அத்தியாயம் 44 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 37

இந்தியா, மேற்கு உலகின் முந்தைய நாகரிகச் சமூகங்களில் இருந்து எந்தவகையில் பயனடைந்திருந்தாலும், மேற்கு உலகுக்கு இரும்பையும் எஃகையும் வழங்கியதன் மூலம், அதற்கு மிகச் சிறந்த கைமாற்றை செய்திருக்கிறது...

பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

பிற திணை நிலங்கள் எல்லாம் மருதத் திணை நிலமாக மாற்றம் செய்யப்பட இரும்பு முதன்மையான பங்களிப்பை வழங்கியது. தென்னிந்தியாவைப் பொருத்த அளவில், நெல் – இரும்பு – மருத நிலமாக்கல் - அரசு உருவாக்கம் என்பவை ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த வரலாற்றைக் கொண்டது. உலக நாகரிகங்களில் இரும்புப் பண்பாடு என்பது மனித இனப் பரிணாம வளர்ச்சிப் படிநிலைகளில், புதிய கற்காலத்துக்குப் பிறகு செம்பு உலோகப் பண்பாட்டுக்கும், வெண்கல உலோகப் பண்பாட்டுக்கும் அடுத்து மூன்றாவதாக உருவானப் பண்பாடாகும்.

ஆனால், இரும்புக் காலத்துக்கு தென்னிந்தியா நுழைந்தது என்பது உலகலாவிய தனித்துவமிக்க ஒரு பண்பாட்டு வளர்ச்சி நிகழ்வாக உள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க பண்பாட்டு வளர்ச்சி நிகழ்வு வடஇந்தியாவில் ஏற்படவில்லை. அதற்கான சான்றுகளையும் அது கொண்டிருக்கவில்லை. அல்லது பண்பாடாக வளர்ச்சி அடையாத, ஈர்க்காத வலு குறைந்த சான்றுகளையே கொண்டுள்ளது. இங்கு சிந்துவெளி நாகரிகத்தின் சான்றுகள் தென்னிந்திய இரும்புக் கால நாகரிகத்துக்கு முற்பட்டவை என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. இப்பின்னணியில், தென்னிந்தியாவில் புதுக் கற்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இரும்பு தோன்றிவிட்டது என்று ஒரு பொதுவான கருத்து முன்வைக்கப்படுகிறது. பெருங் கற்படைப் பண்பாட்டுச் சுவடுகள் வெளித்தெரியத் தொடங்கிய மு.பொ.ஆ.1500 அளவிலான காலகட்டக் புதுக் கற்காலத்தின் இறுதிக்காலம் என்று ஒரு பொது வரையறையை அடையலாம்.

“ஐரோப்பாவில் இரும்புத் தொழில் தொடங்குவதற்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் செய்யப்பட்டு வந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்; அங்கு இரும்பை உருக்கிக் காய்ச்சுவதை தற்செயலாகவே ஆதிகாலத்திய மக்கள் கண்டறிந்திருக்க வேண்டும். கற்கால மக்கள் பெரிதும் குன்றுகளிலும், மலைச்சரிவுகளிலும், வளமிக்க செறிந்த காடுகளின் ஓரங்களிலும் வாழ்ந்தனர்; இரும்பினைக் கண்டறிந்த பிறகே, ஆதி மனிதர் காட்டினைத் தம்முடைய வாழிடமாகக் கொண்டிருக்கலாம் என்று தேன்றுவதே பொருத்தமாகக் தோன்றுகிறது; இரும்புக் கருவிக் கால நாகரிகமே, குன்றுகளில் வாழ்ந்த மக்களைக் காடுகளில் சென்று வாழுமாறு தூண்டியது; மிகப் பழைய காலம் முதலே இரும்பைப் பயன்படுத்தி வருவதற்குரிய தடயங்கள் இந்தியாவில் கிடைத்துள்ளன. மேலும், துருபிடிக்காத வகையில் இரும்பைச் செய்யும் சிறப்புமிக்க ஒரு முறையையும் அவர்கள் அறிந்திருந்தனர்” என்று தென்னிந்தியாவில் இரும்புக் காலம் தோன்றியது குறித்து உலோகத் தொழில் கலையியல் வல்லுநர் போராசிரியர் கெளலாந்து குறிப்பிடுவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.*1

இங்கு, ராபர்ட் புரூஸ்புட் அவர்களின் கூற்றும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது. “தக்காணம், மைசூர் முதலான பழைய இடங்கள் பலவற்றில் கிடைத்த சான்றுகள், புதுக் கற்காலத்தவரின் நேர் வாரிசுகளாகவே இரும்புக் கருவிகளைக் கையாண்டவர்களாகக் கொள்வது மிகப் பொருத்தமுடையது எனக்கொள்ள இடம் தருகின்றன”.*2 இருந்தும், இருவரும் காலத்தை வரையறுத்துக் கூறவில்லை என்பதையும், தென்னிந்தியாவில் இரும்பு குறித்த ஆய்வுகள் 150 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்தும், முழுமை பெற்றுவிட்டது என்று இன்னும் சொல்லமுடியாது உள்ளதையும் கருத்தில் கொள்வோம்.

தமிழக முக்கிய இரும்புக் கனிமங்கள்

மாக்னடைட், ஹேமடைட், லிமோனைட், சிட்ரைட் ஆகிய நான்கு வகை இரும்புத் தாதுக்களில் இருந்து இரும்பு கிடைக்கிறது. இவற்றுள், மாக்னடைட் தாதுவில் இருந்துதான் மிக அதிக சதவீத இரும்பு கிடைக்கிறது. இது இயற்கையாகவே நல்ல கருப்பு நிறம் கொண்டதாகும். ஹேமடைட் வகை தாதுவிலும் இரும்பு நிறைய இருக்கிறது. இது இயற்கையாக சிவப்பு நிறம் கொண்ட தாதுவாகும். லிமோனைட் தாது மற்ற தாதுக்களைவிட குறைவான இரும்பையும், பழுப்பு நிறத்தையும் கொண்டது. சிட்ரைட், மஞ்சள் நிறம் கொண்ட இரும்புத் தாதுவாகும்.

மாக்னடைட் தாதுவில் அதிக அளவில் காந்த சக்தி இருப்பதால், இத்தாதுவே இருப்புத் தாதுக்களில் மிகச் சிறந்ததாக விளங்குகிறது. மற்ற தாதுக்களைவிட குறைவாகவே மாசுப்பொருட்கள் காணப்படுவதாலும், இத்தாது மிக உயர்தரமானதாக விளங்குகிறது. மாக்னடைட் தாது அதிக வெப்பம் தாங்கிக் கற்களையும், சாணைக் கற்களையும் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இத்தாதுவைக் கொண்டு, பல்வேறு துறையினர் பல்வேறு பயன்பாட்டைக் கொண்ட பொருட்களைத் தயாரிக்கின்றனர். இதுவே தேனிரும்பு என்று தமிழில் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில், முதல்தரமான மாக்னடைட் இரும்புத் தாதுக்கள் சேலம் அருகே அமைந்துள்ள கஞ்சமலை, கோதுமலை, தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் அமைந்துள்ள தீர்த்தமலை, நாமக்கல் மாவட்டத்து கொல்லைமலை, திருச்சி மாவட்டத்து பச்சமலை ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் இரும்புத் தாதுக்கள் உலகிலேயே சிறந்தவை என்பதால், உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையை அடுத்து அமைந்துள்ள வேதியப்பன் மாலைக்குன்றுப் பகுதிகளில் கிடைக்கும் இரும்பும், தருமபுரி மாவட்ட தீர்த்தமலை இரும்புத்தாதுவும் படிவுப் படுக்கைகளாகக் கிடைக்கின்றன,

இரும்பு உருக்கும் தொழிலுக்கு இன்றியமையாத துணைப்பொருளான சுண்ணாம்புக்கல்லும் இன்றைய சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டப் பகுதிகளில் பெருமளவு கிடைக்கிறது. இது, இப்பகுதிகளில் இரும்பு உருக்கும் தொழில் தொன்மையான காலத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலுகூட்டுவதாக உள்ளது.

கஞ்சமலைப் பாறைகளின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. கஞ்சமலை, கோதுமலை, தீர்த்தமலை, கொல்லிமலை, பச்சமலை ஆகியவை அமைந்துள்ள நில அமைப்பானது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் புள்ளியில், பெரும்பான்மையாக இரு மலைத்தொடர்களின் தொடர்பு அற்றும், ஒன்றுக்கொன்றும் தொடர்பற்ற தனித்தனி குன்றுகளாகவும், சிறிதே இரு மலைத்தொடர்களின் அறுபட்ட தொடர்பைக் கொண்டும் இருப்பதைக் காணலாம். இதனாலேயே, எண்ணிக்கை மிகுதியான சிறு சிறு பள்ளத்தாக்குகளால் நிரம்பியதாக இப்பகுதி காட்சி அளிக்கிறது.

மேற்குறிப்பிட்ட இடங்களன்றி, தமிழகம் முழுவதும் பரவலாக இரும்புத் தாது கிடத்துள்ளதை, கொடுமணல்*3, ஆதிச்சநல்லூர்,*4 இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்து குட்டூர்*5 மற்றும் செங்கல்பட்டு மாவட்ட*6 அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

பொதுவில், இரும்புத் தாதுக்கள் பூமிக்கடியிலும், மலைக் குன்றுகளிலும் கிடைத்தாலும், இரும்பை நேரடியாக எடுத்துவிட முடியாது. ஏனெனில், இரும்புத் தாதுக்களில் இரும்பைத் தனிமைப்படுத்தி எடுக்க அதிக அளவு வெப்பம் தேவைப்படும். அதனால், அந்த வெப்பத்தை உண்டாக்கக்கூடிய எரிபொருள் மரமாகவோ, நிலக்கரியாகவோ, வேறு எந்தப் பொருளாகவோ இருக்கலாம். இந்த எரிபொருள் பெரும்பாலும் இரும்புத்தாதுக்கள் கிடைக்கும் இடத்தின் பக்கத்திலேயே இருந்திக்க வேண்டும். ஏனெனில், எரிபொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதால், இரும்புத் தாதுக்கள் கிடைக்கும் இடத்துக்கு அண்மையிலேயே கிடைக்கும் எரிபொருளையே பண்டைக் காலத்தில் மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

ஒருபுறம் பெரிய தொழிற்சாலைகள் அமைத்து இரும்பு உருக்கும் தொழில் நடைபெற்றது போலவே, ஆங்காங்கே அடர்காடுகளின் நடுவேகூட சிறு உருக்கு உலைகள் மூலம் இரும்பை உருக்குவது குடிசைத்தொழிலாக செய்யப்பட்டு வந்ததை தருமபுரி, பென்னாகரம், கிருஷ்ணகிரி, ஒசூர், மேட்டூர் வட்டங்களில் ஆங்காங்கே காணக் கிடைக்கும் இருப்பு உருக்கிய கசடுகளின் எச்சங்களில் இருந்து அறிய முடிகிறது.*7 பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில்கூட, இவ்வாறு சிறுசிறு அளவில் நடைபெற்று வந்ததைக் கண்ணுற்று புச்சனன் விவரித்துள்ளார்.*8

துவக்கக் காலச் சான்றுகள் கொண்டு, தென்னிந்தியாவின் இரும்புக் காலம் மு.பொ.ஆ. 500 அளவில் துவங்குவதாகப் பல்வேறு தொல்லியல் அறிஞர்களும், வரலாற்று ஆசிரியர்களும் பதிவு செய்துள்ளனர். மாறாக, இன்றளவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுச் சான்றுகள் கொண்டு பார்க்கும்போது, மு.பொ.ஆ, 1300 முதல் மு.பொ.ஆ. 500 வரை தொன்மை கொண்ட இரும்பு உருக்கு உலைகளும், சுடுமண் ஊதுகுழல்களும் கிடைத்துள்ளதைக் கொண்டு, பண்டைய தமிழகத்தில் இரும்பு உருக்கும் தொழில் மு.பொ.ஆ. 1300-களுக்கு முற்பட்டே துவங்கியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

உலக வரலாற்றில் இரும்பு பற்றிய செய்திகள்

பொதுவான ஒரு வரையறையில், உலகளவில் இரும்புக் காலம் மு.பொ.ஆ.1000-ம் ஆண்டு அளவில் தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. இது பெருமளவில் இரும்பு புழக்கத்தில், அதாவது மக்கள் புழக்கத்துக்கு வந்த காலக்கட்டத்தைக் குறிப்பதாகவே, குறிப்பாக பண்டைய அனடேலியா, அசிரியாப் பகுதிகளில் நிகழ்ந்ததைக் குறிப்பதாகவே மதிப்பிடமுடியும். இரும்பு குறித்தான மு.பொ.ஆ.1000-க்கும் முற்பட்ட தொன்மையான சான்றுகள் உதிரி உதிரியாகக் உலகலாவிய நிலையில் கிடைத்துவருகின்றன. மிகத்தொன்மையான இரும்புச் சான்றுகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை உலோகவியலாளர்கள் இன்று மதிப்பிட்டு வருகின்றனர். அவர்கள் மதிப்பீட்டில், துருப்பிடித்து, உருக்குலைந்து மக்கும் தன்மை முதன்மையான இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, இருப்பின் பயன்பாடானது முழுமையான செம்புக் காலத்துக்கு முன்னரே மனிதனால் அறியப்பட்டிருக்க வேண்டும் என்றும் முன்மொழியப்படுகிறது.*9 இருந்தும், அது பண்பாடாக மலர்ந்தது செம்புக் காலத்துக்குப் பின்னர்தான்.

உலக வரலாற்றில் இரும்பு குறித்து நம்மிடையே நிலவிவரும் முரண்பாடுகளை அறிய வேண்டியது அவசியமாகிறது. இதில் இரண்டு போக்குகளை நாம் அடையாளப்படுத்திக்கொள்ளலாம். அவை - 1. இரும்பு மிகவும் தொன்மையான உலகம்; அது பண்டைய தென்னிந்தியாவில் இருந்து மேற்கு உலகுக்குப் பரவியது. 2. மேற்கு உலகில் இருந்து இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு இரும்பு பரவியது.

பொதுவான வரையறையில், உலக வரலாற்றின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எகிப்திய பிரமிடுகள் கட்டப்படுவதற்கு முற்பட்ட, அதாவது மு.பொ.ஆ. 3000-க்கு முற்பட்ட காலகட்டமாகும். மனிதன் உருவாக்கிய இரும்புப் பொருட்களின் தொன்மை குறித்த சான்றை, அமெரிக்க முன்னாள் அதிபர் ஹெர்பட் ஹேவாரல் வெளிப்படுத்தினார். ஹெர்பட் ஹேவாரல், அமெரிக்க அதிபராவதற்கு முன், புகழ்பெற்ற சுரங்கம் மற்றும் உலோகவியல் நிபுணராகத் திகழ்ந்தார். அவர், மு.பொ.ஆ. 3500 அளவிலான எகிப்திய எழுத்து மூலங்கள் இரும்பைக் குறிப்பிடுவதைக் கொண்டும், மு.பொ.ஆ. 3700-களின் எகிப்திய அரசன் கெப்ரானின் பிரமிடில் இருந்து கண்டெடுத்து தற்பொழுது பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பில் உள்ள இரும்புத் துண்டினை அடிப்படையாகக் கொண்டும், இரும்பின் காலம் செம்புக் காலத்துடன் இரும்புக் காலம் கலந்துள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது என்று தெரிவிக்கிறார்.*10

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வாழ்வியல் களஞ்சியம், உலகில் இரும்பு பற்றிய சில வரலாற்றுச் செய்திகளை தொகுத்தளிக்கிறது. “ஆர்மினியாவில், மிட்டானி (Mittani) அரசுக் காலத்தில் இரும்பினைப் பெருமளவில் பயன்படுத்தினர். இரும்புப் பயன்பாட்டை இட்டைட்டுகள் (Hittites) கி.மு.1370-ல் மிட்டானியரின் பகுதியைக் கைப்பற்றியபோது அறிந்தனர். இட்டைட்டுப் பேரரசர் மூன்றாம் ஆட்டுசிலிசு (Hattussilis III) என்பவர் (கி.மு.1348-1339), எகிப்திய அரசர் துதங்கன்மன் (Tutankhanmen) என்பவருக்கு இரும்பினால் ஆன வாள் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது. எகிப்தில் உள்ள துதங்கன்மன் கல்லறையை அகழாய்வு செய்தபோது, பெரிய இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. அந்த வாளே இட்டைட்டுப் பேரரசர் பரிசாக அளித்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இட்டைட்டுகளுக்கும் எகிப்தியர்களுக்கும் ஏற்பட்ட போர்களின் விளைவாக, இரும்பின் பயன்பாடு பிற இடங்களுக்கு எளிதில் பரவத் தொடங்கியது. இரும்பு வேலை செய்யும் கருமார், கருங்கடலின் தெற்குக்கரைப் பகுதியில் வாழ்ந்தனர் எனக் குறிப்புகள் உள்ளன. இட்டைட்டுகளின் வரலாற்றுக் குறிப்பேடுகளில் இரும்பினைப் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. இரும்புப் போர்க் கருவிகளைப் பயன்படுத்திய இட்டைட்டுகள், அவற்றைச் செய்யும் முறைகளை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தனர். இரும்பினை முற்றுரிமை பெற்ற ஒரு பொருளாக இவர்கள் அறிவித்தனர். இட்டைட்டுகளின் வீழ்ச்சிக்குப் பின்னரே இரும்பின் பயன் பிற பகுதிகளில் மிக விரைவாகப் பரவியது.

கிரீஸிலும் (Greece), கிரீட்டிலும் (Crete) உள்ள பிணக்குழிகளில் அகழாய்வு செய்தபொழுது, பல இரும்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இக்கருவிகள் கி.மு.1100-ம் ஆண்டைச் சார்ந்தவை எனக் கணித்துள்ளனர். இத்தாலியில் இருந்த வில்லநோவன் (Villanovan) மக்கள், கி.மு. 900–ம் ஆண்டில் இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தினர். ஆசியாமைனரில் குடியேறிய எட்ருசுகர்கள் (Etruscans) மூலமே இரும்பின் பயனை அவர்கள் அறிந்தனர் என மரபுவழிச் செய்திகள் குறிக்கின்றன. ஆஸ்திரியாவில் உள்ள ஆல்சுடாட்டு (Hallstat) நகரமே இரும்பு உற்பத்தியில் தலைசிறந்த நகரமாக அக்காலத்தில் விளங்கியது. இதனால், அப்பகுதியில் ஒரு புதிய நாகரிகமே ஏற்பட்டது. ஆல்சுடாட்டு, சால்சுபர்க் (Salzburg) பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள், இரும்பினால் செய்யப்பட்ட மிக நீளமான கத்தியைப் பயன்படுத்தினர். கெல்ட்டு இன மக்களின் வெற்றிக்கு மிகச் சிறப்பான காரணமாக விளங்கியது அவர்கள் பயன்படுத்திய இரும்பினால் ஆன போர்க்கருவிகளே.

ஜெர்மனியிலும், ஸ்காண்டிநேவியாவிலும் இரும்பு பற்றி, கி.மு.500 ஆண்டு அளவில் அறிந்திருந்தனர். ஆப்பிரிக்காவில், நூபியாவிலுள்ள (Nubia) மீரோ (Meroe) பகுதிகளில் வசித்த மக்கள், கி.மு.700–ம் ஆண்டில் இரும்பைப் பயன்படுத்தினர். இங்கிருந்து எகிப்துக்கு இரும்பின் பயன் பரவியது.

இந்தியாவில் இரும்பு பற்றி வேதகால ஆரியர் அறிந்திருந்தனர். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் இருந்து காகஸஸ் (Caucasus) மலைத்தொடர் வழியாக இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் இரும்பின் பயனை அறிந்திருந்தனர். இந்தியாவில் நடந்த அகழாய்வுகளில், வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலன்களுடன் (Painted Gray Ware) இரும்புப் பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு. 900-க்கும் கி.மு.800-க்கும் இடைப்பட்டது. சீன மக்கள் இரும்பு பற்றி கி.மு.6-ம் நூற்றாண்டு அளவில் அறிந்தனர்”.*11

இச்செய்திகள் எவையும், மேற்கில் இருந்து இந்தியாவின் எப்பகுதிக்கும் இரும்பு இறக்குமதி செய்யப்பட்டதற்கான குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பது உற்றுநோக்கத்தக்கது.

பண்டைத் தமிழக அல்லது தென்னிந்திய இரும்பு குறித்த பதிவுகள்

ஏறத்தாழ, சங்காலம் நிகழ்ந்த அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த உலகக் குறிப்புகளில் இருந்து, பண்டைத் தமிழகத்தின் இரும்பு குறித்து பல வெளிநாட்டுக் குறிப்புகளைப் பெறமுடிகிறது.

மு.பொ.ஆ. 450-ல், க்டேசியஸ் (Ktesias) தமது குறிப்பில், பெர்சிய அரசனுக்கு இந்திய உருக்கு வாள்கள் பரிசளிக்கப்பட்ட விவரத்தையும், தென்னிந்தியர்கள் மு.பொ. 5-ம் நூற்றாண்டிலேயே உருக்குத் தொழிலில் சிறந்து காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.*12 ஆனால், க்டேசியஸ் தனக்கு பெர்சிய அரசனாலும் தன் தாயாலும் வழங்கப்பட்ட இரண்டு இந்திய வாள்கள் பற்றித்தான் குறிப்பிடுகிறார் என்பர்.*13

வார்மிங்டன் இதே கருத்தை, “இந்தியாவிலுள்ள எஃகில் இருந்து நல்ல உறுதிவாய்ந்த வாள்கள் செய்யப்பட்டன என்றும், அவை க்டேசியஸ் காலத்தில் பெரும்புகழுடன் விளங்கின என்றும், இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலுள்ள இரும்பு மற்றும் எஃகு, எகிப்து நாட்டு வாணிபத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தது” என்றும் குறிப்பிடுகிறார்.*14 மு.பொ.ஆ. 300 அளவில் ஆப்பிரிக்கா, கிரேக்கம் மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து இரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பார் கே.என்.பி. ராவ்.*15

மகா அலெக்சாண்டருக்கு, மன்னன் புருஷோத்தமன் எஃகை கொடையாகக் கொடுக்கிறார்

மு.பொ.ஆ. 327-ல், கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது, புருஷோத்தமன் (புருஸ்) சேலம் பகுதியில், அதாவது கஞ்சமலையில் வெட்டியெடுக்கப்பட்ட 38 பவுண்டு எஃகையே கொடையாகக் கொடுத்தான் என்று அறியமுடிகிறது. இது குறித்து, புகழ்பெற்ற உலோகவியலாளர் ஹீத், குயிண்டஸ் கர்டியஸ் (Quintus Curtius) வியந்து தெரிவிப்பதை எடுத்துக்காட்டுகிறார். அது - “உலகையே வெற்றிகொண்ட மகா அலெக்சாண்டருக்கு போரஸ் (புருஷோத்தமன்) நாட்டின் (இந்தியா) மீது படையெடுத்தபோது, அந்நாட்டு அரசன் 30 பவுண்டு*16 எடையுள்ள இந்திய எஃகை பரிசாக வழங்கியதாகவும், அந்த எஃகு பரிசாகப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு மதிப்புமிக்கதாக விளங்கியது என்பதையும் நாம் நம்புவதற்கு கடினமாக உள்ளது”. மேலும், “அலெக்சாண்டர் காலத்தில் இப்பொருளை உற்பத்தி செய்வதை மேற்கின் எந்த நாட்டினரும் அறிந்திருந்தனரா… ….நமக்குத் தெரியும், மிகவும் தொன்மையான காலத்தில் இருந்தே (தென்னிந்தியாவின்) மலபார் கடற்கரைக்கும், பெர்சிய வளைகுடாவுக்கும் சிந்துவெளிக்கும், செங்கடலுக்கும் இடையே நல்ல வணிகத்தொடர்பு இருந்தது என்று. ஆகையால், தென்னிந்தியாவின் எஃகு வட இந்தியாவைச் சேர்ந்த போரஸ் நாட்டின் வழியாக ஐரோப்பிய மற்றும் எகிப்து நாடுகளுக்குச் சென்றது என முடிவு செய்வதற்கு தக்க காரணங்கள் உள்ளது எனலாம்”.*17

அவர் மேலும் குறிப்பிடுகையில், புகழ்பெற்ற “டெமாஸ்கஸ் வாள்”கள் செய்ய இந்திய இரும்பு அனுப்பப்பட்டது என்று பல சான்றுகள் மூலம் நிறுவுகிறார். சர் ஜார்ஜ் பெர்டுவுட் குறிப்பிடும்போது, “இந்திய எஃகானது மிகவும் பழைமையான காலத்தின் தொடக்கநிலையிலேயே வெகுவாகப் போற்றப்பட்டது; மேலும், டெலிடொ வாள்கள் (Toledo blades) பிற்காலத்தில் போற்றப்பட்டபோதும், இந்திய எஃகு கொண்டு செய்யப்பட்ட டெமாஸ்கஸ் வாள் தன்னுடைய முந்தைய தலைமை இடத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தது.”*18

டெமாஸ்கஸ் வாள்

1875-ம் ஆண்டு, சர் ஜான் ஹிக்‌ஷா (Sir John Hicksha), தனது ஜனாதிபதி உரையில் குறிப்பிடும்போது, “நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் இந்தியாவிலிருந்து இருப்பின் ஏற்றுமதி எல்லை அற்றதாக இருந்தது. இந்தியா, மேற்கு உலகின் முந்தைய நாகரிகச் சமூகங்களில் இருந்து எந்தவகையில் பயனடைந்திருந்தாலும், மேற்கு உலகுக்கு இரும்பையும் எஃகையும் வழங்கியதன் மூலம், அதற்கு மிகச் சிறந்த கைமாற்றை செய்திருக்கிறது”. அவர் மேலும் குறிப்பிடும்போது, “பண்டைய எகிப்தின் கருங்கல் தூண்களை செய்யப் பயன்படும் மிக உறுதியான துளைப்புக் கருவிகள் (drills) இந்திய இரும்பு கொண்டு செய்யப்பட்டவை. மேலும், முதலில் பெர்சியர்களும், பின்னர் அரேபியர்களும் இந்தியாவிடம் இருந்தே இரும்பை உறுதியாகும் எஃகுத் தொழில்நுட்பத்தை அறிந்தனர்; இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பது, இடைக்கால வரலாற்றில் புகழ்பெற்ற டெமாஸ்கஸ் வாள்களாகும்.”*19 ரோஸ்ஸி மற்றும் ஸ்கொலெம்மர், தங்களின் புகழ்பெற்ற “வேதியியல் ஆய்வுகள்” நூலில், “இரும்பு இந்தியாவின் தாதுக்களில் இருந்து முதலில் பெறப்பட்டது எனத் தோன்றுகிறது எனக் குறிப்பிடுகின்றனர்”.*20 இங்கு இந்தியா எனக் குறிப்பிட்டாலும், அது பண்டையத் தமிழகமான தென்னிந்தியாவைக் குறிக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

பொ.நூ. 1 மற்றும் 2-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரிப்புளுஸ் நூலின் ஆசிரியரும், பிளினியும் தமிழகத்தில் இருந்து இரும்பும், எஃகும் ஏற்றுமதி செய்யப்பட்ட விவரத்தைத் தருகின்றனர். இது சங்க காலத்தில் ஏற்றுமதிப் பொருளாக இரும்பு பெற்றிருந்த சிறப்பான இடத்தைக் காட்டுகிறது.

(தொடரும்)

மேற்கோள்கள்

1. பேராசிரியர் கெளலாந்து (Prof. M. Gowland, in Anthropology on the March, p.79). மேற்கோள்: தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ்நாட்டு வரலாறு, தொல் பழங்காலம், தமிழ்நாடு அரசு வெளியீடு, சென்னை, 1975, ப.126.

2. Bruce Foote, Indian Prephistoric and Proto historic Antiquties, Notes on their Ages and Distribution, Madras, 1916.

3. Rajan K, Iron and Gemstone Industries as reveal from Kodumal Excavations, Puratavatta, Vol-20, pp.111-112.

4. Sasisekaran B, et al., Adichanalur: A Prehistoric Mining Site, Indian Journal of Historical Science, 45.3, 2010, pp.369-394.

5. Sasisekaran B, Metallurgy and Metal Industries in Ancient Tamil Nadu- An Archaeological Study, Indian Journel of History of Science, 37.1, 2002, 17-29.

6. Sarada Srinivasan.

7. கள ஆய்வுகளில் இருந்து அறிந்தது.

8. புச்சனன்

9. Oleg D. Sherby and Jeffery Wadsworth, Ancient Blacksmiths, The Iron Age, Damascus Steel and Modern Metallurgy, Lawrence Livermore National Laboratory, Livermore, USA, 2000, pp. 1-2

10. Ibid., p.3.

11. வாழ்வியல் களஞ்சியம் தொகுதி-4, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1987, ப.199-200.

12. மேற்கோள்: of Gururaja Rao P.K, The Megalithic Culture in South India, 1972, p.302. அருள்ராசு. வே.சா, பழந்தமிழகத்தில் இரும்புத் தொழில், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை, 2000, ப.9.

13. Neogi Panchanan, Iron In Ancient India, The Indian Association for the cultivation of Science, Calcutta, 1914, pp.66.

14. Warminton E.H, The Commerce between the Roman Empire and India, 1974, p.257.

15. மேற்கோள்: of Gururaja Rao P.K, The Megalithic Culture in South India, 1972, p.302. அருள்ராசு. வே.சா, பழந்தமிழகத்தில் இரும்புத் தொழில், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை, 2000, ப.9.)

16. இரும்பு தொடர்புடைய நூல்களில் அலெக்சாண்டருக்கு வழங்கப்பட்டது 30, 38 பவுண்டு எடை என அளவு மாறுபட்டுள்ளது. அது 100 டோலண்ட் எடையுள்ளது எனவும் அறியமுடிகிறது.

17. Heath J.M, Journal of Royal Asiatic Society, 1839, Vol-5, p.395.

18. (as quoted in), Neogi Panchanan, Iron In Ancient India, The Indian Association for the cultivation of Science, Calcutta, 1914, pp.66.

19. (as quoted in), Neogi Panchanan, Iron In Ancient India, The Indian Association for the cultivation of Science, Calcutta, 1914, pp.1-2.

20. Roscoe and Schorlemmer, Treatise on Chemistry, (as quoted in), Neogi Panchanan, op.cit., p. 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com