அத்தியாயம் 43 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 36

பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குழம்பை மூங்கில் அரிசிச் சோறுடன் கலந்து உண்ட காட்சி மலைபடுகடாமில் காட்டப்படுகிறது.

பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

நெல், விலைமதிப்பு மிக்க விளைபொருளாக நெடுங்காலம் நிலவியிருந்தது. விலைமதிப்பு மிக்கதாக இருந்தமையாலே, அதன் உற்பத்தி மீது கூடுதல் கவனமும், உழைப்பும் மக்களால் செலுத்தப்பட்டது. மருத நிலமும் நெல்லும் பிரிக்கமுடியாத அங்கமான நிலை, காலத்தால் பிற்பட்ட நிலையைச் சுட்டுவதாக இருக்க வேண்டும். இந்தப் பிற்பட்ட காலத்தின் துவக்கத்தை சங்க இலக்கியக் காலகட்டத்தில் இருந்தே காணமுடிகிறது. இன்று கணிக்கமுடியாதுள்ள ஒரு துவக்கத்தில் மருத நிலத்தில் மருதப் பண்பாட்டுக்குரிய பிற உணவுகளும் சமமாக இருந்திருக்க வேண்டும்; அவற்றின் உற்பத்தியும் சமபங்கீட்டோடு இருந்திருக்க வேண்டும்.

முதல் நிலைப் பெருங் கற்படைக் காலம், மத்திய நிலைப் பெருங் கற்படைக் காலம், இறுதி நிலை பெருங் கற்படைக் காலம் அல்லது முறையே, கீழ் நிலைப் பெருங் கற்படைக் காலம், இடை நிலைப் பெருங் கற்படைக் காலம், மேல் நிலைப் பெருங் கற்படைக் காலம் என்று மூன்று காலக்கட்டங்களாகப் பிரித்து அணுகவேண்டியது குறித்து முன்னர் விளக்கப்பட்டது*1. பெருங் கற்படைப் பண்பாட்டில் மு.பொ.ஆ. 500 முதல் பொ.ஆ. 200 வரை நிகழ்ந்த இறுதி நிலை பெருங் கற்காலக் கட்டம், சங்க இலக்கியக் காலம் அல்லது கடைச் சங்க காலம் என தற்காலத்தில் பெரும்பான்மையோரால் கணிக்கப்படும் மு.பொ.ஆ. 400 முதல் பொ.ஆ. 250 வரையுள்ள காலகட்டத்தை ஏறத்தாழப் பிரதிபளிப்பது.

இப்பின்னணியில், சங்க இலக்கியத்தை தென்னிந்திய வரலாற்றுக் காலத்தின் முதல் எழுத்துச் சான்றாகக் கொண்டால், பண்டையத் தமிழக உணவுப் பண்பாட்டு வரலாற்றில் நால்வகை நிலங்களுக்குரிய நெல் வகையினங்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. குறிஞ்சி நிலத்து ‘ஐவனம்’; இது ‘மலைநெல்’ என்றும் அறியப்படுவதாகும்.*2 ஐவனவெண்ணெல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.*3 இத்திணைக்குரியதாகவே “மூங்கிலரிசி”யும் “புல்லரிசி”*4யும் குறிப்பிடப்படுகிறது. மூங்கிலரிசி “கழைநெல்”*5 என்றும் “வேய்நெல்”*6 என்றும் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றது. புல்லரிசி பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெறவேண்டி உள்ளது. புல்லரிசியானது பஞ்ச காலத்தில் உட்கொள்ளப்படும் நெல்வகை என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே, புல்லரிசி பாலைத் திணைக்குரியதாகக் கொள்ளப்பட்டது போலும். இவ்வரிசி எத்தன்மையது என்பதை அறிய கூடுதல் சான்று தேவைப்படுகிறது.

மூங்கிலரிசி

“அல்லியரிசி”*7 ஆம்பலில் (அல்லி) அரிசி உண்டாகும். அதை உண்பது வழக்கம். ‘ஆம்பல் அல்லி’ என்ற சங்க இலக்கியத் தொடருக்கு “ஆம்பலாகிய அல்லிக்காய் அரிசி” என்று பொருள் அளிப்பர்*8. ‘அல்லிப் படூஉம் புல் ஆயினவே’ என்பதற்கு ”அல்லி புல்லாயின, அதாவது புல்லரிசியாய் ஆயின” என்பர். அல்லிப்பூவின் சிறு விதையே அல்லியரிசி என்ற பொருள் தரும் மதுரைப் பேரகராதி.*9 நெல்லரிசி அல்லாதன எல்லாம் புல்லரிசி என்று எனப்படும் என்பது ஒரு குறிப்பு. இக்குறிப்புகள், புல்லரிசி குறித்த மேலாய்வையே வேண்டுகின்றன. அல்லியரிசி நெய்ப்போ, கொழுப்போ இல்லாதது; பண்டைத் தமிழகத்தில் உணவுப்பண்டமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.*10

அல்லியரிசி

“தோரை”*11 என்பது மற்றொரு மலைநெல் வகையினமாகும். நச்சினார்க்கினியர் “புயற் புனிறு போகிய பூமலி புறவின் / அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை” எனும் மலைபடுகடாம் 120-121 வரிகளுக்கு, ‘பூ மிக்க காட்டிடத்தே மழையால் ஈன்றணிமை தீர்ந்து முற்றிய அழகிய குலையினை உடைய மூங்கில் நெல்’ என்று பொருள் கொள்கிறார். மூங்கில் நெல் இங்குப் பொருந்துவதில்லை. இவரே, “நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய / குறுங்கதிர்த் தோரை … …” எனும், மதுரைக்காஞ்சி வரிகளில் உள்ள தோரைக்கு “தோரை நெல்” எனப் பொருள் தருகிறார். இது, தோரை என்பது தனி நெல்வகை என்பதை உறுதி செய்கிறது. மேலும், மதுரைக்காஞ்சி வரி ‘வித்திய குறுங்கதிர்த் தோரை’ அதாவது விதைத்த தோரை என்று காட்டுகிறது. மூங்கிலரிசி விதைத்துப் பெறுவதன்று என்பது நினைவில் கொள்ளலாம். “வேரல்”*12 சிறுமூங்கிலரிசியைக் குறிக்கும் தனிச் சொல். வேரல் வேலியாக அமையும் என்றும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது.*13 இது வழக்கில் “கல்மூங்கில்” என அழைக்கப்படுகிறது.*14

முல்லை நிலத்திலும் நெல் பயிடப்பட்டது என்பதை ஒரு பாடல் தெரிவிக்கிறது.*15 மருத நிலத்துக்கும் நெல்லுக்குமான தொடர்பு விளக்கத் தேவையற்ற ஒன்று. “செந்நெல்” வகை நெல்லானது முல்லை, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலத்துக்கு உரியதாகக் கொள்ள இடமுண்டு.*16 முல்லை நிலமே ஆயினும் செந்நெல் நீர் பாய்ச்சிய களணியிலே விளைவிக்கப்பட்டதை அறியமுடிகிறது. சாலிநெல் என்பது செந்நெல்லைக் குறித்தது.*17 குறிஞ்சியும் பாலையும் திரிந்து உருவாகும் பாலை நிலத்துடன் ‘புல்லரிசி’ தொடர்புகொள்ளப்படுகிறது.*18 “நெல் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் 102 இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இதனுடன் மூங்கில் நெல்லைக் குறிப்பிட இச்சொல்லே 6 இடங்களிலும், செந்நெல் 21 இடங்களிலும், ஐவனவெண்ணெல் 4 இடங்களிலும், வெண்ணெல் 24 இடங்களிலும் சங்க இலக்கியத்தில் பயின்றுவருகிறது” என்ற குறிப்பு இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது.*19 இவற்றுடன் 2 இடங்களில் குறிப்பிடப்படும் தோரையையும் சேர்த்துக்கொள்ளலாம். சங்க இலக்கியத்தில், வேரல் வேலியாகச் அமைந்த குறுமூங்கில் நிலையைக் காட்டும் வரிகளே கிடைத்துள்ளன. இதுவும், மூங்கில்நெல்லை வழங்கு என்பதால் உணவுப்பண்டமாக விளங்கியது எனக் கொள்வது பிழையாகாது. இப்புள்ளி விவரங்கள், சங்க காலத்தில் நெல் பெற்றிருந்த சிறப்பைச் சுடுவது தவிர வேறொன்றில்லை.

மேலும், சங்க இலக்கியத்தில் அரிசியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் மற்றொரு சொல், “வல்சி”யாகும். இது சோறு, உணவு என்ற பொதுப்பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல் 21 இடங்களில் வருகிறது.*20 இது வெண்ணெல் சோறு, செந்நெல் சோறு என்று குறிப்பதால், மருத நிலத்து நெல் வகைகளுள் ஒன்றாகும்*21. வல்சியைப் பயிரிடும் உழவர், ‘வல்சிச் செஞ்சால் உழவர்’ என்று சிறப்பிக்கப்படுவதும் உண்டு*22. வல்சி சோறை, நெய்தல் வாழ் பரதவர் கொழுத்த இறைச்சியுடன் உண்பர்.*23 வல்சி சோறு குறிஞ்சி நில மக்களாலும் உண்ணப்பட்டது*24 ஆகியவை, வல்சியின் பரவலைக் காட்டுகின்றன. “கூலம்” எனும் சொல் பதிணெண் வகை என்றும் எட்டுவகை என்றும் பண்டங்களைத் தொகுப்பாக அல்லது கலவையாகச் சுட்டிய சொல்லாகும். கூலங்களில் ஒன்றாக நெல் குறிக்கப்படுவதுண்டு. “கூழ்” பலவகை உணவு ஆனதும் இதே பொருளில்தான். ஆகையால், கூலம் என்பது நெல்லைக் குறிப்பதானது. “கூழவட்டி” என்பது நெல்லையுடைய வட்டி, அதாவது நெல்லையுடைய கூடை எனவும், “வரிக்ககூழ்” என்பதற்கு பல நிறங்களுடைய நெல் எனவும் பொருள்கொள்வர் உரையாசிரியர்கள்.*25

அரிசியின் வேர்ச்சொல் ‘அரி’ என்பதாகும். அரி என்பதன் பொருள் ‘சிறிய’ என்பதாகும். அரிசி எனும் சொல் நெல்லரிசியை மட்டுமல்லாது, மற்ற தானியங்களையும், குறிப்பாக தினைத் தானியங்களையும் குறித்தது. அந்நிலையில் அது முன்னொட்டாக தாவரத்தின் பெயரோடு பெயர்ந்துவரும். உதாரணம் - கம்பரிசி, வரகரிசி, ஆம்பலரிசி, மூங்கிலரிசி போன்றவை. நெல்லரிசி என்ற சொல்லும், இலக்கியத்திலும் வழக்கிலும் உள்ளது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. தோரை மற்றும் வேரல் ஆகியவை நெல்லொட்டு இன்றியே நெல்லைக் குறித்தது என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.

நெல்லரிசி மருத நிலத்தின் முக்கிய உணவுப்பண்டம் என்றாலும், அது பிற நிலங்களுக்கு அந்நியப்பட்டதில்லை. பண்டமாற்றம் மூலமாகவும் வணிகம் மூலமாகவும் அது பிற மூன்று நிலங்களுக்கும் எளிதாகச் சென்றது. போலவே குறிஞ்சி, முல்லை நில நெல்லினங்களும் சென்றன. முல்லை நிலத்து ஆயர்கள், தங்களுடைய தயிர், மோர், வெண்ணெய் போன்றவற்றை மருத நில உழவர்களிடம் கொடுத்துவிட்டு, பண்டமாற்று முறையில் நெல்லைப் பெற்று அவற்றை உண்பர்.*26 நெய்தல் நிலத்தவர் மீனைக் கொடுத்து மாற்றாகப் பெற்ற நெல்லால் சோறு சமைத்துத் தயிருடன் உண்பர்.*27 பரதவர், மீன்களைப் பிடித்து அம்பிகளில் (அம்பி=தோணி, சிறு மரக்கலம், ஓடம்) சென்று, விற்றுக் கிடைத்த நெல்லை அம்பிகளில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.*28 மீன்களைப் பண்டமாற்றம் செய்து நெல்லைப் பெற்றது போலவே, தாம் விளைவிக்கும் உப்பை விற்றும் நெல்லைப் பெற்றனர்.*29

உமணர், வண்டிகளில் நெல்லைக் கொண்டுவந்து பரதவர் விளைவித்திருக்கும் உப்பை, நெல்லைக் கொடுத்து வாங்கிச் செல்வார்கள்.*30 உப்பை விற்று நெல்லைக் கொண்டுவருவதற்குத் தாய்மார்கள் உப்பளம் சென்றார்கள்.*31 பரதவப் பெண்கள், உப்பு விற்று வந்த நெல்லரிசியால் சமைத்த சோற்றை, புளியிட்டு சமைத்த மீனுடன் தம் தந்தைக்கு உணவாகத் தருவர்.*32

நானிலத்திலும் இவ்வாறே அரிசியை முன்மையாகக் கொண்டு நிகழ்ந்த பண்டமாற்றங்களைச் சங்க இலக்கியம் விரிவாகக் காட்சிப்படுத்துகிறது. நெய்தலில் உப்புக்கும், மீனுக்கும் நெல் பண்டமாற்றம் ஆனதை “உமணர் தந்த உப்புநொடை நெல்”*33, “வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி, நெல்லோடு வந்த பல்வாய்ப் பஃறி”*34, “உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு”*35, “பசுமீன் நொடுத்த வெண்நெல் மாஅ”*36 போன்ற வரிகள் காட்சிப்படுத்துகின்றன. குறிஞ்சி நிலத்துப் பொருட்களான “தேன், கிழங்கு இவற்றுக்கு மீனும் நெய்யும் கள்ளும் பெற்றதையும், மருத நிலத்து கரும்பு, அவல் இரண்டுக்கும் மாற்றாக மான் தசையுடன் கள் பெற்றதும்”*37, மான் தசைக்கும், தயிருக்கும் வெண்ணெல் பெற்றதையும், வரால் மீனுக்கு வெண்ணெல் மாற்றானதும்”*38 சங்கக் காட்சிகளே.

சங்க இலக்கியம், உணவுப் பொருட்களின் பொருளாதார நிலையையும் அடையாளப்படுத்துகிறது. “நெல்லின் நேரே வெண்கல் உப்பு”*39, “நெல்லும் உப்பும் நேரே”*40 என்பதிலிருந்து, அந்நாட்களில், நெல் விலையும் உப்பு விலையும் சமமாக இருந்ததை அறியலாம்.

நெல், குறிப்பாக மருதநிலத்து நெல் வளத்தின் குறியீட்டு நிலையைப் பெற்றது. வளத்தின் குறியீடானதால், வழிபாட்டிலும், சடங்குகளிலும் முக்கிய இடத்தைப்பெற்றது. நெல்லும் மலரும் தூவி தெய்வம் வணங்கப்பட்டது.*41 முல்லைப்பூவுடன் நெல் தூவி தெய்வம் வணங்கப்பட்டது.*42 செம்முது பெண்டிர் நெல்லை முன்வைத்து குறி (கட்டுக்குறி) கூறினர்.*43 நெல்லும் நெல்லும் நீரும் தூவி விரிச்சி (நற்சொல், நன்னிமித்தம்) கேட்டனர்.*44 வழிபாட்டில் கடவுளர் நெல்தூவி வழிபட்டனர்.*45 திருமணச் சடங்கில் நெல் முக்கிய இடம் பெற்றிருந்தமைக்குச் சான்றாக, திருமணத்தின்போது செய்யப்படும் வளச்சடங்கில், நீரில் கலந்த நெல் சொரியப்பட்ட காட்சி உள்ளது.*46 சங்கச் சமூகத்தில் “சண்டைக்குப் போகும்முன் நறிய (மணமுள்ள) பூக்களை நெல்லுடன் நீருடன் சேர்த்து தூவி, கைதொழுது வணங்கி, நற்சொல்லாகிய விரிச்சிகேட்டு, இரவோடு இரவாகப் போய் ஆநிரைகள் கவர்ந்தனர்”*47 என்பது ஒரு காட்சியாகும். இதுவும் சடங்கோடு ஒன்றுவதே.

நெல் பல்வேறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. உணவாகக் கொள்ளுதலில் அரிசி நேரடியாகவும், அவலாக மாற்றப்பட்டு உண்ணப்பட்டது. அரிசி, புளி, உளுந்து அல்லது பயிறு ஆகியவை ஒன்றாகச் சேர்க்கப்பட்டு கூழாகப்பட்டும் உண்ணப்பட்டது. குற்றாத கொழியல் அரிசியைக் களியாகச் செய்து உண்டிருக்கிறார்கள். ‘சோறு’. ‘அவிழ்பாகம்’ இரண்டு சொற்களும், அரிசியை வேகவைத்து வடித்த அரிசி உணவைக் குறிப்பிடுகின்றன. வேகவைத்து குழம்புபோலாக்கி உண்பது கஞ்சி எனப்பட்டது. கஞ்சியுடன் வறுத்த மல்லி, மிளகு சேர்த்து குடிப்பர். மோர், கஞ்சியுடன் சேர்க்கப்பட்ட மற்றொரு பொருள். அரிசியோடு ஊன் கலந்து சமைத்துச் சாப்பிடுவது ‘ஊன்சோறு’ எனப்பட்டது. அரிசியோடு உளுந்து கலந்து பொங்கும் சோறும் உண்ணப்பட்டது.

அரிசி, குழம்பு என்ற சாம்பாருடன் சேர்த்து உண்ணப்பட்டதையும் சங்க இலக்கியம் காட்சிப்படுத்துகிறது. பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குழம்பை மூங்கில் அரிசிச் சோறுடன் கலந்து உண்ட காட்சி மலைபடுகடாமில் காட்டப்படுகிறது.*48 சிவப்பு நிறமுடைய அவரை விதைகளையும் மூங்கில் அரிசியையும், மேட்டு நிலங்களில் விளைந்த ஒருவகை நெல்லரிசியையும் கலந்து, புளி கரைக்கப்பட்ட உலையில் இட்டு கூழாக்கிய காட்சி பெரும்பாணாற்றுப்படையில் விவரிக்கப்படுகிறது.*49 பொந்துகள் போன்ற சிறு அரிசியை இட்டு, வெள்ளாட்டு இறைச்சியையும் சேர்த்து ஆக்கிய சோறு என்பதும் விவரிக்கப்படுகிறது.*50 ஓய்மானாட்டு மருத நில மக்கள், வெண்மை நிறமான வெண்சோற்றை நண்டும், பீர்க்கங்காயும் சேர்த்து செய்யப்பட்ட கலவைப் பொரியலுடன் உண்டனர் என்பது ஒரு காட்சி.*51 கருப்பட்டியைக் கொதிக்கவைத்து அதில் பச்சரிசிமாவை இட்டுக் கிண்டி, அதில் உளுந்தும், நல்லெண்ணெய்யும் சேர்த்து செய்த ‘உளுந்தக்களி’, பூப்பெய்திய பெண்ணின் நலத்தைப் பேணும் உணவாக இருந்தது.

“தோப்பி”*52 என்றும் தோப்பிகள்*53 என்று குறிக்கப்படும் கள் வகை நெல்லிலிருந்து செய்யப்படுவதாகும்.

இவ்வாறு, நெல்லானது உண்ணல், குடித்தல், தின்றல், மெல்லல், துய்த்தல் என பலவகையாக மக்களால் அவித்தல், இடித்தல், கலத்தல், காய்ச்சல், கிண்டல், கிளறுதல், சுடுதல், பிசைதல், பொங்கல், பொரித்தல், வடித்தல், வறுத்தல், வேகவைத்தல், குழைத்தல் என பல வகைகளில் பண்டமாக ஆக்கி உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், தமிழர் உணவுப் பண்பாட்டின் அங்கமாக மாறியது.

சங்க இலக்கியம் நெல்லை முதன்மைப்படுத்தியும், தலைவர்களுடனும், மன்னர்களுடனும், ஊர்களுடனும் இணைத்துப் புகழப்பட்டுள்ளதைப் பரவலாகக் காணமுடிகிறது.*54 ஐங்குறுநூறில், சேரமன்னன் வாழியாதன் ‘நெல் பல பொலிக, பொன் பெரிது சிறக்க’*55 என்றும், பொருநராற்றுப்படையில்; சோழன் கரிகாலன் ‘சாலி நெல்லின் சிறைகொள் வேலியாயிரம் விளையுட்டாக*56’ என்றும்; மதுரைக்காஞ்சியில் பாண்டியன் நெடுஞ்செழியன் ‘உயர் நெல்லின் ஊர்கொண்ட உயர் கொற்றவ’*57 என்றும் நெல்லின் வளத்துடன் புகழப்படுவதும் நெல் பெற்றிருந்த சிறப்பிடத்தைச் சுட்டிவதாகவே உள்ளது.

நெல் வேளாண்மையை மிகைப்படுத்துகின்றனறோ என்று அச்சப்படும் அளவுக்கு சங்கப் புலவர்கள் கூற்றுகள் உள்ளன. நெல் விளைச்சல் அளவு ‘ஒருவேலி நிலத்தில் ஆயிரம் கலம் செந்நெல் விளைந்தது’*58. என்றும் ‘ஒரு பெண்யானை படுத்திருக்கும் அளவுடைய சிறிய நிலத்தில் ஆண்டொன்றுக்கு ஏழு ஆண் யானைகளை உண்பித்தற்குப் போதுமான அளவுக்கு மிகுதியான நெல்லை விளைவிக்கும் திறம் உடையவர்களாக உழவர் திகழ்ந்தனர்*59” என்றும் மருத நிலத்தின் வளமும், உழவர் திறனும் சிறப்பிக்கப்படுகின்றன. இது குறைந்த இடப்பகுதியில் பல மடங்கு விளைச்சல் பெற வேண்டும் என்ற முயற்சியும், ஊக்கமும், செயற்பாடும் அக்காலத்தில் இருந்தன எனக்கொள்வதா, இன்னும் உழவர்களை நெல்வேளாண்மைக்கு ஈர்க்கும் செயலாகவோ, முல்லை நிலங்கள் மருதநிலங்களாக மாற்றும் சிந்தனைக்கு வலுவேற்றுவது என்று கொள்வதா என்று உறுதி செய்ய இயலாது உள்ளது.

எவ்வாறாயினும், அரசின் வரி வருவாய்ப் பொருளாக நெல் மாறியது. வேளாண் பொருளாதாரத்தில், நெல்லுக்கு நிகர் வேறில்லை என ஆனது. அரசும் நெல்லின் உற்பத்திக்கே முன்னுரிமை அளித்தது. மேலாக, நெல் வளக்குறியீடாக உயர்நிலை அடைந்ததும்; உயர்தரமான விலைமதிப்பு மிக்க உணவுப்பொருள் என்ற கருத்துருவங்களும் குறிப்பிடத்தக்கது. சமூகத்தில் வளர வளர உழவர்களும், மக்களும் நெல்லுக்கே முக்கியத்துவம் அளித்தனர்.

குறிஞ்சி மற்றும் முல்லை நிலத்தில் உழுது பெறா நெல் பெரும்பான்மையாகவும், உழுதுப்பெறும் நெல் சிறுபான்மையாகவும் கிடைத்தன; மருதத்தில் முற்றாக உழுதுப்பெறும் நிலமும், நெய்தலின் கழிமுகங்களில் உழுதுப்பெறும் நெல்லும் விளைந்தன. போட்டியிட முடியாத அபரிமித விளைச்சலை மருத நிலத்து நெல் வழங்கியது. குறிஞ்சி மற்றும் முல்லை நிலத்தில் உழுது பெறா நெல்லினங்கள் பெரும்பான்மையும் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. இதன் சார்பான காரணங்களால், நாளடைவில் தினைத் தானியங்கள் உட்பட மற்ற தானியங்களையும் குறித்த “அரிசி” என்ற சொல் மருத நிலத்து நெல்லரிசியை மட்டும் குறித்து நிற்கும் நிலை அடைந்தது.

நெல் பெற்ற இந்நிலை, அரசுகளுக்கும், அரசு உருவாக்கத்துக்கும்  சாதகமாக அமைந்தது. அல்லது அரசு உருவாக்கம் இதனை மையப்படுத்தி அமைத்துக்கொண்டது. தன் வலிமையைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, மருத நில உருவாக்கத்தை அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டன. சங்க காலத்தில் துவங்கிய இந்தப் போக்கு, இடைக்காலத்தில் பல்லவர் ஆட்சியிலும், சோழர், பாண்டியர் ஆட்சியிலும் தீவீரமாகச் செயல்படுத்தப்பட்டது.

சங்க காலம் முதற்கொண்டு மருத நில ஆக்கத்துக்கு  ஆற்றுப்படுக்கைகள் கொண்ட முல்லை நிலங்கள் முதலில் பலியாகின. அடுத்ததாக, ஏரி சூழ்ந்த குறிஞ்சி நிலங்கள் கைக்கொள்ளப்பட்டன. இது மரபான நானில வாழ்க்கை முறையை மாற்றியது. உபரி உற்பத்தி அல்லது மிகை விளைச்சல் காரணமாக மக்களும் நெல் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து மிக்க ஈடுபாடு செலுத்தினர். பிற திணை நிலங்கள் மருதத் திணை நிலமாக மாறுதல் செய்ய இரும்பும் முதன்மையான பங்களிப்பை வழங்கியது. நெல் – இரும்பு – மருத நிலமாக்கல் - அரசு உருவாக்கம் என்பது ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தன.

(தொடரும்)

மேற்கோள் குறிப்புகள் -

1. விரிவுக்கு, யுத்தபூமி அத்தியாயங்கள் 39, 40 காண்க.
2. புறம் 159:17; மலைபடுகடாம் 115; குறுந்தொகை 371:2; ஐங்குறுநூறு 267:3; 285:3. 
3. நற்றிணை 373:4
4. புறம் 248:5.
5. மலைபடுகடாம் 180.
6. மலைபடுகடாம் 435.
7. சீவக சிந்தாமணி 2682.
8. பாட்டும் தொகையும், சொல்-தொடர் விளக்கம் பகுதி, நியு சென்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1981, ப. 37.
9. மதுரைப் பேரகராதி, முதல் பாகம், சந்தியா பதிப்பகம், சென்னை, 2004, ப.150.
10. கிருஷ்ணமூர்த்தி. கு.வி., தமிழரும் தாவரமும், பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி, 2011, ப.215.
11. மதுரைக்காஞ்சி 286-287; மலைபடுகடாம் 120-121.
12. மலைபடுகடாம் 224.
13. குறுந்தொகை 18:1; நற்றிணை 232:4.
14. சீநிவாசன். கு, சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை, 1987, ப.731. 
15. அகம் 294:9-11.
16. பெரும்பாணாற்றுப்படை 230, 473; பட்டினப்பாலை 13, 240; நற்றிணை 73:8, 275:1, 367:3; அகநானூறு 116:2, 126:11, 237:13, புறநானூறு 22:14, 344:1, 390:22.  
17. பொருநராற்றுப்படை 246. 
18. மலைபடுகடாம் 180.      
19. மாதையன். பெ, சங்க இலக்கியத்தில் வேளாண் சமூகம், நியு சென்சுரி புக் ஹவுஸ் பி. லிட். சென்னை, 2004, ப.25.  
20. பெரும்பாணாற்றுப்படை 197, 255, 343; மதுரைக்காஞ்சி 141, 395; மலைபடுகடாம் 68, 183, 462; நற்றிணை  6:8, 24:5, 43:5, 310:9, குறுந்தொகை.295:4, ஐங்குறுநூறு 180:2, 364:1, 365:2, 391:3; பதிற்றுப்பத்து 19:1, 55:8, 75:12; நாலடியார் 328:1. 
21. பெரும்பாணாற்றுப்படை 255; பதிற்றுப்பத்து 19:1, 75:12
22. பெரும்பாணாற்றுப்படை 197.
23. மதுரைக்காஞ்சி 141. 
24. மலைபடுகடாம் 183, 
25. கலித்தொகை 109:14
26. புறநானூறு 33:2-6
27. அகநானூறு 340:14-15. 
28. புறநானூறு 343.1-2. 
29. அகநானூறு 60:4
30. மேலது. 
31. குறுந்தொகை 269.5-6. 
32. அகநானூறு 60.1-7
33. நற்றிணை 254:6.
34. பட்டினப்பாலை 30.
35. அகநானூறு 60:4.
36. மேலது 340:14.
37. பொருணராற்றுப்படை 214-217.
38. ஐங்குறுநூறு 48.
39. அகநானூறு 140:7.
40. மேலது 390:8.
41. நெடுநல்வாடை 43.
42. முல்லைப்பாட்டு 8-9.
43. நற்றிணை 288:6. 
44. புறநானூறு 280:6. 
45. புறநானூறு 335:9-12.
46. அகநானூறு 86:12-17.
47. பெரும்பாணாற்றுப்படை 140-142. 
48. மலைபடுகடாம் 169-169. 
49. பெரும்பாணாற்றுப்படை 434-436.
50. பெரும்பாணாற்றுப்படை 470-475. 
51. சிறுபாணாற்றுப்படை 193-195.
52. பெரும்பாணாற்றுப்படை 142; அகம் 265:16; 348:7; மணிமேகலை 7:71.
53. அகநானூறு 35:9. 
54. புறநானூறு 97:18; 379:6; 385:9, மதுரைக்காஞ்சி 87-88; அகநானூறு 6:4-5; 204:12, 220:13; 356:13.   
55. ஐங்குறுநூறு 1:2
56. பொருநராற்றுப்படை 246-247.
57. மதுரைக்காஞ்சி 83.
58. புறநானூறு 391:21
59. பட்டினப்பாலை 9-12 (இவ்வரிகளுக்கு “ஒரு யானை படுக்கும் சிறிய இடத்தில், ஏழு மனிதர்கள் உண்ணக்கூடிய நெல் விளையும்” என்று ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகின்றார் என பொருள் கொள்வார் நீலகண்ட சாஸ்திரி, ‘சங்க கால ஆட்சிமுறையும் சமூக வாழ்வும்’, (மொ.பெ.) கே.வி. இராமன், நியு சென்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013, ப.6)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com