அத்தியாயம் 38 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 31

பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்பெருங் கற்படைப் பண்பாட்டு மக்களின் திணை வாழ்வியலுக்கு,

பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

பெருங் கற்படைப் பண்பாட்டு மக்களின் திணை வாழ்வியலுக்கு, திணை நிலங்கள் என்ற நிலவியல் சூழல், நில வளம், கனிம வளம், அரசியல், அயல்நிலத் தொடர்புகள், உற்பத்திப் பொருட்கள், உள்நாட்டு, அயல்நாட்டு வணிகம் ஆகியவை பாதிக்கும் அகக்காரணிகளாக இருந்துள்ளன. இவற்றுள், அரசியல் மற்றும் தலைமை குறித்து இன்றைய நிலையில் முழுமையாக அறியச்செய்யும் சான்றுகள் கிடைக்கப்பெறாத நிலை நீடித்துவருகிறது.

சில பாறை ஓவியங்கள் மற்றும் கல்திட்டை ஓவியங்களில் இயல்பான மனித வடிவங்களின் சித்தரிப்புகளுக்கு நடுவே, சில மனித வடிவங்களின் மாறுபட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட மனித வடிவங்களின் சித்தரிப்பை வெளிப்படுத்துகின்றன. இவ்வகையிலான மாறுபட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட மனித வடிவங்களின் சித்தரிப்பு, தலைமையை குறிக்கிறது என்பது சான்றோர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை.

சான்றாக, திண்டுக்கல் மாவட்டம் “சிறுமலை” பாறை ஓவியத்தில் இயல்புக்கு மாறாகப் பெரிதுபடுத்திக் காட்டப்பட்டுள்ள மனிதனின் உருவம், தலைவனின் உருவமாகலாம். அல்லது வழிபாட்டுக்கு உரிய வீரனாகவும், தெய்வநிலைக்கு உயர்ந்தவானாகவும் இருக்கலாம்.

மல்லச்சந்திரம் கல்திட்டை ஓவியம் “வில்லாளி மனிதன் ஓவியம்” ஒரு தலைவனுடையதாக இருக்கலாம். (பார்க்க: யுத்தபூமி அத்தியாயம் 33) இச்சான்றுகள், அக்காலத்தின் தலைப்பண்பை உறுதிசெய்பவை. இவ்விரு ஓவியங்களுமே மு.பொ.ஆ. 500 அளவிலான வரலாற்று உதயகாலத்துக்கு உரியவை என்று கணிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆனால், இவற்றை சங்க இலக்கியம் குறிப்பிடும் எந்த ஒரு தலைவனுடனும் ஒப்பிட்டுக் காணமுடியாது. இவை எழுத்து வடிவத்தில் இலக்கியமாக்கப்படாத ஒரு குடியின் / குலத்தின் / ஊரின் / நாட்டின் தலைவனின் இருப்பு குறித்த பதிவுகள் என்றே கொள்ளமுடியும்.

தமிழக வரலாற்று உதய காலத்துக்கும், வரலாற்றுக் காலத்துக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதாகத் தெரியவில்லை. பண்டைய தமிழக வரலாற்றுக் காலம், செவ்வியல் இலக்கியமாக வெளிப்படுகிறது. செவ்வியல் இலக்கியம், தமிழர் வாழ்வியல் மரபாக “திணை வாழ்வியலை” முன்நிறுத்துகிறது.

சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட காலத்துக்கு உரியவையாகக் கிடைக்கும் எழுத்துகள் வெளிப்படுத்தும் குறியீடுகள் பற்றி முற்றாக அறியமுடியாததாக உள்ளது. அவை, தனிக்குறிகள், ஒன்றுக்கு மேற்பட்ட குறிகள் இணைந்தவை, ஒரு சொல் அல்லது தொடர் என்று உணரும்படி உள்ளவை என்பதான கண் புலனுருப்பு வழியாகத் தெரியும் உருவ விளக்கத்தை மீறி, அவை தெரிவிக்கும் பொருள் இது என்ற தெளிவுக்கு வரமுடியாத நிலை உள்ளது. இந்நிலையும் நமது சங்க இலக்கியம் என்ற செவ்வியல் இலக்கியம் வெளிப்படுத்தும், நேரடித்தன்மையை, வரலாற்று உண்மையை, திணை வாழ்வியலை வெளிப்படுத்த முடியாதுள்ள சூழலை மேலும் கடுமையாக்குகிறது. ஏனெனில், சங்க கால திணை வாழ்வியல் என்பது தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்ட காலத்தின் நீட்சியாகும். அந்நீட்சியின் கால எல்லையை அடையச்செல்லும் கருவியாக கீறல்கள் என்ற எழுத்து வடிவில் உள்ளது என்பது மிகையான புரிதல் அல்ல. அது தொல்லியல் அகழாய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ள புறந்தள்ளமுடியாத சான்று.

தென்னிந்தியா முழுவதற்கும் பொருந்தும் திணை வாழ்வியலைத் தேடிய தொல்லியல் அகழாய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. தொல்லியலாளர்களும் இதன் தேவையை முற்றாக உணர்ந்துள்ளனரா என்பது இன்றைய நிலையில் சந்தேகமே. மேலும், அகழாய்வுகள் வெளிப்படுத்திய தொல்பொருட்கள், திணைப் பாகுபாடு கொண்டு விளக்கப்பெற்றுள்ளன என்றும் அறியமுடியாது உள்ளது. இதனால், நுட்பமான வாழ்வியல் தரவுகளை இழந்துள்ளோம் அல்லது அறியத் தவறியுள்ளோம்.

தொல்லியல் நோக்கில் திணை வாழ்வியல் இன்றைய நிலையில் மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகிறது. இது குறித்து அறிவது பல அத்தியாயங்களுக்கு நீளும். இதன் அடிப்படைகளை உள்வாங்கிக்கொள்வது என்ற நோக்கில், சிலவற்றை உதிரி உதிரியாக அறியலாம்.

பெருங் கற்காலப் பண்பாட்டின் திணை வாழ்வியலை அடையாளப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் உள்ள இடர்களை முதலில் தெளிவாக்கிக்கொள்வோம்.

நிலவியல் / இயற்கை மாறுபாடு

சங்க காலத் துவக்கம் முதல் இன்றுவரையிலான இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளின் இடைவெளியில், பண்டையத் தமிழகப் புவிப்பரப்பில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து முதலில் அறியவேண்டி உள்ளது. கடல்கோல்களின் விளைவாக கடல் விழுங்கிய நிலங்கள் பற்றிய செய்திகளை இலக்கியம் வழியாகவும், பூம்புகார், அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் வழியாகவும் அறியமுடிகிறது. கடல்கோள் போன்ற இயற்கைச் சீற்றங்களின் உடன்விளைவாகக் கடல் விலகி மீண்ட நிலங்கள் குறித்த ஆய்வுகள் நம்மிடையே இல்லை. இந்த இரு நிலவியல் மாற்றங்களும் நெய்தல் நிலம் குறித்த ஆய்வுக்கு சிக்கலை உருவாக்குபவையாக உள்ளன. மேலே குறித்த இடங்கள் நெய்தல் பரப்பில் இடம்பெற்றிருந்தாலும், அவை துறைமுகப்பட்டினங்கள் மற்றும் தொழிற்கூடங்கள் நிரம்பிய இடங்கள் என்பதால், அவற்றை முற்றாக நெய்தல் பண்பாடு வெளிப்படுத்தும் இடங்கள் என்பது முரணாகும். போலவே, கொடுமணல் போன்ற உள்நாட்டு நிலங்களும் தொழிற்கூடங்கள் நிரம்பிய இடமாக விளங்கியதை அகழாய்வுகள் மெய்ப்பிப்பதால், அவ்விடத்தை முற்றாக முல்லை நிலமாகவோ, முல்லை - மருத சார்பு நிலமாகவோ கொள்ளமுடியாது போகிறது.

கடல்கோள்களைப் பற்றி அறிந்திருந்த இடைக்கால உரையாசிரியர்கள், கடல்கோள்கள் விழுங்கிய நிலங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. போலவே, அவர்கள் முழுமையாக அன்றைய தமிழகப் பரப்பின் எல்லைகள் குறித்தோ, (தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கும் வடவெல்லை வரையறை விவாதத்துக்கு உரியது. அது குறிப்பிடும் வடவெல்லை, பிற்கால உரையாசிரியர்களின் காலத்துக்கு உரியதாகலாம். அது சங்க காலத்துக்கு உரியதாகாது. பார்க்க: த. பார்த்திபன். சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும், பக்.13-28) செவ்வியல் இலக்கியங்கள் குறிப்பிடும் இடங்கள் குறித்து அறிந்திருந்தனர் என்பதும் ஐயத்துக்கு இடமாகவே உள்ளது. உதாரணமாக, சேரநாட்டுக் கடற்கரைப்பட்டினமான “நறவு” குறித்து உரையாசியர்கள் அறிந்திருக்கவில்லை. இந்நிலை, பண்டைய குறிப்புகள் துணைகொண்டு மட்டும் இன்றளவில் உருவாகியுள்ள நிலவியல் மாற்றங்களைப் பகுத்தறிவது இயலாத காரியமாகியுள்ளது. இச்சான்றே மற்றொரு உண்மையை விளக்கிவிடுகிறது. அது, தமிழகப் பரப்பில் உருவான மாற்றங்களை இலக்கியம் வழி துல்லியமாக அளிவிட முடியாது என்பதே.

இப்பின்னணியில், செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலகட்டம் என்று கருதப்படும் மு.பொ.ஆ. 500 முதற்கொண்டு இன்றுவரை இயற்கையாக உருவான மாற்றம் என்பது கடல்கோள் தவிர வேறு தீவிரமான மாற்றம் என்பது, தென்னிந்தியா குறிப்பாக இன்றைய தமிழகப் பரப்பில் நிகழவில்லை. நிலப்பரப்பை மாற்றும்படியான மிகையான மழை, கடும் வறட்சி, ஆற்றோட்டங்களின் மாற்றம் போன்றவை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. ஆக, சுமார் 2,500 ஆண்டு காலஇடைவெளியில், உள்நாட்டுத் தமிழக நிலப்பரப்பு மிகப்பெரிய மாறுதல் எதனையும் பெற்றிருக்கவில்லை.

எனில், மலைகாடும், மலைக்காடு சார்பு நிலங்களைக்கொண்ட குறிஞ்சித் திணையும், மேய்த்தல் வெளி மற்றும் மேய்த்தல் வெளிசார்பு நிலங்களைக்கொண்ட முல்லை திணையும், வயலும், வயல் சார்பு நிலங்களும் கொண்ட மருதத் திணையும், நீர் நிலையும் நீர்நிலை சார்பு நிலங்களும் கொண்ட நெய்தல் திணையும், நிலங்கள் திரிபில் உருவாகும் பாலையும், பாலை சார்பு நிலங்களும் என ஐந்திணைகளில் நெய்தல் பரப்பில் ஏற்பட்ட மாறுதல் தவிர, பெரும் மாறுதல் ஏதும் இயற்கை காரணமாக உருவாக்கியிருக்கவில்லை என்பது திண்ணமாகிறது. எனினும், சங்க இலக்கியம் வழி பாடப்பட்ட நிலங்களுக்கு உரிய திணைகள் ஐயமற உறுதிபடுத்த முடியாதுள்ளது. நமது ஆய்வுகள் அத்திசையில் மேலும் விரிவடையும் அவசியம் உள்ளது.  

உலோகத்தில் இரும்பின் உற்பத்தி, மருத நில விரிவாக்கத்துக்கு வித்திட்டுள்ளது என்பது வெளிப்படையானது. மருத நில விரிவாக்கத்துக்கு ஆட்பட்டது பெரும்பான்மையும் “முல்லை நிலமே”. சங்க இலக்கியமும், பிற்கால பல்லவர் வரலாறும் சரி, காடு திருந்தி நாடாக்கப்பட்டதை காட்சிப்படுத்துகின்றன. இடைக்கால சோழப் பேரரசுக் காலத்தில் வேளாண்மை பெற்ற முக்கியத்துவம், மருத நிலத்தின் விரிவாக்கத்தைக் காட்டுகின்றன. இங்கு நாடாக்குதல் என்பது “விளைநிலமாக்குவதையே” சுட்டுகின்றன.

இவ்வாறு விரிவாக்கப்பட்ட மருத நிலங்கள், மெய்யாக இயற்கை காரணமற்ற மனிதனின் விருப்பத்துக்கும், தேவைக்கும் ஆட்பட்ட புவி மேற்பரப்பு மாற்றமே தவிர அடி முதல் நுனிவரை பெற்ற மாற்றம் என்பதல்ல. இந்நிலங்கள் பிற்கால மாற்றங்களை, புலனாகும் மேற்பரப்பிலும், ஆதி நிலையை கீழ்ப்பரப்பிலும் வைத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த இடையூறைத்தரும் இந்த நிலவியல் மாற்றத்தையும் மேற்பரப்பு களஆய்வு வழியாக உறுதிசெய்த முடியாதுபோகிறது.

பெருங் கற்படைக் காலப் பண்பாடு வெளிப்பட்டுள்ள இடங்கள் மற்றும் சங்கால இடங்கள் அனைத்தும் முறையாக அகழ்ந்து தெளிவான வரையறைகள் அடையப்பட்டுள்ளன என்று கூறமுடியாத நிலையும் நீடித்து வருகிறது. அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்ட பெருங் கற்படைச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களுக்கும், அடையாளம் காணப்பட்டுள்ள பெருங் கற்படைக் கால மக்கள் வாழிடங்களுக்கும் இடையே எண்ணிக்கையில் மிகுந்த வேறுபாடு உள்ளது. இந்நிலையை இருவகையாகப் புரிந்துகொள்ளவேண்டி உள்ளது.

1. அடையாளம் காணப்பட்ட பெருங் கற்படைச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களை அறுதி செய்யமுடியாது உள்ளது போலவே, அவற்றின் எண்ணிக்கையும் அறுதி செய்யப்படமுடியாது உள்ளது. பொறுப்பற்ற, அற்ப பலன்களுக்காக இவை வேகமாக அழிவுக்கு ஆட்பட்டு வருகின்றன. இச்செயல்கள் எண்ணிக்கையை உறுதியாக்குவதில்லை. மேலும், தொகுப்பாக அமையாமல், ஒன்று அல்லது ஒரு சில மட்டும் அமைந்த இடங்கள் குறித்த பதிவுகள் குறைவாகவே இருப்பது, இடங்கள் பற்றிய எண்ணிக்கைப் பிரச்னையை உருவாக்குகின்றன.

2. வாழிடங்கள் மிகக் குறைவாக அறியப்பட்டுள்ளதற்கான காரணங்களில், நிலையான ஓரிடத்து வாழ்வியல் முதன்மையானதாக உள்ளது. பல வாழிட அகழாய்வுகள், சங்க காலம் முதல் 17-ம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியான வாழ்வியல் சான்றுகளைத் தரும் மண்ணடுக்குகளைக் கொண்டுள்ளன. நுண் கற்கால பண்பாடும், புதிய கற்காலப் பாண்பாடும் ஒன்றையடுத்து ஒன்றும், ஒன்றுடன் ஒன்று பகுதியாகக் கலந்துள்ள நிலையிலும் வெளிப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம். இதனைப்போன்றே, புதிய கற்காலப் பண்பாடும் மற்றும் பெருங் கற்படைக் காலப் பண்பாடும் ஒன்றையடுத்து ஒன்றும், ஒன்றுடன் ஒன்று பகுதியாகக் கலந்துள்ள நிலையிலும் வெளிப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம். இவை சமூக வாழ்வியல், பொருளியல் மாற்றங்களை மக்கள் சந்தித்திருந்தாலும், மக்கள் வாழிடத்தின் மீது விடாப்பிடியான பிடிப்பைக் கொண்டிருந்தனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. எனில், சங்க கால வாழிடங்கள் அல்லது வரலாற்றுக் கால வாழிடங்கள் என்று குறிக்கப்பட்டுள்ள பல இடங்களும், தென்மையான அதாவது வரலாற்றுக்கு முற்பட்ட பெருங் கற்படைப் பண்பாடு முதல் கீழ்நோக்கிச் செல்லக்கூடும்.

தமிழக வரலாற்றுக் காலமான சங்க காலத்தின் செவ்வியல் இலக்கியங்கள் குறிப்பிடும் எல்லா இடங்களும் அகழாய்வின் வழியிலோ, களப்பரப்பு வழியிலோ முறையாக அடையாளம் காணப்பட்டு வெளிப்படுத்தப்படுள்ளன என்பதும் உறுதி இல்லை. சங்க இலக்கியம் வேந்தர்கள், மன்னர்கள், குறுநில மன்னர்கள், நாட்டுத் தலைவர்கள் என ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் தலைமைப் படிநிலையில் இருந்தவர்களையும், அவர்களின் ஊர்கள், தலைநகரங்கள், போர் புரிந்த, கடந்து சென்ற இடங்கள் என 200-க்கும் மேற்பட்ட இடப்பெயர்களையும் தருகிறது. சங்க இலக்கியம் குறிப்பிடாத அழகன்குளம், அரிக்கமேடு போன்ற இடங்கள், சங்ககாலப் பண்பாட்டை செறிவாகத் தரும் இடங்கள், அகழாய்வு மூலமாக மட்டும் மீட்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில், அதியமானின் தகடூர், நள்ளியின் கண்டீரம், பாரியின் முல்லூர் கூற்றம், பிரான்மலை போன்ற இடங்கள் அகழாய்வின் வழி மெய்ப்பிக்கப்படவில்லை.

இக்குறிப்பு, நாம் நெடுந்தொலைவு போகவேண்டியுள்ளதை நினைவுகொள்ளவே. குறைவான எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மற்றும் முழுமையற்ற அகழலாய்வு அறிக்கைகள் இந்நிலையை மேலும் சிக்கலாக்குகின்றன. மேலோட்டமான முடிவுகளுக்கே நம்மை நகர்த்துகின்றன. இவையே பெருங் கற்காலப் பண்பாட்டின் திணை வாழ்வியலை அடையாளப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் உள்ள இடர்களாகக் காட்சியளிக்கின்றன.
*
தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் வழி, குறிஞ்சித் திணை - வேட்டை மற்றும் மலைப்புல என்ற வன்புல வேளாண்மை வாழ்வியலையும்; முல்லைத் திணை - மேய்த்தல் தொழில் வாழ்வியலையும்; மருதத் திணை - நிலம் அல்லது வயல் என்ற மென்புல வேளாண்மையும்; நெய்தல் திணை - பெரும்பான்மையாக பரதவர் வாழ்வியலையும்; பாலைத் திணை - வேட்டை வாழ்வியலையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. அடிப்படையில், தொல்காப்பியம் ஒவ்வொரு திணைக்குரிய “கரு” மற்றும் “உரி” பொருட்களை நுட்பமான வேறுபாடுகளுடன் வழங்கினாலும், திணைப் பகுப்பு என்பது உணவு எவ்வாறு பெறப்படுகிறது என்பதையே அடியோட்டமாகக் கொண்டு அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

“உணவை சேகரித்தல்” மற்றும் “உணவை உற்பத்தி செய்தல்” என்ற இருபெரும் முறைகள் மனிதனின் உணவுத் தேவையை பூர்த்துசெய்கின்றன. இப்பெரும் முறைகள் தம்முள் உள்வகைகளையும் கொண்டுள்ளன. இவற்றுக்கு இடையேயான வேறுபாடே வாழ்வியல் முறையாகவும், திணை வாழ்க்கையாகவும் வெளிப்படுகிறது. இத்திணை வாழ்க்கையின் சமூகப் பொருளாதார நிலை என்பதும் சமூக வாழ்க்கையைப் பாதிக்கும் ஒன்றாக இருக்கிறது. அது அவ்வவ் சமூகங்களின் சுற்றுச்சூழலினால் எந்த அளவு செம்மை அடைகிறதோ, அதாவது நில வளம் மற்றும் இயற்கை வளத்தால் செம்மை அடைகிறதோ அதே அளவு நிலத் திரிபுகளாலும் கடுமையான பாதிப்பு பெறுகிறது. நிலத் திரிபு என்பது பாலை நிலத்தையும் அதனுடன் இயைந்த பாலைத் திணை வாழ்வியலையும் வழங்குகிறது.

இந்தவகையில் குறிஞ்சி, உணவை உற்பத்தி செய்யும் திணையாகும். இது முழு முற்றாக உணவை எளிதான உற்பத்தி செய்துகொள்வதையும், உபரி உற்பத்தியை நெடுங்காலம் சேமிப்பாக வைத்துக்கொள்வதையும் கொண்டது. பிற நான்கு திணைகளில் இருந்தும் இது வேற்பாடு கொள்வதற்கும் மேம்பட்ட வாழ்வியல் என்ற தோற்றம் கொள்வதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகவும் விளங்குகிறது.

முல்லைத் திணை மேய்த்தல் வாழ்க்கை முறையைக் கொண்ட திணையாகும். இது அடிப்படையில் உணவுத் தேவையை உயிரினங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் அடைந்துகொண்ட வாழ்வியலாகும். இத்திணையும், உபரி உற்பத்தியைக் கொண்டிருந்தது. தம் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யும் வளர்ப்பு மிருகங்களின் உணவுத் தேவைக்காக புல்வெளிகளைத் தேடி இச்சமூகங்கள் தொடர்ந்த இடப்பெயர்வைச் சந்தித்தன. பிற்காலத்தில், இவை பருவ காலம் சார்ந்த தாற்காலிக இடப்பெயர்வுகளுக்குத் தம்மை மாற்றிக்கொண்டன. மருத நில வளர்ச்சிப்போக்கில், இவர்களது முல்லை நிலங்கள் குறுகிய பரப்பை அடைந்தாலும், மருத நிலத்தின் உற்பத்திப் பொருள்களூடே தானியம் சாராத உடன் விளைபொருட்களால் வைக்கோல், தட்டு, தழை போன்றவற்றால் தம் வளர்ப்பு மிருகங்களுக்கான உணவுத் தேவையினை அடைந்துகொண்டனர். இந்த வகையில், இவ்விரு திணைச் சமூகங்களும் தம்முள் நெருக்கத்தைக் கொண்டன. மருத நில உற்பத்தியில் உருவாகும் பாதிப்பு, முல்லையை நெருக்கடிகளுக்குள் தள்ளும் அளவு அதன் நெருக்கம் பிற்காலத்தில் உருவானது. இந்த மருத நிலத்தைச் சார்ந்த வாழ்வியலால், உணவு உற்பத்தியையும், உபரி உற்பத்தியையும் கொண்டிருந்தாலும், முல்லை வாழ்வியல் மருதத்துக்கு அடுத்தநிலையே பெற்றது.

நெய்தல் திணை வாழ்வியல், நீர்நிலைகளை தம் உணவு உற்பத்தியின் ஆதாரமாகக் கொண்டது. ஒருவகையில், இத்திணை வாழ்க்கை உணவை உற்பத்தி செய்யும் திணையாகக் கருதப்பட்டாலும், அதன் உற்பத்தி என்பது இயற்கை வழங்கும் கொடையாகவே கருதப்பட்டது. அதாவது, இவ்வாழ்வியலின் உணவுத் தேவையை உயிரினங்களே நிறைவுசெய்தன. இதன் காரணமாக, இது நீரை ஆதாரமாகக் கொண்ட வேட்டைச் சமூகமாகவே கருதப்பட்டது. ஆனால், இத்திணை வாழ்க்கை கடல்படு பொருட்களை உபரியாகப் பெற்றது. இதன்மூலம் ஈட்டிய பொருளாதார வலிமை காரணமாக, இது சமயங்களில் மருதத் திணைக்கு அடுத்த இரண்டாம் நிலையையோ அல்லது முல்லைத் திணைக்கு அடுத்த மூன்றாம் நிலையை உடையதாகக் கருதப்பட்டது.
குறிஞ்சித் திணை வாழ்வியல், வன்புல வேளாண்மையைக் கொண்டதாக சங்க இலக்கியம் காட்சிப்படுத்தினாலும், இதன் உற்பத்தி என்பது குறிஞ்சியின் மென்புல உற்பத்தியின் அளவோடு இணையானதல்ல. இதனால், இத்திணை வாழ்வியலில் வேட்டை என்ற பொருளைத் தேடும் ஆதி நிலை முதன்மையான இடத்தில் இருந்தது. இதனால், இவ்வாழ்வியல் மருதம், முல்லை, நெய்தல் வாழ்வியலை அடுத்த நான்காம் நிலை உடையதாகக் காட்சியாகிறது.

பாலைத் திணை வாழ்வியல், தம் உணவுத் தேவையை பிற நான்கு திணைகளிடம் இருந்தே பெற்றது. இத்திணை உற்பத்தி மூலங்களையோ, உபரி உற்பத்தியையோ கொண்டிருக்கிவில்லை என்பதால், இத்திணை வாழ்வியல் பிற நான்கு திணைகளுக்குப் பிறகு ஐந்தாம் நிலையைப் பெற்றது.

இவ்வகையிலான தனித்தனி வாழ்வியல் முறைகளுடன் பிரிந்த சமூகங்கள்தாம் பிற்காலத்தில் அரசு உருவாக்கத்தில் ஈடுபடுகின்றன. அரசு உருவாக்க ஈடுபாடு அவற்றுக்கு இடையேயான போராட்டத்துக்கு அழைத்துச்செல்கிறது. போராட்டத்தின் விளைவாக அரசின் படிநிலைகள் உருவாகின்றன. மருதம், இதன் மேல்நிலையை அடைந்துகொள்கிறது. நெய்தல், முல்லை, குறிஞ்சி ஆகியவை படிநிலையில் மருதத்துக்குக் கீழ்வரிசையை அடைகின்றன. பரிணாம வளர்ச்சிப்போக்கில் மருதத் திணை வாழ்க்கை மிகவும் அண்மைக்காலத்தியது என்பதை நினைவுகொள்வோம். எவ்வாறாயினும், இந்நான்கு திணை வாழ்க்கையும் மற்றொன்றின் செழுமையை தனதாக்கிக்கொள்ள முனைகின்றன. அதற்காக எழும் போர்கள், அரசியலையும் அரசையும் கட்டமைக்கின்றன.

திணை வாழ்க்கையானது, சமூக வாழ்வியலின் ஊடே சில தனித்துவமான பொருட்களை தனதாக்கிக்கொண்டு தன்னுடைய “திணைப் பொருட்கள்” என்றாக்கிக்கொள்கின்றன. அவற்றின் சிறப்பான உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கின்றன. பெரும்பாலும் அவை உபரி உற்பத்தியை அடிப்படை நோக்கமாகக் கொண்டவை. இந்த உபரி உற்பத்தியே ஊடாடும் அரசியலையும், அரசியல் நிலைப்பாட்டையும் தீர்மானிக்கின்றன.

உபரி உற்பத்தி வணிகத்தை வளர்த்தெடுக்கிறது. இவ்வகையில், சமுதாயமானது குடி என்ற அடிப்படை அலகில் இருந்து அரசு அல்லது தலைமை அல்லது ஆளும் குடி, தொழில் முனைவோர், தொழில் முனைவிப்போர், வணிகர், மற்றும் திணை மக்கள் என்ற பல்வேறு குழுக்களாகவும், சமூகங்களாகவும் பிரிகின்றன.

பாலை நீங்கிய பிற நான்கு நிலங்களிலும் செழிப்புற்றிருந்த வணிகம், இச்சமூகங்களின் வாழ்வியலைப் பாதித்த மற்றொரு பொருளாதார வாழ்வியலையும் இலக்கண இலக்கியங்களில் காட்சிப்படுத்துகிறது. தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் இங்கு வழக்குப்பட்டிருந்த தொழில்கள் குறித்து பெரும்பாலும் மெளனம் கொண்டுள்ளன. பானை வனைதல் மற்றும் இரும்புக் கருவிகள் செய்தல் பற்றிய குறிப்புகள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால், அவை தொழில்நுட்பங்களையோ வேறு தகவகல்களையோ அளிப்பவை அன்று. கனிமங்கள் குறித்தோ, சுரங்கத் தொழில் குறித்தோ, அவை நடைபெற்ற இடங்கள் குறித்தோ குறிப்புகளை நமக்குத் தர தவறுகின்றன.

பெருங் கற்படைக் காலத்தில் நிலவியிருந்த உற்பத்திப் பொருட்கள் மற்றும் உபரி உற்பத்தி மற்றும் உபரி உற்பத்தி ஈட்டித்தந்த பண்டமாற்றம் அல்லது செல்வம் பெருங் கற்படைப் பண்பாட்டையும், அப்பண்பாடு வித்திட்ட சங்க காலத்தையும் அடைய வழிவகை செய்கிறது. இக்கால ஓட்டத்தில் ஊடே எழுந்த வீரப்பண்பையும் அடையாளப்படுத்துவதும் அதுவே.
இப்பின்னணியில், பெருங் கற்படைப் பண்பாட்டை மூன்று காலகட்டங்களாகப் பிரித்து அணுக வேண்டிய கட்டாயம் எழுகிறது.

அவற்றை முறையே,

1. முதல்நிலைப் பெருங் கற்படைக் காலம்

2. மத்தியநிலைப் பெருங் கற்படைக் காலம்

3. இறுதிநிலை பெருங் கற்படைக் காலம்
எனலாம்.

அல்லது இவற்றை முறையே,

1. கீழ்நிலைப் பெருங் கற்படைக் காலம்

2. இடைநிலைப் பெருங் கற்படைக் காலம்

3. மேல்நிலைப் பெருங் கற்படைக் காலம்
என்றும் குறிப்பிட்டு அழைக்கலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com