அத்தியாயம் 41 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 34

2004-ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 30 கோடி ரூபாய்க்கு ஈடானது. இது ஹெர்மபோலன் என்ற சாதாரணக் கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்களின் மதிப்பாகும். இதனைவிட பெரிய ரோமானியக் கப்பல்கள் இங்கு வந்துபோயுள்ளன.

பெருங்கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

புதிய கற்காலத்துக்குப் பிறகு தென்னிந்தியாவில் வளர்ச்சியுற்ற இருப்புக் காலப் பண்பாடு என்ற பெருங் கற்படைப் பண்பாட்டு மக்களும், தம் முன்னோர்களான புதிய கற்கால மக்கள் போலவே உலகம் முழுவதும் அன்று அறியப்பட்டிருந்த எல்லா நாகரிகப் பகுதிகளுடனும் தொடர்பு கொண்டிருந்தனர் / வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை பல இலக்கியச் சான்றுகளாலும் தொல்லியல் சான்றுகளாலும் அறியமுடிகிறது. அட்டவணை - 2 சிலவற்றை தொகுத்துத் தருகிறது.

தென்னிந்திய இருப்புக் காலத்தில் தென்னிந்திய வணிகர்களின் கிழக்கு ஆப்பிரிக்கா, சீனம், பாபிலோன் மற்றும் கிரேக்கத்தில் குடியேறிய நிகழ்வுகள் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இவை குறித்து உதிரி உதிரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத்தகவல்களும் தொகுத்துக்கொள்ளப்படவில்லை. இந்திய வணிகம் பற்றி லெனோர்மான்ட் (Lenormant), “ஹட்டசு (ஹற்றாசு - Hatasu) என்பவரின் தலைமையில் பண்டு (Punt) நாட்டை வெற்றிகொண்ட வரலாறு, தீப்ஸ் நகரில் தெர் எல்பஃறி என்னும் கோயிலில் சுவரில் எழுதப்பட்டுள்ளது.

பரோவாவுக்கு எகிப்திய அரசனால் வெற்றிப்பொருளாகக் கொண்டுபோகப்பட்ட பொருள்கள் ஏமனுக்குச் சொந்தமில்லாதவையாகவும், இந்திய நாட்டுக்கு உரியவையாகவும் காணப்படுகின்றன. அவை தந்தம், ரத்தினம், சந்தனக்கட்டை, குரங்கு முதலியவை என்று ஹெரன் (Heeran) கூறியவற்றை வான் போகேன் (Von Bohen) உறுதிப்படுத்துகிறார்.

மேலும், புளிய மரங்கள், நீலம் முதலிய இந்தியப் பொருள்கள் எகிப்திய சமாதிகளில் என்று வில்கின்சன் அவர்களும்; எகிப்தியர் ஆடைகளுக்கு அவுரி நீலத்தால் சாயமூட்டினார்கள் என்றும், அவ்வகைத் துணிகளால் எகிப்தியர்களின் பிரேதங்கள் பக்குவம் செய்யப்பட்டு சுற்றப்பட்டன என்று லாசனும் (Lasson), மு.பொ.ஆ.1491- 1450-ம் ஆண்டுகளில் மோசே காலக் குருமார்கள் அணிந்திருந்த ரத்தினங்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவை என்று பால்  அவர்களும் எடுக்காட்டுவது (ந.சி. கந்தையா, திராவிட நாகரிகம், அமிழ்தம் பதிப்பகம், சென்னை, ப.23) என்பது போன்ற தகவல்கள் தொகுக்கப்பட வேண்டிய சில முக்கியக் குறிப்புகள் என்று கொள்ளலாம்.

மேலும், பைபிளின் உற்பத்தியாகமத்தில் உள்ள குறிப்புகளும், சாலமனின் மரக்கலங்களில் அகிற்கட்டை, ரத்தினக் கற்கள், பொன் முதலியவை ஓபிரி (என்ற உவரி அல்லது ஓவரி) என்ற கடற்கரை துறைமுகத்தில் இருந்து கொண்டுவந்தவை என்ற குறிப்பும், பழைய ஏற்பாட்டில் அரசர்கள் அத்தியாயத்தில் பல திராவிடச் சொற்கள் இடம்பெற்றுள்ளதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கத்தக்கவை.

இதே காலகட்டத்தில், அதாவது தென்னிந்திய, புதிய கற்கால மற்றும் இரும்புக் காலப் பண்பாட்டு மக்கள் கிழக்கிந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவு நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்புகள் குறித்தும், வணிகக் குடியேற்றங்கள் குறித்தும் தொகுத்துக்கொள்ளவேண்டி உள்ளது.

உலக நாடுகளுடன் தென்னிந்தியா கொண்டிருந்த இவ்வகையான வாணிகத் தொடர்புகள் எவ்வளவு பழைமை வாய்ந்தது என்று அறுதியிட்டுச் சொல்ல உறுதியான சான்றுகள் இல்லை. ஆனால், மு.பொ.ஆ. 4000 அளவில் இருந்து தொடர்ச்சியாக இச்சான்றுகளை தொகுத்துக்கொள்ளமுடிகிறது. இது பிளினி, இந்தியர், ஆண்டுதோறும் 400,000 தங்க நாணயம் மதிப்புள்ள பொன்னை ரோமிலிருந்து வணிகப் பண்டங்கள் மூலம் கவர்ந்துகொள்கின்றனர் என்பதில் இருந்தும், ரோம அரசன் டைபீரியஸ், ரோம நாட்டு மக்கள் ஆடம்பரப் பொருட்களின் மேல் கொண்ட மோகத்தால், ரோம நாட்டுச் செல்வம் அந்நிய நாட்டுக்குப் போவதாகவும், இதனால் ரோம நாட்டுக்குப் பெருத்த நட்டம் ஏற்படுவதாகவும் தனது நாட்டு ஆட்சிமன்றமான செனட்டில் அறிவிப்புசெய்ததில் இருந்தும், ஹெர்மபோலன் (Hermapollon) என்று பெயரிடப்பட்ட கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்களை அலெக்சாண்ட்ரியா - முசிறி ஒப்பந்தத்தில் இருந்தும் பெறமுடிகிறது.

அலெக்சாண்ட்ரியா - முசிறி ஒப்பந்தம்

(நன்றி: கா. ராஜன் - தொல்லியல் நோக்கில் சங்க காலம்)

இந்த ஒப்பந்தம், ஏற்றுமதி செய்யப்பட்ட ஆறு பொதிகளைப் பற்றி குறிப்பது என்றாலும், மூன்று பொதிகளில் காணப்படும் பொருட்கள் குறித்தே கிடைக்கின்றன. மற்ற மூன்று பொதிகள் குறித்த தகவல்கள் சிதைந்துள்ளன. இந்த ஆறு பொதிகளின் எடை 1154 தோலனும் (talents) 2585 திரமமும் (drachams) கொண்டது. இந்தப் பொருட்களின் மதிப்பானது, அலெக்சாண்ட்ரியாவில் ஒரு நீர்வழிச் சாலையை அமைப்பதற்கு ஈடானது என்ற குறிப்பு அதில் உள்ளது. இதன் மதிப்பு ஏழு மில்லியன் திரமம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. காரணம், இத்தகையதொரு நீர்வழிச் சாலையை அமைக்க ஹைரோடஸ் அதிகஸ் (Herodes Atticus), 4 மில்லியன் திரமங்களும், ஹட்ரியன் (Hadrian) 3 மில்லியன் திரமங்களும் அளித்துள்ளதன் மூலம் புலனாகிறது.

மேலும், ஒரு திரமம் என்பது 65 குன்றிமணிகளுக்கு ஈடானது. ஒரு குன்றிமணி என்பது 0.0648 கிராம் வெள்ளிக்கு ஈடானது. எனவே, ஒரு திரமம் என்றால் 29484000 கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது (7,000,000 × 4.212= 29484000). ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 எனக்கொண்டால், (இது 2004-ம் ஆண்டின் வெள்ளி விலை மதிப்பில்) அவற்றின் மதிப்பு ரூ. 294,840,000. அதாவது, 2004-ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 30 கோடி ரூபாய்க்கு ஈடானது. இது ஹெர்மபோலன் என்ற சாதாரணக் கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்களின் மதிப்பாகும். இதனைவிட பெரிய ரோமானியக் கப்பல்கள் இங்கு வந்துபோயுள்ளன. மேலும், மேற்கூறிய தொகையானது ஒரு கப்பலில் ஒரு வணிகனுக்குச் சொந்தமான பொருட்களுக்கு உரியதாகும். இதுபோல் பல வணிகர்களுக்குரிய பொருட்கள் ஒரு கப்பலில் ஏற்றப்படும். ஒரு கப்பலில் ஏற்றப்படும் அனைத்து வணிகர்களின் ஒட்டுமொத்தப் பொருட்களின் மதிப்பை கணக்கிட்டுப் பார்க்கும்பொழுது மலைப்பாக உள்ளது (கா. ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004, பக். 89-90) என்பதிலிருந்தும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. இம்மூன்று குறிப்புகளும் சங்ககாலத்து உரியவை.

இந்த நிலைக்கு இரு முக்கியக் காரணங்கள் தெளிவானதாக உள்ளன. அவை - 1. வணிகக் குழுக்களின் வளர்ச்சி, 2. பொருள் உற்பத்தியாளர்களின் வளர்ச்சி. மேலே குறிப்பிடப்பட்ட இரு அட்டவணைகள், தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதியான பொருட்களை அடையாளப்படுத்துகின்றன. அவற்றில், காடுபடு பொருட்கள், விளைபொருட்கள், உயிரினங்கள் மற்றும் கனிமப் பொருட்கள் முக்கியப் பங்காற்றியுள்ளதைக் காட்டுகின்றன. இப்பட்டியலில் உள்ள பொருள்கள், குறிப்பாக அரிசியும் இரும்பும் ஆச்சரியத்தை அளிக்கின்றன.

இதுகுறித்தும், இதே காலகட்டத்தில் கனிமச் சுரங்கத் தொழில், குயவு உள்ளிட்ட மண்ணீட்டுத் தொழில், கப்பல் கட்டுதல், பாறை செதுக்குதல், இரும்புக் கருவிகள், மரக் கருவிகள், அணிமணி ஆபரணங்கள் செய்தல் போன்ற கம்மாளர் தொழில்களும் திணை வாழ்க்கையினூடே வளர்ந்திருந்தன. இத்தொழில்படு பொருட்கள் திணை வாழ்க்கையை மேம்படுத்தவும், இணைக்கவும் பயனாகியுள்ளன. இவற்றை மேலறிமுகம் செய்துகொள்ளாமல், பெருங் கற்காலப் பண்பாட்டின் திணை வாழ்க்கையை அடைந்துகொள்வது என்பது முழுமையுடையதாக இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com