலநடுக்கடல் மக்கள் இனத்தின் உடல் அமைப்பையும், வாழ்வியலிலும் அத்தன்மையான பண்பாட்டையே வெளிப்படுத்துபவர்கள். கற்காலத்தில் இருந்து வாழும் இவ்வினத்தினர், தமிழகப் பரப்பினுள் குடியேறியது குறித்து இரு கோட்பாடுகள் முன்நிறுத்தப்படுகின்றன. இவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து தென்கிழக்காசியா வழியாக இந்தியாவில் புகுந்தனர் என்பது ஒன்று; மற்றொன்று, இந்தியாவில் இருந்து தென்கிழக்காசியா வழியாக ஆஸ்திரேலியாவில் புகுந்தவர்களே இவர்கள் என்பது.

இவ்விரு கோட்பாடுகளுக்கும் மாறாக, பழைய கற்காலத்தில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரை பரவிய இனமே முதல் நிலை ஆஸ்திரேலியர்கள் என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இக்கருத்து இவர்களை நிலநடுக்கடல் மக்களில் இருந்து வேறானவர்களாகக் காட்டுகிறதா என்பதில் தெளிவில்லை என்றாலும், மனிதச் சுவடே கண்டிராத ஆஸ்திரேலியாவில், இவர்கள் முதலில் புகுந்த காலம் இன்றைக்கு 60,000 (அறுபதாயிரம்) ஆண்டுகளுக்கு முன்னர் என்பதும் (சிலர் 40,000 - நாற்பதாயிரம் எனக் கொள்வர்), ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் எனப்படும் இவர்களது பேச்சுமொழி தமிழ் மூலத்தைக் கொண்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

4. ஆரியர்கள்

நீண்ட தலை, ஒடுங்கி நீண்ட மூக்கு, உயரமான உடல் அமைப்பு, கருமை மங்கிய மயிர் நிறமும் பொன்னிறமும் உடையவர்கள்.

இனக்கலப்பும், பண்பாட்டுக்கலப்பும் இன்றைய நிலையில் ஆரியர் தவிர பிற மூன்று இனங்களின் தனித்தன்மை காணமுடியாது, இன்றைய மொழி உட்பட தமிழர் பண்பாட்டின் சாயல்களோடு வெளிப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மலேனேசிய-போலினேசிய கலப்பு இனங்களும் உள்ளன என்ற முனைவர் பி.எஸ்.குகா அவர்களின் கருத்தும், தமிழகத்தின் தெற்கிலும், இலங்கையின் வடக்கிலும் வாழும் வெட்டி (Veddid - வேடர் என்றும் தமிழ்ப்படுத்தப்படும்) மக்கள் இனத்தில் முதல் நிலை ஆஸ்திரேலிய இனச்சாயலைக் காணலாம் என்ற கருத்தும், தோல் வண்ண அடிப்படையில் தமிழகத்தில் மலேனோ இந்தியர்களும், வெட்டிகளும், முதல் நிலை ஆஸ்திரேலியர்களும் வாழ்ந்து வருகின்றனர் என்ற ஜார்ஜ் ஆலிவரின் கருத்தும், தமிழகத்து கடற்கரைப் பகுதிகளில் போலினேசியக் கலப்பு மிகுதியாக உள்ளது என்ற ஜேம்ஸ் ஹார்னல் கருத்தும் மலெனோ- பொலினேசிய இனத்தினை அடையாளம் காட்டும் ஆய்வுகளும் கருத்துகளுமாகும். நீக்ரோ மற்றும் முதல் நிலை ஆஸ்திரேலிய இனமும் கலந்து உருவானதே முதல் நிலை திராவிடர்கள் என்று திராவிடர்கள் யார் என்பதற்கு விடை காண முயன்ற ஹீட்டன் என்பவரின் முன்வைப்பும் நம்மிடையே நிலவிவரும் கருத்துருவங்கள்.

எவ்வாறாயினும், இன்றைய அளவில் தமிழகத்து மக்கள் இனத்தில் நிலநடுக்கடல் இனம் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் மிதகறுப்பின தமிழர்களும், முதல்நிலை ஆஸ்திரேலியர்களும், நீக்ரோ சாயல் மக்களும் உள்ளனர் என்பதே அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும். தமிழகத்தில் ஆரியர்கள் குடியேற்றம் என்பது ஒரு வரலாற்றுக்கால நிகழ்வு. அது தமிழகத்துச் சங்க காலத்தினை ஒட்டியது.  

இப்பின்னணியில் தமிழரின் வேர்களைத் தேடும்போது, வழக்கில் உள்ள மூன்று கருதுகோள்களையும் அவற்றின் ஊடாட்டங்களையும் கருத்தில் கொள்ளாது தேடுவது பொருத்தமற்றதாக்கிவிடும்.

  1. தமிழர், இந்தியாவின் பூர்வ குடிகளில் ஒருவர். தமிழர்களின் இந்தியா என்பது அகன்ற இந்தியாவைக் குறிக்கும். அகன்ற இந்தியா என்பது இன்றைய ஆப்கானிஸ்தன் வரை விரவியிருந்த ஒன்று.
  2. திராவிடர் என்ற தமிழர், இந்திய நாட்டுக்கு அயலில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக, நிலநடுக்கடல் நாடுகள் என்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் என்றும் குறிப்பிடப்படும் பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.
  3. தமிழர்கள், குமரிக்கண்டத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். குமரிக்கண்டம் மூழ்க, அங்கிருந்து வடக்காகப் பரவி மனித இனம் வெளிப்படுத்திய தொன்மையான பல நாகரிகங்களைப் படைத்தவர்கள்.{pagination-pagination}

கருதுகோள்களின் ஊடாட்டம்

கருதுகோள் 1 - இந்தியாவின் பூர்வ குடிகள்

தமிழர்கள், இன்றைய இந்தியாவின் பூர்வ குடிகளுள் ஒருவர். பழைய கற்காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை தொடர்ச்சியாக பல மாந்தரின பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தியவர்கள். ஒரு காலகட்டத்தில், குறிப்பாக செம்பு – உலோகக் காலத்தில் ஏறத்தாழ மு.பொ.ஆ.3000 அளவிலான சிந்துவெளிப் பண்பாட்டை வெளிப்படுத்திய காலகட்டங்களில், இவர்கள் வடமேற்கே இன்றைய ஆப்கானிஸ்தான் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவலாக வாழ்ந்திருந்தனர்.

மு.பொ.ஆ.3000-க்கும் முந்தைய காலகட்டங்களில், ஒருசாராரின் கருத்துப்படி, மெசபடோமியா, எகிப்து, அசிரியா பகுதிகளில் எழுந்த நாகரிகங்களோடு இவர்கள் தொடர்புகொண்டிருந்தனர். இவ்விடங்களில் இவர்கள் தமது வணிகக் குடியேற்றங்களை ஏற்படுத்தியிருந்தனர். இவ்விடங்களின் தொன்மையான ஊர்ப் பெயர்கள் பல தமிழிலும் தமிழ்ச்சாயலிலும் அமைந்துள்ளன. இவ்விடங்களில், தமிழர் மரபுக்குரியதாகக் கருதப்படும் லிங்க வழிபாட்டின் எச்சங்கள் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களப்பரப்பாய்விலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மற்றொரு சாரார், மறைந்த நாகரிகங்களான எல்லம் (பாரசீகத்தின் மேற்கு), சுமேரியா (பாரசீக வளைகுடா), எகிப்து, பாபிலோன் (சுமேரியா மற்றும் அக்கேடியா இரண்டும் சேர்ந்த நாடு), மற்றும் சிந்துவெளி நாகரித்தை தோற்றுவித்தவர்கள் இவர்களே என்பர். இக்கருத்துக்கு முன்னோடிகளாக, டாக்டர். எச்.ஏ. ஹால், எச். ரிஸ்லே, வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், ஹீராஸ் பாதிரியார் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இக்கருத்துக்கு மொழி, உடலமைப்பு, தொல்பொருட்கள், பண்பாட்டு ஆகியவற்றுக்கு இடையேயான ஒற்றுமைக் கூறுகள் இவர்களால் சான்றாக்கப்படுகின்றன. மேலாக, இந்நாகரிகத்துக்கும் மக்களுக்கும் ஒரு பொது அடிப்படையைக் காணமுடிகிறது.

இவ்விடங்களில், அதாவது இன்றைய அரேபியப் பகுதிகளில் வாழ்ந்த பழைய மக்களாகிய செமித்தியர் மற்றும் செமித்தியர் அல்லாதார் என்னும் இரு பிரிவு அரசர்களுக்கு இடையே போட்டி இருந்தது. செமித்தியர் அல்லாதோரை அடையாளம் காண்பதில் சில கருத்துருவங்கள் உள்ளன. ஹால், சிந்து ஆற்றுப் பகுதியில் இருந்து சென்றவர்களே சுமேரியர் ஆவர் என்றும், சிந்துவெளியில் இருந்து சென்றவர்களே மேற்கு ஆசிய மக்கள் என ஹீராஸும் தெரிவிக்கின்றனர். சுமேரியர் அப்பகுதியின் ஆதிக்குடிகள் அல்லர், அங்கு குடியேரியவர்களே என்பது இக்கருத்துக்கு அடிப்படையாகிறது.

மேற்கு ஆசிய, எகிப்திய போன்ற உலக நாகரிகங்களுக்கு அடைப்படையாக அமைந்தது சுமேரிய நாகரிகம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுவதற்கு மறுப்பில்லை. எலமைட் நாகரிகம் அறியப்படுவதற்கு முன்னர் எழுந்த இக்கருதுகோள், எலமைட் நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்களும் குடியேறியவர்கள் என்ற உண்மையாலும், அவர்களும் சிந்துப் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்தவர்கள் என்ற அறிதலால், அம்மக்கள் குறித்து விவாதங்கள் ஏதுமில்லை. இக்கருத்துகளின் முன்னோடியான ஹால், இக்கருத்துகளை சிந்துவெளி நாகரிகம் மொகஞ்சதோர-அரப்பா-சாஞ்சிதோர ஆகிய பகுதிகளில் அகழ்ந்து வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னர் கூறியது என்பது சுவாரஸ்யம் நிறைந்ததும் கவனிக்கத்தக்கதும் ஆகும்.{pagination-pagination}

கருதுகோள் 2 - நிலநடுக்கடல் நாடுகளில் இருந்து குடியேறியவர்கள்

திராவிடர் என்ற தமிழர், இந்திய நாட்டுக்கு அயலில் இருந்து வந்தவர்கள். தமிழர்கள் வருகைக்கு முன்னர், இந்நாட்டில் வேறொரு கூட்டத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் திராவிடர்களுக்கு முற்பட்டவர்கள் எனக் குறிக்கப்படுகின்றனர். புதிய கற்காலத்தில் இவர்கள் அலைஅலையாக தென்னிந்தியாவுக்குள் புகுந்தனர் என்பர்.

இக்கருத்தை மறுக்கும் வி.ஆர். இராமசந்திர தீட்சிதர், “திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் மற்றும் பழைய திராவிடர் (Pre-Dravidians and Proto-Dravidians) என்ற கொள்கைகள் இருபதாம் நூற்றாண்டுக் கற்பனை. தொல்பொருள் ஆய்வாளர்களோ, வரலாற்று ஆசிரியர்களோ ஒருவர்கூட, தென்னிந்தியாவில் ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து வளர்ச்சியுற்ற பண்பாட்டுக் காலங்களில், வெளியில் இருந்து புதிய மக்கள் புகுந்து மாறுதல்களைக் கொண்டுவந்தார்கள் என்று சொல்வதற்கு ஏற்ற ஆதாரம் ஒன்றைக்கூட காட்டமுடியாது உள்ளனர். பழைய கற்காலப் பண்பாட்டுக்குப் பின் புதிய கற்காலப் பண்பாடும், அதற்குப் பிறகு இரும்புக் காலப் பண்பாடும் முறையே ஒன்றை ஒன்று தொடர்ந்து வந்தன என்று கொள்வதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. தொல்லியல் அகழாய்வுகளும் இதனை வலிமையாக நிறுவுகின்றன” எனக் காட்டுகிறார்.

இந்நிலையில், “காடுகளிலும் மலைகளிலும் வாழும் மக்கள் குலமுறையாகத் தென்னிந்திய மக்களோடு பொருந்தாதவர்கள் என்பது ஏற்கத்தக்கதன்று. புதிய கற்காலத்தில் இருந்து தென்னிந்தியாவில் ஐந்து வகையான பண்பாடுகள் இருந்து வருகின்றன என்பதை, தென்னிந்திய மக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வோர் நன்கு அறிவர்.*1 வேட்டையாடியும் மீன்பிடித்தும் வாழ்வோர் பழைய கற்காலத்தை சார்ந்தவர்கள். அவர்கள் தொடர்ச்சியாக காடுகளிலும், கடற்கரைகளிலும் வாழ்ந்தமையால், அவர்களின் மனப்பாங்கும், வாழ்க்கைப் பழக்கவழக்கங்களும் தனிமுறையில் வளர்ச்சி அடைந்தன. நிறத்தைப் பற்றி நாம் ஆராய வேண்டியதில்லை. இது சுழலியல், கையாளும் தொழில் காரணங்களால் உருவாவது.

பயிரிடும் தொழில் வளர்ந்ததால் பழைய பொருளாதார வழிகள் முற்றாக மாற்றம் கொண்டன என்று குறிப்பிடுவதைவிட, சில சூழல்களில் விடப்பட்டோர் பழைய தொழில்களையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி தம் வாழ்க்கையை நடத்தினர். இதனால் வேளாளர், காராளர், ஆயர் என வகைவகையான பண்பாடுகளை எய்தினர். குறிஞ்சி மக்களோடு பாலை நிலை மக்கள் ஒன்றுபட்டனர். தமிழ்நாட்டில் பாலை என்று தனி நிலம் இல்லை; ஆகவே, கடற்கரைகளிலும் மலைகளிலும் வாழும் மக்களை திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் என்பது ஏற்கத்தக்கதன்று” என்று கருத்துரைப்பார்.*2

பி.தி. சீனிவாச ஐயங்காரின் கருத்துக்கள்*3, இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கதாக உள்ளன. “தமிழ் மொழிக்குரிய மக்களைப் போலவே, அம்மொழியும் தென்னிந்தியாவிலேயே தோன்றி ஒரு குழப்பமும் இன்றி உயர்ந்த இலக்கிய வளர்ச்சி நிலையை அடைந்தது. கற்காலம் முதல் தமிழ்க் குலம் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்ததாக இருந்துவருகிறது. தமிழ் மொழியைப் பயின்ற அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலர், தமிழ் மொழி வழங்கிய பழைய மக்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தார்கள் என்றும், அதற்குக் காரணம் பலூசிஸ்தானத்தில் வழங்கும் பிராகூய் மொழியில் தமிழ் மொழி இனத்தைச் பல சொற்கள் காணப்படுகின்றன என்றும் தம் மனம்போல் கூறினர். பிராகூய் மொழியில் தமிழுக்கு இனமுடைய சொற்கள் காணப்படுதல், தமிழ் இந்திய மொழியன்று எனக் கூறுவதற்குப் போதுமான ஆதாரம் ஆகாது.

இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், உலகில் வாழ்ந்த பழைய மக்கள் குலத்தினரை எல்லாம் வேறு எங்கோ இருந்து வந்தவர்கள் எனக் கூறுவது இயல்பாக இருந்தது. அவர்களுக்குத் தென்னிந்தியாவில் கற்காலப் பண்பாடு எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்றும், தமிழின் பழைய அடிப்படையில் தமிழர் தென்னிந்தியாவில் அறியமுடியாத காலம் முதல் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் போதிய சான்றுள்ளன என்பதையும் அறியாது இருந்தார்கள். புதிய கற்காலப் பண்பாட்டின் மத்திய இடம் தென்னிந்தியாவே. எகிப்தில் நீல ஆற்றங்கரையிலிருந்து மறைந்துபோன பழைய நாகரிகத்தின் சின்னங்கள் சில, இன்னமும் தக்காணத்தில் (அதாவது, தென்னிந்தியாவில்) உள்ளன. எலியட் சிமித் என்பவர், கிழக்கு ஆப்பிரிக்கா மக்களிடையே காணப்பட்ட, அதே நேரத்தில் இன்றும் தக்காணத்தில் காணப்படும் திராவிட மக்களின் நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை எடுத்துக்காட்டி, இரு மக்களுக்கும் தொடக்கம் ஒன்று எனக் குறிப்பிடுகிறார்” எனக் காட்டுவார்.{pagination-pagination}

குமரிக்கண்டம் என்ற லெமூரியாக் கண்டம் கோட்பாடு

கடல்கொண்ட தென்னாடு பற்றிய தமிழ் இலக்கியக் குறிப்புகளும், அவற்றுக்கான உரை விளக்கங்களும், 19-ம் நூற்றாண்டின் சில ஐரோப்பிய அறிஞர்களின் கூற்றுகளும் இணைந்த கோட்பாடுதான் இது. இக்கோட்பாட்டின்படி, லெமூரியா நாகரிகத்தின் தொட்டில்; கடல் கொண்ட அந்நாட்டிலிருந்து தப்பிச் சென்றவர்கள் லெமுரியாவுக்கு வடக்கே இருந்த இந்தியாவிலும் நிலநடுக்கடல் நாடுகளிலும் பரவி, சுமேரியா, பாபிலோனிய, எகிப்து நாகரிகங்களை உருவாக்கினார்கள். அன்றிருந்த நிலப்பாலங்களைப் பயன்படுத்திக்கொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறினர்.

குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம், கோண்டுவானாக் கண்டம் ஆகிய மூன்றும் ஒரே நிலப்பரப்பையே குறிக்கின்றன. கடல் கொண்ட இந்த புவிப்பரப்பில்தான் மாந்தர் இனமே தோன்றியது; தமிழினமே அந்த முதல் மாந்த இனம்; தமிழ் மொழிதான் முதலில் தோன்றிய மொழி; பிற மொழிகள் யாவும் இதில் இருந்து பிறந்தவையே போன்ற கருதுகோள்கள் உருவாக்கப்பட்டன.

இவ்வகையான கருதுகோள்களின் ஊடாட்டங்களின் வழியே, தொல்லியல் மானுடவியல் சான்றுகளை ஒப்பிட்டு ஒரு முடிவு காண்பது மிகச் சிரமமானது. ஆனால், திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ் சமூகம் பற்றிய தேடுதலுக்கு இந்தச் சிரமமான ஒப்பாய்வு முக்கியமானதே.

(தொடரும்)

மேற்கோள் குறிப்புகள்

1. தமிழரின் ஐந்திணைப் பண்பாடு, புதிய கற்காலம் முதல் நிலைபெறத் தொடங்கியது என்ற கருத்தை முதலில் வெளியிட்டவர் இவர். தொல்காப்பியருக்கு சற்று முன்னரும், சங்க காலத்திய வாழ்வியல் முறை என்ற கருத்துகளை மறுக்கும் முதல் சான்றும் இவரே. தென்னிந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு மு.பொ.ஆ. 5000 - 4000 அளவில் நிகழத் தொடங்கியது என்றால், இன்றைக்கு 7000 முதல் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டு ஐந்திணை வாழ்வியல் மொக்குவிடத் துவங்கி, ஓரிரு ஆயிரம் ஆண்டுகளில் முழுமையான ஐந்து திணை வாழ்வியலும் நிலைபெற்று தனித்தனி பண்பாடாக இந்நிலத்தில் நிலைத்தன எனலாம்.

2. V.R.Ramachandra Dixidar, Origin and Spread of the Tamils, p.28.

3. P.T.Srinivasa Iyangar, Pre Aryan Tamil Country, p.12.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com